தமிழ் மரபுகள்

80 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jun 18, 2025, 11:09:38 AMJun 18
to vallamai
/// ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.

அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை "கீரை" ஆகின்றது

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "தழை".

நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் "தாள்" ஆகின்றன.

சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்குப் பெயர் "மடல்".

கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் "தட்டு" ஆகின்றன.

கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் "தோகை" (சோகை) என்றாகின்றன.

தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் "ஓலை" என்று சொல்லப்படுகின்றன.

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.

 இதுவே தமிழின் சிறப்பு ///


தெரிவு: சக

kanmani tamil

unread,
Jun 20, 2025, 11:37:15 PMJun 20
to vallamai
மேலே பார்த்தது தமிழ் இலக்கணத்தில் சொல்மரபு 


இந்தப் பதிவில் காண்பது தமிழ் நாட்டுச் சிற்பக்கலை மரபு.

ஒரு லிங்கத்தின் மூன்று பாகங்கள்:
பிரம்ம பாகம் 
விஷ்ணுபாகம் 
ருத்ர பாகம் 

இப் பெயர்கள் வடமொழிப் பெயர்கள் தாம்; ஆனால் மரபு தமிழ்மரபு எனலாம். அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி என்னுள் எழவில்லை. கேள்வியை மக்கள் எழுப்புவர் என்பது அப்பட்டமான உண்மை. 

ஒரு காலகட்டத்தில் எதையும் வடமொழியில் சொல்வதே மேதாவிலாசம் என்ற கொள்கை நிலவியதன் விளைவு. 

வேறொரு சான்று விளக்கம் பார்க்கலாம்...
நம் தமிழகத்து இலக்கிய வரலாற்றில் மதுரையில் எழுந்தருளி இருக்கும் சோமசுந்தரப் பெருமானை மையப்படுத்தித் தோன்றிய கதைகள் திருவிளையாடற் புராணக் கதைகள். அவற்றுக்கு முதன் முதலில் இலக்கிய வடிவம் தந்த போது வடமொழியில் தான் எழுதினர்- ஹாலாஸ்ய மகாத்மியம். பிறகு தான் தமிழ்ப்படுத்தப் பட்டது. 

நிகழ்காலத்தில் எதுவும் ஆங்கிலப் பெயர் பெறுகிறது அல்லவா?! அது போல...

சக 

kanmani tamil

unread,
Nov 4, 2025, 12:00:54 AMNov 4
to vallamai
அரைஞாண் கொடி > அரணாக்கொடி 
அரைஞாண் > அரைநாண் 
அரை = இடுப்பு 
இன்று இதை இடுப்புக்கொடி என்றும் அழைப்பர். 

தமிழர் வாழ்வியலில் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் 'இழை கட்டும்' சடங்கு இன்றும் பெரும்பாலோரிடமும் காணப்படுகிறது. இதைக் 'கயறு கட்டுதல்' எனவும் சொல்வர். பிறந்த குழந்தை மிகுதியும் அழுது கொண்டே இருந்தாலும்; இரவில் தூங்காமல் அவஸ்தைப் படுத்தினாலும் 'சீக்கிரம் இழை கட்டு' என்று பெரியோர் சொல்வது உண்டு. 

இச்சடங்கில் குழந்தையின் கையிலும் இடையிலும் மஞ்சள் தடவிய நூலிழைகளைக் காப்பாகக் கட்டுவர். கையில் கட்டும் இழையில் வசம்பு (குழந்தை வளர்ப்போர் வசம்பு என்று வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்; அதன் மருத்துவ குணம் குறைந்து விடும் என்று நம்பிக்கை. பேர் சொல்லா° என்பர்.) மணிகளையும் பூலாங்கிழங்கு மணிகளையும் கோர்த்திருப்பர் அத்துடன் பால்காப்பு (பண்டைக் காலத்தில் சங்கினால் ஆன காப்பு ; தற்போது ப்லாஸ்டிக்), யானைக்கண்ணி வளையல் (அல்லது கருவளை) இரண்டையும் சேர்த்துக் காட்டுவர். இடையில் மஞ்சளில் நனைத்த நூலிழையைக் கட்டுவர். வசதிக்கேற்ப தங்கக் கொடியுடனோ; அல்லது வெள்ளிக் கொடியுடனோ சேர்த்துக் கட்டுவதும் உண்டு.

தாய்வீட்டில் மகப்பேறுக்குப் பிந்தைய பக்குவம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது; கணவனின் பெற்றோர், உடன்பிறந்தோர், உற்றார், உறவினர் அனைவரும் சேர்ந்து பிள்ளை இருக்கும் இடம் தேடி வந்து; தம் வீட்டில் மரியாதைக்கு உரிய மூத்த பெண்களில் பெரியவரை வைத்தே இழை கட்டுவர். சில சமூகங்களில் குழந்தையின் தகப்பன் கூடப் பிறந்த சகோதரி மட்டுமே இழை கட்டும் உரிமை உடையவள் ஆவாள். சிவகாசியில் அவளுக்கு 'அப்பன் கூடப் பிறந்த கப்பலரசி' என்ற பட்டப்பெயர் உண்டு. அப்படிக் கட்டப்படும் இழை... குழந்தை வளர வளர இறுக்கும். பின்னர் அதைக் கறுப்புக் கயறாக மாற்றி ஆண்டிற்கு ஒரு முறை புதுக்கயறு வாங்கிக் கட்டுவோம்.

தொண்ணூறுகளில் கூட கடைத்தெருக்களில் இந்தக் கறுப்புக் கயறு / சிவப்புக் கயறைத் தொங்க விட்டுக் கொண்டு விற்பவர்களைக் காணலாம்.    

///*வெள்ளி அரணாக்கொடி*

இதைப் பழைய காலத்தில் விவசாயக் குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிவர்..

விவசாயக் குடும்பம் மட்டுமே இல்லை; கொஞ்சம் வசதி படைத்த நம் தாத்தா வயதில்... தந்தை வயதில் இருந்த அனைவரும் அதை அணிந்து கொண்டு இருப்பதை பார்த்தும் இருப்பீர்கள்.

