/// #தென்மாவட்டத்தில் பனைநாரால் முடையப்பட்ட பெரிய பெட்டியைக் #கடகம் என்போம். #பனைஓலை யால் முதலில் முடைந்து அதன் பிறகு பனை மட்டையில் உள்ள நாரைப் பக்குவப்படுத்தி அதன்மீது கோர்ப்பார்கள். அல்லது முழுக்கப் பனை நாரால் பின்னுவார்கள். இவற்றுள் சிறிய பெட்டியை #நார்ப்பெட்டி என்றும் அதைவிடக் கொஞ்சம் பெரிய பெட்டியைச் சீர்ப்பெட்டி என்றும் மிகப்பெரிய பெட்டியைக் கடகம் என்றும் அழைப்பார்கள். எங்கள் வீட்டில் கூட ஒரு காலத்தில் கடகம் இருந்தது.
வண்ணக் கலவையைக் காய்ச்சி அதில் பக்குவப்படுத்தப்பட்ட நார்களை அவித்து உலர வைத்து முடைவார்கள். திருமணத்தில் இப்பெட்டிக்கு முக்கியப்பங்கு உண்டு. திருமணச்சீராக இப்பெட்டி கொடுக்கப்பட்டது. இந்தப்பெட்டியில் தான் பலகாரம், முறுக்கு, அரிசி கொடுப்பார்கள். திருமணத்தின்போதும் அரிசையைச் சீர்ப்பெட்டியில் வைத்துத்தான் அளப்பார்கள். நாங்கள் வழக்கில் பொட்டி (பெட்டி) என்றுதான் சொல்வோம். #ஓலக்கொட்டான், #ஓலப்பொட்டி, #நாருப்பொட்டி, #சீருப்பொட்டி, #கடகம் ,#வெத்தலக்கொட்டான்...
"#கடகப்பெட்டி"எனும் #அரிசிப்பெட்டி.
கடகப் பெட்டி என்பது என்ன..?
நம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த பொருள் கடகப்பெட்டி.
கடவாப் பெட்டி என்பது (சொல்) பேச்சுவழக்கு.
#பனையோலை யால் செய்யப்படும் பெரிய பெட்டி.
பைகளின் காலத்திற்கு முன் பொருட்கள் வாங்க; கொண்டு செல்லப் பயன்பட்ட பெட்டி.
இன்றும் விழா நாட்களில் சோறு பொங்கி தட்டப் பயன்படும் ஓலைப்பாய்,
திருச்செந்தூரில் கிடைக்கும் சில்லுக்கருப்பட்டி அடைக்கப்பட்ட #ஓலைக்கொட்டான்
இரண்டுமே இதன் சகோதரிகள்.
பனையோலையை நன்கு ஊற வைத்து பின்னப்படும் கடகம் தேர்ந்த கலை நுட்பம் மிக்க வேலை. யாழ்ப்பாணக் கடகங்கள் புகழ் மிக்கவை.
அலங்கார வேலை மிக்கவை.
சங்க காலத்தில் இதன் பெயர் "#வட்டி"
"அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தோடு சென்ற #வட்டி பற்பல
மீனோடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
செல்வமன்று
தன்செய்வினைப் பயனே.
சான்றோர் செல்வம் என்பது
சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வமென்பதுவே."
#மிளைகிழான்_நல்வேட்டனார்.
இந்த #நற்றிணைப் பாடலில் வரும் வட்டி என்பது பனையோலைப் பெட்டியாகும்.
'வட்டியில் விதைகளைக் கொண்டு சென்று விதைத்து விட்டு; மீன் பிடித்து அதில் போட்டு; வீடு திரும்பும்' என்பது பொருளாகும்.
அன்றாட வாழ்வில் கடகத்தின் இடம் இதுவெனில் பண்பாட்டில் இதன் இடம் முக்கியமானது.
எங்கள் குடும்பப் #பெண்தெய்வத்தின் இருப்பிடம் இந்தக் கடகப்பெட்டிதான்.
அதுபோலவே தெக்கத்தி பக்கம்
பெண்மக்களுக்கு வாழ்வில் இரண்டு முறை அரிசிப் பெட்டி போட்டுப் புகுந்த வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஒன்று... திருமணம் ஆன மறுநாள்
இரண்டு... தந்தை இறந்த ஒரு வாரத்தில்....
இப்படி இரு சமயங்களில் கடவாப்பெட்டியில்
அரிசி, பருப்பு, காய்கறி போட்டு அனுப்ப வேண்டும்.அனுப்ப வேண்டுமெனில் பெண்ணின் சகோதர முறைக்காரனே கொண்டு சென்று புகுந்த வீட்டில் சேர்க்க வேண்டும்.
இதனால் கடவாப் பெட்டிக்கு
'அரிசிப் பெட்டி' எனும் பெயருண்டு.
பின்னாளில் குழந்தையை முன்னிட்டு மாமியார் மருமகள் இடையே சடவு வரும் போது
"புள்ளய அரிசிப் பெட்டியிலயா கொண்டு வந்தா?! அது எம்புள்ள தந்தது.."என மாமியார்க்காரி கேட்பதுண்டு. இன்று கடகப் பெட்டி இல்லை.
ஈய/சில்வர் வாளிகளில் அரிசி, பருப்பு போடப்படுகிறது.
ஆனாலும் அதன் பெயர் அரிசிப் பெட்டி தான். ஒரு வார்த்தை தான் எவ்வளவு விசயங்களைக் கொணர்கிறது 'கடகப் பெட்டி'
#பாலிதீன் பொருட்களைத் தவிர்த்துப் பனைத்தொழிலை ஆதரியுங்கள்.
#பனைத்தொழில் காப்போம்
#பனைமரங்கள், #பனைஏறிகளைப் போற்றுவோம்.
#பனைஓலை 💚
#தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமே இதன் அருமை தெரியும்..///
தெரிவு:சக