'ஆட்சிமொழிக் காவலர்' கீ.இராமலிங்கனார் பிறந்த நாள்

2,269 views
Skip to first unread message

மாயோன்

unread,
Nov 12, 2016, 6:14:47 AM11/12/16
to mintamil, vall...@googlegroups.com

12.11.1899

தமிழகத் தலைமைச் செயலகம் முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரை இன்றைக்கு ஓரளவுக்காவது ஆட்சிமொழி நிர்வாகம் தமிழ்மொழியில் நடைபெறுவதற்கு மூல காரணமாக தமிழறிஞர் ஒருவர் இருந்துள்ளார். அவரை இப்போது தெரிந்து கொள்வோம். அவர் பெயர் கீ.இராமலிங்கனார்.

1956ஆம் ஆண்டில் மொழிவழி மாகாணமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்ட போது ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் பிரித்தானியரின் ஆங்கிலமொழியே தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே ஆங்கில அடிவருடிகள் சிலர் ஆங்கில மொழியில் எழுதுவது போல தமிழில் எழுத முடியாது என்றும், தமிழில் வரைவுகளும், குறிப்புகளும் எழுதினால் மற்றவர்கள் புரியாது என்றும் வாதாடி வந்தனர்.

தமிழ்நாட்டில் தமிழ்ஆட்சி மொழிச்சட்டம் வந்த போதும் கூட இவர்கள் எள்ளி நகையாடுவதை நிறுத்திக் கொள்ள வில்லை. அப்போது 'தமிழால் முடியும்' என்று ஆட்சிமொழிச் சட்டத்திற்கு உயிரூட்டியவர் தான் தமிழறிஞர் கீ.இராமலிங்கனார்.

இவர் சென்னையிலிருந்து முப்பது கல் தொலைவு கொண்ட 'கீழச்சேரி' எனும் கிராமத்தில் இரத்தின முதலியார்- பாக்கியத்தமாள் இணையருக்கு மகனாகப் 12.11.1899ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் இவருக்கு இராமலிங்கம் என்று பெயர் சூட்டினர்.

தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளியிலும், சென்னை சிவன் பள்ளியிலும் படித்த இராமலிங்கம் அதன் பிறகு 1924ஆம் அண்டு வெஸ்லி கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அப்போதே தமிழ்த் தென்றல் திரு.வி.க., சைவ அடிகளார் சச்சிதானந்தம் ஆகியோரிடம் பாடம் கேட்டு தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

1924இல் சென்னை தலைமைச் செயலகத்தில் மேல் நிலை எழுத்தராக பொறுப்பேற்றுக் கொண்ட போதிலும். தமிழின் மீதான ஈடுபாடு குறைய வில்லை. 1934இல் புலவர் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழில் ஆற்றல் மிகுந்த அறிஞராகத் திகழ்ந்தார். 1935இல் நகராட்சி ஆணையராக சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடி நாயக்கனூர் ஆகிய நகரங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப் போது நகராட்சியின் தெருக்களுக்கு தமிழ் பெருமக்களின் பெயர்களை சூட்டினார். இளங்கோ தெரு, தொல்காப்பியர் தெரு, அப்பர் தெரு, சிலப்பதிகாரத் தெரு, மணி மேகலை தெரு என்று படிப்பறியா தமிழ் மக்களும் உச்சரித்து அழைக்கும்படி செய்தார்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் வருவதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சித்துறை சொற்களை அகரவரிசையில் தொகுத்து 'ஆட்சிச்சொல்' (1940) என்ற பெயரில் நூலாக வெளியிட்ட பெருமை இவருக்கே உண்டு. இவர் 1926இல் சார் பதிவாளராக பணியாற்றிய போதே விற்பனை ஆவணங்கள் முழுவதும் தமிழ்மொழியில் எழுதும்படி தூண்டியதோடு, அவற்றை எந்தவித தடையுமின்றி பதிவு செய்திடவும் துணை நின்றார்.

ஆட்சிக்குரிய தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வு கட்டுரைகளை நூற்றுக்கும் மேல் 'தமிழ்நாடு' எனும் ஏட்டில் எழுதினார். 'ஆட்சிச் சொற்கள் சில' எனும் பெயரில் அவற்றை தொகுத்து மீண்டும் நூலாக வெளியிட்டார். 1958இல் ஆட்சிமொழித் தனி அலுவலராக பொறுப்பேற்று ஆட்சித்தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கினார்.