என்ன... அவர்கள் அனைவரும் அதை அணிந்து கொண்டு இருந்த போது அவர்கள் அனைவரும் கோமணம் (விவசாய காட்டில் வெள்ளையும் சொள்ளையுமா சுத்த முடியாதே???) மட்டுமே அணிந்து இருப்பார்கள். இதைப் பார்த்துப் பார்த்துப் பழகி... 

ஆனால் இன்றைய பேரன்மார்கள்... !? இப்பொழுது வெள்ளி அரணாக்கொடி என்பது ஏதோ தீண்டத் தகாத பொருள் போல இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.

அரணாக்கொடி எதற்காக என்று இன்னும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் விதமாக இப்பதிவு.

ஆண்களின் இடுப்பில் உரசிக் கொண்டே இருக்கும் அரணா என்பது ஆண்களின் விந்தணுப் பையில் இருக்கும் விந்தணுக்களை அழிவில்லாது காப்பாற்றிக் கொடுத்து அவர்களுடைய வம்ச விருத்தி செய்ய உதவுகிறது.

ஜோதிட ரீதியான அடிப்படையில் சனி பகவான் சுக்கிரன் வீடான துலா ராசியில் செல்லும்போது உச்சம் அடைகிறார். இந்த சனி பகவான் நம் உடலில் ஆங்கிலத்தில் ஸ்பைனல் கார்ட் எனச் சொல்லப்படும் நடுத் தண்டுவட எலும்பு அடுக்குகள் உள்ளே இருந்து ஆட்சி செய்கிறார். முதுகுத்தண்டு வட 32 எலும்பு அடுக்குகள் கூட கருப்பு நிற நரம்பில் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த தண்டுவட எலும்புக்கு கீழே அடித்தளத்தில் சுக்கிரன் எனும் வெள்ளி இருந்தால்... அந்தத் தண்டுவடம் விலகுதல் / பாதிக்கப்பட்டு விடுதல் போன்றவை இல்லாமல் நல்ல தேக ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொண்ட மனிதன் ஆக வைக்கிறது..

அதே போலத் தான் பெண்களின் இடுப்பில் ஒட்டியாணம் தங்கத்தினால் அணிவிக்கப்படும்

இது அந்தப் பெண்ணின் கருப்பையில் உள்ள தேவையற்ற செல்களை அழித்து நல்ல விதமாக மகப்பேறு எனும் குழந்தைப் பேறு பெற உதவுகிறது.

எம்மைப் பொறுத்தவரை திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத தம்பதியினருள் ஆண் வெள்ளி அரணாக்கொடி அணியும் போது; தன்னுடைய விந்தணு உற்பத்தி அதிகப்படியான அளவில் கொண்டு வர உதவும்.
பெண் தங்க அரணாக்கொடி அல்லது... தன் தொப்புளில் சிறிதளவு ஆவது தங்கம் அணிய கர்ப்பம் தங்கும் என நம்பலாம்...

ஆண்களுக்கு இன்னொரு குறிப்பு: 
தற்போதைய இளைஞர்கள் அனைவரும் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். சிறு வயதிலேயே (31 வயது) பைக் அதிகமாக ஓட்டுவதால் தண்டுவடம் கொஞ்சமாக வலி கண்டு சிகிச்சைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரை அவர் வெள்ளி அரணாக்கொடி அணியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி அணியச் சொன்னேன். ஆறு மாத காலத்திலேயே தன் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருந்த நிலை மாறி விட்டதை மிகப்பெரும் அதிசயமாக மீண்டும் வந்து சொன்னார்கள்.

கண்ட கண்ட நகைகளை வாங்கி அணிவதை விட்டு தேவைக்கேற்ப நகைகளை அணியலாம்.
*தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்*
*தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்*
*தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்*
*தன்வழித் தன்னரு ளாகிநின் றானே .*///

முந்தைய தலைமுறையின் ஆண்கள் கடைசிக் காலம் வரை கட்டினர். பெண்கள் குழந்தைப் பருவத்தில் மட்டுமே கட்டினர். 

இந்தத் தலைமுறையில் பள்ளிக்கூடம் போனவுடன் கட்டுவதை நிறுத்தி விடுகின்றனர். 

சில சமூகத்தார் இந்த அரணாக்கயறில் சில சங்கதிகளைச் சேர்த்துக் கோர்த்துக் கட்டி விடும் வழக்கமும் முன்பு இருந்தது. 

ஜோதிட ரீதயாகச் சொல்லப்படும் விளக்கங்கள் பற்றிய உண்மைத் தன்மை தெரியவில்லை. 

உடல்நலம் சார்ந்த நன்மைகள் பற்றி மருத்துவர்கள் தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும். 

ஆனால் எங்கள் தலைமுறை வரை பிள்ளைகளுக்கு கறுப்புக்கயறு கட்டுவது கண்படாமல் இருக்க... என்ற நம்பிக்கை வழக்காறு உள்ளது. 

சக 

kanmani tamil

unread,
Nov 15, 2025, 11:53:12 PMNov 15
to vallamai
இழவு வீடுகளில் ஒப்பாரி வைக்கும் மரபு நகர்ப் புறத்துச் சமூகங்கள் சிலவற்றில் முற்றிலும் அருகி விட்டது.  
இரண்டு அல்லது மூன்று மணித்துளிகளுக்கு மேல் யாரும் அழுவதே இல்லை என ஆகி விட்டது. காரணம் தனியாக ஆராயப்பட வேண்டியது. 

சில சமூகங்களில் கூலிக்கு ஆட்களை வரவழைத்து ஒப்பாரி பாடச் சொல்வதையும் நேருக்கு நேர் பார்க்கிறேன். மைக் வைத்துப் பாடச் செய்வர். அப்படி ஒப்பாரி பாடுவோர் மாரடித்து அழுவர். இனி வரும் தலைமுறைக்கு 'மாரடித்தல்' என்றால் என்ன என்றே தெரியாமல் போய் விடும்.

