பாடல் சொல்லும் செய்தி

43 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Dec 22, 2025, 8:37:35 PM12/22/25
to vallamai
தொகை இலக்கியப் பாடல்களில் சமூக வரலாற்றுச் செய்திகள் பல நாம் உய்த்து உணரும் வகையில் பொருந்தி இருக்கும். 

பாடலின் கவித்துவமும் கட்டமைப்பும் அழகியல் சார்ந்த கூறுகளாய் நம் மனதைக் கவர்ந்து இழுக்க; அதில் பொதிந்து இருக்கும் சமூகச் செய்தி ஒவ்வொன்றையும் அடையாளம் காணும் முயற்சியாக இது அமைகிறது. 

அகநானூறு: 340
நித்திலக் கோவை
நெய்தல் - தோழி கூற்று 
பகற்குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது.

"பல்நாள் எவ்வம் தீரப் பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம 
செல்லா நல் இசைப் பொலம் பூண் திரையன்
பல்பூங் கானற் பவத்திரி அன்னஇவள்
நல்எழில் இளநலம் தொலைய ஒல்லென
கழியே ஓதம் மல்கின்று; வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என
நின்திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே 
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டுஇமிர் நறுஞ்சாந்து அணிகுவம் திண்திமில்
எல்லுத் தொழில்மடுத்த வல்வினைப் பரதவர்
கூர் உளிக் கடு விசை மாட்டலின் பாய்புஉடன்
கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு
முன்றில் தாழைத்தூங்கும்
தெண்கடற் பரப்பின்எம் உறைவுஇன் ஊர்க்கே" -நக்கீரர்.

இது பாடல் - இதன் பொருளாவது...

பல நாள் பகலில் வந்து; புன்னை மரப் பொதும்பின் நிழலில் இருந்து; உன் துன்பத்தைப் போக்கிக் கொண்டு; மாலை வந்ததும் தலைவியைப் பிரிய மனமின்றி மையலோடு நோக்கி; வலவன் திறம்பட ஓட்டும் தேரில் ஏறிச்செல்லும் விருப்பத்தை விட்டுவிடு. 

சொல்லித் தீராத புகழையும் பொன் அணிகளையும் உடைய திரையன் ஆளும் பூக்கள் நிறைந்த கானல் சார்ந்த பவத்திரி எனும் ஊர் போன்று அழகும் இளமையும் பொருந்திய இவள் உன் நலனை எண்ணி வாடுகிறாள். 

ஏனெனில் நீ செல்லும் வழியில் உள்ள கழியில் அலை மிகுதியாக உள்ளது; உயிரைக் கொல்லும் பாம்புகளும் பெரிய மீன்களும் உள்ளன. ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய 
பொழுதும் இருட்டுகிறது.
உன் துன்பம் தீர இன்று இங்கு எம் ஊரிலேயே தங்கிச் சென்றால் என்ன?! (உன்னைத் தடுப்பார் யாரும் இல்லை; எல்லோரும் மீன் பிடிக்கச் சென்று விட்டனர்.)

மீன் விற்று வாங்கி வந்த நெல்லரிசி உணவில் 
தயிர் கலந்து உன் குதிரைக்கும் உண்ணத் தருவோம்.

வடவர் தந்த சந்தனக் கல்லில்
குடவர் தந்த சந்தனத்தை அரைத்து உனக்குப் பூசி விடுவோம்.

பாடலில் இடப்பின்புலமாகக் கடற்கரைப் பரதவர் சேரி அமைகிறது. காலப் பின்புலமாக மாலைப் பொழுதும் இனி இருட்டி விடும் என்ற செய்தி அமைகிறது. இரண்டு பின்புலங்களும் முதல் பொருள் ஆகின்றன. 

திண்திமில், தாழைமரம், புன்னை மரத்து நிழல், கிழிந்த பயனற்ற வலை, சுறா வேட்டை ஆடும் பரதவர், அவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்தும் கூர்உளி, கழியின் ஓதம், பச்சை மீனுக்குப் பண்டமாற்றாக நெல்லைப் பெறுதல் அனைத்தும் கருப்பொருட்கள் ஆகிப் பின்புலங்களை விளக்குகின்றன.

'வாழ்வதற்கு இனிமையான எங்கள் ஊரில்... திண்மையான திமிலில் ஏறி மாலையில் தொழிலுக்குக் கடல்மேற் செல்லும் பரதவர் தம் வலையில் மாட்டிய கோட்டுச் சுறாவை வேட்டையாடக்; கயிற்றில் கட்டிய கூர்உளியை வீசித் தாக்க; உயிருக்குப் போராடிய சுறாவின் வேகத்தில் வலை கிழிந்து விட; அக்கிழிந்த வலை இனி பரதவர்க்குப் பயன்படாத நிலையில்; முற்றத்துத் தாழை மரத்தில் தொங்கிக் கொண்டு; கடல்காற்றில் ஆடுகிறது.'

காற்றில் ஆடும் கிழிந்த வலை இறைச்சிப் பொருளைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. கிழிந்த வலை பரதவர் மீன்பிடிக்கப் பயன்படாது. 
பூக்கேழ் புலம்பன்... (புலத்தை உடையவன் புலம்பன்) 
நிலவுடைமையாளனாய்... (மென்புலம் எனப்படும் நன்செயை உடையவன் ஆதலால் 'பூக்கேழ்' எனும் அடைமொழி) வேளாண்மை செய்யும் தலைவனுக்கும் பரதவர் குலத்தைச் சேர்ந்த தலைவிக்கும் இடையே இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து விட்டமையைக் கிழிந்த வலை என்ற தொடரின் உள்ளுறை உணர்த்துகிறது. 

'நீ கிளம்பிச் சென்று விட்டால் தலைவி உனக்கு வழியில் காத்திருக்கும் ஆபத்துகளை எண்ணித் தாங்க மாட்டாமல் அழுவாள். ஆபத்து பாம்பாகவும் வரலாம்; உயிரை வாங்கும் மீனாகவும் வரலாம். அதனால் இன்று இரவு எங்கள் ஊரில் தங்கிச் செல்வாயாக' என்ற அவளது பேச்சு உரிப்பொருளைத் தெளிவுறுத்துகிறது. 

'எங்கள் ஊரில் தங்கினால் உன் குதிரைக்குக் கூட நாங்கள் நெல்லரிசி மாவுடன் தயிர் கலந்து உண்ணக் கொடுப்போம்' எனும் போது; குறிப்பாகப் பெறும் கருத்தாவது- உன்னை உபசரிப்பதில் எந்த மரியாதைக் குறைவும் நேராது என்பதாக அமைந்து உள்ளது. உயர்ந்த உணவாகக் கருதப்படும் நெல்லரிசி உணவை... நீ வேளாண்மை செய்யும் நெல்லை நாங்கள் பண்டமாற்றாகப் பெறுவதன் மூலம் உன் குதிரைக்கும் கொடுப்போம். 

கிழிந்த வலை பரதவர் தொழிலுக்குப் பயன்படாதது போல்; பூக்கேழ் புலம்பனோடு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து விட்டதால் இனி எந்தப் பரதவனின் வாழ்க்கைக்கும் அவள் பயன்பட மாட்டாள். 

தலைவியை மணந்து கொள் என்று தோழி கேட்கவில்லை. மாறாகப் பணிவிடை செய்கிறோம் என்கிறாள். உன் மார்பில் சந்தனம் பூசுவோம்' என்ற தோழியின் கூற்று முத்தாய்ப்பாக அமைந்து சமூகச் நிலையைக் கோடிட்டுக் காட்டுகிறது.

வேளாளன் பரதவப் பெண்ணை மணந்து கொள்வதில் என்ன சிக்கல்?!
இங்கே தான் சமூகப் பிரிவினை அன்றே காலூன்றி விட்டது என்று தெளிவாகிறது. 

ஒரு காதல் பரத்தை எப்படி உருவாகிறாள் எனப் பாடல் காட்டுகிறது. 

சக 


 




kanmani tamil

unread,
Dec 24, 2025, 7:23:07 AM12/24/25
to vallamai
அகநானூறு- 35
பாடியவர் – அம்மூவனார்
பாலைத் திணை; துறை – மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.

