ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே

199 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 14, 2016, 10:09:40 AM8/14/16
to மின்தமிழ், vallamai

மறைந்த நா. முத்துக்குமார் (41 வயதில்) நல்ல பாடல்கள் யுட்யூப் போன்றவற்றில் இருந்து தாருங்கள். கேட்போம்.

நா. கணேசன்


ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே: நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன் என்று மறைந்த நா.முத்துக்குமாருக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று உடல்நிலை குறைவால் காலமானார். நா.முத்துக்குமார் மறைவுக்கு, கவிஞர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

"இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது.

இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன்.

‘உன் சொந்த ஊர் எது தம்பி’ என்று ஒருமுறை கேட்டேன். “காஞ்சி அண்ணா” என்று சொன்னார். “அண்ணாவே காஞ்சிதான்” என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். “சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு” என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.

நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார் வைரமுத்து.

Megala Ramamourty

unread,
Aug 14, 2016, 10:14:58 AM8/14/16
to vallamai, மின்தமிழ்
மிக மிகத் துயரம் தரும் செய்தி. முத்து முத்தான பாடல்களைத் தமிழ்த் திரையுலகுக்கு அள்ளித்தந்த இளங்கவிஞர் நா. முத்துக்குமாரின் அகால மரணம் தமிழ்த்திரையுலகுக்கும், எழுத்துத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. 

சாதாரணக் குடும்பப் பின்னணியைக் கொண்ட கவிஞர் முத்துக்குமார், தன் சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் குறுகிய காலத்தில் சிகரம் தொட்டவர். இயக்குநராகும் கனவில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகச் சேர்ந்தபோதினும், அவருடைய தமிழ்ப்புலமையும் இலக்கியப் பயிற்சியும் அவரைச் சிறந்த பாடலாசிரியராக்கின. 

மிக விரைவாகப் பாடல் எழுதும் அசாத்தியத் திறமை கைவரப்பெற்ற இந்த இளங்கவிஞர், அதிக எண்ணிக்கையிலான பாடல்களை எழுதியவராய்த் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டார். தேசிய விருதுகளும் இவருடைய திறமைக்கு அணிசேர்க்க இருமுறை வந்துசேர்ந்தன. 

பட்டாம்பூச்சி விற்பவன், என்னைச் சந்திக்கக் கனவில் வராதே உள்ளிட்ட பல நூல்களை எழுதிய இவருடைய ‘அணிலாடும் முன்றில்’ தொடர் ஆனந்த விகடன் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கூட்டுக்குடும்ப வாழ்வின் சீரழிவினால் ஏற்பட்டுவரும் அவலங்களை உணர்வுபூர்வமாய்த் தொட்டுக்காட்டியதால் பலரின் நெஞ்சைத் தொட்ட தொடரிது எனில் மிகையில்லை!

இன்னும் பலகாலம் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்யவேண்டிய துடிப்புள்ள இந்த இளைஞனை இரக்கமற்ற காலன் வாரிச்சென்றுவிட்டான்!

முத்துக்குமாரின் பூதவுடல் மறையலாம்; அவரின் புகழுடல் என்றும் மறையாது!

அருந்தமிழ்க் கவிஞனை இழந்துவாடும் அன்னாருடைய குடும்பத்தினரின் பெருந்துன்பத்தைக் காலம் ஆற்றுவதாக!

பாமாலைப் பல படைத்துத் தமிழுக்கு அணிசேர்த்த இளங்கவிஞனே! உனைக்
காமாலைக் காவு வாங்கிய கொடுமையை என்னென்பேன்!
பூமாலையோடு நீ புறப்பட்டுவிட்டாய் இறுதிப் பயணம்...!
வாடி நிற்கிறதே உன் சுற்றமும் நட்பும்...கூடவே நீ சுவாசித்த தமிழும்!

மிகுந்த வேதனையுடன்,
மேகலா


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 14, 2016, 11:19:16 AM8/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Sunday, August 14, 2016 at 7:14:59 AM UTC-7, megala.ramamourty wrote:
மிக மிகத் துயரம் தரும் செய்தி. முத்து முத்தான பாடல்களைத் தமிழ்த் திரையுலகுக்கு அள்ளித்தந்த இளங்கவிஞர் நா. முத்துக்குமாரின் அகால மரணம் தமிழ்த்திரையுலகுக்கும், எழுத்துத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. 


ஆனந்த யாழை மீட்டுகிறாய்: https://www.youtube.com/watch?v=dQCyKLmPJU4
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்,
  முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று.

   - ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டது.
பாடலாசிரியர் நா. முத்துக்குமார், வயது 41 :(


நா. கணேசன்

 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 15, 2016, 11:14:26 PM8/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Ramamoorthy Ramachandran

On Sunday, August 14, 2016 at 7:14:59 AM UTC-7, megala.ramamourty wrote:
மிக மிகத் துயரம் தரும் செய்தி. முத்து முத்தான பாடல்களைத் தமிழ்த் திரையுலகுக்கு அள்ளித்தந்த இளங்கவிஞர் நா. முத்துக்குமாரின் அகால மரணம் தமிழ்த்திரையுலகுக்கும், எழுத்துத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. 



(மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார், PhD (தமிழ்) தன் 3 வயது மகனுக்கு 2011-ல் விகடனில் எழுதிய கடிதம்.
அணிலாடும் முன்றில், விகடன் பிரசுரம்).

அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும்.

வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே, சிறு வயதில் தன் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், தாயுடன் சென்று மகாகவி தாகூரை, அவர் நடத்தி வந்த சாந்தி நிகேதனில் சந்தித்து ஆசி பெறுவார். ஒரு முறை அப்படி வாழ்த்து பெற சந்திக்கையில், தாகூர் அவரிடம் ஒரு கவிதையை எழுதிக்கொடுத்தார். அந்தக் கவிதை... 

"நான் உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன்
இந்த உலகில் உள்ள 
மாபெரும் நதிகள், பறவைகள், அருவிகள் 
எல்லாவற்றிலும் என் பாதம் பட்டிருக்கிறது.
ஆனால் என் மகனே! 
என் வீட்டுத் தோட்டத்திலுள்ள 
புல்லின் நுனியில் உறங்கும் 
பனித் துளியை மட்டும்
பார்க்கத் தவறிவிட்டேன்.”

கவிதையைக் கொடுத்துவிட்டு சத்யஜித்ரேவிடம் தாகூர் சொன்னார். "இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது இப்போது இந்தச் சிறு வயதில் உனக்குப் புரியாது. வளர்ந்த பின் எடுத்துப் படித்துப் பார். புரிந்தாலும் புரியலாம்."

பல வருடங்களுக்குப் பிறகு அந்தக் கவிதையை மீண்டும் படித்த சத்யஜித்ரே, அதன் அக தரிசனத்தை உணர்ந்து "பதேர் பாஞ்சாலி" படம் எடுத்தார்.

என் அன்பு மகனே! உனக்கும் இதையே தான் சொல்கிறேன். பின் நாட்களில் இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் தகப்பன் உனக்குச் சேர்த்த ஆகப் பெரிய சொத்து இதுதான் என உணர்வாய்.

என் பிரியத்துக்குரிய பூக்குட்டியே! உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க... மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை; குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை; கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

உலகிலேயே மிகப் பெரிய இன்பம் எது? தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை. "தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்" என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்து போனேன். உன் பொக்கை வாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக் கொண்டு இருந்தாய்.

நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழந்து, தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தைக் கொண்டாடினாய், தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் கை விரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசிர்வதித்தாய். 

என் பொம்முக்குட்டியே! இந்த எல்லாத் தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய்.

என் செல்லமே! இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும். சிரி்க்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்ந்து, தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். எழ வேண்டும். விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத் தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.

என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இது தான், கற்றுப் பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப் பார். 

எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு.

உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57-வது வயதில் தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27-வது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பிறக்கலாம். 

இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்து கொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்து கொண்டு இருப்பாய்.

இதை எழுதிக்கொண்டு இருக்கையில் என் பால்ய காலம் நினைவுக்கு வருகிறது. கிராமத்தில் கூரை வீட்டிலும், பின்பு ஓட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். கோடைக் காலங்களில் வெப்பம் தாங்காமல் வீட்டுக் கூரையில் இருந்து கொடிய தேள்கள் கீழே விழுந்து கொண்டே இருக்கும். அதற்குப் பயந்து என் தகப்பன் என் அருகே அமர்ந்து இரவு முழுவதும் பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே இருப்பார். இன்று அந்த விசிறியும் இல்லை. அந்தக் கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ, வாழ்க்கை முழுக்க கோடைக் காலங்களையும் வெவ்வேறு வடிவங்களில் தேள்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக் கொண்டு இருப்பான்? உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.

வயதின் பேராற்றங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசிர்வதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். உன் உடல் எதிராகும். என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்து வைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள்.

நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்து வைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும்.

கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. 

உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

இவை எல்லாம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை. என் சந்தோஷமே! நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் நீ உணர்வாய்.

நாளைக்கும் நாளை நீ உன் பேரன், பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான். இப்படிக்கு, உன் அன்பு அப்பா.

முத்துக்குமார் இந்த கடிதத்தை 2011ம் ஆண்டில் எழுதியிருந்தாலும் ஏதோ அப்பொழுதே தோன்றியிருக்கப் போய் தான் அவ்வாறு உருக்கமாக எழுதியுள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

இப்படிக்கு
உன் அன்பு அப்பா.

வேந்தன் அரசு

unread,
Aug 16, 2016, 7:37:06 AM8/16/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, Ramamoorthy Ramachandran
”ஆணியே புடுங்க வேண்டாம்” என்ற சாங்க் லிரிக் கேட்டுதான் காமாலைக்கு ஆளாகியிருப்பார்.” 