இரண்டு கைகளாலும் மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு அழுவர். 
கூலிக்கு ஒப்பாரி வைப்போர் கைக்கும் மார்பிற்கும் வலிக்காதபடி தன்மையாக அடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பர். அதனால் தான் ஈடுபாடு இன்றிப் பணி செய்வதைக் 'கூலிக்கு மாரடிக்கிற மாதிரி' என விமர்சிக்கும் சொலவடையும் சமுதாயத்தில் வழங்குகிறது. 

இந்த ஒப்பாரி தமிழரது நாட்டார் வழக்காறுகளில் ஒன்று. ஒப்பாரி, மாரடிப்பின் சூட்சுமத்தைப் பின்வரும் முகநூல் பதிவு எடுத்து உரைக்கிறது. 


சிறுமியாக இருந்த பொழுது... தாத்தா இயற்கை எய்திய அன்று; உறவுப் பெண்கள் சிலர் பாட்டியோடு இருபுறமும் தோள்களில் கைபோட்டு வட்டமாக அமர்ந்து குனிந்து ஒருசேர அப்புறமும் இப்புறமுமாக அசைந்தாடிய படி பாடிக் கொண்டே அழுதது இன்னும் என் மனக்கண்ணை விட்டு அகலவில்லை (தாத்தா என்னைப் பொத்திப் பொத்திப் போற்றி வளர்த்த பாசப் பெட்டகம் அல்லவா!). அப்படி ஒப்பாரி வைக்கும் போது இடையில் அவ்வப்போது ஒலியோடு நீளமாக மூச்சை உள்வாங்கி; பிறகு சிணுங்கி வெளிவிடுவர். அவற்றைக் குறிக்கும் கலைச்சொற்கள் இழுவை, சிளுக்கு என்பன.

தமிழகத்து  ஒப்பாரியில் இடம் பெறும் இரண்டு தவிர்க்க முடியாத கூறுகள்: இழுவையும் சிளுக்கும் ஆகும்.

ஒலியோடு  நீண்ட மூச்சை உள்வாங்கும் இழுவையைத் தொடர்ந்து; உள்வாங்கிய மூச்சை ஏக்கம் கலந்த ஒலியோடு சேர்த்து 
வெளிவிடும் சிளுக்கு ஆகிய இரண்டும் பிரிக்க முடியாதவை. இழுவைக்குப் பிறகு தான் சிளுக்கு தொடர இயலும்.  

ம.கா.பல்கலை.யில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் பணியாற்றிய திருமதி விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் 1990வாக்கில் ஒளவையின் ஒப்பாரியை இழுவையோடும் சிளுக்கோடும் எம் கல்லூரி இலக்கியமன்றக் கூட்டத்தில்  பாடிக்காட்டினார்.

இந்த ஒப்பாரி தான் புறம்.235.

சிறியகள் பெறினே எமக்குஈயும் மன்னே (1)

பெரியகள் பெறினே (2) 

யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே (3)

சிறுசோற் றானும் நனிபல 
கலத்தன் மன்னே (4)

பெருஞ்சோற் றானும் நனிபல 
கலத்தன் மன்னே (5)

என்பொடு தடிபடு வழிஎலாம் எமக்குஈயும் மன்னே (6)

அம்பொடு வேல்நுழை வழியெலாம் தானிற்கு மன்னே (7)

நரந்தநாறும் தன்கையால் (8)

புலவுநாறும் என்தலை 
தைவரும் மன்னே (9)

அருந்தலை இரும்பாண ரகல்மண்டைத் துளைஉரீஇ (10)

இரப்போர் கையுளும் போகிப் (11) 

புரப்போர் புன்கண் பாவை சோர (12)

அம்சொல்நுண் தேர்ச்சிப் 
புலவர் நாவில் (13)

சென்றுவீழ்ந் தன்றவன் (14)

அருநிறத் தியங்கிய வேலே (15)

ஆசுஆகு எந்தை யாண்டுளன்கொல்லோ (16)

இனிப் பாடுநரு மில்லை பாடுநர்க்கொன் றீகுநருமில்லை (17)

பனித்துறைப் பகன்றை 
நறைக்கொள் மாமலர் (18)

சூடாது வைகியாங்கு
பிறர்க்கொன்று (19)

ஈயாதுவீயும் உயிர்தவப் பலவே (20)

திணை: பொதுவியல்; 
துறை: கையறுநிலை.
அதியமான்நெடுமான் அஞ்சி மாய்ந்த போது ஔவையார் பாடியது. 

இப்பாடல் வாய்மொழி இலக்கிய வகைகளுள் ஒன்றான ஒப்பாரி என்பதற்கு இதன் யாப்பமைதியே சான்று.

முதலடியில்  நான்கு சீர்கள்..........இரண்டாமடியில் இரண்டு சீர்கள்; இங்கு மூன்றாவதாக அமைய வேண்டியது இழுவை ; நான்காவதாக அமைய வேண்டியது சிளுக்கு..........எட்டாவது அடியில் மீண்டும் ஒரு இழுவையும் சிளுக்கும் இடம்பெறும் ........அதற்கேற்பவே அந்த அடியில் சீர்கள் உள்ளன.
அதேபோல் பதினொன்று, பதினான்கு, பதினைந்து, பத்தொன்பதாம் அடிகளிலும்... 

சக 


kanmani tamil

unread,
Nov 21, 2025, 11:11:27 PMNov 21
to vallamai

/// #தென்மாவட்டத்தில்   பனைநாரால் முடையப்பட்ட பெரிய பெட்டியைக் #கடகம் என்போம். #பனைஓலை யால் முதலில் முடைந்து அதன் பிறகு பனை மட்டையில் உள்ள நாரைப் பக்குவப்படுத்தி அதன்மீது கோர்ப்பார்கள். அல்லது முழுக்கப் பனை நாரால் பின்னுவார்கள். இவற்றுள் சிறிய பெட்டியை #நார்ப்பெட்டி என்றும் அதைவிடக் கொஞ்சம் பெரிய பெட்டியைச் சீர்ப்பெட்டி என்றும் மிகப்பெரிய பெட்டியைக் கடகம் என்றும் அழைப்பார்கள். எங்கள் வீட்டில் கூட ஒரு காலத்தில் கடகம் இருந்தது.  