"ஈன்று புறந்தந்த யெம்மு முள்ளாள்
வான்தோ யிஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்
துணிந்துபிற ளாயின ளாயினு மணிந்தணிந்
தார்வ நெஞ்சமொ டாய்நல னளைஇத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்
நெறியிருங் கதுப்பினென் பேதைக்
கறியாத் தேஎத் தாற்றிய துணையே."

தன் மகளைப் பிரிந்த தாயின் புலம்பல்... காதலனுடன் சென்றவளைத் தாய் வாழ்த்துகிறாள். 

'பெற்றெடுத்துப் பேணி வளர்த்த என்னையும் நினைக்கவில்லை. 
வானளாவிய மதில்சுவர் கொண்ட எம் மாளிகையில் உள்ள (கூட்டுக் குடும்பத்துச்) சுற்றத்தார் எல்லாரும் புலம்புகின்றனர் (அவர்களையும் அவள் நினைத்துப் பார்க்கவில்லை.). 

ஒற்றை மணி மாறி மாறி ஒலிக்கும் கடையாணி இட்ட காம்புடன் கூடிய கூர்மையான நீண்ட வேலைக் கையில் வைத்துக் கொண்டு  வெட்சிப் போர் புரிந்து ஆனிரைகளைக் கவர்ந்து வரும் மழவரின் சிறு கூட்டம்... தரிசு நிலங்களில் வழிப் போக்கரை வில்லால் வீழ்த்து உண்ணும் வாழ்க்கை கொண்டவராகக்;  கரந்தைப் போர் புரிந்து அவ் ஆநிரைகளை மீட்டுச் செல்லும் மறவர் கூட்டத்தார்... 

வீரமரணம் அடைந்து தெய்வமானோர்க்கு ஈமக்கடன் நிகழ்த்திய இடத்து நடுகல்லுக்கு  மயிற்பீலியைச் சூட்டித் தோப்பிக் கள்ளைப் படைத்து; துடியை முழக்கிச்;  செம்மறிப் பலி கொடுத்து; வழிபாடு நிகழ்த்துவர். 

இப்படிப்பட்ட அச்சுறுத்தும்  மயக்கம் தரும் பாதையும் புலால் நாற்றமும் கொண்டு வழிச் செல்வோர்க்குத் துன்பத்தைக் கொடுக்கும் காட்டு வழியில்... 
இடையூறுகளுக்கு இடையில் என் மகள்... 

அரண்மனையில் முரசு முழங்கும் கோவலூரின் 
மன்னன் காரி. பெரிய தேரை உடையவன். அக் கோவலூர்க்கு அருகில் ஓடுவது பெண்ணை ஆறு (தென்பெண்ணை). அங்குள்ள துறை ‘கொடுங்கால் முன்றுறை’. அந்தத் துறையிலிருக்கும் ஆற்றுமணல் படிவு போல் அழகிய அடர்ந்த கருங்கூந்தலை உடையவள்... தன்னைப் பிறன் ஒருவனுக்கு உரிமை உடையவள் ஆக்கித்; தான் விரும்பிய அவன் துணையுடன் துணிந்து சென்று விட்டாள். 

அவன் அவளிடம் மிகுந்த அன்பு பாராட்டி; ஆர்வம் குன்றாமல் மீண்டும் மீண்டும் விருப்போடு அவளை அணைத்துத் துயலச் செய்ய வேண்டும். தன் பெண்மை நலமெலாம் தந்து அவள் உறங்குவாளாக.'  
‐-----------------------------------------------------
பெற்று வளர்த்த பாசம் அவள் மனநிறைவோடு வாழ வேண்டும் என ஆசைப்படுகிறது; வாழ்த்துகிறாள். 
தன் மகள் 'பிறளாயினாள்' என்ற தொடரே இங்கு சமூகச் செய்தியைத் தருகிறது. பிற சமூகத்தைச் சேர்ந்த ஆடவனைத் தன் வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்டாள். பண்டைத் தமிழகத்திலும் சமூகப் பிரிவினை திருமண உறவில் இடம் பெற்றமைக்கு உரிய சான்று இது. 

மழவர்/ மறவர் இருவரும் வேறு வேறு சமூகப் பிரிவினர். 
இருவரும் வழிப்பறி செய்தனர். இருவரும் ஆநிரை கவர்ந்தனர்.
இருவரும் அரசரிடம் போர் வீரராய்ப் பணி செய்தனர். 
ஆனால் ஆநிரை மீட்கும் பெருமைக்கு உரியவராக மறவர் மட்டுமே பெருமை பெறுகின்றனர்; பேசப் படுகின்றனர். 

உடற்கூறு அடிப்படையிலும் இருவரும் மாறுபட்டவர் எனத் தொகைப்பாடல்கள் காட்டுகின்றன. 

சக 

kanmani tamil

unread,
Dec 25, 2025, 5:13:01 AM12/25/25
to vallamai
புறநானூறு- 192
திணை: பொதுவியல் 
துறை -பொருண்மொழிக் காஞ்சி
இயற்றியவர்: கணியன் பூங்குன்றனார் 

"யாதும் ஊரே; யாவரும் கேளிர் 
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன 
சாதலும் புதுவது அன்றே  வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."

'எந்த ஊராயினும் அது அயலூரன்று; நமது ஊரே ! 
மக்கள் அனைவரும் நமது உறவினர்களே; வேண்டாதவர் அல்லர்.
நம் வாழ்வில் எதிர்கொள்ளும் 
தீமையும் நன்மையும் பிறர் தந்து நமக்கு வருவதில்லை.   
துன்புறுவதும் துன்பத்தைத் தவிர்தலும் அதே மாதிரி தான்.  
மனிதன் மடிந்து போவது 
என்றும் நிகழ்வது தான்; அதில் 
புதுமை ஏதும் இல்லை! 
யாம் பூவுலகில் வாழ்தல் இனிமையானது என மகிழ்வதும் இல்லை;   
வெறுப்பால் வாழ்க்கை இனியதன்று எனக் குறை கூறுவதும் இல்லை.  
மின்னலுடன் வானில் இருந்து குளிர்ந்த மழை பெய்து, அந்த நீர் பெருக்கெடுத்து ஓடிக்  
கல்லுடன் மோதி ஒலியெழுப்பி அத்துடன் நில்லாது; செழிப்பையும் வளத்தையும் கொடுத்து வலிமை மிக்க பெரிய ஆறாக ஓகிறது! 
அந்த நீர் ஓட்டத்தின் வழியே அடித்துச் செல்லும் தெப்பத்தைப் போன்று; நம் வாழ்க்கையும் ஊழ் முறைப்படி அமையும் என்பதை முன்னாள் திறம்பட வாழ்ந்தோரைச் சான்றாகக் காட்டித் தெளிவாக அறிகிறோம். 
ஆதலால் மாட்சிமைப்பட்ட பெரியோர் என்று யாரையும் நாம்  வியப்பதும் இல்லை; சிறியோர் என்று யாரையும் 
இகழ்வதும் இல்லை!' 

---‐------------------------------------------------------
மனிதநேயம், உலகளாவிய பொது நோக்கு, இன்பத்தையும் துன்பத்தையும் இயல்பாக ஏற்றல், விதியின் வலிமை, சாவும் வாழ்வும் இயற்கை என்ற சமநிலை, உலகாயத நிகழ்வுகளில் விருப்பு வெறுப்பின்மை என விழுமியங்களின் தொகுப்பாகக் காணப்படும் இப் பாடலில் முத்தாய்ப்பாக அமைவது;
"பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்ற கருத்து தான். 

என்ன சொல்ல வருகிறார் பூங்குன்றனார்?!

'பெரியோர் என யாரையும் வியந்து பார்ப்பதும் இல்லை; அதைக் காட்டிலும் சிறியோர் என யாரையும் இழிவாகப் பார்ப்பதும் இல்லை' என்ற அறிவிப்பில் பொதிந்து இருக்கும் மதிப்பீடு என்ன? எதற்காக இந்த வாக்குமூலம்?
யாருக்காக இந்த அறிக்கையை வெளியிடுகிறார்?

அவர் வாழ்ந்த காலச் சூழலைக் கருத்தில் கொண்டு நம் கேள்விக்கு விடை தேட முயலலாம்.