வைரமுத்துவின் மகனே லிரிக் எழுதும்போது பாடல்வரி எழுதியவர் நா மு கு.

15 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 11:14 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:10:21 AM8/16/16
to மின்தமிழ், vallamai


On Monday, August 15, 2016 at 8:59:45 PM UTC-7, Neduchezhian T. Chezhian wrote:
காலம் ஒரு நல்லக் கவிஞனை எடுத்துக் கொண்டது. கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நம் வீரவணக்கம்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்


ஜெயமோகன் நா. முத்துக்குமார் மரணம் பற்றி எழுதியுள்ளார். கவிஞர்களுக்கே உள்ள பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்:

--------------

சினிமா தயாரிப்பாளர்கள் கொடுத்த செக்குகள் பல பௌன்ஸ் ஆகியுள்ளன. லிவர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் தேவை
50 லட்சம். செய்திருந்தால் உயிரோடு இருந்திருக்க வாய்ப்புண்டு.
 

நா. கணேசன்

Megala Ramamourty

unread,
Aug 18, 2016, 10:55:54 AM8/18/16
to மின்தமிழ், vallamai

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 18, 2016, 10:14:25 PM8/18/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com
On Thursday, August 18, 2016 at 7:55:55 AM UTC-7, megala.ramamourty wrote:

காணொளி கண்டேன். ’தி ஹிந்து’  (தமிழ்) நிருபர் சொல்வதுபோல, பாரதியைப் போல, பட்டுக்கோட்டை போல,
சின்ன வயதில் போய்விட்டார் முத்துக்குமார். இன்னும் பாரதியின் எழுத்துக்களே முழுதும் கண்டுபிடிக்கப்படவில்லை,
சீனி. விசுவநாதன் தேடிய பல செய்திகளும் சென்னைப் படுமழையில் போய்விட்டது. 

முத்துக்குமார் எழுத்துகள் அவரது ரசிகர்களால் காக்கப்படல்வேண்டும். 

‘கஜினி’ படத்தில் இவர் எழுதிய

‘மழை அழகா

வெயில் அழகா

நீ கொஞ்சும்போது மழை அழகு

நீ கோபப்பட்டால் வெயில் அழகு’

- என்ற வரிகள் பழைய தம்பதிகளைக்கூட குல்மொஹர் மரத்துக்கு கீழே காதலர்களாக்கியது.


இவ்வரிகள் கண்ணதாசன் பேச்சுக்களில் அடிக்கடி சொன்ன ஒரு கதையின் இன்ஸ்பிரேஷன்.

”பெருமாளிடம் சீதேவியும், மூதேவியும் சென்று யார் அழகு எனச் சொல்லுங்கள் என்றர்களாம்.
வரும்போது சீதேவி, போம்போது மூதேவி அழகு என்றாராம்.”

இதனைப் பற்றி மேலும் அறிய, கோவை ’வாத்தியார்’ பதிவு: http://classroom2007.blogspot.com/2010/06/blog-post_26.html

--------------------------


தூர்

“வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக்கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒருமுறை
விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!                                                                                   

‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”

                 -    நா. முத்துக்குமார்.

கணையாழி வெள்ளிவிழா ஆண்டில் ஒரு பாராட்டு விழா. சுஜாதா சொற்கள் முத்துக்குமாரை வெளிச்சம் போட்டுக் காட்டின,
“கணையாழி இதழில் வர்ற கவிதைகளை, கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இந்தக் கணையாழி இதழ்லகூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த சிறந்த 25 கவிதைகளை பட்டியலிடச் சொன்னால் ‘தூர்’ கவிதையை அதில் நான் சேர்ப்பேன்” 

நா. கணேசன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Aug 18, 2016, 10:58:09 PM8/18/16
to வல்லமை
கிணற்றில் தூர் வாருதல் எனது சின்ன வயது நாட்களை நினைவூட்டியது.  அந்த அனுபவமே தனி.  கிணற்றுள் இறங்கினால் வியர்த்துக் கொட்டும்.  அதனால் என்ன?  இருக்கவே இருக்கிறதே கிணற்றில் தண்ணீர்.  அதை குவளையால் எடுத்து என் மேல் விட்டுக் கொள்வேன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


N. Ganesan

unread,
Aug 22, 2016, 8:13:46 AM8/22/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