வண்ணக் கலவையைக் காய்ச்சி அதில் பக்குவப்படுத்தப்பட்ட நார்களை அவித்து உலர வைத்து முடைவார்கள். திருமணத்தில் இப்பெட்டிக்கு முக்கியப்பங்கு உண்டு. திருமணச்சீராக இப்பெட்டி கொடுக்கப்பட்டது. இந்தப்பெட்டியில் தான் பலகாரம், முறுக்கு, அரிசி கொடுப்பார்கள். திருமணத்தின்போதும் அரிசையைச் சீர்ப்பெட்டியில் வைத்துத்தான் அளப்பார்கள். நாங்கள் வழக்கில் பொட்டி (பெட்டி) என்றுதான் சொல்வோம். #ஓலக்கொட்டான், #ஓலப்பொட்டி, #நாருப்பொட்டி, #சீருப்பொட்டி, #கடகம் ,#வெத்தலக்கொட்டான்...

"#கடகப்பெட்டி"எனும் #அரிசிப்பெட்டி.

கடகப் பெட்டி என்பது என்ன..?

நம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த பொருள் கடகப்பெட்டி.
கடவாப் பெட்டி என்பது (சொல்) பேச்சுவழக்கு.
#பனையோலை யால் செய்யப்படும் பெரிய பெட்டி.
பைகளின் காலத்திற்கு முன் பொருட்கள் வாங்க; கொண்டு செல்லப் பயன்பட்ட பெட்டி.

இன்றும் விழா நாட்களில் சோறு பொங்கி தட்டப் பயன்படும் ஓலைப்பாய்,
திருச்செந்தூரில் கிடைக்கும் சில்லுக்கருப்பட்டி அடைக்கப்பட்ட #ஓலைக்கொட்டான்
இரண்டுமே இதன் சகோதரிகள்.

பனையோலையை நன்கு ஊற வைத்து பின்னப்படும் கடகம் தேர்ந்த கலை நுட்பம் மிக்க வேலை. யாழ்ப்பாணக் கடகங்கள் புகழ் மிக்கவை.
அலங்கார வேலை மிக்கவை.
சங்க காலத்தில் இதன் பெயர் "#வட்டி"

"அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தோடு சென்ற #வட்டி பற்பல
மீனோடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
செல்வமன்று
தன்செய்வினைப் பயனே.
சான்றோர் செல்வம் என்பது
சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வமென்பதுவே."

#மிளைகிழான்_நல்வேட்டனார்.

இந்த #நற்றிணைப் பாடலில் வரும் வட்டி என்பது பனையோலைப் பெட்டியாகும்.
'வட்டியில் விதைகளைக் கொண்டு சென்று விதைத்து விட்டு; மீன் பிடித்து அதில் போட்டு; வீடு திரும்பும்' என்பது பொருளாகும்.

அன்றாட வாழ்வில் கடகத்தின் இடம் இதுவெனில் பண்பாட்டில் இதன் இடம் முக்கியமானது.
எங்கள் குடும்பப் #பெண்தெய்வத்தின் இருப்பிடம் இந்தக் கடகப்பெட்டிதான்.

அதுபோலவே தெக்கத்தி பக்கம்
பெண்மக்களுக்கு வாழ்வில் இரண்டு முறை அரிசிப் பெட்டி போட்டுப் புகுந்த வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஒன்று...  திருமணம் ஆன மறுநாள் 
இரண்டு... தந்தை இறந்த ஒரு வாரத்தில்....

இப்படி இரு சமயங்களில் கடவாப்பெட்டியில் 
அரிசி, பருப்பு, காய்கறி போட்டு அனுப்ப வேண்டும்.அனுப்ப வேண்டுமெனில் பெண்ணின் சகோதர முறைக்காரனே கொண்டு சென்று புகுந்த வீட்டில் சேர்க்க வேண்டும்.
இதனால் கடவாப் பெட்டிக்கு 
'அரிசிப் பெட்டி' எனும் பெயருண்டு.
பின்னாளில் குழந்தையை முன்னிட்டு மாமியார் மருமகள் இடையே சடவு வரும் போது
"புள்ளய அரிசிப் பெட்டியிலயா கொண்டு வந்தா?! அது எம்புள்ள தந்தது.."என மாமியார்க்காரி கேட்பதுண்டு. இன்று கடகப் பெட்டி இல்லை.
ஈய/சில்வர் வாளிகளில் அரிசி, பருப்பு போடப்படுகிறது.
ஆனாலும் அதன் பெயர் அரிசிப் பெட்டி தான். ஒரு வார்த்தை தான் எவ்வளவு விசயங்களைக் கொணர்கிறது 'கடகப் பெட்டி'

#பாலிதீன் பொருட்களைத் தவிர்த்துப்  பனைத்தொழிலை ஆதரியுங்கள். 

#பனைத்தொழில் காப்போம்
#பனைமரங்கள், #பனைஏறிகளைப் போற்றுவோம்.

#பனைஓலை 💚
#தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமே இதன் அருமை தெரியும்..///


தெரிவு:சக

சக்திவேலு கந்தசாமி

unread,
Nov 21, 2025, 11:43:39 PMNov 21
to vall...@googlegroups.com
அறிய வைத்ததற்கு நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctCgO4h2PGA8%3DkE9Vx-PyVNM9tmwCNj_dHBqp_qqje7bA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Nov 27, 2025, 1:10:58 AMNov 27
to vallamai
இறைச்சியைச் சுட்டு உண்ணும் முறை மனித குல வரலாறளவு பழமையான மரபு ஆகும். இன்றும் மீனைச் சுட்டு உண்ணும் வழக்கம் நதிக்கரைகளில் நாம் மிகுதியாகக் காணக் கூடியதே. 

ஒகேனக்கலில் ஆடி மாதம் வெள்ளம் வந்தவுடன்  எண்ணிலடங்காதோர் நம் கண் முன்னே ஆற்றில் மீன் பிடித்துக் கரையில் சுள்ளிகளை மூட்டிச் சுட்டு விற்கின்றனர். 

