கீழ்நமண்டி: திருவண்ணாமலைக்கும் சிந்துச் சமவெளிக்கும் என்ன தொடர்பு?

4 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Sep 24, 2025, 9:56:31 PM (21 hours ago) Sep 24
to வல்லமை, hiru thoazhamai

கீழ்நமண்டி: திருவண்ணாமலைக்கும் சிந்துச் சமவெளிக்கும் என்ன தொடர்பு? - ஆச்சர்யப்படுத்தும் ஆய்வு முடிவுகள்

தமிழ்நாடு, அகழாய்வு, தொல்லியல் துறை, திருவண்ணாமலை, சிந்துசமவெளி நாகரீகம், ஹராப்பா


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த காலக் கணிப்பும் தொல்பொருட்களும், அந்த இடத்திற்கும் சிந்துச் சமவெளி பிரதேசத்திற்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுன்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த கரிமப் பொருளைக் காலக் கணிப்புக்கு உட்படுத்தியதில் அதனுடைய காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. அதே பகுதியில் வடமேற்கிந்தியப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய, வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள மணிகளும் கிடைத்திருக்கின்றன.

இந்த கண்டுபிடிப்புகள், இந்தப் பகுதிக்கும் சிந்து சமவெளிப் பகுதிக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாடு தொல்லியல் துறை சமீபத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வு முடிவுகள், சிந்துச் சமவெளி கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு குறித்த நூல் என நான்கு நூல்கள் சமீபத்தில் மதுரையில் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டன.


சென்னனூர், மருங்கூர், கீழ்நமண்டி, கீழடி, கொங்கல்நகரம், பொற்பனைக்கோட்டை, வெம்பக்கோட்டை, திருமால்புரம் ஆகிய 8 இடங்களில் நடந்த தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை இந்த அறிக்கை தந்திருக்கிறது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் கிடைத்த காலக் கணிப்புகள்தான் தற்போது கவனத்தை ஈர்த்திருக்கின்றன.


திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசியில் இருந்து தென்மேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கீழ்நமண்டி கிராமம். தற்போது கீழ்நமண்டி கிராமம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் மூன்றே கால் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு நிலப்பரப்பு பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்டது.

இந்த இடத்தில் சுமார் 55 ஏக்கர் தரிசு நிலப்பரப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக் குழிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடத்தில் 2022-இல் இருந்து 2024 வரை இரு கட்டங்களாக தொல்லியல் ஆய்வுகள் மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன.

கீழ்நமண்டியில் மொத்தம் 7 இடங்கள் தொல்லியல் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. இதில் முதல் இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக்குழிகள் (இறந்தோரைப் புதைத்த இடங்கள்) இருந்தன. அதில் அகழாய்வுக்காக 18 குழிகள் அடையாளம் காணப்பட்டன. மற்ற ஆறு இடங்களைப் பொறுத்தவரை அவற்றிலிருந்து சில தொல்பொருட்கள் கிடைத்ததோடு, இரும்பு உலை இருந்ததற்கான அடையாளங்களும் இருந்தன. இரண்டு இடங்கள் ஈமக் குழிகளுக்காக கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களாக இருந்தன.

கீழ்நமண்டியில் கிடைத்த ஈமக் குழிகள் இரு வகைகளாக இருந்தன. முதலாவது வகையில், நிலத்தைத் தோண்டி நான்கு புறமும் பலகையைப் போன்ற கற்களை இறக்கி ஒரு குழி உருவாக்கப்பட்டு அதில் மண்ணால் ஆன ஈமப்பேழைகள் (sarcophagus) வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில், வெறுமனே குழியைத் தோண்டி ஈமப் பேழைகள் புதைக்கப்பட்டிருந்தன.

சில ஈமக் குழிகளில் ஒரே ஒரு சவப்பெட்டி மட்டுமே இருந்தது. சில ஈமக் குழிகளில் இரண்டு மூன்று சவப்பெட்டிகள் இருந்தன. 18 இடங்களில் மொத்தம் 27 ஈமப்பேழைகள் கிடைத்தன. இதில் எட்டு பேழைகள் மட்டுமே உடையாமல் இருந்தன. மற்ற பேழைகள், மேலே இருந்த மண்ணின் அழுத்தத்தால் சிதைந்து நொறுங்கியிருந்தன.

