கஞ்சிகள்

23 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Nov 11, 2025, 1:53:49 AMNov 11
to vallamai
கஞ்சிகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்...

/// உலகின் அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவு கஞ்சி!

நம் முன்னோர்கள் பல்வேறு விதமான ஆரோக்கிய கஞ்சிகளைப் பயன்படுத்தினர், அவை பெரும்பாலும் சிறுதானியங்கள், அரிசி, பருப்பு மற்றும் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டன.

இவற்றில் பழைய கஞ்சி, கொதிகஞ்சி, வடிகஞ்சி, பாலாடை கஞ்சி, சிறு தானிய கஞ்சிகள் (வரகு, தினை, குதிரைவாலி), அரிசி-பருப்பு கஞ்சி ஆகியவை அடங்கும்.

நமது உணவுக் கலாசாரத்தில் பின்னிப் பிணைந்திருந்த கஞ்சி வகைகள் எத்தனையோ இன்று காணாமல் போய்விட்டன. கொதிகஞ்சி, உறைகஞ்சி, முடிச்சுக்கஞ்சி, பால்கஞ்சி, வடிகஞ்சி, ஊட்டக்கஞ்சி, சுடுகஞ்சி எனப் பல்வேறு கஞ்சி வகைகளைத் தயாரித்துப் பயன்பெறலாம். இப்போது இருக்கும் ‘சூப்’ வகைகளுக்கு முன்னோடியாக ‘கஞ்சி’ வகைகளைக் குறிப்பிடலாம். ’கஞ்சி’ என்றதுமே ‘உவ்வே’ என்று ஒதுக்கித் தள்ளாமல், ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாக அதைப் போற்றுவது அறிவுடைமை.

காய்ச்சலால் அவதிப்படும் நேரத்தில் செரிமானப் பகுதிக்கு வேலைப் பளுவைத் தரக்கூடிய சீரணமாகாத உணவுகளைத் தவிர்த்துவிட்டு; மெல்லிய உணவு வகையான கஞ்சியை எடுத்துக்கொள்வதே நல்லது. ஜுரம் காரணமாக முடங்கிக் கிடக்கும் செரிமானத்தை விரைவில் மீட்டெடுத்து; தேவைப்படும் சத்துகளை உட்கிரகிக்க (Absorption of nutrients) இது உதவி புரியும். உடல் இழந்த நீர்ச்சத்தையும் இதைக் கொண்டு ஈடுகட்ட முடியும். ’குடற்தன்னில் சீதமலாது சுரம் வராது’ என்கிறது சித்த மருத்துவம். எந்த வகையான ஜுரமாக இருந்தாலும், செரிமானம் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருப்போம். ஆமத்தை (சீதத்தை) விலக்கி; செரிமானத் திறனை மீண்டும் எழுச்சியுறச் செய்ய இது பெருமளவில் துணையாக இருக்கும். சோற்றை வடித்து எடுக்கும் செழுமையான கஞ்சிக்கு ’அன்னப்பால்’ என்றும் பெயருண்டு.

’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவு; இப்படித்தான் பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. உண்மையில், கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நம் மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.

பட்டினப்பாலையில்…

‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி / யாறுப் போலப் பரந்தொழுகி…’ 

என்கிற வரிகள் சோறு வடித்த கஞ்சியானது ஆறுபோல ஓடியதாகக் கவிதை பேசுகிறது. 

சில முக்கிய கஞ்சி வகைகள்:

பழைய கஞ்சி:
இது நம் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தின் முக்கிய அங்கம். குறிப்பாக கோடை காலத்திற்கு ஏற்றது; உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. 

சிறு தானிய கஞ்சிகள்:
வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்கள் கொண்டு செய்யப்படும் கஞ்சிகள் உடலுக்கு அதிக பலத்தை அளிக்கின்றன. 