ஜைன பௌத்தம் ஆகிய சமணம், வைதீகமாகிய சைவ வைணவம் என நான்கு சமயங்களும் மக்களிடையே பரவி இருந்த காலகட்டம். 
நால்வருணம் தமிழகத்திற்குள் நுழைந்து காலை ஊன்றப் போராடிய காலகட்டம் 
இன்றைய போக்குவரத்து வசதிகளும் தங்குமிட வசதிகளும் இல்லாத காலகட்டம். 
போவோர் வருவோர் அனைவர்க்கும் வயிற்றுப் பசி தீர்ப்பதே இல்லறத்தின் பயன் எனும் கொள்கை நிலவிய சமூகம். 
விருந்து வரா நாளே வீணாள் என நினைக்கும் சமுதாய வாழ்க்கை. 
வேளாண்மைச் சமுதாயத்தின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில்... 

அவரது வீட்டிலும் வழிப்போக்கரை விருந்தாக ஏற்று உண்ண வைத்திருப்பார். உண்டவர் அவர் வீட்டுத் திண்ணையில் ஆயாசம் தீர அமர்ந்திருப்பர். உள்ளே சிலர் உண்டு கொண்டு இருக்கத் திண்ணையில் அடுத்த பந்திக்குச் சிலர் காத்திருப்பர். வீட்டுப் பெரிய மனிதர் பூங்குன்றனார் அவர்களோடு அளவளாவிக் கொண்டு இருந்திருப்பார். 
முன்பின் அறிமுகம் இல்லா அக்கூட்டத்தில் வழிச் செல்லும் திணைமாந்தர் ஒருபுறம்...
மூன்றாம் வருணத்தவராகி  உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்ட வணிகர் கூட்டம் ஒருபுறம்...
நான்காம் வருணத்தவராகி வேளாண்மையில் ஈடுபட்டு இருப்பினும்; குடும்பத் தேவைக்காக உறவினர் இல்லம் நோக்கிச் செல்லும் வேளாண் தொழிலாளர் ஒருபுறம்...
(வருணத்தாருள் பார்ப்பாரும் அறிவரும் இன்னொரு பார்ப்பார் வீட்டில் மட்டும் தான் உணவு உண்பர் என்பதற்கு இலக்கியச் சான்று உண்டு. பூங்குன்றனார் வீட்டு முற்றத்தில் அவர்கள் உண்ணக் காத்திருக்க மாட்டார். வேந்தன் தனது சேனை சுற்றத்துடன் வந்து போவானே அன்றித் தனியாக உண்ண வர மாட்டான்.).
இப்படிப் பலதரப்பட்ட மக்கள் குழுமி இருந்த திண்ணையில் திணைமாந்தருள் ஒருவராகிய அவர் 'மனிதருக்குள் உயர்வு தாழ்வு காணும் கொள்கை தன்னிடம் இல்லை' என்பதை அறிவுறுத்தி இருப்பார் எனல் தகும் அல்லவா?!

சோதிடம் அவர் பார்த்த தொழில் என்பது அவரது பெயரோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் கணியன் என்ற முன்னொட்டு உணர்த்தும் செய்தி.
எனவே தான் இன்பம் / துன்பம்; மகிழ்ச்சி / துக்கம்; நன்மை / தீமை எதற்கும் பிறரைக் காரணம் ஆக்க இயலாது. அது அது விதிப்படி தான் நடக்கிறது... நடக்கும் என்கிறார். 

தன் வீட்டு விருந்தில் உயர்வு தாழ்வு இல்லை எனத் திணைமாந்தர், வணிகர், வேளாளர் அனைவரிடமும் கொள்கை விளக்கம் அளிக்கிறார் பூங்குன்றனார். 

சக 

kanmani tamil

unread,
Dec 26, 2025, 8:05:50 PM12/26/25
to vallamai
புறநானூறு - 335
திணை: வாகை; 
துறை: மூதில் முல்லை.
மாங்குடி கிழார் பாடியது.

"அடல்அருந் துப்பின்...
...குருந்தே முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் 
இல்லை
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு 
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பன்என்று
இந்நான்கு அல்லது குடியும் 
இல்லை
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு 
எறிந்து வீழ்ந்தென
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."

'குரவு???, தளவு???, குருந்து (புன எலுமிச்சை), முல்லை  என்னும் நான்கு பூக்களைத் தவிர;  வாழ்வியலில் குறியீடாகும்  பூக்கள் வேறு இல்லை.

கருந்தாள் வரகு, இருங்கதிர்த் தினை,  சிறுகதிர்க் கொள், பொறிகிளர் அவரை என்னும் நான்கு அல்லாது அன்றாடம்  உணவாகும் வேறு பொருள் இல்லை.

துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு இனக் குடிகள் அல்லாது வேறு குடிகள் இல்லை.

போர்க்களம் சென்று பகைவரோடு நேருக்கு நேர் நின்று மோதித் தந்தங்களை உடைய களிற்றை வீழ்த்தி; வீரமரணம் அடைந்தவனுக்கு நடப்பட்ட கல்லை மட்டுமே வழிபட்டோம். அந் நடுகல் வழிபாடு தவிர நெல்லைத் தூவி வழிபடும் பிற வழிபாடு ஏதும் எம்மிடையே இல்லை.' 

----------------------------------------------------------

மூதில் முல்லை என்னும் துறைப் பெயரில் உள்ள 'மூதில்' மூத்த குடிகளைப் பற்றிய பாடல் என்ற செய்தியைத் தாங்கி உள்ளது. 

நால்வருணத்தார் வருகைக்குப் பின்னர் தமிழகத்துச் சூழல் எப்படியெல்லாம் மாறியது என்று தொகுக்கிறார் மாங்குடிகிழார். அதனால் தான் நான்கு பூக்கள், நான்கு பயிர்கள், நான்கு குடியினர், நான்கு உணவுகள் எனத் தொகுத்து உரைக்கிறார் புலவர்  எனத் தோன்றுகிறது. 

வரகு, தினை, கொள், அவரை என்ற நான்குவகைப் பயிர் செழித்த திணைமாந்தரின் புன்செய் வேளாண்மையோடு; நெல்லைப் பயிர்செய்யும் நடைமுறை வருணத்தார் வரவிற்குப் பின்னர் தோன்றியது என்கிறார். நெல்லைப் பயிர் செய்து உண்ணத் தலைப்பட்டதால் தான் வருணத்தார் வருகைக்கு முன்; 
'கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே 
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரை' என்ற நான்கு அல்லது வேறு உணவு இல்லை என்கிறார்.

வீரமரணம் அடைந்தோரின் நடுகல்லை வழிபட்ட மூத்த குடியினரின் பண்பாட்டுடன் நெல்லைத் தூவிக் கடவுளை வழிபடும் முறையும் இணைந்தது என்கிறார். 

ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 'முல்லை நிலத்துச் சிற்றூரில் வாழும் மக்களது வாழ்க்கைக் கூறுகள்' பற்றிய பாடல் எனக் கூறுவதில் பொருள் தெளிவும் பொருத்தமும் இல்லை. ஏனெனில்;
'துடியன் பாணன்பொருநன் கடம்பன் என்று 
இந்நான்கு அல்லது குடியும் இல்லை'
என்ற புலவரின் பட்டியலில் உள்ள துடியரும் பாணரும் பொருநரும் கடம்பரும் முல்லை நிலத்தில் மட்டுமே வாழ்ந்தவர் இல்லை.
அவ்வளவு ஏன்?!
வாகைத்திணையின் பிற துறைகளுள் இடம்பெறும் அரசமுல்லை முல்லை நிலம் தொடர்பானது அன்று. அரசன் முல்லை நிலத்தில் மட்டும் இருப்பவன் இல்லை. 
அதுபோல் தான் பார்ப்பன முல்லைக்கும் முல்லை நிலத்துக்கும் தொடர்பு கிடையாது. வாகைத் திணையுள் அரசமுல்லை, பார்ப்பன முல்லை, கணிவன் முல்லை முதலிய துறைகள் முறையே அரசனின் இயல்பையும்; பார்ப்பானின் இயல்பையும்; கணியனின் இயல்பையும் பாடுவது போல்; மூதில்முல்லை மூத்த குடிகளாகிய தமிழ்மண்ணின் பூர்வ குடிகளின் இயல்பைப் பாடுவதாக அமைந்து உள்ளது. 

