புத்தகத்தைப் படிப்போம்... விடைகளைத் தேடிப் பிடிப்போம்!

7 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Aug 8, 2026, 5:14:18 AM (5 days ago) Aug 8
to

புத்தகத்தைப் படிப்போம்... விடைகளைத் தேடிப் பிடிப்போம்!

தேவகோட்டை பள்ளியில் புதிய கற்றல் முறை: ஆடியோ, செயற்கை நுண்ணறிவு துணையுடன் என்.எம்.எம்.எஸ். பயிற்சி

தேவகோட்டை, ஆக. :
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும், மனப்பாடத்துக்கு பதிலாகப் புரிந்து கற்கும் திறனையும் வளர்க்கும் வகையில், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் திறந்த புத்தகப் பயிற்சி (Open Book System Practice) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பயிற்சியை பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் பாடப்புத்தகத்தைப் படித்து, அதிலிருந்தே வினாக்களுக்கான விடைகளைத் தேடி எழுதும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தேர்வு பயம், மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கையுடன் புரிந்து கற்கும் பழக்கம் உருவாகும் என விளக்கப்பட்டது.

என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் தேர்வான என்.எம்.எம்.எஸ். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 7 மற்றும் 8-ம் வகுப்பு வரலாறு உள்ளிட்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்புத்தகத்தில் இருந்து விடைகளைத் தேடிக் கண்டறியும் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு மாணவர்களின் மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட்டு, பெற்றோரிடம் காண்பிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறது.

ஆசிரியை சிவரஞ்சனி மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். மேலும், மாணவர்களுக்காக தனி என்.எம்.எம்.எஸ். குழு உருவாக்கப்பட்டு, படிப்பு வழிகாட்டிகள், தேர்வு அட்டவணைகள், பயிற்சி வினாத்தாள்கள் மற்றும் கற்றல் இணைப்புகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல்,  உள்ளிட்ட பாடங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரே நாளில் பல தேர்வுகளை நடத்துவதற்குப் பதிலாக, பாடவாரியாகத் தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் எளிதாகத் தயாராக முடிவதாகத் தெரிவித்தனர்.

ஆடியோ மூலம் எளிதான கற்றல்

வரலாறு, புவியியல் உள்ளிட்ட பாடங்கள் ஆடியோ வடிவிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆடியோவைக் கேட்டுக்கொண்டே புத்தகத்தில் உள்ள பாடத்தைப் படிப்பது புதிய சொற்களையும் கருத்துகளையும் எளிதில் புரிந்துகொள்ள உதவுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். புளூடூத் உள்ளிட்ட சாதனங்கள் மூலம் ஆடியோவைக் கேட்பதால் வெளிப்புறச் சத்தம் குறைந்து, கவனத்துடன் கற்க முடிவதாகவும் அவர்கள் கூறினர்.

செயற்கை நுண்ணறிவு துணையுடன் கற்றல்

ஓய்வுபெற்ற முதல்வர் சிவக்குமார் கூறுகையில், குழந்தைகளின் கற்றலுக்கு “கேட்டலும் உரையாடலும்” அடிப்படையாக அமைகிறது. இதைக் கருத்தில் கொண்டு பாடத் தலைப்புகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் குரல் மற்றும் உரையாடல் வடிவமாக மாற்றி, மாணவர்கள் வீட்டிலேயே சுயமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தப் புதிய கற்றல் முறையை உருவாக்கி வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சிவக்குமாருக்கு பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மாணவிகள் பாராட்டு

8-ம் வகுப்பு மாணவி M. ரித்திகா கூறுகையில், “என்.எம்.எம்.எஸ். குழுவில் தினமும் வழங்கப்படும் தகவல்கள், படிப்பு அட்டவணை மற்றும் ஆடியோ பாடங்கள் படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஆடியோவைக் கேட்டுவிட்டு புத்தகத்தில் படிக்கும்போது பாடங்கள் எளிதாகப் புரிகின்றன. இந்தப் பயிற்சி தேர்வுக்குத் தயாராகவும் அதிக மதிப்பெண் பெறவும் உதவுகிறது” என்றார்.

மற்றொரு 8-ம் வகுப்பு மாணவி ச. நந்தனா கூறுகையில், “ஆடியோ மூலம் பாடங்களைக் கேட்பது ஆசிரியர் நேரடியாகப் பாடம் நடத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. புதிய சொற்களையும், கேள்விகளுக்கான விடைகளையும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் பயிற்சிக்குப் பிறகு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் கிடைத்தன. ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றனர்” என்றார்.

மாணவர்களின் மதிப்பெண்கள் பள்ளி வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டு, பள்ளிக் கூட்டங்களில் பாராட்டப்பட்டு வருகின்றன. “புத்தகத்தைப் படிப்போம்... விடைகளைத் தேடிப் பிடிப்போம்... புரிந்து கற்போம்... வெற்றி பெறுவோம்” என்ற முழக்கத்துடன் செயல்படுத்தப்படும் இந்தப் பயிற்சியை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பட விளக்கம்:

புத்தகத்தைப் படிப்போம்... விடைகளைத் தேடிப் பிடிப்போம்! புரிந்து கற்போம்... வெற்றி பெறுவோம்” என்ற புதிய கற்றல் முறையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற திறந்த புத்தகப் பயிற்சியில் பங்கேற்று, பாடப்புத்தகத்திலிருந்து விடைகளைத் தேடிக் கற்ற மாணவர்கள் 


வீடியோ : சுய கற்றல் மூலம் புதிய முறையில் பயிற்சி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவிகள் ரித்திகா மற்றும் நந்தனா ஆகியோரின் அனுபவங்களை பகிரும் வீடியோக்கள் 

https://www.youtube.com/watch?v=UnZqsvnNgIU


https://www.youtube.com/watch?v=30YeF7oXYsY



IMG_6533.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages