முத்தாலம்மன் கதைப் பாடலில் சமூக வரலாறு

1,536 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Mar 12, 2021, 12:18:57 PM3/12/21
to vallamai
இன்றுமுதல் மூன்று நாட்கள் பாரதியார் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு நாட்டுப்புறவியல் மாநாடு நடந்துகொண்டு இருக்கிறது. மாநாட்டு மலரில் பதிப்பிக்கப்பட்டுள்ள என் கட்டுரை.

முத்தாலம்மன் கதைப் பாடலில் சமூக வரலாறு    


0.0 முன்னுரை: 

0.1 அங்காளஈஸ்வரியம்மன் கதைப்பாடல் என்ற முளைப்பாரிக் கும்மிப்  பாட்டு; (https://kanmanitamil.blogspot.com/2019/11/blog-post.html) சிவகாசி திருமதி இராஜேஸ்வரியிடம் இருந்து 2000-2001 கல்வியாண்டில் எழுதி வாங்கப் பட்டது. இன்றும் மாசிமாதம் தெருக்கட்டுப் பொங்கலின் போது; இப்பாடற்  பகுதிகளைப் பாடி முளைப்பாரி எடுத்துக் கும்மி அடிக்கின்றனர். 332அடிகள் நீண்டுள்ள அப்பாடலில் அங்காள ஈஸ்வரி என்ற பெயரே இல்லை. கதை, செய்திகள் அனைத்தும் முத்தாலம்மன் கதைப்பாடல் என்று சொல்லத்தக்க வகையில்  பின்னப் பட்டுள்ளன.

 

1.0 முத்தாலம்மன் கதைப்பாடலின் கரு வர்க்கப் போராட்டத்தின்  காரணமாகிய நில ஆக்கிரமிப்பு ஆகும். 

1.1 நால்வருணத்தாரில் மேல்தட்டினராகக் கருதப்படும் அந்தணர்க்கும் ஆண்ட குலத்தவர்க்கும் இடையில் நடந்த போராட்டம் கதைப்பாடலின் முற்பகுதியாக அமைந்துள்ளது. அந்தணரல்லாதார் நிலத்தை அந்தணர் அபகரிக்க முயன்றமையே விறுவிறுப்பான தொடக்கம் எனலாம்.

“பச்சரிசி வனத்தினிலே மகிடனும்தான் ஆண்டுவந்தான்“ (அ.17)   

இப்பாடலடி  சுட்டும் ‘பச்சரிசி வனம்’ மேம்போக்காகப் பார்த்தால் பொருளற்றது எனத் தோன்றுகிறது. ஆனால் அது ’பச்ச ரிஷி வனம்’ என்பதன் மரூஉ என்பது புரியும் போது கதைக்கரு ‘பளிச்’செனத் தெரிகிறது. பொதுமக்களின் வாய்மொழி ‘ரிஷி’ என்பதை ‘ரிசி’ என்று உச்சரிப்பதால் ஏற்பட்ட பொருள் மயக்கம் தீரும் போது  கதையின் அடிப்படையும், போக்கும் புலனாகின்றன. 

       பசுமையான அடர்ந்த காட்டினை மகிஷாசுரன் ஆண்டு கொண்டு  இருந்தபோது பல முனிவர்கள் காட்டின் பல்வேறு பகுதிகளைத் தமதாக்கித் தவத்தில் ஈடுபட்டனர். அவர்களை எதிர்த்துப் போரிட்டு வெல்ல அவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து; அவரிடம் எந்த ஆணாலும் சாகா வரம் பெற்றான். அவனை எதிர்த்த முனிவரும், தேவரும் விஷ்ணுவிடம்   சென்று முறையிட்டு; அவனை அழிக்க உதவி கோரினர். அதற்கு விஷ்ணு சம்மதித்துத்; திறம்படத் திட்டம் தீட்டினார் (அ.17-40).

