கோயில்களும் சிறப்புகளும்

60 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jun 8, 2025, 11:31:50 AMJun 8
to vallamai
ஞானசரஸ்வதி அம்மன் கோயிலில் இன்று (8.6.25) காலை கும்பாபிஷேகம்

திருத்தங்கல் அரிமா சங்கத்தினர் நடத்தும் திருத்தங்கல் அரிமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒரு சரஸ்வதி கோயில் உள்ளது. இராஜப்பன் முதலாளி இருந்த காலத்தில் கட்டிய கோயில். அவர் இறைப்பதம் சேர்ந்த பிறகு முதல் முறையாக இன்று அவர் செய்த திருப்பணியில் தொய்வு ஏற்படாத வகையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் அரிமா உறுப்பினர்களும் ஒருங்கு இணைந்து நடத்திய திருப்பணி. 

இந்த அம்மனின் சிறப்பு அம்சம் என விக்னேஷ் (சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயில்) அர்ச்சகர் கூறிய செய்தி:

சரஸ்வதி அம்மன் பீடத்தில் தான் எழுந்தருளி இருக்கிறாள். அது தான் முறை... 
பீடத்தில் இருக்கும் வரிகள் அதற்குத் தாமரை போன்ற தோற்றத்தைத் தருகின்றன. அவ்வளவே...
அம்மனின் கையில் வெண்தாமரைப் பூ. அது தான் சரி... வீணை அம்மனின் திருவுருவத்தோடு இணைந்த கூறாக இல்லாமல் தனித்த பாகமாக உள்ளது; ஏனெனில் கல்விக்கு உரிய குறியீடு வீணை... அதை மாணவர்க்குத் தர அம்மன் தயார்நிலையில் இருக்கிறாள். 




விளக்கம் புதுமை. 

சக 

kanmani tamil

unread,
Jun 10, 2025, 2:40:37 PMJun 10
to vallamai
மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில்


விருதுநகர் மாவட்டம் அளகாபுரி அருகே...
முற்காலப் பாண்டியர் குடைவரை - 8ம் நூற்றாண்டளவில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டது.
சமணர் அமைத்த குடைவரைகள் எல்லாம் பாண்டியன் சைவ சமயம் மாறிய போது சைவக் கோயில்கள் ஆயின.

கருவறைக் குடைவரையில் புடைப்புச் சிற்பங்களாக இருக்கும் சிவன்,  முருகன், பிள்ளையார் ஆகிய  திருவுருவங்கள் அனைத்தும் சமணர் கைவண்ணங்களே. 

எப்படி ஒரு தாவரத்தில் கொழுந்து ஒரு அங்கமாக இருக்கிறதோ; அது போல் மலையின் ஒரு கூறு மலைக்கொழுந்து எனப்பட்டது. அதனால் ஈசனுக்கு மலைக்கொழுந்தீஸ்வரர் என்று பெயர். 

பிற்காலத்தில் தனியாக மரகதவல்லித் தாயார், நவக்கிரகங்கள், பைரவர் ஆகிய தெய்வங்கள் குகைக்கு வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. 

சிவபெருமானோடு தொடர்புறும் நீர்நிலைகள் எல்லாம் ஆகாயகங்கை எனும் பொதுப் பெயரைப் பெறுகின்றன. 

எங்கே சுனை இருந்தாலும் அதை மகாபாரதத்தோடு தொடர்புறுத்தி; அர்ச்சுணனின் கைவண்ணம் என்று கூறி மகிழ்வது தமிழக மக்களின் பண்பாட்டில் இருந்து பிரிக்க முடியாத நம்பிக்கையும் வழக்காறும் ஆகும். 

கருவறை வரை சுனைநீரைக் கொண்டு செல்லும் நீர் மேலாண்மை இத் தலத்தை வேளாளரோடு இயைபுறுத்துகிறது.

நேரம் வாய்க்கும் போது அவசியம் போக வேண்டிய கோயில்...

சக 

kanmani tamil

unread,
Jun 21, 2025, 11:26:47 PMJun 21
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில்...

https://youtu.be/StwpXfipUBE?si=UDjeGjiR7Fnxtsvu

காணொலி இக் கோயிலை முழுவதுமாகச் சுற்றிக் காட்டுவதுடன் தொடக்க காலத்தில் அது வடபத்ரசாயி என்ற பெயரில் அமைந்த பெருமாள் கோயிலாக இருந்து; பின்னர் ஆண்டாள் கோயில் என வழங்கப்பட்ட வரலாறோடு தொடங்குவது சிறப்பு. 

