கல்வெட்டுகளில் சோழ மன்னர்கள் மறைந்த தகவல்கள் - துஞ்சிய தேவர்கள்!

741 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Apr 18, 2020, 5:20:20 AM4/18/20
to வல்லமை

கல்வெட்டுகளில் சோழ மன்னர்கள் மறைந்த தகவல்கள் - துஞ்சிய தேவர்கள்!
......................................................................

சோழ மன்னர்கள் பலர் மறைந்ததைப் பற்றிய நிறைய தகவல்கள் நமக்கு கல்வெட்டுகளாலும், செப்பேடுகளாலும், பாடல்களாலும் தெரிய வருகிறது. சங்க காலத்திலேயே இது போல் மறைந்த சோழ மன்னர்களை 'குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன்', 'குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்' போன்ற புறநானூறில் வரும் குறிப்புகளால் அறிகிறோம். அது போல் பிற்காலச் சோழர்களில் கல்வெட்டுகளில் அவ்வாறு குறிப்பிடப்படும் சோழ மன்னர்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.

1. தொண்டைமானாற்றூர் துஞ்சிய சோழர்
-------------------------------------------------------------
சிற்றரசாக இருந்த சோழ அரசை பேரரசாக உருவாக்கியவர் விஜயாலயரின் மகனான ஆதித்த சோழர் எனலாம். ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களின் எழுச்சிக்கு வித்திட்ட ஆதித்த சோழர்(871-907) காளஹஸ்தி அருகே உள்ள தொண்டைமானாற்றூர் எனும் இடத்திற்கு வரும் போது இயற்கை எதியுள்ளார். அவரது நினைவாக அவரது மகனான பராந்தக சோழன் அங்கேயே பள்ளிப்படை கோவில் எழுப்பியுள்ளார். இவ்வாறு அவர் தொண்டைமான் பேராற்றூரில் இறந்தமை சில கல்வெட்டுகளில் 'தொண்டைமானாற்றூர் துஞ்சிய தேவர்' என அழைக்கப்படுவதிலிருந்து அறியலாம். காஞ்சிபுரம் அருகேயுள்ள திருமால்புரம் எனும் ஊரிலுள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலில் அவ்வாறு அவர் குறிப்பிடப்படும் கல்வெட்டை இங்கு இணைத்துள்ளேன்.

2. யானை மேல் துஞ்சிய சோழர்
--------------------------------------------------------
பராந்தக சோழரின் மூத்த புதல்வரான இராஜாதித்தர் தக்கோலம் எனும் இடத்தில் இரட்டை மண்டலத்து கன்னர தேவனுடனான பெரும் போரின் போது பூதுகன் எனும் கங்க மன்னன் எய்த அம்பால் யானை மேல் அமர்ந்து போரிடும்போதே வீரமரணம் அடைந்துள்ளார். எனவே அவரை யானை மேல் துஞ்சிய தேவர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டதை பல கல்வெட்டுகள் கூறுகின்றன. திருச்சியில் உள்ள திருவெள்ளறை புண்டரிகாக்ஷ பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டொன்றில் அவரது மனைவி அளித்த நிவந்தத்தில் யானை மேல் துஞ்சிய தேவர் என அழைக்கப்பட்டிருப்பதை இணைப்பில் காணலாம். குடந்தை கீழ்கோட்டம் எனப்படும் நாகேசுவரர் கோவிலிலும் இவ்வாறு குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. மேற்கெழுந்தருளிய தேவர்
---------------------------------------------------
சிவபக்தியில் சிறந்தவராக அறியப்படும் பராந்தக சோழரின் இரண்டாவது மகனான கண்டராதித்த சோழர் தம் அரசை துறந்து மேற்கில் தல யாத்திரை செல்லும் போது மறைந்ததால் மேற்கெழுந்தருளிய தேவர் என அழைக்கப்படலாமென வரலாற்றறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார். வேறு சிலர் அவர் மேற்கில் நடந்த போரில் இறந்ததால் அவ்வாறு அழைக்கப்படலாமென்றும் கூறுகிறார்கள். இன்னும் சிலர் மேற்கு பகுதியில் கொல்லி மலை பகுதியில் அவர் மறைந்திருக்கலாமெனவும் கூறுகிறார்கள் என்றாலும் இதுவரை உறுதியான ஆதாரம் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. உடையார்குடி அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்றில் கண்டராதித்தரின் மனைவி செம்பியன் மாதேவியார் அளித்த நிவந்தக் கல்வெட்டில் அவர் மேற்கெழுந்தருளிய தேவர் என அழைக்கப்பட்டிருப்பதை இணைப்பில் காணலாம்.

4. ஆற்றூர் துஞ்சின சோழர்
------------------------------------------------
பராந்தக சோழரின் புதல்வர்களில் ஒருவரும் கண்டராதித்தருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவரும் ராஜராஜ சோழரின் பாட்டனாருமான அரிஞ்சய சோழர் ஆற்றூர் எனும் ஊரில் மறைந்துள்ளார். திருவல்லத்திற்கு அருகேயுள்ள மேல்பாடி என்று தற்போது அழைக்கப்பெறும் ஊரில் ராஜராஜர் தனது தாத்தாவிற்கு பள்ளிப்படை கோவில் எடுப்பித்துள்ளார். அந்தக் கோவில் கல்வெட்டுகளில் அவர் ஆற்றூர் துஞ்சிய தேவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை இணைப்பில் காணலாம்.

5. பொன்மாளிகை துஞ்சிய தேவர்
-------------------------------------------------------------

ஆதித்த கரிகாலர், குந்தவை பிராட்டியார், ராஜராஜர் ஆகியோரது தந்தையும் இரண்டாம் பராந்தகர் எனக் குறிப்பிடப்படுபவருமான சுந்தர சோழர் கல்வெட்டுகளில் பொன்மாளிகை துஞ்சிய தேவர் என அழைக்கப்பட்டிருப்பார். வேறு சில கல்வெட்டுகளில் காஞ்சிபுரத்தில் பொன்மாளிகை ஒன்று இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் காஞ்சியில் உள்ள அந்த பொன்மாளிகையில் இறந்திருக்கலாமென முன்னர் கருதப்பட்டது. தஞ்சை அருகேயுள்ள கண்டியூர் அருகே கிடைத்த கல்வெட்டுகளிலிருந்து பராந்தக ஈச்சரம், வானவன்மாதேவீச்சரம் எனும் இரட்டை கோவில்கள் பள்ளிப்படையாக கண்டியூர் அருகே இருந்திருப்பது வரலாற்றறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அப்பொன்மாளிகை தஞ்சை அருகே இருந்திருக்கலாமென அறிஞர்கள் கருதுகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை பிராட்டியார் தனது ததந்தை மற்றும் தாயாரின் உருவ செப்புச் சிலைகளை எடுப்பித்துள்ளார். அக்கல்வெட்டில் சுந்தர சோழரை பொன்மாளிகை துஞ்சிய தேவர் எனக் குறிப்பிட்டுள்ளதை இணைப்பில் காணலாம்..!

கல்வெட்டுத் தகவல்கள் மூலம் அரசர்கள் இறந்த விதங்களைக் குறிக்கும் செய்திகளும் அறியலாமென்பதை மேற்கண்ட கல்வெட்டுகளின் மூலம் அறிந்திருப்பீர்கள் நண்பர்களே...நாளை வேறு ஒரு வியக்க வைக்கும் கல்வெட்டுச் செய்தியினை விரிவாகக் காணலாம்..

Reply all
Reply to author
Forward
0 new messages