அரிசிக் கஞ்சி:
அரிசியைக் கொண்டு செய்யப்படும் இந்த கஞ்சி, உடல் நலத்தை மீட்டெடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. 

பருப்புக் கஞ்சி:
அரிசி, பருப்பு வகைகளைக் கொண்டு செய்யப்படும் கஞ்சி, தென்னிந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 

வடிகஞ்சி:
வடிகஞ்சி என்பது அரிசி அல்லது சிறுதானியங்களை வேக வைத்து வடித்துக் குடிக்கப்படும் கஞ்சி. 

நெற்பொரிக் கஞ்சி:
ஜுர நோயாளர்களுக்கு நெற்பொரிக் கஞ்சி மிகவும் சிறந்தது. நெல்லைப் பொரித்து, உமியை நீக்கிய பின் கஞ்சியாகச் செய்துகொள்ளலாம். வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்படும்போது தாராளமாக நெற்பொரிக் கஞ்சியைக் குடிக்கலாம். கிராமப் பகுதிகளில் நெற்பொரிக் கஞ்சி பிரபலமானது. காரணம் என்ன தெரியுமா? கிராமங்களில் உள்ள மக்களுக்கு, செரியாமையால் உண்டாகும் வயிற்றுவலிக்கு உடனடியாக மருந்தகங்களுக்குச் சென்று; மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டு; வயிற்றைப் புண்ணாக்கிக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

பஞ்சமுட்டிக் கஞ்சி:
தென் தமிழகத்திலும், இலங்கைத் தமிழர்களிடமும் வழக்கத்தில் உள்ள பஞ்சமுட்டிக் கஞ்சி... மெலிந்த தேகம் உடையவர்களுக்கும் நோயுற்று மெலிந்தவர்களுக்கும் அற்புதமான உணவு. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறு பயறு (அ) தட்டைப் பயறு, கடலை, பச்சரிசி ஆகியவற்றை வகைக்குப் பத்து கிராம் எடுத்து ஒரு துணியில் வைத்து முடிந்துகொண்டு, மண்பானையில் போட்டு, ஒரு லிட்டர் நீர் சேர்த்து, நான்கில் ஒரு பாகமாக (அதாவது 250 மி.லி அளவு) வரும் வரை காய்ச்சவும். பின்னர் துணி முடிப்பை எடுத்துவிட்டு, கஞ்சியைப் பருகலாம். பருப்பு வகைகளும், பயறு வகைகளும் சேர்ந்திருப்பதால் இதில் புரதக் கூறுகளுக்குப் பஞ்சமில்லை. சிலர் முளைகட்டிய பயறு வகைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள். இதைத் தயாரித்த பிறகு சிறிது மிளகுத் தூள் தூவி பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்கினால், எளிதில் சீரணமடைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். நோயாளியைச் சந்திக்கச் செல்லும்போது, விளம்பர உத்திகளின் மூலம் பிரபலமடைந்த ஊட்டச்சத்துக் கலவைகளை வாங்கிச் செல்வதற்குப் பதிலாக, பஞ்சமுட்டிக் கலவையைத் தயார்செய்து எடுத்துச் செல்லுங்கள். நோயாளியின் உடல்நிலை விரைவில் சமநிலை அடையும்.

உளுந்தங் கஞ்சி, வெந்தயக் கஞ்சி: 
காலங் காலமாகப் பெண்களின் மாதவிடாயை முறைப்படுத்தி 
உடலியிங்கியலைச் சீராகப் பயணிக்கச் செய்ய உதவியவை. பெண்கள் பூப்பெய்தும்போதும் அதன் பிறகும் வழங்கப்படும் உளுந்து, வெந்தயம் சேர்ந்த கஞ்சிகள், மாதவிடாய் நிகழ்வை ஒழுங்குப்படுத்தியதோடு, உடலுக்குத் தேவைப்படும் வலிமையையும் கொடுத்தன. ஆனால் இன்று, முற்றிலும் மருவிப் போன பாரம்பர்யமும் முறையற்ற உணவுப் பழக்கமும் காரணமாக மாதவிடாய் சார்ந்த நோய்கள் பெண்களை அதிகளவில் வாட்டுகின்றன. சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும், வைட்டமின்களும் உளுந்தில் அதிகளவில் உள்ளன. புரதங்களும் நார்ச்சத்தும் உளுந்தில் தேவையான அளவு இருக்கின்றன. மாதவிடாய் சார்ந்த தொந்தரவுகளை நிவர்த்தி செய்யும் கூறுகள் வெந்தயத்தில் உண்டு.