பெரியாழ்வார் தான் கண்டெடுத்த குழந்தைக்குக் (forsaken child) 'கோதை' என்று பெயர் சூட்டி வளர்த்தார் என்பது வரலாறாகத் தோன்றிய வழக்காறு. 

'கோதை ஆண்டாள்' என்ற பெயர் வழக்கு ஏற்பட்ட காரணம் தனி ஆய்வாக அமைய வேண்டியது. மக்கள் மனதில் இருந்து காலப் போக்கில் மறந்து போகும் உண்மைகளும் உள்ளன. அதில் ஒன்று 'கோதை' பற்றிய விளக்கம். பல வகையாகக் கட்டப்பட்ட பூமாலைகளுள் 'கோதை' எனும் வகையினைச் சேர்ந்த பூமாலையைக் கட்டிப் பெருமாளுக்கு அணிவித்ததால் தான் அவள் 'கோதை ஆண்டாள்' ஆனாள். இக் கருத்திற்குரிய ஆதாரத்தைத் தொகை இலக்கியத்தில் இருந்து பெற முடிகிறது. 

ஆண்டாள் மறைவிற்குப் பிறகு தான் ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி அமைந்தது எனலாம். கோயிலுக்கு உள்ளே இருக்கும் கிணறு ஆண்டாள் முகம் பார்த்த கிணறு எனச் சொல்வது பொதுமக்கள் ஆண்டாளின் மேல் கொண்ட அன்பின் வெளிப்பாடு காரணமாகத் தோன்றிய நாட்டார் வழக்காறு. 

இந்தக் கோயில் மண்டபத்தில் இலவசமாக பரதநாட்டிய வகுப்புகள் ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெறும் என 1980களில் கேள்விப்பட்டு இருக்கிறேன். விருப்பம் உள்ளவர் யாராக இருப்பினும் ஜாதி பேதம் இல்லாமல் கற்றுக் கொடுத்தனர். அங்கே பயின்ற மாணவிகள் கல்லூரியில் (SFR) நாட்டியப் போட்டி வைக்கும் போது பின்னி விடுவார்கள்... நான் 1976ல் இருந்து 30ஆண்டுகள் தொடர்ந்து பணி ஆற்றிய கல்லூரி ஆதலால்; பல முறை நேரில் பார்த்து வியந்து இருக்கிறேன். இப்போது நடைமுறையில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

சக 

 

kanmani tamil

unread,
Jun 22, 2025, 2:29:02 PMJun 22
to vallamai
ஆண்டாள் நாச்சியாரின் இடது கையில் ஏந்தி இருக்கும் கிளியின் செய்யும் முறை...

 
திருமணத் தடை நீங்க ஆண்டாளின் சன்னிதிக்குச் சென்று வழிபடும் பெண்களுக்கு ஆண்டாளின் கோதையை அணிவித்து; அவளது கையில் ஏந்திய கிளியையும் கையில் கொடுத்து; சன்னிதியை வலம் வர வைக்கும் நடைமுறை இன்று வரை தொடர்கிறது. 

சக

kanmani tamil

unread,
Jun 24, 2025, 10:01:48 PMJun 24
to vallamai
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மடவார் வளாகம் எனப்படும் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலின் சிறப்புகள்:

ஆண்டாள் தன் தோழிகளோடு குடைந்து நீராடியது இச் சிவன் கோயிலின் அருகில் உள்ள குளம் என்பது கர்ணபரம்பரைச் செய்தி. 

திருமலை நாயக்கரின் வயிற்றுவலி இக்கோயிலுக்கு வந்து வழிபட்ட பிறகே தீர்ந்தது என்பர். 

இக்கோயிலின் உச்சிக்கால பூஜை முடிந்த பிறகே திருமலை நாயக்கர் உணவுண்ண அமர ஏதுவாக; இங்கிருந்து மதுரை வரை மணிமண்டபங்களை அமைத்தார் என்பர். 

https://youtube.com/shorts/9eLHLRBeZu0?si=tFkhmG6DFIsW-mQr

கோயிலின் பெயர்க் காரணம், சிவகங்கை தீர்த்தம், ஹேமதீர்த்தம், தாமரைக் குள மகிமை, படியில் காசு வைத்த பெருமை என அனைத்தும் இக் கோயிலின் பெருமைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன. 


சுகப் பிரசவத்திற்கு வழிபட வேண்டிய ஈசன் என்ற அற்புத நிகழ்வு தாயுமான சுவாமி பற்றிய தலபுராணத்தை ஒத்துக் காணப்படுகிறது. 