நால்வருணத்தார் வருகைக்குப் பின்னர் தமிழகத்து மக்களிடையே நிகழ்ந்த வாழ்க்கைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகளில் வெட்சி முதல் வாகை ஈறாகப் பல அடையாளப் பூக்களின் பயன்பாடு நடைமுறைக்கு வந்தது. அதனால் தான்;
'அடலருந் துப்பின்……. 
குரவே தளவே குருந்தே முல்லை என்று 
இந்நான்கு அல்லது பூவும் இல்லை' என்கிறார். 

சக 

kanmani tamil

unread,
Dec 29, 2025, 12:27:56 AM12/29/25
to vallamai
புறநானூறு:399
திணை: பாடாண் 
துறை: பரிசில் விடை
பாடியவர்: ஐயூர் முடவனார் 

"அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பருஉக்குற்று அரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
மோட்டிரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை                                 
செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
பாதிரி ஊழ்முகை அவிழ்விடுத் தன்ன
மெய்களைந்து இனனொடு விரைஇ. . .
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
அழிகளிற் படுநர் களியட வைகின்                                    
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்                     
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்                                        
இசையிற் கொண்டான் நசையமுது உண்கென
மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
அலகில் மாலை ஆர்ப்ப வட்டித்துக்                                           
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தையான் வேண்டிவந் ததுவென
ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்                                        
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள
இழுமென இழிதரும் அருவி
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே"

'முழங்கும் நீரையும் தோட்டங்களையும் உடைய காவிரி பாயும் நாட்டுக்கு உரியவனாகிய, அழியாத நல்ல புகழையுடைய கிள்ளிவளவனை நினைத்து அவனை நோக்கிச் செல்கின்றேன். அவனது நாட்டில் சமைப்பவள் அளக்காமல் அள்ளிக்கொண்டு வந்த வெண்ணெல்லைப் பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குத்தி எடுத்த அரிசியைப் புளித்த நீரான் கொதிக்கும் வெண்மையான உலையில் பெய்து ஆக்கிய சோற்றுக்கு; நிழல் செய்யும் உயர்ந்த கிளையில் முற்றிய மாங்கனிகளைப் பிசைந்து அம் மணத்துடன் கூடிய இனிய புளிச்சுவை கூட்டிச் செய்த பெரிய கரிய வரால் மீனின் குழம்போடு;  கொம்புகளையுடைய சுறாமீன் துண்டுகளின் இறைச்சியும் வயலில் விளைந்த வள்ளைக் கீரையும் சிறிய கொடியில் முளைத்த பாகற் காயும் பார்ப்பதற்கு ஊழ்த்து அவிழ்ந்த பாதிரி மொட்டுகளை உதிர்த்தாற் போன்ற வடிவம் கொண்ட ???உடன் கூட்ட வேண்டியவற்றைக் கூட்டி... (பாடல் சிதைந்து உள்ளது)

விடியலில் வைக்கோலைப் போராகக் குவிக்கும் உழவர் தாம் உண்ட கள்ளின் களிப்பு நீங்காத நிலையில்; முரிபடாத அரிசிச் சோறு முழுகும் படி நீர் ஊற்றிய மென்மையான பழஞ்சோற்றை உண்பர். 

என் கிணைமகள் நெடிய மூங்கிற் கழித் தூண்டிலால் பிடித்த மீனைப் பண்டமாற்றிக் கிடைத்த பொருளால் சமைத்த  உணவுடன் பாகல் புளிங்கூழைக் கூட்டிக் காலம் தவறி உண்டு மனம் சோர்ந்து ஒருபுறம் இருந்தேன். 

நீ அறவோர்களின் தலைவனாகிய அறவோன் போன்றும்; மறவர்களின் தலைவன் ஆகிய மறவன் போன்றும்; மள்ளர்களின் தலைவன் ஆகிய மள்ளன் போன்றும் கருதத் தக்க தொல்குடியினரின் தலைவன் ஆவாய்.

உதவி வேண்டிப் பிறரிடம் செல்லவும் மாட்டேன்; அவரது முகத்தைக் கூட நோக்கவும் மாட்டேன். 

மிக்க புகழை உடைய சோழன் அளிக்கும் விருந்தை உண்ண விரும்பிச்; செலவைத் தொடங்கி; வலிய கோலை ஊன்றுகோலாக்கிக்; கட்டுக்  குலைந்த கிணையை இறுகக்கட்டி, அதற்குப் பொருத்தமான புதிய போர்வையைப் போர்த்தி; அளவிலா மாலை போன்ற நீண்ட வார்களை ஒலித்து இயக்கிக், கடவுளை வழிபட வேண்டிய நேரத்தில் காலம் கருதி உண்ணாமலே கிளம்பி வந்துள்ளேன். கனத்த தேர் போன்ற வண்டி சேற்றில் சிக்கிக் கொண்டால்; தளராமல் இழுத்துச் செல்லும் வலிய கழுத்தையுடைய காளை ஒன்று தான் நான் விரும்பி வந்தது எனக் கூறுவதற்கு முன்பே வானில் பூத்த விண்மீன்கள் போல் அழகிய நிறமுள்ள பல ஆனிரைகளை ஊர்ந்து செல்வதற்கு ஏற்ற காளைகளுடன்  ஓசையோடு ஒழுகும் அருவிகளையும் வானளாவ உயர்ந்த உச்சியையும் உடைய தோன்றிமலைக்குத் தலைவனாகிய தாமன் எனும் கோன் அளித்தான்.'
----------------------------------------------------------
அவன் இடையர் தலைவனாக... முல்லை நிலத்துத் தலைமை சான்ற மாந்தனாக இருந்ததால் தான் அவ்வாறு கொடுக்க முடிந்தது.

புறப்பாட்டின் இறுதி அடி அவனைத் ‘தோன்றிக்கோ’ என அழைக்கிறது. புநானூற்றைத் தொகுத்தோர் ‘தாமான் தோன்றிக்கோன்’ என்று இயற்பெயரோடு விரித்துச் சுட்டுகின்றனர். ‘கோன்’ என்னும் பின்னொட்டு ‘-ஆர்’ விகுதி சேர்ந்து ‘கோனார்’ ஆகி இன்றும் இடையர் குலத்தவரைக் குறிப்பதுண்டு. 

உ.வே.சாமிநாதையரின் 1923ம் ஆண்டு பதிப்பில் இடம்பெறும் குறிப்பு உழுவித்த வேளாளர் என்னும் வேளிர் பட்டியலைத் தருகிறது. அப்பட்டியலில் தாமானுக்கு அவர் இடம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேந்தனும் வேளிரும் அல்லாத தாமான் முல்லைத்திணை மாந்தர் தலைவன் ஆகிறான். 

தமிழகத்து இடப்பெயர்கள் ஆங்காங்கு பெரிதும் காணப்படும் தாவரங்களை அடியொட்டி அமைவதுண்டு. சான்றாக:
புளியங்குடி - புளியமரங்கள் நிறைந்த பகுதி (தென்காசி மாவட்டம்)
வெற்றிலையூரணி - வெற்றிலைக்கொடி மிகுந்த ஊருணி (விருதுநகர் மாவட்டம்)
ஆலங்குடி- ஆலமரத்தால் பெற்ற பெயர் (தஞ்சாவூர் மாவட்டம் )
ஆலமரத்துப்பட்டி- ஆலமரத்தால் பெற்ற பெயர் (விருதுநகர் மாவட்டம்)
இருக்கங்குடி- எருக்கம் புதர்கள் மிகுந்த ஊர்  (விருதுநகர் மாவட்டம்)
கவிரமலை- முள்முருங்கை மரம் நிறைந்த மலை (பொதிகையில்)
பனை விளை- பனைமரங்கள் நிறைந்த ஊர் (நாகர் கோயில் வட்டம்)
வாகைக்குளம்- வாகை மரங்களால் பெற்ற பெயர் (தூத்துக்குடி மாவட்டம்) 
இவை போன்று தோன்றிமரங்கள் மிகுந்த காட்டுப் பகுதியின் தலைவன் தோன்றிக்கோன் ஆனான். 