இராமலிங்கனாருக்கு 'தமிழ்' ஒரு கண் என்றால், 'சைவநெறி' மற்றொரு கண்ணாகும். இவர் எழுதிய தமிழ் ஆட்சிச்சொற்கள் (1959), ஆட்சிச் சொல் அகராதி (1958), ஆட்சித்துறைத் தமிழ் (1968), ஆட்சித்தமிழ் (1976) தமிழில் எழுதுவோம் (1978) ஆகிய நூல்கள் தமிழுக்கு மகுடம் சூட்டுபவை.

அதே போல், இவர் எழுதிய வழி காட்டும் வான் பொருள், உண்மை நெறி விளக்கம், திருவெம்பாவை, ஐந்து நிலைகள் ஆகிய நூல்கள் இறையியல் தத்துவங்களை தாங்கி நிற்பவையாகும்.

தமிழர் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் தமிழ்த் திருமணம், தமிழ் மணமுறை ஆகிய நூல்களும் கூட இவரால் எழுதப்பெற்றதாகும். வைதீக நெறிச் சடங்குகள் தமிழர் பண்பாட்டிற்கு எதிரானவை என்பதை அழுத்தந் திருத்தமாக இந்நூலில் விளக்கிடுவார்.

தமிழர் இல்லங்களில் ஆரிய புரோகிதரின் சமசுகிருத மொழியை ஏற்கக் கூடாது என்பதை பின்வருமாறு கூறுகிறார்;

" தாயை நீக்கி ஒருவன் மணஞ் செய்து கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம் பழிக்குமோ அங்ஙனமே தாய்மொழியை நீக்கி மணஞ்செய்து கொள்வோர்களை தெய்வமும் தமிழினச் சான்றோர்களும் பழிப்பர் என்று தமிழர்கள் அறிதல் வேண்டும்"

ஒருமுறை இராமலிங்கனார் அவர்கள் பெரியவர் காஞ்சி சந்திரசேகந்திர சரசுவதி சாமிகளின் தமிழ் வெறுப்பு மனத்தை அம்பலப்படுத்திடவும் துணிந்தார். அவர் உணவு பங்கீட்டு அலுவலராக பணியாற்றிய காலத்தில் சங்கராச்சாரியை சந்திக்க நேரிட்டது. அப்போது சங்கராச்சாரியார் தமிழ் 'நீசபாஷை' என்பதால் தமிழில் பேச மறுத்து விட்டு சமசுகிருதத்தில் பேசியதை அவரால் ஏற்க முடியவில்லை. சங்கராச்சாரியை சந்திக்கும் போதும், விடை பெறும் போதும் தமிழ்மொழிக்கு வணங்கிடும் தனது தலையை சங்கராச்சாரிக்கு வணங்க மறுத்து தானொரு தன்மானத் தமிழன் என்பதை சங்கராச்சாரிக்கு வெளிக்காட்டினார்.

பின்னர் சங்கரமடம் என்பது "பிராமணர்களின் கூடாரமே" என்று ஒரு பேட்டியில் ஓங்கி ஒலித்தார்.

'தமிழால் முடியும்' என்றுரைத்து அல்லும் பகலும் அயராது ழைத்த ஆட்சிசொற் சிற்பியாம் இராமலிங்கனார் 1986இல் தமிழ் மண்ணை விட்டு மறைந்தார்.

இராமலிங்கனார் அவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில அடிவருடிகள் தற்போது உயர்நீதி மன்றத்தில் தமிழால் முடியாது என்று பழைய பல்லவியை பாடி வருகின்றனர்.

'தமிழால் முடியும்' என்பதே இராமலிங்கனார் தமிழ்நாட்டிற்கு வழங்கிய தீர்ப்பாகும். அவரின் பிறந்த நாளில் பலமுறை உரக்கச் சொல்வோம்!

தமிழால் முடியும்! தமிழால் முடியும்!! தமிழால் முடியும்!!!

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழ் , நவம். 1-15 (2016)



-

Kathir Nilavan.
15073408_1123412271106985_623028308245148681_n.jpg

N. Ganesan

unread,
Nov 14, 2016, 12:02:13 AM11/14/16
to மின்தமிழ், vallamai


On Saturday, November 12, 2016 at 5:41:52 AM UTC-8, ko.senguttuvan wrote:
இப்பெரியோர் விழுப்புரம் நகர் ஆட்சி ஆணையராக இருந்த போதுதான் எங்கள் ஊர் வீதிகளும் தமிழ் மணம் பெற்றது! அவரை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றிங்க ஐயா. 