1.2. திருமாலின் சகோதரியாகக் கருதப்படும் பார்வதி தேவியே ஒரு அந்தணப்பெண்ணாக; குறி சொல்லும் பாப்பாத்தியாக உருவெடுத்து வந்து; மகிஷனை அழிக்கவல்ல சக்தியாக நாககன்னியின் வயிற்றில் உருவாகி வளரும் ஏழு பெண் குழந்தைகளைக் கருவுயிர்க்க ஏதுவாக; அவளுக்கு மகப்பேற்றுப் பண்டுவம் பார்க்கிறாள். அதாவது மகிஷனை வீழ்த்தித் தவமுனிவர்களுக்கு;  அந்தணர்களுக்குத் துணை செய்யும் விஷ்ணுவின் திட்டத்திற்கு ஆதரவாக  செயல் படுகிறாள். இதனால் ஆண்டார் அந்தணர் சிக்கல் உறுதிப்படுகிறது (அ.65-88).

1.3 அந்தணர்கள் யாகத்திற்கும், பிற சடங்குகளுக்கும் பயன்படுத்தும் தர்ப்பைப்புல்லில் இருந்து சிவன் பைரவரைப் படைக்கிறார். பைரவனை ஏவி ஏழு சகோதரிகளையும் அடக்கச் சொல்கிறார். இங்கு மேல் தட்டு வர்க்கமாகிய இரண்டு குலத்திலும் சேராத சகோதரியர்க்கும்; அந்தணர் பயன்படுத்தும் புல்லினின்று தோன்றிய  பைரவனுக்கும் இடையில் பலப்பரீட்சை நடப்பது நோக்கத்தக்கது (அ.110-120).

1.4 மூன்றாவது வருணத்தாராகிய வணிகர் ஏழு பெண்களையும் தெய்வமாகக்  கொண்டு ஒவ்வொரு ஆண்டும் முத்தாலம்மனுக்குரிய மண் பீடத்தைச் செய்யும் பொறுப்பை ஏற்றனர் (அ.239-248). 

1.5 வைதீகம் பின்பற்றாத பாட்டாளிகள் அனைவரும் முத்தாலம்மன் வழிபாட்டில் ஈடுபட்டனர். முத்தாலம்மன் வழிபாட்டின் சிறப்பம்சம்  முளைப்பாலிகை வளர்த்துப் படைப்பதாகும். வேளாண்மை செய்பவர்க்கு இவ்வழிபாட்டில் இருக்கும் பேரிடத்தை இது காட்டுகிறது (அ.213-231).

1.6 எழுவரும் தில்லைவனத்தில் தம் மானத்தைக் காத்துக் கொள்ளப் போராட வேண்டியதாயிற்று. தில்லை என்பது மரத்தைக் குறிப்பதோடு அல்லாமல்; சிவபெருமான் பொன்னம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் சிதம்பரத்தையும் குறிக்கும். அங்கு மூவாயிரம் அந்தணர் குடும்பங்கள் வாழ்ந்ததாகத் தேவாரமும், திருத்தொண்டத் தொகையும் பாடுகின்றன.  அந்தணர்க்கு  நடுவிலும் பெண்களுக்குப் போராட்டம் தான் என்கிறது இக்கதைப்பாடல் (அ.179).


2.0 கதையின் சிக்கலைப் பெண்ணியப் போராட்டம் முறுக்கேற்றுகிறது.

2.1 அண்ணன் தங்கை ஆகிய நாகராஜனும் நாக கன்னியும் சிவபூஜை செய்யும்போது; கருடன் மேல் சென்ற திருமாலைப் பார்த்ததால் நாககன்னி கர்ப்பம் அடைகிறாள். எத்தவறும் செய்யாத தன் தங்கையை நாகராஜன் விரட்டிவிடும் போது பெண்ணியச்சிக்கல் தோன்றுகிறது (அ.40-64).    

2.2 அக்கா தங்கை ஏழுபேரும் மகிஷனை அழித்துத் தம் சக்தியை நிரூபிக்கின்றனர். பைரவனை அடக்கி; எமனுக்கும் அஞ்சாமல்; பார்வதி துதிக்க; சிவபெருமானுக்குப் பாடம் புகட்டுகின்றனர் (அ.111-174).  

2.3 ஏழுபேரும் சிவபெருமான் முன்னர் சென்றபோது பெண்ணியச் சிக்கல் வலுக்கிறது. பெண்கள் என்பதால்; மிக   
(தொடரும்)
சக 

kanmani tamil

unread,
Mar 12, 2021, 12:23:21 PM3/12/21
to vallamai

எளிதாக எண்ணிச் சிவபெருமான் வண்டிநிறைய முத்துக்களைக் கொடுப்பதாக ஏமாற்றி; அம்மை நோயைக் கொடுத்தபோது இப்பெண்கள் தம் சாதுர்யத்தால் அம்முத்துக்களைத் திரும்பிச்  சிவபெருமான்மேல் வீசி நோயுறச் செய்தனர் (அ.135-146).