NaMuthujumar


Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - நா. முத்துக்குமார்

தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார். சங்கத் தமிழும் சந்தத் தமிழும் கொஞ்சி விளையாடும் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர். 'வீரநடை' தொடங்கி விரைவில் வெளியாக இருக்கும் 'சைவம்' வரை தொடர்ந்து 13 ஆண்டுகளாகத் தமது கவித்துவத்தால் ரசிகர்களைக் கட்டிப் போடுகிறவர். "வெயிலோடு விளையாடி" (வெயில்), "பறவையே எங்கு இருக்கிறாய்", "உனக்கென இருப்பேன்", "தேவதையை கண்டேன்", "நினைத்து நினைத்து பார்த்தேன்", "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை", "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" போன்ற எழில் கொஞ்சும் வரிகளால் கேட்போரின் இதயம் வருடியவர். கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக படங்களுக்கு அதிகப் பாடல்கள் எழுதியவர் என்ற வகையில் முன்னணிப் பாடலாசிரியர். அப்படி எழுதியவை பலவும் ஹிட் பாடல்கள். கலைமாமணி, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர், விஜய் டி.வி. சிறந்த பாடலாசிரியர், ஃபிலிம்ஃபேர் விருது (இரண்டு முறை), சிறந்த பாடலுக்கான தேசிய விருது, உட்படப் பல கௌரவங்களைப் பெற்றவர். இவரது கவிதைகளையும் பாடல்களையும் சிங்கப்பூர் பல்கலை உட்படப் பல கல்லூரிகளில் பாடமாக வைத்துள்ளனர். இவற்றை ஆய்ந்து பலர் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளனர். 2000 பாடல்கள் எழுதியிருக்கும் நா. முத்துக்குமார், இந்த ஆண்டு மட்டுமே 93 படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் (இந்த ஏப்ரல் வரை). ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் அவருடன் உரையாடியதிலிருந்து....

*****


கே: தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். அதுபற்றிச் சொல்ல முடியுமா?
ப: பேசும் படம் காலம் தொடங்கி கி.பி. 2000 வரையிலான தமிழ் திரைப்படப் பாடல்கள் பற்றிய ஆய்வை நான் முனைவர் பட்டத்துக்காகச் செய்தேன். பேசும்பட காலம், புராண காலம், சமூக காலம், தற்காலம் என பல்வேறு காலகட்டங்கள் அதில் அடங்கும். மதுரகவி பாஸ்கரதாஸ் முதல் பழநிபாரதி வரையிலான பாடலாசிரியர்களின் பாடல்களை அலசினேன். பாடல்கள் எப்படிப் பயன்பட்டன, சமூகத்தின் மீது அவற்றின் தாக்கம், பாடல்களுக்கு இருந்த முக்கியத்துவம், சமூகப் பங்களிப்பு என்பது பற்றியெல்லாம் அதில் விரிவாக ஆராய்ந்திருக்கிறேன். தமிழின் முதல் திரைப்பாடல் ஆசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ். அவர் ஆரம்பித்து வைத்த பாட்டுப் பயணம் கிட்டத்தட்ட 800, 900 பாடலாசிரியர்களால் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் அந்த ஆய்வேட்டைப் புத்தகமாக வெளியிட இருக்கிறேன். 

கே: உங்களது தந்தைதான் உங்களைச் செதுக்கியவர் என்று சொல்லலாமா?
ப: நிச்சயமாக. என் தந்தை ஒரு தமிழாசிரியர். ஒரு லட்சம் புத்தகங்களை அவர் சேமித்து வைத்திருந்தார். அவர் இரவு முழுதும் படித்துக்கொண்டே இருப்பார். சிறுவயதுமுதலே அதைப் பார்த்துப் பார்த்துப் படிக்க, எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு என் வாழ்வில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் படிக்க வேண்டியது எது என்பதை அவர் அறிமுகப்படுத்தினார். எழுத்து, வாசிப்பு என்று ஊக்குவித்தார். நான் பத்தாவது படிக்கும்போது என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவர அவரும் ஒரு முக்கிய காரணம். எனக்குப் பொறியியல் படிக்க வாய்ப்பு வந்தபோது, நான் மேற்கொண்டு தமிழ் படிக்கப்போகிறேன் என்று சொன்னபோதும் கூட அவர் தடை சொல்லவில்லை. என்னைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டார். இன்றைக்கு நான் ஒரு படைப்பாளி என்று சொல்லிக்கொள்வதை விட ஒரு வாசகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன், விரும்புகிறேன் என்றால் அதற்கு என் அப்பாவும் ஒரு மிக முக்கியக் காரணம்.

கே: உங்களைப் பாதித்த மிகப் பெரிய கவி ஆளுமைகள், பாடலாசிரியர்கள் யார், யார்?
ப: கவி ஆளுமைகள் என்று எடுத்துக் கொண்டால் அது ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. சங்க காலம் தொடங்கி பாரதி, பாரதிதாசன் பின்னர் கலாப்ரியா, விக்ரமாதித்தன், பசுவய்யா, கல்யாண்ஜி, ஆத்மாநாம், நகுலன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பாடலாசிரியர்களில் என் மனதுக்கு மிக நெருக்கமானவராக, ஒரு பல்கலைக்கழகமாக, தினந்தோறும் பூஜிக்கத் தகுந்தவராக நினைப்பது கவியரசு கண்ணதாசன் அவர்களைத்தான்.