விழுப்புரம் நகரில் பிறந்தவர் காஞ்சி மகாபெரியவர். அவரை கீ. ராமலிங்கனார் சென்று பார்த்தபோது காஞ்சிமடத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி பரவலாகப் பேசப்பட்டது.
அதற்கப்புறம், காஞ்சிப் பெரியவர் வாழ்க்கையிலும் மாற்றம் வந்தது. 

வட, தென் ஆர்க்காடு மாவட்டங்கள் என இரண்டு பெரிய மாவட்டங்களுக்கு பெயர் தந்தது: ஆர்க்காடு என்னும் பழைய ஊர். இது சோழநாட்டு ஆர்க்காட்டினின்றும்
வேறானது. சோணாட்டு ஆர்க்காட்டில் ஆதன், அழிசி, சேந்தன் என்ற தலைவர்கள் வாழ்ந்தனர் என சங்க இலக்கியம் செப்புகிறது. ஆர்க்காட்டுக் கூற்றம் என்ற பெயரில்
சோழநாட்டில் இடைக்காலக் கல்வெட்டுகள் கிடைத்துள. 

ஆட்சிமொழிக் காவலர் கீ. ராமலிங்கன் “ஆர்க்காடு” என்னும் பெயர்தான் சரி எனக் குலமரபைச் சொல்லி விளக்கியுள்ளார். சென்னை மண்ணின் மைந்தர் அவர்.
ஆர்க்காட்டை ஆற்காடு - ஆறுகாடு எனத் தவறாகப் புரிந்துகொண்டு ஷடாரண்யம் என வடமொழியில் ஆக்கினர். இதனை ரா. பி. சேதுப்பிள்ளை போன்றோர் விளக்கினர்.
ஷட் = 6. ஆனால், ஆர்க்காடு என்றால் ஆத்திக்காடு. ஆத்திசூடி என்பது பார்சுவநாத தீர்த்தங்கரர். ஆரையன் என்றால் இத் தீர்த்தங்கரர் பெயர் எனலாம். பழைய கல்வெட்டுகளில்
இப்பெயர் உண்டு. 

~ நா. கணேசன்

ஆற்காடா ? ஆர்க்காடா ? எது சரி ? ஆர்க்காடு என்பதே சரி. - என் வரலாறு - கீ.இராமலிங்கனார்
செந்தமிழ்ப் புரவலர், இலக்கியச் செம்மல்,
ஆட்சிச்சொற்காவலர்,
கீ.இராமலிங்னார், எம்.ஏ.

” தொண்டை  மண்டல  முதலியார்களுள்  சிறுசிறு  பிரிவினர்  உளர். .................................................................  
அவரவர் வாழ்ந்துவந்த  ஊரின்  பெயரால் ,  “பூவிருந்தவல்லி  முதலியார்,  பொன்னேரி  முதலியார்,  ஆர்க்காட்டு  முதலியார்,  கடம்பத்தூர்  முதலியார்,  அங்கம்பாக்கம்  முதலியார்”  என  வழங்கப் பெறுவாரும்  உள்ளனர்.  நான்  பூவிருந்தவல்லி  முதலியார்  குடும்பத்திற்  பிறந்தேன்.  

இதற்குமேல்  என்ன  ஆவணம்  வேண்டும்? ஆர்க்காடு  என்ற சொல்லையே  ஐயமெதுவுமில்லாமல் அனைவரும்  பயன்படுத்திடல்  வேண்டும்.

உதவி :-
என் வரலாறு:
கீ.இராமலிங்கனார்.
தமிழ்மணம்
8, கிழக்கு பூங்காச்  சாலை
செனாய்  நகர், சென்னை - 600 030”

--------------------------------------

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 14, 2016, 12:41:40 AM11/14/16
to மின்தமிழ், vallamai


On Saturday, November 12, 2016 at 5:41:52 AM UTC-8, ko.senguttuvan wrote:
இப்பெரியோர் விழுப்புரம் நகர் ஆட்சி ஆணையராக இருந்த போதுதான் எங்கள் ஊர் வீதிகளும் தமிழ் மணம் பெற்றது! அவரை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றிங்க ஐயா. 