ஒரே ஒரு ஈமப்பேழை மட்டுமே இருந்த இடங்களில் அந்தப் பேழையிலேயே மனித எலும்புகளின் எச்சங்களும் ஈமச் சடங்குக்கான பொருட்களும் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டு, மூன்று ஈமப்பேழைகள் இருந்த ஈமக் குழிகளில் ஒரு சவப்பெட்டியில் மனித எலும்பின் எச்சங்களும் மற்ற இரண்டு பெட்டிகளில் ஈமச் சடங்குகளுக்கான பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

ஈமப் பொருட்களைப் பொறுத்தவரை, உயர்தரமான கறுப்பு - சிவப்பு பானைகள், மூடியுடன் அல்லது மூடி இல்லாத சிவப்புப் பானைகள், இரும்புப் பொருட்கள், அலங்கார மணிகள் ஆகியவை இருந்தன. இந்த சவப்பெட்டிகளும் அதிலிருந்த பொருட்களும் இங்கே புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் சமூகச் செல்வாக்கை குறிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அதாவது முதல் வகை ஈமக்குழிகளை உருவாக்குவதற்கு 10 - 15 பேர் சில நாட்களாவது பணியாற்றியிருக்க வேணடும். இரண்டாம் வகை மிகச் சிலரால், சில நாட்களில் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, முதல் சவக்குழியில் இருந்த நபர், இரண்டாவது நபரைவிட உயர்ந்த சமூக அந்தஸ்தில் இருந்திருக்க வேண்டும்.பட மூலாதாரம்,TN Archaeology Department

மொத்தமுள்ள 18 குழிகளில் 6 குழிகளில் மட்டுமே மனித எச்சங்கள் கிடைத்தன. இவை எல்லாமே இரண்டாம் நிலை எச்சங்கள்தான். அதாவது, இதுபோன்ற ஈமக்குழிகளை உருவாக்க நாட்கள் ஆகும் என்பதால், ஒருவர் இறந்தவுடன் அந்த நபர் தற்காலிகமாக ஒரு இடத்தில் புதைக்கப்படுவார்.

இந்த ஈமப்பேழையுடன் கூடிய ஈமக்குழி உருவாக்கப்பட்ட பிறகு, முதலில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, இந்த இடத்தில் புதைக்கப்படும். ஆகவே, ஒரு மனிதனின் எல்லா எலும்புகளும் இந்தப் பேழைகளில் இருக்காது. எஞ்சியிருந்த எலும்புகள் மட்டுமே இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த எலும்புகளோடு இறந்தவர்களுக்குத் தகுந்த ஈமப் பொருட்கள் வைத்து குழிகள் மூடப்பட்டுள்ளன.

கீழ்நமண்டியில் கிடைத்துள்ள தொல் பொருட்கள் இந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய இரும்புக்கால குடியிருப்பு இருந்திருக்கலாம் என்பதைக் குறிப்பதாக தொல்லியல் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது. இங்கு கிடைத்துள்ள ஈமக் குழிகளை வைத்து, இந்தப் பகுதியில் வசித்தவர்களின் ஈமச் சடங்குகள் குறித்த சில தகவல்களையும் அறிக்கை தருகிறது.

இங்கு வைக்கப்பட்டிருந்த ஈமப்பேழைகள் உறுதியாக இல்லாத சார்னோகைட் (charnokite) கற்களால் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே பெரும்பாலான ஈமப்பேழைகளின் மூடிகள் உடைந்திருந்தன. "இம்மாதிரி கற்களை வெட்டி எடுத்து மெல்லிய பலகைகளைப் போலச் செய்ய அவர்களிடம் தரமான இரும்புக் கருவிகள் இருந்திருக்க வேண்டும். கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மரத்தாலான உருளைகளால் இந்தக் கற்கள் இங்கே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்" என்கிறது இந்த அறிக்கை.

