தொகை இலக்கியப் பாடல்களில் சமூக வரலாற்றுச் செய்திகள் பல நாம் உய்த்து உணரும் வகையில் பொருந்தி இருக்கும்.
பாடலின் கவித்துவமும் கட்டமைப்பும் அழகியல் சார்ந்த கூறுகளாய் நம் மனதைக் கவர்ந்து இழுக்க; அதில் பொதிந்து இருக்கும் சமூகச் செய்தி ஒவ்வொன்றையும் அடையாளம் காணும் முயற்சியாக இது அமைகிறது.
அகநானூறு: 340
நித்திலக் கோவை
நெய்தல் - தோழி கூற்று
பகற்குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது.
"பல்நாள் எவ்வம் தீரப் பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம
செல்லா நல் இசைப் பொலம் பூண் திரையன்
பல்பூங் கானற் பவத்திரி அன்னஇவள்
நல்எழில் இளநலம் தொலைய ஒல்லென
கழியே ஓதம் மல்கின்று; வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என
நின்திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டுஇமிர் நறுஞ்சாந்து அணிகுவம் திண்திமில்
எல்லுத் தொழில்மடுத்த வல்வினைப் பரதவர்
கூர் உளிக் கடு விசை மாட்டலின் பாய்புஉடன்
கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு
முன்றில் தாழைத்தூங்கும்
தெண்கடற் பரப்பின்எம் உறைவுஇன் ஊர்க்கே" -நக்கீரர்.
இது பாடல் - இதன் பொருளாவது...
பல நாள் பகலில் வந்து; புன்னை மரப் பொதும்பின் நிழலில் இருந்து; உன் துன்பத்தைப் போக்கிக் கொண்டு; மாலை வந்ததும் தலைவியைப் பிரிய மனமின்றி மையலோடு நோக்கி; வலவன் திறம்பட ஓட்டும் தேரில் ஏறிச்செல்லும் விருப்பத்தை விட்டுவிடு.
சொல்லித் தீராத புகழையும் பொன் அணிகளையும் உடைய திரையன் ஆளும் பூக்கள் நிறைந்த கானல் சார்ந்த பவத்திரி எனும் ஊர் போன்று அழகும் இளமையும் பொருந்திய இவள் உன் நலனை எண்ணி வாடுகிறாள்.
ஏனெனில் நீ செல்லும் வழியில் உள்ள கழியில் அலை மிகுதியாக உள்ளது; உயிரைக் கொல்லும் பாம்புகளும் பெரிய மீன்களும் உள்ளன. ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய
பொழுதும் இருட்டுகிறது.
உன் துன்பம் தீர இன்று இங்கு எம் ஊரிலேயே தங்கிச் சென்றால் என்ன?! (உன்னைத் தடுப்பார் யாரும் இல்லை; எல்லோரும் மீன் பிடிக்கச் சென்று விட்டனர்.)
மீன் விற்று வாங்கி வந்த நெல்லரிசி உணவில்
தயிர் கலந்து உன் குதிரைக்கும் உண்ணத் தருவோம்.
வடவர் தந்த சந்தனக் கல்லில்
குடவர் தந்த சந்தனத்தை அரைத்து உனக்குப் பூசி விடுவோம்.
பாடலில் இடப்பின்புலமாகக் கடற்கரைப் பரதவர் சேரி அமைகிறது. காலப் பின்புலமாக மாலைப் பொழுதும் இனி இருட்டி விடும் என்ற செய்தி அமைகிறது. இரண்டு பின்புலங்களும் முதல் பொருள் ஆகின்றன.
திண்திமில், தாழைமரம், புன்னை மரத்து நிழல், கிழிந்த பயனற்ற வலை, சுறா வேட்டை ஆடும் பரதவர், அவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்தும் கூர்உளி, கழியின் ஓதம், பச்சை மீனுக்குப் பண்டமாற்றாக நெல்லைப் பெறுதல் அனைத்தும் கருப்பொருட்கள் ஆகிப் பின்புலங்களை விளக்குகின்றன.