பெரியார் கீ. ராமலிங்கன், ”என் வரலாறு” நூலில், நாயக்கராட்சியில் நடந்த திருமண நிகழ்ச்சிகளின்  வடமொழி மாற்றங்கள் பற்றிச் சொல்கிறார்.
தீபாவளி பெரிதாகியதும் தெலுங்கு மன்னர்கள் தமிழ்நாடடி ஆனபோது தான்.

நா. கணேசன்

கீ. ராமலிங்கனார், என் வரலாறு.
காசி யாத்திரை:
“ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முன் விசயநகர மன்னர், தமிழ்நாட்டில் புகுந்து ஆளத் தொடங்கினர். அவர் களுக்கு வடமொழியிற் பற்று மிகுந் திருந்ததால் தமிழ் நாட்டவர் சடங்குகள் அனைத்தையும் அம்மொழியிலேயே நிகழ்த்தினால் நல்லது என்று நம்பினர். அதனால், ஆயிரக்கணக்கான ‘புரோகி தர்’களை ஆந்திர நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தமிழ் நாடெங்கணும் ஊருக்கு ஒருவராய்க் குடியேறவிட்டனர். அவர் களுக்கு வேண்டிய வீட்டு வசதி, வாழ்க்கை வசதி களையெல்லாம் செய்துதந்து, ஒவ்வொருவருக்கும் சடங்கு செய்து வைக்கக்கூடிய எல்லைகளையும் வகுத்துத் தந்தனர்; குறிப்பிட்ட எல்லைக்குள் நிகழும் சடங்குகள் அவ்வளவையும் ஒரு புரோகிதரே நடத்தி வைக்கும் தனி உரிமையையும் வழங்கினர். இப் புரோகிதர் குடியேறிய பிறகே, தமிழர் வீட்டுச் சடங்குகள் அனைத்தும் இப் புரோகிதர்களால் வடமொழியில் நடத்தி வைக்கப் பெறலாயின.

சிலப்பதிகாரத்தில் காணப்படும் ‘மாமுது பார்ப்பான்’ என்பது வள்ளுவர் குறிப்பிடும் அந்தணரைக் குறிக்கும்; ‘அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டெழுக லான்’ என்பது வள்ளுவர் வாய்மொழி.

முதன்முதலிற் சடங்குக்குரிய மந்திரங்களை ஆந்திரப் புரோகிதர் வடமொழியில் சொல்வதெனத் தொடங்கிய போது, தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்த வடமொழிப் பற்றாளர் அதனை எதிர்த்தனர். “நாட்டில் வேறு பகுதியிலிருந்தவர் இங்கு வந்து பிழைப்பிற்கு வளமான வழியைப் பெற்று விட்டார்களே!” என்னும் மனக்குறை அதற்குக் காரணமாயிருக்கலாம். தமிழிற்கு மாற்றாக வட மொழியில் மந்திரம் சொல்வதனை உள்ளூர விரும்பினராயினும், எதிர்ப்புப் பெருகாமலில்லை. புரோகிதர் நாயக்க மன்னருடன் கலந்து பேசினர். அவர்களுக்கு வாய்ப்பான முடிவு ஒன்று தோன்றியது. “வடமொழி மந்திரங்களைப் பிராமணர் அல்லாத வர் காதில் படுமாறு சொன்னால் சொல்லுபவர்க்கும் பாவம்; கேட்பவர்க்கும் பாவம்” என்னும் தடையைப் போக்குதற்கு ஒரு சூழ்ச்சி செய்தனர். (பார்ப்பன ரல்லாதாரிடம் இதைப் புகுத்தினால்தான் வருமானம் கிடைக்கும் என்பதே நோக்கம்)

“சடங்குக்குரியவர்களை முதலிற் பூணூல் போட்டுப் பிராமணர்களாக்கி விட்டுப் பிறகு, வடமொழி மந்திரங் களைச் சொல்வது” என்று முடிவு செய்தனர். இம் முடிவிற்கும் எதிர்ப்புத் தோன்றிற்று. “பூணூல் போடுவதால் மட்டும் ஒருவர் பிராமணர் ஆகிவிட மாட்டார்” என்று தடை எழுப்பினர். அத் தடையினை வெல்லும் முறையில் பிறிதொரு சூழ்ச்சி உருவாக்கப் பட்டது. திருமணக் காலத்திலே மாப்பிள்ளைக்குப் பூணூல் போட் டதும், அவர் காசிக்குச் சென்று வேதம் ஓதிவிட்டு வருவதாய்க் கருதி ‘காசி யாத்திரை’ என்னும் ஒரு சடங்கினை நுழைத்தனர். இவ்வாறாய்ப் புரோகிதர் வேலைக்கு ஏற்பட்ட தடங்கல்கள் மன்னனின் வல்லமையாலும், புரோகிதர்களின் சூழ்ச்சித் திறத்தாலும் வெல்லப்பட்டன.