சுக்கு முடிச்சுக் கஞ்சி:
சுக்கின் மேல் தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக்கி, ஒரு துணியில் முடிந்து, பச்சரிசியைக் கொண்டு செய்யப்பட்ட கஞ்சியில் போட்டு நன்றாக காய்ச்சி, உண்டாகும் தெளிநீரை உபயோகிக்கலாம். இதனால் உணவில் ஈர்ப்பு உண்டாகும். வயிற்றில் உண்டாகும் மந்தம், மலக்கட்டு முதலியவை நீங்கும். காய்ச்சலுக்கும் கொடுக்கலாம். பச்சரிசி கஞ்சி செய்யும்போதே, சுக்கை துணியில் முடிந்து (முடிச்சுக் கஞ்சியாகவும்) காய்ச்சியும் பயன்படுத்தலாம். பசியைத் தூண்டும், வாயுவை அகற்றும் சக்தி சுக்குக்கு உண்டு.

கொள்ளுக் கஞ்சி:
சரியாகப் பசியெடுக்காமல் இருப்பவர்களுக்குக் கொள்ளுக் கஞ்சி நல்ல பரிந்துரை. அரிசியோடு கொள்ளு சேர்த்து செய்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வர மிகுந்த வலிமை உண்டாகும். வலிமையின் அளவை உணர்த்த, ’எள்ளைக் கையினால் கசக்கிப் பிழியும் அளவுக்கு உடலில் பலம் உண்டாகும்’ என்று உவமை கூறுகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. கொள்ளுக் கஞ்சியை ‘காணக் கஞ்சி’ என்றும் குறிப்பிடலாம். கொள்ளைத் தொலி (தோல்) புடைத்து, சிறிது மிளகும் மல்லியும் சேர்த்துச் செய்யப்படும் கஞ்சி வகையும் இருக்கிறது. இது, கப நோயாளிகளுக்கு முக்கியமான மருந்தாகப் பயன்படுகிறது. பருவ நிலைக்கு ஏற்ப உணவு தயாரிப்புகளை முன்னெடுத்த முன்னோர்கள், கார்காலத்திலும், குளிர்காலத்திலும் அதிகமாகப் பரிந்துரைத்தது காணக் கஞ்சியே!…

புனற்பாகம்:
இருமுறை வடித்த கஞ்சி, புனற்பாகம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, அவித்த சோற்றில் மீண்டும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து பயன்படுத்துவது. வெப்ப மாற்றங்களையும் நீரியல் நுணுக்கங்களையும் பற்றி அறிந்திருந்த முன்னோர்களின் அறிவியலுக்குச் சான்றாக இந்தக் கஞ்சி வகையை குறிப்பிடலாம். தண்ணீரில் நிகழும் மாற்றங்களை முன்வைத்து, வெப்ப நோய்கள் நீங்குவதோடு உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் ஊட்டக் கஞ்சியாகவும் புனற்பாகம் பயன்படுகிறது.

உறைகஞ்சி, கொதிகஞ்சி, வடிகஞ்சி:
வேனிற் காலங்களில்
பாலாடையைப் போல கட்டியான உறைகஞ்சி, சாதம் வேகும்போது கிடைக்கும் கொதிகஞ்சி, வடிகஞ்சி என அனைத்துக்கும் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. வேனிற் காலத்தில் மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களோடு கஞ்சி வகைகளையும் அவ்வப்போது குடிப்பது உடலுக்கு நல்லது.