"3,700 ஆண்டுகள் பழமையான ஈமப்பேழைகள்"



இந்த ஈமக் குழியில் இருந்து கிடைத்த கரித் துண்டும் சில இரும்புப் பொருட்களும் ஏஎம்எஸ் (Accelerator Mass Spectrometry) காலக் கணிப்புக்காக பீட்டா அனலிட்டிக் டெஸ்டிங் சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின்படி, அந்தக் கரிமப் பொருளின் காலம் கி.மு. 1450 (3400 ± 30) எனக் கண்டறியப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட காலக் கணிப்பின்படி (Calibrated AMS) இது கி.மு. 1769ஆம் ஆண்டு முதல் கி.மு. 1615ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்த அறிக்கை கூறுகிறது.

ஆகவே, சராசரியாக இந்தக் கரிமப்பொருள் கி.மு. 1692 ஆண்டை ஒட்டியதாக இருக்கலாம் என்கிறது அறிக்கை. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் சிறுதாவூர், பல்லாவரம் ஆகிய இடங்களில் கிடைத்த ஈமப்பேழைகளின் கரிமப் பொருட்கள் காலக் கணிப்புக்கு அனுப்பப்பட்டபோது, அவற்றின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருந்தது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கிடைத்த ஒரு ஈமப்பேழையின் காலம் கி.மு. 1692ஐத் தொடுவது இதுவே முதல் முறை. மேலும் இந்த ஈமக் குழுயில் இருந்து கீறல்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவையும் மறைமுகமாக இவற்றின் காலத்தை கி.மு. 17ஆம் நூற்றாண்டு என்றே குறிக்கின்றன என்கிறது அறிக்கை.

இந்த ஈமக்குழிகளில் உளி, கோடாரி போன்ற பொருட்களும் கிடைத்தன. மேலும், சில இடங்களில் வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள (carnelian) மணிகளும் கிடைத்தன. இங்கே கிடைத்த பானைகளின் விளிம்பில் சூலாயுதம், U போன்ற குறியீடுகளும் கிடைத்தன.

கீழ்நமண்டிக்கு சிந்துச் சமவெளியோடு தொடர்பா?

கீழ்நமண்டியில் இருந்தவர்கள் சிந்துச் சமவெளி பகுதிகளோடு தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிறார் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கே. ராஜன்.

"சூதுபவள மணிகளைப் பொறுத்தவரை, அவை தென்னிந்தியப் பகுதிகளில் கிடைப்பதில்லை. இந்த மணிகள் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளைச் சேர்ந்தவை. இந்தப் பகுதியில் இவை கிடைக்கின்றதென்றால், அவை அங்கிருந்ததுதான் வந்திருக்க வேண்டும். இங்கிருந்தவர்கள், அந்தப் பகுதிகளோடு வர்த்தகத் தொடர்பில் இருந்திருக்கலாம். இங்கு கிடைத்த ஈமப் பேழைகளின் காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. இதற்கு இணையாக வடமேற்கு இந்தியப் பகுதியில் பிற்கால ஹரப்பா (Late Harappan 1900-1300 BCE) நாகரிகமே நிலவியது. ஆகவே அதனோடு இதனை இணைத்துப் பார்க்கலாம்" என்கிறார்.

குறியீடுகளைப் பொறுத்தவரை, இங்கு கிடைத்த சில குறியீடுகள், சிந்துச் சமவெளியில் கிடைத்த சில குறியீடுகளைப் போலே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த இடத்தில் கிடைத்த கரிமப் பொருளின் காலம் ஏஎம்எஸ் காலக் கணிப்பில் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்தாலும், இங்கு கிடைத்த வேறு சில பொருட்களை OSL (Optically Stimulated Luminescence) காலக் கணிப்புக்கு அனுப்ப மாநில தொல்லியல் துறை முடிவுசெய்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1l8qqvn0r7o?fbclid=IwY2xjawNBgGZleHRuA2FlbQIxMQABHlluGp6p-qidCLsWD3xbYL167jiJQx52Z5YEdjf9ltqS3pjmob65E0xLSUA3_aem_8AqT-ckv8EJfCxv7gpAung

Reply all
Reply to author
Forward
0 new messages