மக்களுக்கு முதலிற் பிடிப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். கண்ணைக் கட்டிவிட்டதுபோல அயல்மொழியில் குருட்டுத்தனமாய்ப் புரோகிதர் சொல்லும் மந்திரங்களை உச்சரிக்க மாட்டாமல் தப்பும் தவறுமாய்ச் சொல்வதிலே அறிவுடையவர்க்கு அருவருப்பு இருந்திருக்கும். என்றாலும் அரசர் ஆட்சி முறையின் பகுதியாதலின் இவ் வடமொழிச் சடங்குகளை மக்கள் வாய்மூடி ஏற்றுக் கொள்ள லாயினர். நானூறாண்டுகளாய் நாட்டில் நிலைத்து விட்ட இவ் வடமொழிச் சடங்குமுறை, சில ஆண்டு களாய்த்தான் ஆட்டங் காணத் தொடங்கியிருக்கிறது. என்றாலும், பெங்களூரிலிருந்து திருநெல்வேலிவரை ஊருக்கொருவராய் அமர்ந்திருக்கும் புரோகிதர் இன்னமும் சடங்காட்சி செய்துதான் வருகின்றனர்.”

–  ‘என் வரலாறு’ நூலிலிருந்து’ “ http://dvkperiyar.com/?p=15280

N. Ganesan

unread,
Nov 19, 2016, 2:17:06 PM11/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Saturday, November 12, 2016 at 5:41:52 AM UTC-8, ko.senguttuvan wrote:
இப்பெரியோர் விழுப்புரம் நகர் ஆட்சி ஆணையராக இருந்த போதுதான் எங்கள் ஊர் வீதிகளும் தமிழ் மணம் பெற்றது! அவரை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றிங்க ஐயா. 



ஏனோ தன் வரலாறு நூலில் விழுப்புரம் தெருப்பெயர்களைப் பற்றிச் சொல்லவில்லை போலும். உவேசா ஐயரவர்களின் ’என் சரித்திரம்’, நாமக்கல் கவியின் ‘என் கதை’,
கோவை அய்யாமுத்துக் கவுண்டரின் ‘எனது நினைவுகள்’, ... போல, கீ. ராமலிங்கத்தின் ‘என் வரலாறு’ படிக்கவும் தூண்டுகிறது அவரது செயல்கள். 1940 - 1980 தமிழக
வரலாறும், முந்தைய நூற்றாண்டுகளில் படிப்படியாக தமிழ் உரிமைகளை இழந்ததும் பதிவு செய்துள்ளார். 

எழுத்துச்செம்மல் குன்றக்குடி பெரியபெருமாள், தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள், நூலில் கீ. ராமலிங்கம் பற்றிய கட்டுரை நல்லமுறையில் எழுதப்பட்டுள்ளது. படித்தேன்.
கீ. இராமலிங்கனாரின் நூல்கள், கட்டுரைகள் பிடிஎப் ஆகவேண்டும். அவரது குடும்பத்தாரிடம் கேட்டால் அளித்துவிடுவார்கள்.

~NG

 அறிஞர்.கீ.இராமலிங்கனார், சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடிநாயக்கனூர் முதலிய நகரங்களில் நகராட்சி ஆணையராகப் பணியாற்றினார்.  அப்போது, நகராட்சியின் தெருக்களுக்கு, ‘இளங்கோ தெரு’, ‘தொல்காப்பியர் தெரு’, ‘அப்பர் தெரு’, ‘கபிலர் தெரு’, ‘சிலப்பதிகாரத் தெரு’, ‘மணிமேகலை தெரு’ எனத் தமிழிலக்கியங்கள் மற்றும் புலவர்கள்  பெயர்களைச்  சூட்டி மகிழ்ந்தார்.  மேலும், நகரவைகளில் இயன்ற அளவு தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தினார் ‘நகராட்சி முறை’ எனும் நூலை 1954 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.