கே: இன்றைக்கும் ஹிட் பாடல்கள் வரிசையில் இருக்கும் கேள்வியும் பதிலுமாக அமைந்த "நினைத்து நினைத்து பார்த்தேன்..." பாடலும் சூழலும் குறித்துச் சொல்லுங்களேன்...
ப: நண்பர் செல்வராகவன் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் இடம்பெற்ற பாடல் அது. இறந்து போன காதலியை நினைத்து காதலன் பாடுவதாக ஒரு பாடல் இருக்கும். அந்தக் காதலனுக்கு ஆறுதல் கூறி காதலி பாடுவதாக மற்றொரு பாடல் இருக்கும். இந்தப் பாடலுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. நான் பல பாடல்கள் எழுதியிருந்தாலும் இதற்கு இருக்கும் வரவேற்புக்குக் காரணம், இதிலிருக்கும் மெல்லிய சோகம்தான். (பாடலைக் கேட்க)

கே: உச்சரிப்புப் பிழையோடு பாடுவதைச் சிலர் 'ஸ்டைல்' என்கிறார்கள். சிலர் அதைக் 'காலமாற்றம்' என்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: என் பாடல்களில் கூடுமானவரை இவ்வாறு நேர்வதை நான் தவிர்க்கவே முயல்கிறேன். இப்போது தமிழை நன்கு அறிந்த பாடகர்கள் நிறையப் பேர் வந்திருக்கின்றனர். நன்றாக உச்சரிக்கின்றனர். அந்த 'ஸ்டைல்' பல வருடங்களுக்கு முன்னால் இருந்தது. தற்போது வழக்கொழிந்து போய்விட்டது. என் பாடல்களைப் பொருத்தவரையில் பாடகர்கள் பொருளுணர்ந்து சரியாகவே பாடுகிறார்கள்.

கே: குத்துப் பாடல்கள் தேவை தானா?
ப: குத்துப் பாடல்கள் என்பது ஒன்றும் ஒதுக்கப்பட வேண்டியதல்ல. காட்டுக்கு நடுவில் நெருப்பு மூட்டி, பறையடித்து ஆனந்தமாக ஆடிப்பாடிய சமூகம்தான் நம்முடையது. மூதாதையர்கள் ஆதிகாலத்தில் அப்படித்தான் வாழ்ந்தனர். அதனுடைய தொடர்ச்சி அல்லது நீட்சிதான் இந்தவகை துள்ளலோசைப் பாடல்கள் என்று சொல்லலாம். ஆகவே மெல்லிசைப் பாடல்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

கே: ஆங்கிலம் கலந்து பாடல்கள் எழுதுவது அவசியம் தானா?
ப: இது இன்றைக்கு வந்தது என்று சொல்ல முடியாது. தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன் என்று பல முன்னோடிப் பாடலாசிரியர்கள் கூட ஆங்கிலம் கலந்த பாடல்களை எழுதியிருக்கிறார்கள். தேவையானால், தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை. திணித்தால்தான் அது தவறு. 

கே: காஞ்சிபுரத்தை மையமாக வைத்து நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நூல் பற்றி...
ப: 'Silk City' என்ற தலைப்பில், ஏழெட்டு தலைமுறைகளின் வாழ்க்கை பற்றிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். காஞ்சிபுரத்தின் சமூகப் பின்னணி வரலாற்றை ஒரு குடும்பத்தின் வாயிலாகச் சொல்ல இருக்கிறேன். பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் அந்த நாவலை விரைவில் வெளியிட வேண்டும்.கே: யுவன்ஷங்கர் ராஜாவுடனான உங்கள் பாடல்கள் எல்லாமே 'ஹிட்.' இதற்குக் காரணம் என்ன?
ப: யுவன் இப்போது நூறு படங்கள் செய்திருக்கிறார். அதில் கிட்டத்தட்ட 75 படங்களில் முழுப் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் அதிகம் வேலை செய்தது யுவனுடன்தான். தொடர்ந்து ஒரு கவிஞரும் இசையமைப்பாளரும் இணைந்து பணிபுரியும் போது இருவருக்குமிடையே ஒரு புரிதல் ஏற்படுவது இயல்புதான். மேலும் யுவன் எப்போதும் நான் செய்வதில் குறுக்கிட மாட்டார். பாட்டை எழுதி முடித்தவுடனேயே "அதை பாடகரிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொல்லிவிடுவார். அந்த சுதந்திரமும், நம்பிக்கையும் பொறுப்புமே மீண்டும் மீண்டும் தரமான பாடல்களைக் கொடுக்க உந்துதலாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் யுவன் மட்டுமல்ல; நான் ராஜா சார், ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி. பிரகாஷ்குமார் எனப் பலருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கிறேன். ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறேன். யுவனுடன் இருவருமே பல காலமாக இணைந்து பணியாற்றி வருவதால், அந்த காம்பினேஷனில் நிறைய பாடல்கள் ஹிட் ஆகியிருப்பதால் "இவர்கள் இருவரும் இணைந்தால் பாடல்கள் சூப்பர் ஹிட்" என்ற எண்ணம் வலுவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு யுவனுக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. அடுத்த ஆண்டு நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