வீட்டில் கோட்டடுப்பில் சமையல் முடிந்தவுடன் மாங்கொட்டை, பலாக்கொட்டை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருவாடு ஆகியவற்றைச் சுட்டு உண்பது 1970கள் வரை இருந்த நடைமுறையே. 
அப்போதெல்லாம் நெல் அவித்த அடுப்பில் (கணப்பு மிகுதியாக இருக்கும்) சுடுவதற்காகவே பண்டங்கள் காத்து நிற்கும். 

தொகையிலக்கியம் மீன் சூடு, பிற சூடுகள் பற்றி மிகுதியான தரவுகளைத் தருகிறது. 

மீன், முயல், பன்றி, ஆடு, மான், முள்ளம் பன்றி, உடும்பு, ஆகியவற்றின் ஊனைச் சுட்டு உண்டனர். 

சுடப்பட்டது சூடு

போர் நிமித்தமாகப் பாண்டிய நாட்டிற்குள் நுழைந்த சோழநாட்டு வீரர் அங்கு பனங்கிழங்கைச் சுட்டுத் தின்றனராம் (புறம்.225).
கிடாய்க்கறியைச் சூட்டுக்கோலால் கிழித்துச் சுட்டமையை 'விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப' என்கிறது புறம்.366. 'சூடுகிழிப்ப'= 'சூட்டுக் கோலால் கிழித்து'. 
இரும்புக் கம்பியில் கோத்துச் சுட்ட ஊன் சூடு 'காழிற்சுட்ட கோழூன் கொழுங்குறை' எனப்படுகிறது (பொரு.105). காவலர் வீழ்த்திய பன்றியைச் சுடவேண்டிய பக்குவத்தைக் கூறுகிறது மலைபடுகடாம் (அ.247-249). சுத்தமாகப் பன்றித் தோலின் மேல் உள்ள மயிரினை இராவி நீக்க வேண்டுமாம். 
பாலும் தேனும் கலந்த வரகுச்சோற்றுக்குக்  குறு முயலின் மென்மையான கொழுத்த சூடு ஒத்த துணை உணவானது (புறம்.34).
தீயில் சுடும் முள்ளம்பன்றி ஊனின் மணம் 'கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்’ எனப்படுகிறது  (புறம்.325).
ஊர்மன்றில் நின்ற முதுமரத்து அணங்கிற்கு எலிச்சூடு படைத்தனர் (நற்.83).

வாடூன் ஆகிய பதப்படுத்தப்பட்ட கருவாடு, புதிதாகப் பிடித்த மீன் (பச்சூன்)  இரண்டையும் சுட்டு உண்டனர்.
கருவாட்டை   இரும்பு நாராசத்தில் குத்திச் சுட்டு விருந்தளித்தனர். 'சூடுகிழித்து வாடூன் மிசைய' என்கிறது  புறம்.396. போர்மறவர் தம்முள் போட்டியிடும் முன் இறால்மீன்  சூடு உண்கின்றனர் (பட்டினப்பாலை அ.63).

வலைஞர் பச்சைமீனைச் சுட்டு வழிச்சென்ற  பாணர்க்கு அளித்தனர் (பெரு.275-282). இது ‘தண்மீன் சூடு’ ஆகும். 
ஓர் இரவுப் பொழுது நீரில் ஊறிய நெல்லுச் சோறாகிய கொக்குகிர் நிமிரலுக்குரிய இணை  ‘பசுங்கண் கருனைச்  சூடு’ ஆகும்; அதாவது பச்சை மீனைச் சுட்ட கருனை (புறம்.395). கருனை=sidedish
கோப்பெருஞ்சோழன் வேளாண் பணியாளர்க்கு ‘ஆரல் கொழுஞ்சூடு’ அளித்தான் (புறம்.212); அதாவது கொழுத்த ஆரல் மீனின் சூடு.  

கப்பைக் கிழங்கும் சுட்ட மீனும்- ஒரு மரபுசார் உணவுமுறை:

/// கப்பையும் மீனும் பற்றிய பதிவு மறுபடியும் ஒரு சுற்றுக்கு வர அண்ணன் பிரிட்டோ Britto Antony சுட்ட சாளை மீன் பற்றி ஓருமைப்படுத்தினார் 
(ஞாபகப்படுத்தினார் என்பதற்கு எங்க ஊரில் இன்றும் பயன்படுத்தப்படும் பழந்தமிழ்ச் சொல்; தமிழ் தெரியாத பிற தமிழ்நாட்டுக்காரர்கள் இதற்காக நாங்கள் மலையாளம் பேசுவதாகச் சொல்வார்கள்.). 

நான் சிறுவனாக இருக்கும் போது குறிப்பிட்ட மாதங்களில் சாளை வரத்து அதிகமாக இருக்கும் . சில நாட்களில் அளவுக்கதிகமாக சாளை மீன் வரத்து வாங்குவார் இல்லாத அளவுக்குச் செல்லும் . அதிக சாளை வரத்தும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்தால் வேறு வழியின்றி அது கருவாடுக்குத் தான் போகும் . அது போன்ற நாட்களில் வேடிக்கை பார்க்கக் கடற்கரைக்குச் சென்றால் கூட 
“லே மக்கா! கொஞ்ச சாளையை அள்ளிட்டுப் போய்ச் சுட்டுத் தின்னுங்க” என சொல்வார்கள். நாலைந்து பேர் சேர்ந்திருந்தால் இரு கைகளிலும் முடிந்த அளவு சாளையை அள்ளிக் கொண்டு கரையை விட்டு வெளியே வருவோம். அப்போதெல்லாம் விறகு வைத்த நல்ல பெரிய அடுப்பு... யார் வீடாக இருந்தாலும் சரி; உள்ளே போய் “சாளைய சுட்டுக் குடுங்க“ என்போம் . அவர்கள் “குடுங்க மக்கா” என வாங்கி அப்படியே அடுப்புக்குள் கனலுக்கு நடுவே தள்ளி விடுவார்கள் . அம்புட்டுத் தான். அதில் மசாலோவோ, உப்போ எதுவுமோ கிடையாது. கடற்கரையிலிருந்து அப்போது வந்த சாளை எதுவரை சுட வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்ற பக்குவம் அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொன்றாக கவ்வி எடுத்து வெளியே போடுவார்கள். ஒரு தட்டில் எடுத்து பரப்பி வைத்தால் முடிந்தால் கொஞ்டம் அவித்த மரவள்ளிக் கிழங்கோடு சாப்பிடுவோம் . கைவைத்தாலே மேலிருக்கும் செதிலும் தோலும் தனியாக வரும். சுளையாக சுட்ட மீன். அதெல்லாம் அனுபவித்துப் பார்க்க வேண்டியது (படத்தில் இருப்பது சாளை அல்ல).