கோயிலின் பழமையும் அழகும் அமைதியும் மனதிற்கு நிறைவைக் கொடுத்து; பக்தியைத் தூண்டும் சூழலுடன் பொருந்தி உள்ளது. 

சக

kanmani tamil

unread,
Jun 25, 2025, 10:06:03 PMJun 25
to vallamai
விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகில் உள்ள கீழ ராஜகுலராமன் கோயில்... 


கோயிலின் பெயரில் ராமன் இருக்க; கருவறைக்குள் பாமா ருக்மணி சகிதமாய் ராஜகோபாலன் தான் இருக்கிறார். இதிலிருந்தே இக் கோயில் காலத்தால் முற்பட்டதாக இருந்து... சிதைந்து... பின்னர் சீர்ப்படுத்தப் பட்டது என முடிவு செய்ய இயல்கிறது.

கோயிலின் மேற்கூரையில் உள்ள புடைப்புச் சிற்பம் என்ன என அடையாளம் சொல்ல இயலவில்லை என்கிறார் புலனப் பதிவாளர். அது மகரத்தின் வாய் (ஒரு வகை முதலை). 

கோயில் வாசலில் புடைப்புச் சிற்பமாக இருக்கும் கஜலட்சுமியின் திருவுருவமும் கூரையில் காட்சி அளிக்கும் முதலையின் தோற்றமும் இந்தக் கோயிலின் பழமைக்குச் சான்றாகும் ஆதாரங்கள். 

அரசு ஆவணம் சொல்வது போல் 400ஆண்டுகளுக்கு முற்பட்டது எனாமல் அதற்குப் பல நூற்றாண்டுகட்கு முற்பட்டது என அறுதியிட வாய்ப்பு உள்ளது. 

சக 

kanmani tamil

unread,
Jun 27, 2025, 2:04:47 PMJun 27
to vallamai
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் இருக்கும் குடைவரையின் புடைப்புச் சிற்பம்;


விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள குடைவரையின் பின்புறம் உள்ள புடைப்புச் சிற்பத்தை ஒத்துக் காணப்படுவது;


ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஓர் அரிய வழக்காறை உண்மையெனக் காட்டும் தடயம் ஆகும். 

தென்காசிக் குடைவரையை மக்கள் வனப்பேச்சி கோயில் என்று அழைக்க; திருத்தங்கல் குடைவரை வனதுர்க்கை கோயில் எனப் பெயர் பெறுகிறது. இரண்டு பெயர்களிலும் இருக்கும் '-வன' எனும் முன்னொட்டு ஒரு ஒத்த தன்மையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. 

பண்டைத் தமிழகத்தில் கொற்றவையை வழிபடும் வீரன்; அரசன் வெற்றி பெறத் தனது தலையைத் தானே அரிந்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதற்குப் பண்டைத் தமிழ்த் தொகைநூல்கள் சான்று பகர்கின்றன. 

பண்டைத் தமிழகம் எங்கும் நடைமுறையில் இருந்த இப் பலிப் பழக்கம் பாண்டிய நாட்டில் இரண்டு தொல்லியல் எச்சங்களாகக் கிடைத்து இருப்பது; தமிழன் கடந்து வந்த பாதையைத் தெளிவாகக் காட்டுகிறது. 

சக 

kanmani tamil

unread,
Jul 7, 2025, 5:52:17 AMJul 7
to vallamai
ஒரு சந்நிதிக்குள் இரு மனைவியரோடு ஐயனாரும் கூடவே சிவலிங்கமும் அமைந்துள்ள தனித்துவம் மிகுந்த கோயில்:


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் உள்ள கே.ஆலங்குளம் ஊரில் காணப்படுகிறது. 

இது குலதெய்வ வழிபாட்டிற்கு உரிய கோயில் ஆகும். தற்போது திருப்பணி தேவைப்படும் நிலையில் இருப்பினும் ஒரே கருவறையில் சிவலிங்கத்துடன் இருப்பதே சிறப்பம்சம் ஆகும். 

சக 

kanmani tamil

unread,
Nov 25, 2025, 10:54:57 PM (7 days ago) Nov 25
to vallamai
ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில்:

ராமானுஜரின் பதப்படுத்தப்பட்ட திருமேனியை இக்கோயிலின் பிரகாரத்துக் கோடியில் இன்றும் காண இயல்வது வேறெங்கும் இல்லாத சிறப்பம்சம் ஆகும்.