‘ஆட்சி மொழிக் காவலர்’ கீ.இராமலிங்கனார்!

விவரங்கள்
எழுத்தாளர்: பி.தயாளன்
தாய்ப் பிரிவு: வரலாறு
பிரிவு: தமிழ்நாடு
 

ஆட்சி மொழியாகத் தமிழ் அரியாசனம் ஏறவேண்டுமென்ற முனைப்பில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தி, செயற்கரிய பணி செய்தவர் அறிஞர் கீ. இராமலிங்கனார்.

ramalinganarசென்னைக்கு அருகில் உள்ள கீழச்சேரி என்னும் கிராமத்தில் இரத்தின முதலியார் பாக்கியத்தம்மாள் இணையருக்கு 1899 ஆம் ஆண்டு இராமலிங்கனார் பிறந்தார் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளியில் பயின்றார்.  ‘சீயோன்’ பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தார்.  ‘வெஸ்லி’ கல்லூரியில் பயின்றபோது ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. விடமும், ‘சைவப் பாதிரியார்’ சச்சிதானந்தம் பிள்ளையிடமும் கல்வி கற்றார். பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.

        அறிஞர் கீ. இராமலிங்கனார் தமிழகத் தலைமைச் செயலகத்தில் மேனிலை எழுத்தராகவும், சார் பதிவாளராகவும், நகரவை ஆணையராகவும், கல்லூரி முதல்வராகவும், தொழிலாளர் நல அலுவலகராகவும் பல்வேறு பொறுப்புகளில் வீற்றிருந்தார்.  எந்நிலையிலும், எந்தொழிலைச் செய்தாலும், தமிழின் நலம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர். தமிழின் வல்லமையைத் தமது சொல்லாலும், செயலாலும் தமிழருக்கு உணர்த்திய தமிழ்ச் செம்மல்.

        இந்திய நாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை அடைந்தது. வெள்ளையர் ஆட்சி மாறியதேயொழிய, ஆங்கிலமே ஆட்சி மொழியாகத் தொடர்ந்தது.  இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களும் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தையே கொண்டிருந்த நிலையில், பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியில் ஆட்சி நடந்தால்தானே, அது ‘தன்னாட்சி’ எனும் தகுதியைப் பெற முடியும் என்னும் சிந்தனை தோன்றியது.

        ‘தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாகத் தமிழைப் பயன்படுத்த இயலுமா?  ஆங்கிலத்தில் எழுதுவது போல், தமிழில் எழுத முடியுமா?  தமிழில் எழுதினால் வரைவுகளும், குறிப்புகளும் பிறருக்குப் புரியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் ‘தமிழர்கள்’ சிலர்.

        அனைத்துத் தடைகளையும், எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, தமிழகத்தில் 1956 ஆம் ஆண்டு ‘ஆட்சி மொழிச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.  ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வெகு காலம் முன்னரே, அறிஞர் கீ.இராமலிங்கனார், தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித்துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கினார்.  தாம் தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை 1940 ஆம் ஆண்டு வெளியிட்டார்.  ‘ஆட்சிச் சொல்’ என்னும் அந்நூல், அவரது தமிழ்த் திறத்தையும், தமிழுணர்வையும், தமிழார்வத்தையும் வெளிப்படுத்தியது.

        ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, சார்பதிவாளராகப் பணிபுரிந்த போது, மக்கள் தங்கள் சொத்துக்களை ஒருவரிடமிருந்து ஒருவர் கைமாற்றம் செய்யும் பத்திரங்களில் முழுவதுமாகத் தமிழே இடம் பெறத்தக்க வழிமுறைகளைத் தெரிவித்து ஊக்குவித்தார்.  தமிழில் எழுதும் பத்திரங்களை எவ்விதத் தடையுமின்றிப் பதிவு செய்தார்.