பொதுவாக வட தமிழ்நாட்டில் பெரிதாக யாரும் சாப்பிடாத மரவள்ளிக் கிழங்கு குமரி மாவட்டத்தில் எல்லோருக்கும் பிடித்தமான உணவு என்பது தெரிந்தது தான் . காரணம் மரவள்ளிக் கிழங்கை அவித்து மீனோடு சாப்பிடும் கப்பையோடு அது நிற்பதில்லை. அது கிழங்கு கூட்டு , கிழங்கு தேங்காய் பிரட்டல் , கிழங்குக் களி , கிழங்குப் புட்டு என பல வடிவங்களில் செய்யப்படும் . போதாதற்கு மரவள்ளிக் கிழங்கை வெட்டிக் காயவைத்து அதை வெட்டுக்கிழங்கு என பல வகைகளில் சாப்பிடுவார்கள் . அப்படியே கடித்து சாப்பிடுவது, அரைத்து மாவாக்கி களியாக, புட்டாக அதோடு ஆணம் என ஒரு வகை உணவு செய்வார்கள் கிழங்கைக் கொண்டாடும் குமரி மக்கள்!

https://www.facebook.com/share/16jua6dDXN/

இவ்உண்ணுமுறையின் எளிமையைத் தான் அகம்.110 ‘இழிந்த கொழுமீன் வல்சி’ என்று பரதவப் பெண்கள் வாய்மொழியாகக் கூறுகிறது. 

எண்ணெயில் வறுத்து எடுப்பதும் பொறித்து உண்பதும் மேம்பட்ட உணவுமுறை எனச் சொல்லப்படும் தரவுகளும் உள. 

ஆனாலும் சுட்ட மீனின் ருசி உண்டு வளம் கண்ட நாவினர்க்குத் தெரியும்.

சக 

kanmani tamil

unread,
Dec 2, 2025, 8:02:15 PMDec 2
to vallamai
/// கார்த்திகையில் பனை ஓலையில் கருப்பட்டி கொழுக்கட்டை / தென் தமிழகத்தின் கலாசாரப் பண்டிகை உணவு.///


அந்த ஓலை மணமும் கருப்பட்டி மணமும் சேர்ந்து மூக்கைத் துளைக்கும்; உண்பதைத் தவிர்க்க முடியாது. 

செய்முறை:

ஓலையை மூடி வேக வைப்பதில் வேறு முறையும் உண்டு. 


ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாது.

பனை மரமும் ஓலையும் இல்லாத எங்கள் ஊரில் கார்த்திகை தீபத்தன்று...
விரதம் இருப்போர் விரதம் விடும் வரை கடலை உருண்டை பிடித்து வைத்து அவ்வப்போது அதை மட்டும் உண்பது வழக்கம். 
விரதம் மேற்கொள்ளாதவர் அதே உருண்டையைப் பலகாரமாகச் செய்து வைத்து ருசிப்பது வழக்கம். 

தொகைஇலக்கியம் பெரிய கார்த்திகை அன்று அவல்பாயசம் செய்வதைக் காட்சிப் படுத்துகிறது (அகம்.141). 

சக 

kanmani tamil

unread,
Dec 3, 2025, 11:13:11 PMDec 3
to vallamai
வீட்டுக் கதவில் மாவுக்கையின் அச்சுப் பதிக்கும் வழக்கம். 

/// 25 வருடங்களுக்கு முன்பு என் தந்தை எனக்குச் சொன்ன கதை.

திருக்கார்த்திகையை முன்னிட்டுக் கொழுக்கட்டை அவிப்பதற்காக ரெடி செய்த அந்த மாவை வைத்து இது போல் கதவுகளில் தன் கைகளால் அச்சு போடும் பழக்கம் இன்றளவும் கிராமங்களில் இருந்து  வருகிறது.

அதன் விளக்கம் என்ன என்று நான் சிறுவயதில் என் தந்தையிடம் கேட்டபோது, எனக்கு என் தந்தை  சொன்ன கதையை தங்களுடன் பகிர்கிறேன்.

திருக்கார்த்திகை அன்று அனைவரது வீட்டிலும் வீட்டின் திண்ணையிலும் மற்றும் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் திருவிளக்கு ஏற்றி கொழுக்கட்டை அவிழ்த்து வழிபாடு செய்வது வழக்கம். 

அந்தக் கொழுக்கொட்டை அவிப்பதற்காக, மாவு பிசைந்து கொழுக்கட்டை எல்லாம் வைத்து முடித்த பிறகு, கையில் இருக்கும் அந்த மாவை கொண்டு கதவுகளில் இது போல் அச்சு விடுவார்கள்.

எதற்காக அப்பா இப்படி கையை வைத்து அச்சு விடுகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு என் தந்தை சொன்னார்... 'ஏனென்றால் அனைவரது வீட்டிலும் விளக்கு ஏற்றிக் கொழுக்கொட்டை அவித்து இருக்கிறார்களா என்று மாவடிராசா  பார்க்க வருவார்; வந்து பார்த்துவிட்டு  சிவபெருமானிடம் போய் சொல்வார். நாம் இப்படி அச்சு வைத்து விட்டோம் என்றால் கதவை வந்து மாவடிராசா பார்த்து விட்டுக் கொழுக்கட்டை அவிழ்த்து விட்டார்கள் என்று சிவபெருமானிடம் போய் சொல்வார். அதற்காகத்தான் இப்படி அடையாளத்துக்காக வைக்கிறோம்' என்று என் தந்தை எனக்கு 25 வருடங்களுக்கு முன்பு சொன்ன கதை.