2.4 பார்வதி தேவி தன் கணவன் சிவனுக்காக இந்த ஏழு பெண்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்டுத் தன் கணவனை குணப்படுத்துகிறாள். சிவனைக் காட்டிலும் இவர்கள் சக்தியும் திறனும்  மிக்கவர்கள் என்பது தான் கதை கூறும் முடிபு ஆகும் (அ.147-173). நோயைக் கொடுத்தவரும் பெண்கள்; அந்நோய் தீர வழிவகை செய்த பார்வதியும் பெண்ணே.       

2.5 பூலோகத்தில் பெண்கள் மானத்திற்கும், உடைமைக்கும் பாதுகாப்பு  இல்லை. ஏழு பெண்களும் பூலோகம் வந்து சேர்ந்தவுடன் உலகாயதத் துன்பங்கள் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அடித்தட்டு மக்கள் வாழும் ஒட்டாரங்காட்டில்; அதாவது  வறண்ட முள்  காட்டில் அவர்கள் தம் காதோலையைப் பறிகொடுத்தனர். பசையுள்ள மக்கள் வாழும் பசுமையான தில்லைவனக் காட்டில் அவர்களது மானம் பறிபோனது. அந்தணர்க்கு  நடுவிலும் சரி; பாட்டாளிகள்  இடையிலும் சரி; பெண்களுக்குப் போராட்டம் தான் ஒரே வழி என்று இக்கதைப்பாடல் காட்டுகிறது (அ.177-182).

  

3.0 சமுதாயத்தில் இருந்த சமயப்போராட்டமும் சாமானியரின் சமய நல்லிணக்கமும் கதைக்கு முத்தாய்ப்பாக அமைகின்றன.   

3.1 வைதீக எதிர்ப்பு என்னும் சமயப் போராட்டம் இக்கதைப்  பாடலில் எதிரொலிக்கிறது. எழுவரில் அறுவருக்குக் கோயில் எழுப்பி நித்தமும் ஆறுகாலபூசையும் ஆண்டிற்கொருமுறை விழாவும் நடத்த ஆலோசனை சொன்னவர் சிவபெருமான் என்கிறது பாடல் (அ.183-189). இங்கு சக்தி வழிபாட்டுக்குரிய அங்கீகாரம் சிவனின் அறிவுறுத்தல் மூலம் கிடைத்தது எனச் சொல்வது நோக்கத்தக்கது. .

3.2 தன்னால் இயலாததை நிறைவேற்றத் திருமால் ஏழு பெண்களைப் படைக்கிறார் என்பதால் எழுவரும் விஷ்ணுவைக் காட்டிலும் சிறப்பு பொருந்தியவர் ஆகின்றனர் (அ.33-40). 

3.3 சக்தி வழிபாடு சைவ வைணவ சமயங்களுக்குச் சற்றும் குறைந்தது அன்று என நிறுவுவதே கதைப்பாடலின் நோக்கமாக அமைந்து உள்ளது. ஏழுபெண்களின் சினத்துக்கு ஆளான சிவபெருமான் நோயின் வீரியம் தாளாமல் துன்புறுவதைக் கண்டு பார்வதியே அவர்களிடம் மடிப்பிச்சை கேட்கிறாள் (மேற்.). விஷ்ணுவால் சிவனுக்குப் பால்மாடு கொண்டுவர இயன்றதே தவிர நோயைத் தீர்க்க இயலவில்லை (அ.158-164). ஏழு பெண்களும் சினம் கொண்டு பூலோக மக்களுக்கு அம்மைநோய் பரப்பிய பின்னர் உழைக்கும் வர்க்கம் இவர்களைத் தெய்வமாக ஏற்றுக் குளிர வைக்கிறது (அ.184-193).  

3.2 வணிகர் எழுவரையும் தெய்வம் என ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் முத்தாலம்மனுக்குரிய புது மண் பீடத்தைச் செய்யும் பொறுப்பை ஏற்றனர் (அ.239-248). 