கே: "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடல் சூழல் குறித்தும், அதற்குக் கிடைத்த தேசிய விருது குறித்தும் சொல்லுங்கள்...
ப: தாய்-மகன் உறவைக் காட்ட தமிழில் எத்தனையோ படங்கள் இருக்கின்றன. பாடல்கள் இருக்கின்றன. ஆனால்; தந்தை-மகள் உறவைக் கூறும் படங்களும் குறைவு. பாடல்களும் மிகமிகக் குறைவு. தந்தை-மகள் உறவின் சிறப்பை எடுத்துக்காட்டுவதற்காக ராம் எடுத்த தங்க மீன்கள் படத்தில் அந்த உணர்வை, உறவைப் பாடலில் கொண்டு வந்ததற்காக இந்த விருது கிடைத்திருக்கிறது. இன்னும் தரமான பாடல்களைத் தமிழ்மக்களுக்குத் தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது தந்திருக்கிறது. இந்த விருதை என் குருநாதரும், எப்போதும் என் ஞானத்தந்தையாக நான் போற்றுபவரும், 'உன் நல்ல மனதுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்' என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் வாழ்த்தியவருமான இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். இந்த விருது கிடைத்த சமயத்தில் அவர் இல்லையே என்பதை நினைக்கும்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அதே சமயம் அவர் நடித்து இயக்கிய 'தலைமுறைகள்' படத்திற்கும் விருது கிடைத்திருப்பது வருத்தத்திலும் ஒரு சிறு மகிழ்ச்சியைத் தருகிறது. இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி, என் தந்தை நாகராஜன், ஞானத்தந்தை பாலுமகேந்திரா, இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதி, என் மகன் ஆதவன் நாகராஜன், இந்தப் பாடலுக்காக என்னைச் சந்திக்கும் போதெல்லாம் என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர்விட்ட பெற்றோர்கள் என அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

கே: இன்றைய திரைப்பாடல்கள், கவிஞர்கள் குறித்து...
ப: இன்றைக்குப் பல தரமான கவிஞர்கள் தரமான கவிதைகளைத் தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணதாசன் செய்ததுபோல் தத்துவம் கலந்த உறவுகள் கலந்த பாடல்களை அமைக்கும் வாய்ப்புகள் தற்போது கிடைப்பதில்லை. அந்தக் காலகட்டம் வேறு; தற்போதுள்ள காலகட்டம் வேறு. அவ்வகை வாய்ப்பு அமையும்போது, அது மாதிரியான கதைகளுக்கான களமாக தமிழ் சினிமா அமையும்போது நிச்சயம் இன்னமும் தரமான கவிதைகளும், பாடல்களும் வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார், யார்?
ப: நிறைய இருக்கிறார்கள். ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, மௌனி, எம்.வி. வெங்கட்ராம், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், ப. சிங்காரம், ஜி. நாகராஜன் துவங்கி இன்றைய ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்று அது ஒரு மிகப்பெரிய லிஸ்ட். தமிழில் உலகத்தரத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிற குறைந்த பட்சம் ஒரு நூறு எழுத்தாளர்களை என்னால் இனம் கண்டு பட்டியலிட முடியும். தமிழ் உரைநடை என்பது இன்றைக்கு உலகத் தரத்தில் இருக்கிறது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகவும், பெருமையாகவும் இருக்கிறது. 

கே: இன்றைக்கு பெரும்பாலும் இல்லாமலே போய்விட்ட கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலியுறுத்துவது உங்களது "அணிலாடும் முன்றில்" தொடர். அதைப் பற்றிச் சொல்லுங்கள்...
ப: நான் 'அணிலாடும் முன்றில்' தொடர் எழுதியதே அது அடுத்த தலைமுறைக்கு, நம் தொப்புள்கொடி உறவுகளின் மேன்மைகளையும் அதன் பெருமைகளையும் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். அதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் அது பத்து பதிப்புகளையும் தாண்டி இன்றைக்கும் விற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான். தமிழர்கள் தங்களின் திருமணங்களிலும், பிறந்தநாள் போன்ற வீட்டு விசேஷங்களிலும் அந்த நூலைத் தாம்பூலப் பையில் போட்டுக் கொடுக்கின்றனர் என்பதை அறியும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வாசகர்கள் முன்னெடுத்துச் செல்லும்போது நமது உறவுகளின் அருமை பிடிபடும். தேவை புரியவரும். அது நிச்சயம் சிதைந்த மனங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும்.

கே: எது உங்களை எழுத வைக்கிறது, உங்கள் கவிதா சக்தியை உயிர்ப்போடு வைத்திருக்கிறது?
ப: தொடர்ந்த வாசிப்பும் வாழ்க்கை பற்றிய அவதானிப்புமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கே: உங்கள் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்?
ப: இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து.



கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: எனது தாய் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். தந்தையும் சில ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்து விட்டார். மூன்று தம்பிகள். இரண்டு பேர் ஐ.டி. துறையில். ஒருவர் பிபிசியில் இருக்கிறார். மனைவி ஜீவலட்சுமி. மகன் ஆதவன் நாகராஜன் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அவர்மூலமாக என் தந்தையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: அப்படி ஏதும் திட்டங்கள் இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளவே விரும்புகிறேன். 

கே: புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் தமிழ் மொழிதான் உங்களுக்கும் தமிழ்நாட்டிற்குமான தொப்புள் கொடி உறவு. அந்தத் தொப்புள் கொடி உறவை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்துங்கள். வீட்டில் கூடுமானவரை குழந்தைகளிடம் தமிழிலேயே பேசுங்கள். தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அதன் பெருமையையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். நீங்கள்தான் அடுத்த நூற்றாண்டுத் தமிழை உலகெங்கும் கொண்டு செல்லப் போகிறீர்கள்.

இந்த மே மாதத்தில் நடக்க இருக்கும் TNFன் அமெரிக்கத் தமிழச்சங்கங்களின் கூட்டமைப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் கவிஞர் நா. முத்துக்குமாருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் கூறி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த்

*****


நா. முத்துக்குமார்: முன் க(வி)தைச் சுருக்கம்
* பள்ளியில் படிக்கும்போதே துவங்கி விட்டது நா.முத்துக்குமாரின் கவிதை ஆர்வம். காஞ்சியில் நடக்கும் இலக்கிய விழாக்களில் பள்ளிச் சீருடையுடன் மேடை ஏறிக் கவிதை படித்தவர்.
* முதல் கவிதைத் தொகுப்பு (தூசிகள்) வெளியாகும்போது வயது 15.
* கணையாழி ஆண்டு விழாவில் சுஜாதா மேடையில் படித்துப் பாராட்டிய கவிதை "தூர்", முத்துக்குமாருக்கு இலக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கணையாழியின் கடைசி பக்கக் கட்டுரைகளில் முத்துக்குமாரின் கவிதைகளைப் பற்றி எழுதி பரவலான வாசக கவனத்தை ஏற்படுத்தினார் சுஜாதா. சுஜாதாவால் அடையாளம் காட்டப்பட்ட கவிஞர்களில் திரைப் பாடலாசிரியராக இன்று முதலிடத்தில் இருப்பவர் நா. முத்துக்குமார்.
* நாடறிந்த கவிஞராக அடையாளம் காட்டியது "பட்டாம்பூச்சிகள் விற்பவன்" கவிதைத் தொகுப்பு. வெளியிட்டு ஊக்குவித்தவர் கவிஞர் அறிவுமதி.
* மெட்டுக்குப் பாட்டெழுதும் வித்தையை கவிஞர் அறிவுமதியிடமிருந்தும், திரைப்பட இயக்க நுட்பத்தை இயக்குநர் பாலுமகேந்திராவிடமிருந்தும் கற்றுக் கொண்டார்.
* அஜித் நடித்த 'கிரீடம்' படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
* கவிஞராக மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் தன்னை நிரூபித்தவர். "பட்டாம் பூச்சி விற்பவன்", "நியூட்டனின் மூன்றாம் விதி", "ஆனா ஆவன்னா", "பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்", "குழந்தைகள் நிறைந்த வீடு" (கவிதைத் தொகுப்புகள்), "என்னைச் சந்திக்க கனவில் வராதே" (ஜப்பான் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு), "கண்பேசும் வார்த்தைகள்", "கிராமம் நகரம் மாநகரம்", "பால காண்டம்", "அணிலாடும் முன்றில்" போன்ற கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 
* தற்போது "வேடிக்கை பார்ப்பவன்" என்னும் சுயவரலாற்று அனுபவத்தொடரை ஆனந்தவிகடனில் எழுதி வருகிறார்.

*****



தாத்தா-பேரன்
அப்பா-மகன் உறவுக்கும் தாத்தா-பேரன் உறவுக்கும் என்ன வித்தியாசம்? 

அப்பா-மகன் உறவில் ஒரு ப்ரியம்; ஒரு வாஞ்சை; ஒரு தோழமை; ஒரு கண்டிப்பு; ஒரு கவனம்; ஒரு கவலை; ஒரு பதற்றம்; எல்லாவற்றிற்கும் மேல் ஓர் எதிர்பார்ப்பு எங்கோ அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கிறது. மாறாக, தாத்தா-பேரன் உறவில் ப்ரியமும், வாஞ்சையும், தோழமையும் தாண்டி இருவருக்குள்ளும் ஒரு குழந்தைமை ஆயிரமாயிரம் வண்ணங்களுடன் தலைகாட்டுகிறது. கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள் குழந்தைகளும் முதியவர்களும் மட்டுமே. ஆகவே, அந்த உறவில் ஒரு தெய்வீகத் தன்மையைத் தரிசிக்க முடிகிறது.