தாமான் தோன்றிக் கோன் கோடைமலைத் தொடரில் அமைந்து உள்ள  பேரேரியை  (இன்றைய பேரிஜாம் லேக்) ஒட்டிய தோன்றிக் காட்டைச் சேர்ந்தவன். 
தாமான் பேரேரி < பேரிஜாம் லேக்
‘பேரிஜாம்’ என்ற பெயர் ‘தாமான் பேரேரி’ என்பதன் திரிபு ஆகும். ‘பேரேரி > பேரி’ என்னும் மாற்றத்திற்குரிய சான்றாதாரங்கள் மிகுதியாக உள. ‘பேரி’ என்னும் பின்னொட்டைக் கொண்ட  இடப்பெயர்கள் பல.

திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரியும், ராஜசிங்கப்பேரியும். 
தென்காசி பாவூர்ச்சத்திரம் அருகில் குறும்பலாப்பேரி 
ஈஞ்சார், அழகாபுரிக்கு அருகில்  கிருஷ்ணப்பேரி 
தூத்துக்குடிக்கு வடக்கில் சங்கரப்பேரி 
ராஜபாளையம் அருகே சலங்கப்பேரி 
சாஸ்தா கோயில் அணைக்குத் தெற்கே நச்சடைப்பேரி 

என அனைத்து இடப்பெயர்களையும் ஏரிகளோடு தொடர்புடையனவாகவே கூகுள் வரைபடம் காட்டுகிறது. ‘பேரேரி’ என்னும் சொற்றொடர் பொதுமக்கள் வாய்மொழியில் முயற்சிச்சுருக்கம் காரணமாக 'பெரிய + ஏரி = பேரேரி > பேரி'  என மருவுதல் இயற்கை. தமிழகத்துப் பேரேரிகளின் பெயர்களில் எல்லாம் ‘பேரி’  பின்னொட்டாக  அமைய; ‘பேரிஜாம் லேக்’ என்ற தொடரில் ‘பேரி’ முன்னொட்டாக அமைந்த காரணம் அந்நியராகிய ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏற்பட்ட மொழியியல் மாற்றமாகும். ஆங்கிலேயர் கோடை காலத்தில் விரும்பி உறைந்த இடத்தில் ஆங்கில வழக்கு மிகுவது இயற்கையே. வெரே லெவிங் என்ற மதுரை மாவட்ட ஆட்சியாளரின் விருப்பத்திற்குரிய மலைவாசஸ்தலம் ஆகையால் அவர் வாழ்ந்து; பல நற்பணிகளைச் செய்து; மக்களிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்று இருந்ததைக் கொடைக்கானல் வரலாறு கூறுகிறது The Hindu-Madras Miscellany History and Culture- 07.Oct.201- “Levinge Still Remembered” Levinge still remembered - The Hindu). ஆட்சியாளர் போக்கில் மக்களும் ‘லேக்’ என்று அழைக்க; ‘பேரி’ பொருளற்ற முன்னொட்டாக இடம் மாறியுள்ளது.

‘பேரிஜாம்’ என்ற பெயரில் ‘தாமான்’ என்ற பெயரை அடையாளம் காணத் துணை செய்வது; தென்கன்னட மாவட்டத்தில் பண்டு வானவாறு என்ற பெயரில் கடலோடு கலந்து தற்போது ஹோனவார் என மருவி வழங்கும் (சேரவாற்றின் திரிந்த வடிவமாகிய) ஷீராவதியின் போக்கில் வந்து வீழும் ஜோக் அருவி (Jog falls). துளு நாட்டில் அமைந்துள்ள இவ்வருவிப்பகுதி சங்க இலக்கியத்தில்;

'தோகைக்காவின் துளுநாடன்ன' (அகம்.15) 

என்று குறிக்கப்படுகிறது. 'தோகைக்கா > தோக்கா >ஜோக்' என்ற மாற்றம்; ஆங்கிலேய ஆட்சியரின் உச்சரிப்பு இயலாமையால் நிகழ்ந்துள்ளதெனத் தெரிகிறது. இதற்கு ஆங்கிலேயரது மொழிவழக்கின் தன்மையே காரணம் ஆகும். ஆகார ஈறு கெட்டு மொழி முதல் ‘த்>>>ஜ்’ ஆகியுள்ளது. மேற்சுட்டிய மாற்றத்தோடு ஒத்த தன்மை உடையதாக; தாமான் >>> ஜாம் எனும் மாற்றமும் அமைகிறது. ‘ஆன்’ ஈறு கெட்டு மொழிமுதல் ‘த்>>> ஜ்’ ஆகியுள்ளது. இவ்வாறு  ‘பேரிஜாம் ஏரி’ என்ற பெயரில் நாம் தாமான் பேரேரியை மீட்டுருவாக்கம் செய்ய இயல்கிறது. தாமானின் காட்டிற்கு நீராதாரமாக அமைந்த ஏரியாகையால் தாமானின் பெயரால் வழங்கியுள்ளது. தாமானின் தோன்றிக்காடு அருவி வழிந்தோடும் மலை சார்ந்து இருந்தது. அது தோன்றி மரங்கள் நிறைந்தது.

“இழுமென இழிதரும் அருவி / வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே” (மேற்.)

என்கிறார் புலவர். அருவி வழிந்தோடும் வானளவு உயர்ந்த மலையின் சாரலில் இருந்த தோன்றிக்  காட்டின் தலைவன் என்று பொருள் கிடைக்கிறது.

இவ் ஏரி நீரே பண்டு மலையினின்று கிழக்கில் வழிந்தோடி இருக்க வேண்டும். கொடைக்கானல் காட்டிலாகாவின் அனுமதி பெற்ற பின்னரே இவ் ஏரிப்பகுதிக்குச் செல்ல இயலும்.  

தாமனின் தோன்றிக்காட்டை இவ்ஏரியின் சுற்று வட்டாரத்தில் காணமுடிகிறது. கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்றுச் செய்த கள ஆய்வும், கிடைக்கும் நிழற்படங்களும் பேரிஜாம் ஏரிப்பகுதியில் தோன்றிக்காடு இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. தோன்றி மரம் சிவந்த பூக்களைத் தாங்கி நிற்கும் பருவத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். பூக்கள் உதிர்ந்த பின்னர் மீண்டும் பசுமையான இலைகள் துளிர்க்கும். இதன் தாவரவியல் பெயர் Scarlet sterculia என்பதாகும். பேரிஜாம் ஏரியைச் சுற்றி இருக்கும் உந்துத்தடத்தில் காணக்கிடக்கும் உதிர்ந்த சிவந்த தோன்றிப் பூக்களைக் காட்டுகிறது. https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i74146865-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html

(IJTLLS- தாமான் தோன்றிக்கோன் - முல்லைத்திணை மாந்தர் தலைவன்- 15.7.2020-  International Journal of Tamil Language and Literary Studies – DOAJ- https://doaj.org/article/5f15 2aebc27c4c1da8626b5f9d238adc).

ஐயூர் முடவனார் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் ஆகும். இவ்வூருக்குச் செவ்விலக்கியக் காலத்துத் தொன்மையான ஊர்களான தங்கால் (இன்றைய திருத்தங்கல்), மல்லிபுத்தூர் (மல்லி கிழான் காரியாதியின் ஊர்) ஆகிய இரு  ஊர்களிலிருந்தும் சென்று சேரக்கூடிய பாதைகள் உள்ளன. பேரையூரிலிருந்து செல்லும் தடங்களில் ஒன்று பாண்டியனின் மதுரைக்கு இட்டுச் செல்கிறது; மற்றொன்று பெரியகுளம் என்னும் ஊருக்கு வந்து சேர்கிறது. பெரியகுளம் பேரிஜாம் ஏரிக்குக் கிழக்கிலுள்ள தாழ்வரையை அடுத்து உள்ளது (பார்க்க- வரைபடம்- 2).  URL Link. பெரியகுளத்திலிருந்து உறையூர் செல்லவும் பண்டு தொட்டு வழங்கிய தடமும் உள்ளது.
ஐயூர் முடவனார் பேரையூரைச் சேர்ந்த பொருநர். கிணைப்பறை கொட்டுபவர்; கால் ஊனமுற்றவர். 'வன்கோல் மண்ணி'; அதாவது வலிமையான ஊன்றுகோலின் துணையுடன் அவர் தாமனைப் பார்க்கச் செல்கிறார்.  மாட்டு வண்டியில் ஏறிக் கிள்ளி வளவனை நாடிச் சென்ற போது; அவ் வண்டி ஒரு பள்ளத்தில் பதிந்து பகடு வலியிழந்து விட; இவரது போக்கு தடைப்பட்டது.
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 29, 2025, 8:55:35 PM12/29/25
to vallamai

கிணைமகள் குளத்து மீனைப் பிடித்து விற்றுப் பாகற்புளிங்கூழ் சமைத்தாள் என்னும் நிகழ்ச்சி இப் புவியியலுக்குப் பொருந்தும். அத்துடன் அருகில் ‘பேரியூர்’ என்ற பெயரில் இன்றும் வழங்கும் சிற்றூர் தாமான் பேரேரியுடன் இவ்வூரைத் தொடர்புறுத்துகிறது. பேரேரி > 'பேரி'யால் நீர்வளம் பெற்ற ஊர் பேரியூர் ஆயிற்று எனலாம்.