        அறிஞர்.கீ.இராமலிங்கனார், சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடிநாயக்கனூர் முதலிய நகரங்களில் நகராட்சி ஆணையராகப் பணியாற்றினார்.  அப்போது, நகராட்சியின் தெருக்களுக்கு, ‘இளங்கோ தெரு’, ‘தொல்காப்பியர் தெரு’, ‘அப்பர் தெரு’, ‘கபிலர் தெரு’, ‘சிலப்பதிகாரத் தெரு’, ‘மணிமேகலை தெரு’ எனத் தமிழிலக்கியங்கள் மற்றும் புலவர்கள்  பெயர்களைச்  சூட்டி மகிழ்ந்தார்.  மேலும், நகரவைகளில் இயன்ற அளவு தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தினார் ‘நகராட்சி முறை’ எனும் நூலை 1954 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.

        ஆட்சிக்குரிய தமிழ்ச் சொற்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘தமிழ்நாடு’ நாளிதழில், அது வாரந்தோறும் வெளியிட்ட ஞாயிறு மலர்கள் மூலம் தொடர்ந்து எழுதி வந்தார்.  ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும் அரிய நூலை 1957 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

        அறிஞர். கீ. இராமலிங்கனார்1958 ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டார்.  அவர் பொறுப்பேற்ற பின்னர், நாளுக்கு நாள் ஆட்சி மொழியின் வளர்ச்சிப் பணி தீவிரமடைந்தது.  ‘தமிழ் வளர்ச்சி இயக்கம்’ என்ற துறை உருவாக்கப்பட்டது.  தமிழகத்தின் அரசு அலுவலகங்களிலும், கல்வித் துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித் துறையிலும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது.  கீழமை நீதி மன்றங்களில் தீர்ப்புரைகள் தமிழில் எழுதப்பட்டன.  சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்திலும் அறிஞர் இராமலிங்கனார் உறுப்பினராகச் செயல்பட்டார்.

        ‘ஆட்சிச் சொல் அகராதி’, ‘ஆட்சித்துறைத் தமிழ்’, ‘ஆட்சித் தமிழ்’, ‘தமிழில் எழுதுவோம்’ எனப் பல நூல்களை எழுதித் தமிழுக்கு வலுசேர்த்துள்ளார்.

        அருந்தமிழ்ச் சொற்களஞ்சியத்தை ஆக்கி ஆட்சித் தமிழ் அறிஞராக விளங்கினார்!  ‘ஆட்சி மொழிக் காவலர்’ எனும் பெயரையும் பெற்றார்.  தமிழை ஆட்சிமொழியாக்கிடப் பாடுபட்டவர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்தார். அதனால், ‘ஆட்சிச் சொற் சிற்பி’ எனத் தமிழறிஞர்களால் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார்.

        இந்திய நாட்டில், தமிழர்கள் வாழும் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று, தமது கருத்தாழமிக்க சொற்பொழிவுகளால் தமிழுணர்வை ஊட்டினார்.

        ‘வழிகாட்டும் வான் பொருள்’, ‘உண்மை நெறி விளக்கம்’, ‘திருவெம்பாவை’ ‘ஐந்து நிலைகள்’ முதலிய சமயம் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், அவர் எழுதிய, ‘திருமுறைச் சமுதாயம்’, ‘தமிழ் மணமுறை’ ஆகிய சமுதாயம் சார்ந்த நூல்கள் தமிழர் பண்பாட்டின் பாதுகாப்புப் பெட்டகங்கள் ஆகும்.

        ‘மஞ்சள் மகிமை’ என்ற கவிதை நாடகத்தையும் படைத்துள்ளார்.  ‘ஆட்சிச் சொற்காவலர்’, ஆட்சிச் சொற் சிற்பி’, ‘செந்தமிழ் வித்தகர்’, ‘செந்தமிழ் விளக்க வள்ளலார்’ ‘நற்றமிழ் நம்பி’ ‘தமிழ்மொழிக் காவலர்’ ‘தமிழ்ச் சுடர்’ எனப் பல்வேறு பட்டங்களால் சிறப்பிக்கப்பட்டார்.