3.3 பாட்டாளிகள் அனைவரும் அம்மன் வழிபாட்டை ஏற்றனர். 

முத்தாலம்மன் வழிபாட்டில் முதலிடம் பெறுவது முளைப்  பாலிகை வளர்த்தல். இது வேளாண்மையில் ஈடுபடும் மக்களுக்கு இவ்வழிபாட்டில் இருக்கும் சிறப்பான இடத்தைக் காட்டுகிறது (அ.210-230).


4.0 மும்முனைப் போராட்டம்

வர்க்கப் போராட்டம், பெண்ணியப் போராட்டம், சமயப் போராட்டம் மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து முத்தாலம்மன் கதைப்பாடலை நடத்திச் செல்கின்றன. தமிழ்ச் சமூகத்தில் இப்போராட்டங்கள் காலந்தோறும் இருந்து வருவதை இப்பாடல் குறிப்பாக உணர்த்துகிறது. மூன்று போராட்டமும் முடிவில் நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாகக் காட்டுகிறது பாடல். ரிஷிகள் தவத்தை அசுரன் அழிப்பதில் தொடங்கி; இன்று ஒவ்வொரு மாசி மாதமும் முச்சந்தி அல்லது நாற்சந்தியில் முத்தாலம்மனுக்குப் புதுப்பீடம் அமைத்து வழிபடுவது வரை நிகழ்ச்சிகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் சொல்லப் படுகின்றன. 

மக்களாட்சி நடக்கும் இக்காலக் கட்டத்தில் அரசர் என்னும் வருணம் இல்லை எனினும்; அந்தணரைக் கதை ஓட்டம் உள்ளே  இழுத்துள்ளது. பார்வதி பாப்பாத்தியாக வந்திருந்து மகப்பேறு பார்க்கவே ஏழு கன்னியர் பிறக்கின்றனர். பார்ப்பனர் பயன்படுத்தும் தர்ப்பையிலிருந்து தோன்றிய பைரவனை வென்று இழுத்துச் சென்றவர் ஏழு கன்னியர். 

நாககன்னி சிவலோகம் சேர்ந்தாள் என்று முடிந்தாலும்; ஏழு சகோதரிகள் மூலம்; பெண்மையின் பெருமை ஆண் தெய்வங்களாகிய சிவன், திருமால் இருவரையும் பின்னுக்குத் தள்ளுகிறது. 


5.0 முடிவுரை

நாட்டார் கதைப் பாடலாகிய முத்தாலம்மன் கதைப்பாடல் தமிழ்ச் சமூகத்து  வரலாற்றின் மூவேறு கோணங்களையும் ஒருங்கு உணர்த்தும் முப்பட்டைக் கண்ணாடியாக மிளிர்கிறது.

(முற்றும்)
சக 

kanmani tamil

unread,
Mar 14, 2021, 12:29:18 AM3/14/21
to vallamai

///முத்தாரம்மன் > முத்தாலம்மன். பாண்டியர்களின் முத்துச் சலாபம் புகழ்மிக்கது. இரண்டு வகையான பாண்டிநாட்டு முத்துகள் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், காளிதாச மகாகவியின் காவியங்களில் காண்கிறோம். துர்க்கைக்கு பாண்டியர் முத்து ஹாரம் அணிவித்ததால், முத்தாரம்மன். குலசேகரன்பட்டினத்தில் தசரா, மைசூருக்கு அடுத்தபடியாக, பாண்டிய மன்னர்கள் நிறுவிய திருவிழா./// Dr. Ganesan wrote on 14th March 

இங்கு சொல்லப்படும் முத்து கோடை காலத்து அம்மைக் கொப்புளம். அதிலும் நீர்முத்து இருக்கும். அந்த நோய் தொடர்பாகத்தான் இந்த அம்மனுக்கு வழிபாடும் காலம்காலமாக நடக்கிறது. சிலப்பதிகார உரைப்பாட்டு மடை நோக்குக. 'வெப்பும் குருவும்' என்ற தொடர் தான் காலத்தில் முற்பட்டது. 
பாண்டியமன்னர் நிறுவிய தசராவிற்கும் இந்தப் பெயருக்கும் தொடர்பில்லை. 
சக 
Reply all
Reply to author
Forward
0 new messages