அதற்கு இது இதுதான் அர்த்தமா என்பது சரியாக எனக்குத் தெரியவில்லை.  வேறு ஏதாவது அர்த்தம் இருந்தால்; உங்கள் ஊரில் வேறு ஏதாவது சொல்வார்கள் என்றால்; அதை கமெண்டில் தெரிவிக்கவும். தெரியாதவர்களும் தெரிந்து கொள்வார்கள் தங்கள் கருத்தினால்... 

அதுபோக உங்கள் ஊரிலும் இப்போதும் இது போல் பனை ஓலையில் கொழுக்கொட்டை செய்தாலும் அதை கமெண்டில் தெரிவிக்கவும்; தங்கள்  ஊரையும் பதிவு செய்யவும். 

நாம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்பது உண்மை, ஆனால் இந்த செயலுக்கும் ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.///


எங்கள் பக்கத்தில் சாப்பிடுற விஷயம் எதுவும் மறக்க மாட்டோம்; ஆனால் இப்படி அச்சுப் பதிக்கும் வழக்கம் இங்கு இல்லை.

சிவகாசியில் பனைஓலைக் கொழுக்கட்டை யாரும் அவிப்பதில்லை; ஆனாலும் என்னுடன் பணி செய்த ஸ்ரீவில்லிபுத்தூர்த் தோழி கொண்டு வந்து கொடுப்பார். ருசியாக இருக்கும். 

தெரிவு: சக

kanmani tamil

unread,
Dec 4, 2025, 8:14:52 PMDec 4
to vallamai
மாவலி செய்முறை:

மாவலி? /மாவளி? எது சரி? ஆய்விற்கு உரியது. 

/// 1950 களில் கார்த்திகைத் திருநாள் மூன்றுநாள் பண்டிகையாக வெகு 
விமரிசையாகக் கொண்டாடப் பட்டது...

கார்த்திகைத் திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்துவது போல் கிராமங்களில் எல்லா வீட்டிலும் செய்வார்கள். இது பெரிய கம்பி மத்தாப்பூவுக்கு சமம்.

பனை மரத்தின் பூக்களை இதற்குப் பயன்படுத்துவர். பொதுவாகக் கார்த்திகை மாதம் மழை அதிகமா பெய்யும். அதனால ஒரு வாரத்துக்கு முன்னாடியே இத சேகரிச்சு வச்சிக்குவாங்க . 

ஒரு ஒன்பது பத்து மணியளவில் அரையடி விட்டம், ஒன்னரையடி ஆழத்திற்கு ஒரு குழி தோண்டி அதில் இந்த பனம்பூக்களை செங்குத்தாக நிறுத்தி தீயை வைக்கணும்... அதை எரியவிடாமல்; பூப்போல பொசுங்கணும்... அந்த மாதிரி பதம் வேணும்... கொஞ்ச நேரம் முறத்தால் வீசி அதைப் புகைய விட்டுப்; பூசணி இலைகளை மேல போட்டு; மண்ணை அள்ளி மூடிடணும். மாலை நாலைந்து மணிக்கு மண்ணைத் தோண்டி குழியில் உள்ள கரியை பக்குவமா எடுத்து (இல்லனா அது அங்கேயே தூளாகிடும்); அம்மியில் வைத்து அரைச்சி மாவாக்கிக்கனும் (கொரகொரனு இல்லாம; நல்லா தூளாகவும் இல்லாம பதமா அரைச்சாத் தான் பூ நல்லா கொட்டும்.). அரைச்ச தூளை ஒரு நூல் துணியில் வச்சி உருளை வடிவுல உருட்டிக் கட்டி வச்சிடணும்.

பனைமரத்தோட மட்டையை வெட்டி (காம்பு நீளமா உள்ள விளைந்த ஓலை மட்டையை வெட்டணும்.); ஓலை மற்றும் காம்பின் மறுபகுதி இரண்டையும் வெட்டி எடுத்துவிட்டு; நடுப்பகுதியை மட்டும் எடுத்து இருபுறமும் உள்ள முள்ளைச் சீவி; மட்டையை மூன்றாக முக்கால் அளவு பிளந்து; துணி உருளைய மட்டையின் பிளந்த பாகத்தில் வச்சி; மட்டையை கட்டிடணும். மறுமுனையில் கயிறு கட்ட ஏதுவாக மட்டையை சீவித்; தேவையான நீளமுள்ள கயிறை கட்டினால் மாவளி தயார். மேல்புறம் நெருப்பு வைத்து உருளையை நெருப்பூட்டி கயிறை எடுத்து சுத்த வேண்டும். பூ கொட்டும் போது நமது செய்திறன் அதில் வெளிப்படும்.

உருளையின் அளவை அரைக்கும் மாவு நிர்ணயிக்கும்; மட்டையின் அளவை உருளையின் அளவு நிர்ணயிக்கும்; கயிறின் அளவு சுத்துகிற ஆளைப் பொறுத்து அமையும்.

மாவட்டத்திற்கு மாவட்டம் செய்யும் முறையிலும், உபயோகிக்கும் பொருளிலும் சிறிய மாற்றம் உண்டு.///

https://www.facebook.com/share/p/1CLf9YGqZZ/

எங்க ஊரில் சிறுவர்கள் பழைய டயரைக் கொளுத்திச் சுற்றுவர். 

வீட்டுப் பெண்கள் வாசலில் குங்கிலியம் கொளுத்துவோம். 

பல குடும்பங்களில் தீபாவளியன்று ஆடவர் வெடிக் கடைகளிலும்; அது தொடர்பான பணிகளிலும் அயலூரிலும் இருப்பர் ஆதலால்; கார்த்திகையைத் தான் குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடுவதாக அமையும். அன்று தான் வீட்டில் வெடியும் வாணவேடிக்கையும் போட்டு மகிழ்வர். போட்டு முடித்தவுடன் வெடிக் குப்பைகளைக் கூட்டி வைத்துச் சொக்கப்பனை கொளுத்துவோம். 

தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 5, 2025, 7:56:41 PMDec 5
to vallamai
மாவளி சுற்றும் காட்சி:

https://www.facebook.com/share/r/1XpQ9Rp2ct/

சக 

kanmani tamil

unread,
Dec 6, 2025, 7:08:28 PMDec 6
to vallamai
திருக்கார்த்திகை அன்று பிரம்மனாலும் பெருமாளாலும் அடிமுடி அறியவொண்ணா நெருப்புப் பிழம்பாகக் காட்சி கொடுத்த சிவபெருமான் பற்றிய தொன்மத்தை அடியொட்டி நிகழ்த்தும் சொக்கப்பனைக் காட்சி... 


சொக்கநாதப் பெருமானின் ஓங்கிய நெருப்பு உருவத்தைப் பனை ஓலைகளால் ஏற்றுவதால் 'சொக்கப்பனை'

சக 

kanmani tamil

unread,
Dec 9, 2025, 8:44:57 PM (14 days ago) Dec 9
to vallamai
மறந்து போன தமிழர் மரபு-
குப்பை நாச்சியார் என்ற மூத்த தேவி பூஜை 


மூத்ததேவியே மூதேவி என்று மருவியதாகவும்; ஜேஷ்டா தேவி என்ற வடமொழிப் பெயர் பெற்று 'சேட்டை' என மருவியதையும்; இன்று மக்களிடம் செல்வாக்கு இழந்ததையும் அழிந்த வரலாறாக அறிகிறோம். 

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Dec 10, 2025, 7:32:32 PM (13 days ago) Dec 10
to vallamai
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் கார்த்திகைப் போக்கு வழிபாடு:

/// கார்த்திகை போக்கு என்றால் என்ன?
தென் மாவட்டங்களில், நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து காலம் காலமாக, நடத்தி வரப்படும் வழிபாடு ஆகும்,

இந்த வழிபாடு குறிப்பாகக் கார்த்திகை மாதங்களில் வரும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று அம்மன் கோவில்களில்; அதாவது வடக்குத்தி அம்மன் கோவில்களில் நடைபெறுவது வழக்கம்.

இந்த வழிபாட்டின் போது ஊர்களில் உள்ள தெருக்களில் எல்லாம் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு; நான்கு மண்ணாலான கும்ப கலசங்களை சாமிக்கு முன் வைத்து; பட கஞ்சி வேகவைத்து அதைப் படையலில் வைத்து (பட கஞ்சி என்றால் நவதானியங்கள் அனைத்தையும் போட்டு வேக வைப்பது); சர்க்கரைப் பொங்கல்,  தேங்காய், பழம் என பூஜை சாமான்கள் அனைத்தும் வைத்து; இரவு 12 மணிக்கு மேல் பூஜை செய்து; ஊருக்கு எல்லையில் இருக்கும் சுடலை மாடசுவாமி திருக்கோவிலுக்குச் சென்று; அங்கேயும் பூஜை செய்துவிட்டுத்; திரும்பி அம்மன் கோவிலுக்கு வந்து; அந்தக் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட அந்த நான்கு மண் கும்ப கலசங்களையும் நான்கு இளநீர்களையும் எடுத்துக்கொண்டு; ஊரை விட்டு வெளியே உள்ள எல்லைப் பகுதியில் நான்கு முக்குகளிலும் அந்த நான்கு மண் கும்ப கலசங்களையும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு முக்கில் வைத்துத்; தேங்காய், பழம், பிற பூஜை சாமான்களோடு பூஜை செய்துவிட்டு; அந்தக் கும்ப கலசத்தையும் இளநீரையும் அங்கே வைத்துவிட்டு வந்து விடுவார்கள்.

இது எதற்காக என்று என் முன்னோர்களிடம் கேட்டபோது, அவர்கள் எனக்குச் சொன்ன பதிலை தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

'இது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து செய்து வரும் வழிபாடு. இது எதற்காக என்றால் முன்காலத்தில் எல்லாம் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடுமையான மழை பெய்யும். 
அந்த மழைக்காலம் முடிந்தவுடன் கார்த்திகை மாதங்களில் பல பேர் நோய்வாய்ப்பட்டு இறந்து போவார்கள். இப்பொழுது போல அப்போது எல்லாம் மருத்துவமனையோ மருத்துவ வசதியா எதுவுமே கிடையாது.
கார்த்திகை மாதத்தில் தான் அதிக இறப்புகள் ஏற்படும். அந்த இறப்புகள் இனிமேல் நடக்கக்கூடாது என அம்மனுக்குப் பூஜை செய்து வழிபட்டு வந்து கொண்டிருக்கிறோம்.
அதுபோக ஊருக்கு வெளியே உள்ள தீய சக்திகள் எதுவும் ஊருக்குள் வராமல் இருப்பதற்காகவும்; ஊர் எல்லைப் பகுதியான நான்கு பக்கங்களிலும் கும்ப கலசங்களை வைத்துக் காவல் தெய்வமாக ஊர் எல்லையில் இருந்து காக்க வேண்டும் என்பதும் வரலாறு' என்று என்னிடம் என் முன்னோர்கள் கூறினார்கள்.

நவதானியங்களால் வேக வைத்து செய்யப்பட்ட அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுப்பதும் வழக்கம், 

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்பது மட்டும் உண்மை. சில சம்பிரதாயங்கள் பக்தியோடு சேர்ந்த அறிவியல் பூர்வமானதாகவும் இருக்கும் என்பதும் எந்த சந்தேகமும் இல்லை. இந்த சம்பிரதாயத்திற்கும் பக்தியோடு சேர்ந்த அறிவியல் சார்ந்த விஷயங்களும் இருக்கலாம்.

உங்கள் ஊரில் இது போல் வழக்கம் உள்ளதா? இதுபோல் வேறு ஏதாவது வழக்கம் உள்ளதா? என்பதையும் கமெண்டில் தெரிவிக்கவும். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள்.///


'படகஞ்சி' என்ற சொற்றொடர் 'படையல் இடும் கஞ்சி' என்ற பொருளில் வழங்கி வந்துள்ளமை தெரிகிறது. 

தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 18, 2025, 7:23:05 PM (5 days ago) Dec 18
to vallamai

திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி:
https://www.facebook.com/share/v/1ANuqbaY9Q/

தெரிவு:சக
Reply all
Reply to author
Forward
0 new messages