தாம் கண்ட ஏடுகளில் ஐயூர் என்பது; திருச்சிக்குக் கிழக்கே உள்ள சிற்றையூர் என்றும், உறையூர் என்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதை உவே.சாமிநாதையர் சுட்டிக்காட்டியுள்ளார் (புறநானூறு- உ.வே.சாமிநாதையர்- ப.ஆ.- 1923- 2ம் பதிப்பு- கமெர்சியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது- பாடினோர் வரலாறு- ப.23). ஐயூர் முடவனாரின் சொந்த ஊர் உறையூர் எனில் அவர் தன் வாழ்வின் முற்பகுதியில் பாண்டியனைத் தேடி வந்தமைக்குத் தகுந்த காரணமில்லை. அது மட்டுமின்றி; அவரது வல்லாண் முல்லைத் துறையில்  அமைந்த பாடலில் தன் சொந்த வாழ்விடத்து நிகழ்ச்சியைப் பாடுவது போலவே பாடியுள்ளார் (புறம்.314). முல்லைத்திணை சார்ந்த; அதாவது காடு சார்ந்த ஊரில் நிகழ்ந்த போரையே விவரிக்கிறார். அதுவே அவரது சொந்த ஊராகக் கருத இடமுள்ளது. வெற்றி பெற்ற  வீரன் பற்றிப் பாடும் போது;

“புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்” (மேற்.) 

என்பதால் அவர் புன்செய்க் காடு சார்ந்த ஊரினர் என்று தெளிவாகிறது. எனவே காவிரி பாயும் உறையூரைச் சேர்ந்தவர் என்னும் கருத்து வலுவற்றது.


ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியின் சிற்றையூர் என்ற கருத்தை ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையும் எடுத்துக் கூறியுள்ளார் (மேற். ப.468). இக்கருத்தையும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் சிற்றையூர் உறையூருக்குத் தெற்கே மிக அருகில் இருப்பது. அகண்ட காவிரிக்கு அருகில்  இருந்த ஊர் புன்செய்க் காடாக இருக்க வாய்ப்பில்லை.


தாமான் தோன்றி மலையின் தலைவன் எனும் கருத்தை உ.வே.சாமிநாதையர் குறித்துச் செல்கிறார் (மேற். பாடப்பட்டோர் வரலாறு- ப.71). இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை  என்பதற்கு குறிப்பிட்ட பாடலிலேயே அகச்சான்று உள்ளது. ஐயூர் முடவனார் கிணைப்பறையைத் திருத்திக் கொண்டு தாமனைக் காணச் சென்ற போது கோலூன்றிச் சென்றதாகவே பாடியுள்ளார். முடவனாகிய அவர் தாமானைக் காண;

“மீப்படர்ந்து இறந்து வன்கோன் மண்ணி” (பா.399) 

மலையில் 7000அடி உயரத்திற்கு ஏறிச் சென்றார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. பெரியகுளத்திலிருந்து பேரியூர்  நடைப்பயண தூரத்தில் இருப்பதாகவே கூகுள் வரைபடமும் காட்டுகிறது. எனவே தாமானின் வாழ்விடம் தாமான் பேரேரி மூலம் நீராதாரம் பெற்ற மலைப்புறத்துத் தோன்றிக்காடு என்று துணியலாம்.


ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தாமான் திண்டுக்கல்லுக்கு 15கல் மேற்கில் உள்ள தாண்டிக்குடியின் தலைவன் என்கிறார் (மேற்.468). இக்கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. ஏனெனில் தாண்டிக்குடி என்ற பெயர் தான்றிமரம் (Terminalia bellerica) என்ற தாவர வகையின் அடிப்படையில் அமைந்த பெயராகும் (தமிழ் விக்கிப்பீடியா- தான்றி- https://ta.wikipedia.org/s/72v). தாண்டிக்குடியில் தொல்லியலார் ஆய்வும்; அங்கிருக்கும் தான்றிமர வளமும் குறித்த  அறிக்கை வெளிவந்து உள்ளது (தமிழி- “வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை”- 02.மே.2015- தமிழி: வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...). தோன்றி மரம் வேறு; தான்றி மரம் வேறு என்பதில்  ஐயமில்லை. ஆதலால் தாமான் தோன்றிக்கோன் தாண்டிக்குடியின் தலைவனாக இருக்க இயலாது.

 

கரூர்க்கு அருகில் உள்ள தாந்தோன்றி மலையைத் தாமானுடன் தொடர்பு படுத்தி ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பேசுகிறார் (மேற்.); 

தமிழ் விக்கிப்பீடியாவும் அதே கருத்தைச் சொல்கிறது  தோன்றி (மலை) - தமிழ் விக்கிப்பீடியா. இக்கருத்தையும் பாடலின் அகச்சான்று கொண்டே மறுக்க இயல்கிறது. வறுமையில் பசித்துன்பத்திற்கு ஆளான ஐயூர் முடவனார் வளமான விருந்துணவிற்கு ஆசைப்பட்டதை அவரது பாடல் காட்டுகிறது. மாங்காயின் புளிச்சுவை சேர்த்து வைத்த வரால்மீன் குழம்பும், சுறாமீன் துண்டங்களின் பொரியலும், வள்ளைக்கீரைக் கூட்டும், பாகல் கறியும் சேர்ந்த மேன்மை பொருந்தியது என்கிறார். ஆற்று மீனாகிய வரால் மீனின் குழம்பும் கடல்மீனாகிய சுறாப்பொரியலும் ஒருங்கே கிடைக்கும் இடம் புகார்ப் பட்டினமே. ஆற்று வளமும் கடல் வளமும் ஒருசேரப் பல்கிப் பெருகிய புகார் பற்றிப் பட்டினப்பாலையும் (அடி.63-66; 176-177), சிலப்பதிகாரமும் (கானல் வரி- பா.5-9; கடலாடு காதை- அடி.142, 166) விரிவாகப் பேசுகின்றன. ஐயூர் முடவனார் கிழக்குக் கரையில் இருக்கும் புகார் நகருக்குச் செல்ல மேற்கு நோக்கித் தாந்தோன்றி மலை செல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே  அறிவாராய்ச்சிக்குப் பொருந்துவதாக அமையும். தாந்தோணி மலை என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படும் அப்பகுதியில் தோன்றிக் காடு இருந்தமைக்கும் ஆதாரமில்லை.

தாமான் தோன்றிக்கோன் முல்லைநிலத்து இடையர்  தலைவன் ஆவான். தாமானின் தோன்றிக்காடு மலை சார்ந்து இருந்தது; தோன்றி மரங்கள் நிறைந்தது. அக்காடு கொடைக்கானல் மலையிலுள்ள கொடைக்கானல் நகராட்சியின் தெற்கில் காணப்படும் பேரிஜாம் ஏரியைச் சுற்றியும், அதையடுத்த  தாழ்வரையிலும்  இருந்தது. அவனைப் பாடிய ஐயூர் முடவனார் மதுரை மாவட்டத்துப் பேரையூரைச் சேர்ந்தவர் ஆவார்.


இனி சமூகச் செய்திக்கு வருவோம்:

தாமான் தோன்றிக்கோனைப் புகழும் போது அவனை 'அறவர் அறவ; மள்ளர் மள்ள; மறவர் மறவ; தொல்லோர் மருக' எனக் கூறக் காரணம்... அன்றே தமிழ்ச் சமூகம் ஒரு பன்மைச் சமூகமாக இருந்தமையே. மண்ணின் மைந்தர் ஆகிய திணைமாந்தரோடு...