சிறுதானியக் கஞ்சி:
பச்சரிசி, புழுங்கல் அரிசி தவிர சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் கஞ்சி வகைகளும் அதிகளவில் வழக்கத்தில் இருந்தன. அவற்றை மீண்டும் மனமுவந்து ஏற்றுக்கொண்டால், சிறுதானியங்களால் கிடைக்கும் எண்ணற்ற பயன்களைப் பெற முடியும்.

கஞ்சி உட்கொள்வதன் முக்கியத்துவம்:

ஊட்டச்சத்து
கஞ்சி, உடல் உறுப்புக்களுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. 

செரிமானம்:
மென்மையான கஞ்சி செரிமானத்திற்கு எளிதானது; குடலியக்கத்தை மேம்படுத்துகிறது. 

ஆற்றல்:
கஞ்சி உடல் சோர்வைப் போக்கும்; ஆற்றலை அளிக்கும். 

நோய்த் தடுப்பு:
சில கஞ்சி வகைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. 

துணை மருந்தாகும் கஞ்சி!
பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்யும்போது, குறிப்பிட்ட மருந்துகளோடு பத்தியமாக அரிசிக் கஞ்சியை மட்டுமே பயன்படுத்துவதாக மலைவாழ் மக்கள் குறிப்பிடுகிறார்கள். பல மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் கஞ்சி வகைகள் பயன்படுகின்றன.

மருந்தாக, துணை மருந்தாக, சிறுபொழுதுக்கான உணவாக, இடை உணவாக, ஊட்ட உணவாக, பத்திய உணவாக… எனப் பல்வேறு வகைகளில் நெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருந்தன கஞ்சி வகைகள். தேநீர், காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றின் வருகைக்குப் பின்னர் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போய்விட்டன. ’கஞ்சிக் காய்ச்சிக் குடிப்போம்’ என்பது அவமானம் அல்ல; பெருமை! பாரம்பரியம்!

நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

https://www.facebook.com/share/p/1G1UwFaLdq/

தெரிவு:சக  


kanmani tamil

unread,
Nov 11, 2025, 10:21:04 PMNov 11
to vallamai

மேலே சுட்டிய வகைகள் மட்டும் இன்றி இன்னும் சில கஞ்சி வகைகள் புலனக் காணொலிகளில் கிடைக்கின்றன.

மறுஉலைக் கஞ்சி:
இது முந்தைய பதிவில் கூறப்பட்ட புனற்பாகம் என்பதை ஒத்துத் தோன்றுகிறது; இருமுறைக்கு மேலும் நீர் சேர்த்துத் தயார் செய்யலாம் ஆதலால் இங்கு தனித்துவப் படுகிறது.

தெரிவு:சக

kanmani tamil

unread,
Nov 12, 2025, 9:55:49 PMNov 12
to vallamai
'கரிசல்' என்ற சிறுகதைத் தொகுதியில் (மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பகுதி-1பொதுத் தமிழ் மாணவர்க்குப் பாடமாக இருந்தது.) 'மழைக்கஞ்சி' என்ற தலைப்பில் அமைந்த கதை தமிழகத்துப் பாரம்பரிய மரபு ஒன்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. 

மழை பொய்த்து வேளாண்மை பாதிக்கப்படும் காலங்களில் மழை வேண்டித் தெய்வத்திற்கு வழிபாடு செய்வோர் காய்ச்சிப் படைப்பது 'மழைக்கஞ்சி'

எங்கள் வட்டாரத்தில் இதை 'தவணைக் கஞ்சி' என்பர். மாரியம்மனுக்கு இக் கஞ்சி காய்ச்சிப் படைத்து வழிபடுவதை சிறுவயதில் பார்த்திருக்கிறேன்; ருசித்தும் இருக்கிறேன். 