'வாழ்வதற்கு இனிமையான எங்கள் ஊரில்... திண்மையான திமிலில் ஏறி மாலையில் தொழிலுக்குக் கடல்மேற் செல்லும் பரதவர் தம் வலையில் மாட்டிய கோட்டுச் சுறாவை வேட்டையாடக்; கயிற்றில் கட்டிய கூர்உளியை வீசித் தாக்க; உயிருக்குப் போராடிய சுறாவின் வேகத்தில் வலை கிழிந்து விட; அக்கிழிந்த வலை இனி பரதவர்க்குப் பயன்படாத நிலையில்; முற்றத்துத் தாழை மரத்தில் தொங்கிக் கொண்டு; கடல்காற்றில் ஆடுகிறது.'
காற்றில் ஆடும் கிழிந்த வலை இறைச்சிப் பொருளைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. கிழிந்த வலை பரதவர் மீன்பிடிக்கப் பயன்படாது.
பூக்கேழ் புலம்பன்... (புலத்தை உடையவன் புலம்பன்)
நிலவுடைமையாளனாய்... (மென்புலம் எனப்படும் நன்செயை உடையவன் ஆதலால் 'பூக்கேழ்' எனும் அடைமொழி) வேளாண்மை செய்யும் தலைவனுக்கும் பரதவர் குலத்தைச் சேர்ந்த தலைவிக்கும் இடையே இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து விட்டமையைக் கிழிந்த வலை என்ற தொடரின் உள்ளுறை உணர்த்துகிறது.
'நீ கிளம்பிச் சென்று விட்டால் தலைவி உனக்கு வழியில் காத்திருக்கும் ஆபத்துகளை எண்ணித் தாங்க மாட்டாமல் அழுவாள். ஆபத்து பாம்பாகவும் வரலாம்; உயிரை வாங்கும் மீனாகவும் வரலாம். அதனால் இன்று இரவு எங்கள் ஊரில் தங்கிச் செல்வாயாக' என்ற அவளது பேச்சு உரிப்பொருளைத் தெளிவுறுத்துகிறது.
'எங்கள் ஊரில் தங்கினால் உன் குதிரைக்குக் கூட நாங்கள் நெல்லரிசி மாவுடன் தயிர் கலந்து உண்ணக் கொடுப்போம்' எனும் போது; குறிப்பாகப் பெறும் கருத்தாவது- உன்னை உபசரிப்பதில் எந்த மரியாதைக் குறைவும் நேராது என்பதாக அமைந்து உள்ளது. உயர்ந்த உணவாகக் கருதப்படும் நெல்லரிசி உணவை... நீ வேளாண்மை செய்யும் நெல்லை நாங்கள் பண்டமாற்றாகப் பெறுவதன் மூலம் உன் குதிரைக்கும் கொடுப்போம்.
கிழிந்த வலை பரதவர் தொழிலுக்குப் பயன்படாதது போல்; பூக்கேழ் புலம்பனோடு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து விட்டதால் இனி எந்தப் பரதவனின் வாழ்க்கைக்கும் அவள் பயன்பட மாட்டாள்.
தலைவியை மணந்து கொள் என்று தோழி கேட்கவில்லை. மாறாகப் பணிவிடை செய்கிறோம் என்கிறாள். உன் மார்பில் சந்தனம் பூசுவோம்' என்ற தோழியின் கூற்று முத்தாய்ப்பாக அமைந்து சமூகச் நிலையைக் கோடிட்டுக் காட்டுகிறது.
வேளாளன் பரதவப் பெண்ணை மணந்து கொள்வதில் என்ன சிக்கல்?!
இங்கே தான் சமூகப் பிரிவினை அன்றே காலூன்றி விட்டது என்று தெளிவாகிறது.
ஒரு காதல் பரத்தை எப்படி உருவாகிறாள் எனப் பாடல் காட்டுகிறது.
சக