வந்தேறிய அறவர் ஆகிய சமணர் ஜைனத்தையும் பௌத்தத்தையும் பின்பற்றுவோராய்; மூன்றாம் வருணத்தார் ஆகிய வணிகராகவும் நெல் வேளாண்மையில் ஈடுபட்ட நான்காம் வருணத்தைச் சேர்ந்த வேளாளராகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும் நிலவுடைமையாளர்கள் குறுநில மன்னராய் ஆண்டனர். பல குழுக்களாக வாழ்ந்த மறவர் வயிற்றுத் தீத் தணிய வழிப்பறியிலும் ஆநிரை கவர்வதிலும் ஈடுபட்டு இருந்தாலும்; ஆநிரை மீட்டுத் தரும் பெருமைக்கு உரிய வீரராய் வேந்தரிடமும் குறுநில மன்னரிடமும் பணி ஆற்றிய வீரர் ஆவர் (அவர்கள் திணைமாந்தர் ஆகிய மழவரினின்றும் வேறுபட்டவர் என இதே இழையில் முன்னர் கண்டோம்.). மள்ளர் நன்செயில் வேளாண்மைக்குத் துணை நின்று; தமக்கெனத் தனி நாட்டார் வழக்காறுகளோடு வாழ்ந்தனர். இத்தகு பல்வேறு சமூகத்தவர்க்கும் தாமான் தோன்றிக்கோன் தலைவன் ஆகும் தகுதி பெற்றவன் என்று போற்றுகிறார். அந்த அளவிற்கு அவன் எல்லாப் பெருமையும் உடையவன் என்பது கருத்து.

(முற்றும்) சக

Raju Rajendran

unread,
Dec 29, 2025, 11:39:20 PM (14 days ago) 12/29/25
to vall...@googlegroups.com
<கழியே ஓதம் மல்கின்று>
ஓதம்= Tide

செவ்., 23 டிச., 2025, 7:07 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvkKEpgRNbv1S3TEjfC_-Cqn%2BbJbm8fEXNQfW%3D7WYOpig%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jan 8, 2026, 6:21:11 PM (4 days ago) Jan 8
to vallamai
புறநானூறு - 391
திணை: பாடாண் திணை
துறை: கடைநிலை
தலைவன்: பொறையாற்றுக்  கிழான் 
பாடியவர்: கல்லாடனார் 

"தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி                         
அரியல் ஆர்கையர் உண்டுஇனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின்………             
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன்என
நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்               
துதைந்த தூவியம் புதாஅம் சேக்கும்
ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு
இன்துயில் பெறுகதில் நீயே வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய
வேலி ஆயிரம் விளைகநின் வயலே"
  
'வேங்கட மலையெல்லை ஆகிய வடபகுதியில் குளிர்ந்த மழைத்துளிகளை மிகப் பெய்து மேகங்கள் முழங்கும்.    எருதுகளின் பயன்பாட்டால் நெல்லானது திருமாலை ஒத்த குன்றின் உச்சியைத் தொடும் அளவு உயர்ந்து விளைந்து குவிந்திருக்கும். 
அப் பெருவளத்தை வாழ்த்தித்; திரண்ட ஊன்தடியைத் துண்டுகளாக்கிக் கள்ளோடு உண்டு என்னுடைய பெரிய சுற்றம் மகிழ்ச்சியோடு அங்கு இருந்தது.  
ஆனால் அவ் வேங்கட நாடு வறுமையுற; என் சுற்றத்தார்  பழங்குடிகள் அழுந்து பட்டிருந்த (விட்டு நீங்காமல் வாழ்ந்த) இவ் அகன்ற பழமை வாய்ந்த ஊரில் வந்து தங்கினர். 
ஊராரோடு அளவளாவ... (பாடல் சிதைந்து உள்ளது) 

என்னைப் பற்றி அறிந்து கொண்ட ஊர்மக்கள்;
'இவன் முன்பும் பொருள் நாடி இங்கு வந்துள்ளான்; பொருள் இல்லாதவன்; பொருநன்; ஆதலால் இரங்கத் தக்கவன்.’  என உன்னை நன்கு அறிந்த ஊரார் என்னைப் புரிந்து கொண்டு உரைக்க; நான் உன்னைக் காண வந்தேன் பெரும! 
கரிய நீர் மிகுந்த பெரிய கழியில் மீன்களைக் குடைந்து தேடி உண்ணும், செறிந்த சிறகுகளையுடைய புதா (ஒரு வகை நாரை) எனும் பறவைகள் தங்கும் அடர்ந்த புன்னை மரங்களும்  செல்வச் செழிப்பும் உடைய இல்லத்தில்; உன்மீது காதல் கொண்டு உன்னால் விரும்பப்பட்ட உன் மனைவியுடன் நீ இனிதாக உறங்குக. 
வளம் பெருகுவதற்கு ஏற்பத் தகுந்த காலத்தில் தக்க அளவில் மழை பொழிந்து உன் நாட்டில் ஒர் வேலி அளவு நிலத்தில் நாற்பத்தெட்டாயிரம் படி நெல் விளைவதாக.' 

----------------------------------------------------------
1 வேலி = 6.74 ஏக்கர்
1 கலம் = 12 மரக்கால் 
1 மரக்கால் =  4 படி).

குறிப்பிடத் தக்க இரண்டு சமூக வரலாற்றுச் செய்திகள் இப் பாடலில் உள்ளன. 

1. கல்லாடனார் பொறையாற்றுக் கிழானைப் பார்க்கச் சென்ற பொறையாற்றுக் கரையில் இருந்த ஊர் தமிழகத்துப் பூர்வ குடிகள் வாழ்ந்த ஊர்; அதாவது காலம் காலமாக வேறெங்கும் குடி பெயராமல் அதே ஊரில் வாழ்பவர். 'தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி நனந்தலை மூதூர்' என்ற தொடர் தாங்கி நிற்கும் பொருள் இதுவாகும். இந்த வாழ்விடம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு வேறு இடம் தேடிச் செல்லும் பண்பு இல்லாத முதுகுடியினர் ஆகிய தொல்குடியினர் வாழும் அகலிடம் உடைய ஊர். 
தமிழகத்துப் பூர்வகுடிகள் யார் என்பதை இதே இழையில் முன்னர்க் கண்டோம் (புறம்.335). பாணர், துடியர், பறையர், கடம்பர் என மாங்குடிகிழார் வகைப்படுத்திப் பேசினார். அவ்வாறு விதந்து பேசக் காரணம்... அன்றைய தமிழகத்தில் வந்தேறிகளாகப் பலர் வாழ்ந்தனர் (நான்கு வருணத்தாருள் அடங்குவோர் ஆகிய வேளாளர் என்ற வேளிர், வணிகர் என்ற வைசியர், வைதீகர் என்ற பார்ப்பனர்& வேந்தர்) என்பது சொல்லாமல் விளங்கும் குறிப்புப் பொருள் ஆகும். 

2. கல்லாடனார் பற்றி அறிந்த ஊர்மக்கள்; அவர் ஏற்கெனவே முன்னரும் பொறையாற்றுக் கிழானை நாடி வந்திருப்பினும்; வறுமையில் வாடும் இரங்கத் தக்க பொருநன் என அவரைக் குறித்துப் பேசி; மீண்டும் பரிசில் பெறத் தகுதி வாய்ந்தவன் என்பதற்கு; அவன் சார்ந்த சமூகத்தை வெளிப்படையாகக் கூறித் தம் தலைவனிடம் செல்ல விடுத்தமை... பண்டைத் தமிழகத்தில் சமூகப் பிரிவினை இருந்ததைக் காட்டுகிறது. பொருநர் என்போர் கிணைப்பறை கொட்டுவோர். திணைமாந்தர் இடையே சாதிப் பாகுபாடு அழுத்தமாக நிலவியமைக்கு இப்பாடல் சான்றாகிறது. 

சக 



kanmani tamil

unread,
Jan 9, 2026, 11:36:46 PM (3 days ago) Jan 9
to vallamai
புறநானூறு- 32

திணை: பாடாண்
துறை: இயன்மொழி
சோழன் நலங்கிள்ளியைக் 
கோவூர் கிழார் பாடியது.

"கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ;
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போலவவன்
கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே"

நாம் தொன்று தொட்டு இம் மண்ணில் வாழ்பவர் ஆதலால்; அந்த உரிமையை எண்ணிப் பார்த்து;... 
நம் சுற்றத்தினர் சமைக்கும் கலங்கள் நிறைந்து வழியும்படி; நெடிய கொடியில் பூக்காத வஞ்சி ஆகிய வஞ்சி மாநகரைத் தரும் திறன் உடையவன் சோழன் நலங்கிள்ளி ஆவான். 
அது மட்டும் அன்று. 
வண்ணக் கலவை பூசி வணங்கும் முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியும் உடைய விறலியர்க்குப் பூவிலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தரக் கூடிய தகுதி உடையவன் ஆவான். 
இரந்து பெறும் பரிசிலரே வாருங்கள்; நாம் அனைவரும் அவனைப் பாடுவோம். 
தொழில் நுட்ப அறிவுடன் செயல் திறன் மிக்க குயவர் குலச் சிறுவர் மட்பாண்டம் செய்யும் சக்கரத்தில் வைத்த பெரிய பச்சைமண் உருண்டை அவரது கருத்துக்கு ஏற்ப வடிவம் பெறுவது போல்; சோழன் நலங்கிள்ளியின் ஆணைக்கு ஏற்ப இந் நீர்வளம் மிகு‌ந்த நாட்டின் உடைமை அமைந்து விளங்கும்.
--------------------‐-------------------------------------
சேரன் தலைநகர் வஞ்சியையும் பாண்டியன் தலைநகர் மதுரையையும் சோழன் நலங்கிள்ளி தருவான் என்று கோவூர் கிழார் கூறுவதால்; இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில் அவ் இரு தலைநகர்களின் வேந்தர்களும் சோழன் நலங்கிள்ளியின் ஆதிக்கத்தில் அடங்கியவர் என அறிகிறோம்.

சமூகச் செய்திகள்:

'தொன்னிலக் கிழமை சுட்டின்' என்ற தொடர் ஆழமான பொருள் உடையதாகத் தோன்றுகிறது. மாங்குடி கிழாரின் புறம்.335ம் பாடல் இங்கு பொருத்திப் பார்க்கக் கூடியது.
கிழமை = உரிமை / உடைமை 
'தொன்'மை எனும் அடைமொழி 'நிலக்கிழமை' எனும் சொற்றொடர்க்கு உரியது. நிலவுடைமையாளர் எனும் தகுதி தமிழகத்துப் பூர்வ குடியினர்க்கு இருந்து; பின்னர் மாறிய வரலாறே இங்கு வெளிப்படையாகப் பேசப்பட்டு உள்ளது. அதாவது பாணர், பொருநர், துடியர்,  கடம்பர் ஆகியோரது உரிமையாக இம் மண் இருந்தமையை நினைத்துப் பார்த்தால்; சேரன் தலைநகரையும் பாண்டியன் தலைநகரையும் சோழன் நமக்குப் பரிசிலாகத் தருவான் (நாமும் மண்ணில் வேளாண்மை செய்யலாம்.  நமது உணவுப் பாத்திரங்கள் நிரம்பி வழியும். நாம் பசியாறி வளமாக வாழலாம் என்பது கருத்து.).

சக 

kanmani tamil

unread,
Jan 11, 2026, 8:12:40 PM (yesterday) Jan 11
to vallamai
புறநானூறு- 154
கொண்கானக் கிழானை மோசிகீரனார் பாடியது
திணை: பாடாண் 
துறை: பரிசில் துறை.

"திரைபொரு முந்நீர்க் 
கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை  நீக்கும்
சில்நீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழையராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்                 
யானும் பெற்றது ஊதியம் பேறுயாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளி 
வந்தனனே
ஈஎன இரத்தலோ அரிதே நீ அது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்  
தூவிரி கடுப்பத் துவன்றி 
மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்  எனக்கு எளிதே"

'சிறந்த போராளியாகப் பெரும் படைகளை எதிர்த்து நின்று பகைவரின் தாக்குதலுக்குப் புறமுதுகு காட்டாத ஆண்மைச் சிறப்பு உடைய கொண்கானக் கிழானே! அலை வீசுகின்ற கடலின் கரை அருகே இருக்கும் போதும்; தாகம் ஏற்பட்டால் அதைத் தீர்க்க; அருகில் தாமறிந்த பிறரது துணையை நாடிச் சிறிதளவு குடிநீரை மக்கள் வேண்டுவர். 
அதுபோல அரசர் அருகில் இருந்தாலும் புலவோர் வள்ளன்மை உடையோரையே நாடுவர். நானும் அப்படித்தான் உன்னை வேண்டி நிற்கிறேன்.
'ஈ' என்று இருந்து நிற்பது மிகவும் அரிதான செயல் ஆகும். நீ எனக்குக் 
கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்; அப் பொருளின் அளவும் பெறுமதியும் பற்றி நான் ஏதும் கருத்து உரைப்பவன் அல்லன். 
மிக உயர்ந்த மலையில் இருந்து பலவிடங்களில் வெள்ளைத் துணி போல் தோன்றும் அருவி வழிந்து ஒழுகும் உன் கொண்கானத்தைப் புகழ்ந்து பாடுவது எனக்கு எளிதான செயல் ஆகும்.'

----------------------------------------------------------

சமூகச் செய்திகள்:
கொண்கானக் கிழான் திணைமாந்தருள் உழவர் தலைவன்- தமிழ் மண்ணின் பூர்வ குடியினன் ஆவான். புன்செய் வேளாண்மை அவனது பாரம்பரியம் ஆகும். அவன் வாழ்ந்த பகுதி கொள் விளையும் கானம் ஆகையால் கொண்கானம் என அழைக்கப்பட்டது. மிகுதியாகக் கொள் விளைவதால் பெயர் பெற்ற காட்டுப் பகுதி. கொள் ஒரு புன்செய்ப் பயிர். அது விளைய மிகுந்த நீர் தேவை இல்லை. பேரருவி ஏதும் இன்றிக் கொண்கானத்து மலையில் இருந்து வழியும் நீரே அவ் வேளாண்மைக்குப் போதுமானது. 

குறுநில மன்னரோடு ஒப்ப வைத்து எண்ணத் தக்க புகழ் பெற்ற திணை மாந்தருள் கொண்கானக் கிழானும் ஒருவன் ஆகிறான். தன் அரசனுக்காகப் பல போர்களில் பங்கேற்று வெற்றி தேடித் தந்தவன். அவன் வாழ்ந்த கொண்கானத்தை ஒட்டி இருப்பது நவிரமலை. அம் மலையின் அரசர் நன்னன் மரபினர். நன்னன் தனது தோட்டத்து மாமரத்தில் இருந்து ஆற்றில் விழுந்த மாங்காயைத் தின்ற கோசர் குலப் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்துப் 'பெண்கொலை புரிந்தவன்' எனத் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டவன்.  எப்படிக் கடலுக்குள் அளப்பரிய செல்வம் பொதிந்து உள்ளதோ அது போல் நன்னனின் செல்வம் அளப்பரிது. ஆனாலும் அவனிடத்துச் செல்லவோ; இரந்து நிற்கவோ விரும்பாத மோசி கீரனார் கொண்கானக் கிழானிடம் 'நீ எதைக் கொடுத்தாலும்; எவ்வளவு கொடுத்தாலும்; கொடுக்காமலே விட்டாலும்; உன் கொண்கானத்தை நான் பாடுவேன்; அது எனக்கு எளிது' என்கிறார். 
"நின் கொண்பெருங் கானம்" என்ற  தொடரில் உள்ள 'நின்' அழுத்தமாக இங்கு சமூக வரலாற்றைத் தெள்ளென விளக்கி நிற்கிறது. உழவர் தலைவன் ஆகிய கிழானின் மண்ணுரிமையை உரக்கச் சொல்லும் சொல் 'நின்' ஆகும். உனது காட்டை ஒட்டிய மலையின் அரசன் உன்னைப் போல் மண்ணின் மைந்தன் அல்லன் என்று கோடி காட்டிப் பாடுகிறார் மோசிகீரனார். 

புறப்பாடலிலும் படிமம் அமையப் பாடிய 'சொல் வல்லர்' மோசி கீரனார். இப்பாடலில் கடலும் அதன் செல்வமும்;  நன்னன், அவனது செல்வம் என நம் மனதில் பதிகிறது. 

சக 
 
Reply all
Reply to author
Forward
0 new messages