இக்கஞ்சி இனிப்பாக இருந்ததாக நினைவு. எல்லோருக்கும் குவளையில் ஊற்றிக் கொடுத்தனர். 

சக

kanmani tamil

unread,
Nov 13, 2025, 11:07:01 PMNov 13
to vallamai
சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவலாசிரியர் பொன்னீலனின் படைப்பில் காலை உணவாகப் 'பயிற்றங்கஞ்சி' இடம் பெறும். 

இந்த நாவலைப் பாடமாக நடத்திய காலத்தில் இந்த மாதிரியான பொதுவெளி ஏதும் இல்லை. பயிற்றங்கஞ்சி என்பது எப்படி இருக்கும்? அதை எப்படிக் காய்ச்சுவர்? என்றெல்லாம் தெரியாமலே தான் வகுப்பு ஓடியது. 

ஆனால் இன்று புலனத்தில் பயத்தங்கஞ்சி என்று துழாவினால் ஏகப்பட்ட செய்முறைகள்...

பாசிப்பயறை (பச்சைப்பயறு) வைத்துச் செய்யப்படும் வகை ஒன்று. 

பாசிப்பயறுக்குப் பதில் பாசிப்பருப்பும் தேங்காயும் இனிப்பும் சேர்த்துச் செய்தால்... ...பாயசத்தின் தங்கை கிடைத்துவிடும். 

பாசிப்பயறோடு நெல்லரிசியும் சேர்க்கலாம்; தானியமும் சேர்க்கலாம். 

பாசிப்பயறுக்குப் பதில் தோல்நீக்காத உளுந்து சேர்த்துச் செய்வதும் உண்டு 

இனிப்பு சேர்த்துச் செய்வதும் உண்டு; இனிப்பு சேர்க்காமல் உப்பு, பூண்டு சேர்ப்பதும் உண்டு. 

இன்னும் பலப்பல...
சக 

kanmani tamil

unread,
Nov 14, 2025, 9:59:45 PMNov 14
to vallamai
இசுலாமியர் நோன்புக் காலத்தில் செய்யும் கஞ்சி நோன்புக்கஞ்சி 


நோன்பு இருக்கும் பழக்கம் குடும்பத்தில் யாருக்கும் இல்லை என்றாலும்;
ஒரு இரவுப் பொழுதில் வயிற்றுக்கு இதமாக; அதே நேரம் நாவிற்குச் சுவையாக; உடலுக்கும் தெம்பு கொடுக்கக் கூடிய இந்தக் கஞ்சியை அவ்வப்போது செய்து குடிப்பது ... super taste. ஏனென்றால் இது கறிக்கஞ்சி. 

சக 

kanmani tamil

unread,
Nov 16, 2025, 10:25:46 PMNov 16
to vallamai
தமிழகத்தின் வட்டார வழக்குகள் சில (தென்காசி, திருநெல்வேலி) வெந்த நெல்லரிசிச் சோற்றையே கஞ்சி என்று தான் குறிப்பிடுகின்றன. இந்த இழைக்கு முத்தாய்ப்பாக அமைவது அந்த ஆதாரம் தான். 


பட்டினப்பாலை சோறு வடித்த கஞ்சியைக் (வடிகஞ்சி) 'கொழுங்கஞ்சி' என அடையெடுத்து உரைக்கும் காரணம் அதன் பிசுபிசுப்பும்; ஆறினவுடன் கெட்டியாகும் இயல்பும் (உறைகஞ்சி) ஆகும். 

கொதிகஞ்சியைச் சோறு கொதிக்கும் போது; அக் கொதிநிலையிலேயே பிரித்தெடுத்து ஆறவைத்துக் குழந்தைகட்குக் கொடுப்பர்.  

சக 
Reply all
Reply to author
Forward
0 new messages