        தமது இறுதி மூச்சுள்ளவரை தமிழின் செழுமைக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய அறிஞர் கீ.இராமலிங்கனார் 1986 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.  ஆட்சி மொழித் தமிழுக்குப் பாடுபட்ட அவரது பெயர் தமிழ் மொழி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

பி.தயாளன்

N. Ganesan

unread,
Nov 19, 2016, 2:19:16 PM11/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

எழுதிய நூல்கள்[தொகு]

கீ. இராமலிங்கனார் 1930-இலிருந்து எழுதிய 17 நூல்கள்:[2]

  1. இசைச் சக்கரவர்த்தி நயினாப்பிள்ளை வரலாறு குமரன் அச்சகம், காஞ்சிபுரம் - 1930
  2. வழிகாட்டும் வான்பொருள்” - இரெட்டியப்பட்டி அடிகளார் சங்கம், அருள் நகர், அரசூர் (அஞ்சல்)
  3. உண்மை நெறி விளக்கம்” - ஆராய்ச்சி உரை, தென் ஆர்க்காடு மாவட்டம் - 1936
  4. நகராட்சி முறை - உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் தமிழைப் பயன்படுத்த உதவுவது, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு - 1954
  5. திருவெம்ன்பாவை - விளக்கத் தெளிவுரை, தருமயாதீன வெளியீடு - 1955
  6. தமிழ் ஆட்சிச் சொற்கள் - ஆட்சிச் சொல் ஆக்கும் முறையை விளக்குவது. விசாலாட்சிப் பதிப்பகம், மதுரை - 1959.
  7. ஆட்சித்துறைத் தமிழ் - அரசு அலுவலகங்களில் பயன்படுத்துதற்குரிய சொற்கள், தொடர்கள், வரைவுகள், குறிப்புகள், அமைச்சர் மாண்புமிகு முத்துசாமி அவர்களால் வெளியிடப்பெற்றது.; சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடு - 1968.
  8. தமிழ் மண முறை - இலக்கிய மேற்கோளுடன் வெளியிட்டவர் இரா. முத்துக்குமாரசாமி, தமிழ் ஆட்சியர், வாலாசாபாத்து, செங்கற்பட்டு மாவட்டம். சங்கர இராமசாமி - பரமேசுவரி ஆகியோர் தமிழ்த் திருமணத்தினை நிகழ்த்தி வைத்து கீ.இராமலிங்கனார் அவர்களால் 18-01-1973 -அன்று வாலாஜாபாத்தில் வெளியிடப்பட்டது.
  9. ஆட்சித் தமிழ் - அன்றுமுதல் இன்றுவரை, சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு - 1977.
  10. ”தமிழில் எழுதுவோம்” - தமிழில் ஆட்சி நடத்த ஊக்குவிப்பது. அமைச்சர் வீரப்பன் தலைமையில் வெளியிடப்பெற்றது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.
  11. திருமுறைச் சமுதாயம்” - ஆராய்ச்சி நூல். மாம்பாக்கம், குருகுல அருள்மிகு அழகரடிகள் வெளியீடு.
  12. ஐந்து நிலைகள்” - ஆராய்ச்சி நூல், மாம்பாக்கம் குருகுல அருள்மிகு அழகரடிகள் வெளியீடு.
  13. Tamil Marriages, Modes of Performance and Significance, Translation of my talk in Tamil published by the Institute of Tradtional Culture, Madras University
  14. ஆட்சிச் சொல் அகராதி - பொது - செம்மை செய்தும், ஆக்கியும் பெருக்கியது. முதல் இரண்டு பதிப்புகள், 1958 - 1964, அரசினர் வெளியீடு. ஆ. “துறைச் சொற்கள்” - செம்மை செய்ததும், ஆக்கியதும் - துறைக்கு ஒரு சுவடியாக - அரசினர் வெளியீடு - 1958 - 1964.
  15. தொழிலாளர் சட்டத் தொகுப்பு (Labour code). அரசு பணித்தவாறு மொழிபெயர்த்துத் தந்தது. - 1974.
  16. புதுக்கோட்டை மாவட்டச் சுவடி (ஒரு பகுதி) - அரசு பணித்தவாறு மொழி பெயர்த்துத் தந்தது - 1975
  17. தமிழ்த் திருமணம் - முறை விளக்கமும், செய்முறையும், தமிழ்நூல் வெளியீட்டுக் கழகம், குமரன் அச்சகம், காஞ்சிபுரம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jump up பி. தயாளன் (2016 மே 24). "ஆட்சி மொழிக் காவலர்’ கீ.இராமலிங்கனார்!". கீற்று. பார்த்த நாள் 2 சூன் 2016.
  2. Jump up கீ.இராமலிங்கனார் (1986). என் வரலாறு. 8, கிழக்குப் பூங்காச் சாலை, செனாய்நகர், சென்னை - 600 030: தமிழ்மணம்.
Reply all
Reply to author
Forward
0 new messages