பத்து வயதுச் சிறுமியாக என் பெற்றோருடனும் உடன்பிறப்புகளோடும் இந்தக் கோயிலுக்கு முதல் முறை சென்ற போது... 
பெற்றோருக்கு முன்னர்  வெகுவேகமாகத் தம்பியுடன் குதியாட்டம் போட்டுக் கொண்டு இச்சன்னிதியில் இத் திருவுருவைக் கண்டு துணுக்குற்று நின்றிருக்கிறேன். ஏனெனில் அந்தத் திருவுரு நிஜத்தில் ஒருவர் அமர்ந்து இருப்பது போலவே காட்சி அளித்தது. அதற்கு மேல் அதைப் பற்றி ஏதும் கேட்க அப்போது தோன்றவில்லை. 

1980களில் தான் ஸ்ரீராமானுஜரின் பூதவுடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது என்ற செய்தியை நான் கேள்விப்பட்டேன். அச் செய்தியின் உண்மைத் தன்மையைப் பின்வரும் பதிவு காட்டுகிறது. 

/// ஶ்ரீரங்கத்தில் 1000 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்படும் பூத உடல்!

ஆதிசேஷனின் அவதாரம் 
என்றென்றும் நிலைத்திருக்கும்
இராமானுஜர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூதஉடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக... கெடாமல் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் பச்சைக் கற்பூரமும், குங்குமப்பூவும் கொண்டு அபிஷேகம் செய்து வருகிறார்கள். அமர்ந்த நிலையில் சற்றே பெரிய திருமேனியாக இராமானுஜரை இன்றும் நாம் ஶ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் தரிசிக்கலாம் (உடையவர் என்பது இராமானுஜரின் சிறப்புப் பெயர்).

இந்த அதிசய செய்தியை இந்துக்களிலேயே பலரும் அறிந்திருக்கவில்லை.

ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியே ஸ்ரீராமனுஜர் சந்நதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் என்று அறிவது இல்லை. சந்நதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்துக் கடந்து போகிறார்கள்.

தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.

இராமானுஜர் தமது 120-ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.

அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

அவரது உயிர் பிரிந்த உடனே
'தர்மோ நஷ்ட' (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்பர்.

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த ஆடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.

உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி, அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த ஆடையையும் சூடிக்களைந்தத் தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம்.

பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் “பிரம்மமேத ஸம்ஸ்காரம்” என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு, இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும், ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம்.

பல்லாயிரக்கணக்கான சீடர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கித் திருவாய்மொழி யரையர் ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

தொடர்ந்து ‘இராமானுஜர் நூற்றந்தாதி” ஓதியபடி ஶ்ரீரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர்.

மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது...
தரிஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்! என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்
“இராமானுஜன் என்தன் மாநிதி
என்றும்; இராமனுஜன் என்தன் சேமவைப்பு” என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்!

அதாவது இராமானுஜர், எனது மிகப் பெரும் செல்வம்; எனது சேமநிதி! என அரங்கன் திருவாய் மலர்ந்தருளினார்.

நமது பணத்தை. நாம் வங்கியில் நிரந்தர சேமிப்பு வைப்பு நிதியாகப் பாதுகாப்பதைப் போல; அரங்கன் இராமரின் தம்பி இலட்சுமணரின் அவதாரமான இராமனுஜரை என்றென்றும் பாதுகாத்து வைத்திட அருள் செய்தார்.

அப்படியானால் பிற சிரஞ்ஜீவிகளைப் போல இவரையும் ஏன் என்றென்றும் உயிரோடிருக்கச் செய்யவில்லை? என்றால்; கலியுகம் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை எனலாம். உயிர் பிரிந்து பூதவுடலானாலும்; திருமேனி எப்போழுதும் அடையாதிருப்பதே இறைபக்தி... இறை நம்பிக்கையற்றவர்கள் இதைக் கண்ணாரக் கண்டு அறிவு பெற்றிட வேண்டும் என்பது திருமாலின் திருவுள்ளமாக இருக்கலாம்.

எனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தப்புரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சந்நதிக்குள்ளேயே (யதிஸம்ஸ்காரவிதியின் படி) பள்ளிப்படுத்தினர் பெரியோர்.

பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. 

இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம். இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சந்நதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்குத் 'தானான திருமேனி' என்று பெயர்.

ஆதிசேஷனின் அவதாரமல்லவோ இராமானுஜர்! இலட்சுமணரின் மறுபிறவி அல்லவோ இராமனுஜர் (இராம+அனுஜர்;
அனுஜ = தம்பி) அவரது திருமேனி இன்றும் நிலைத்திருக்கத் தானே செய்யும்?!!

Reply all
Reply to author
Forward
0 new messages