ஒவ்வொரு மனிதனும் முதுமையின் கடைசிப் படிக்கட்டில் கால் வைக்கும் அதே நேரம், காலச் சக்கரத்தில் திரும்பி வந்து, குழந்தைமையின் முதல் படிக்கட்டிலும் கால் வைக்கிறான். பால்யத்தின் கண்கள் வழியாகப் பார்க்கையில் பிரமிப்புடன் தெரிந்த இந்தப் பிரபஞ்சம், முதுமையின் கண்கள் வழியாகப் பார்க்கையில், அதே பிரமிப்பு அடங்காமல் வடிவம் காட்டுகிறது. புள்ளியாகி வளர்ந்து தேய்ந்து மீண்டும் புள்ளியாகி இணையும் புள்ளிதான் தாத்தா-பேரன் உறவோ?

தன் கிளையில் தன் வண்ணத்தையும் வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த பூவைப் பற்றிய செடியின் பெருமிதம் அப்பா-மகன் உறவு எனில், தன் காலடியில் தன் விழுதும் தரைதொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும் அமைதியின் பெருநிலையே தாத்தா-பேரன் உறவோ?

நா. முத்துக்குமார் எழுதிய அணிலாடும் முன்றில் (விகடன் பிரசுரம்) நூலில் இருந்து...

*****


கிணறு தொலைத்த நிலா
ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வேலை இருந்தாலும் மகனுக்காக ஒதுக்கிவிடுவான். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மகனிடம் இவன் சொன்னான், "நான்தான் பிஸ்கட் பாய்".

மகன் கேட்டான், "ஏம்பா நீங்க பிஸ்கட் பாய்?"

"ஏன்னா... நான் வாசனையா இருப்பேன்."

"அப்ப நான் யாருப்பா?"

"நீயா... ம்... நீ சாக்லேட் பாய்."

"சூப்பர்ப்பா."

"எங்கப்பா வந்து டைகர் பாய்."

"எதுக்குப்பா தாத்தா மட்டும் டைகர் பாய்?"

"ஏன்னா, அவரு வீரமா இருப்பாரு."

"அது சரி. உங்க அம்மா எந்த கேர்ள்னு சொல்லவே இல்லியே."

"அதுவா... அவங்க வந்து ஃப்ரூட்டி கேர்ள். ஏன்னா ஸ்வீட்டாப் பேசுவாங்க."

"அப்ப எங்கம்மா?" என்று மகன் கேட்க, இவன் மனைவியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, "உங்கம்மாவா? ம்... உங்கம்மா வந்து சில்லி கேர்ள்" என்றான்.

"சில்லி கேர்ள்னா என்னப்பா?" என்று மகன் கேட்க, "சில்லி கேர்ள்னா எப்பவுமே கோபமா, காரமா இருப்பாங்க" என்று இவன் பதில் சொன்னான்.

"உங்கம்மா மட்டும் ஃப்ரூட்டி கேர்ள், எங்கம்மா மட்டும் சில்லி கேர்ளா?" என்று மகன் தாவி வந்து கழுத்தைப் பிடித்துக் கேட்கவும், இவன் மூச்சுத் திணறியபடி "இல்லடா ராஜா, தெரியாம சொல்லிட்டேன்" என்றான்.

"அப்ப எங்கம்மாவை ஐஸ்க்ரீம் கேர்ள்னு சொல்லுங்க. அப்பத்தான் கைய எடுப்பேன்" என்று மகன் மிரட்டவும், "சரிடா உங்கம்மா ஐஸ்க்ரீம் கேர்ள்தான்" என்று இவன் ஒப்புக்கொண்டான். பின்பு கணிப்பொறியில் வீடியோ கேம்ஸ் விளையாடிவிட்டு, "அப்பா... ஏதாவது விடுகதை சொல்லுப்பா" என்று திரும்பி வந்தான்.

"எங்க வீட்டுக் கிணத்துல வெள்ளிக் கிண்ணம் மிதக்குது! அது என்ன?" என்று இவன் கேட்டதும்,

"என்னப்பா அது?" என்றான் மகன்.

"நிலாடா" என்றான்.

"அது எப்பிடிப்பா கிணத்துல மிதக்கும்?" என்று மகன் ஆச்சரியப்பட, "அடுத்த வாரம் காஞ்சிபுரம் போகும்போது நேர்ல காட்டுறேன்" என்று அப்போதைக்கு சமாதானப்படுத்தினான்.

கிணறே இல்லாத மாநகரத்தில் நிலவின் பிம்பத்துக்கு இவன் எங்கே போவான்?

நா. முத்துக்குமார் ஆனந்தவிகடனில் எழுதிவரும் "வேடிக்கை பார்ப்பவன்" தொடரிலிருந்து 
Reply all
Reply to author
Forward
0 new messages