Re: {தோழமை:29432} குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்

2 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Feb 13, 2026, 4:46:14 AM (9 days ago) Feb 13
to thiru-th...@googlegroups.com, வல்லமை
On Fri, 13 Feb 2026 at 11:12, இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com> wrote:

குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – தொடர்ச்சி)

சூழலால் உருவாவதே அறிவு!

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு. 

 (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௪ – 454)

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றும். ஆனால், சூழும் இனத்திற்கேற்ப உண்டாவதே அறிவாகும். 

 

ஆம் ஒருவரது குணம் மனத்தின் இயல்பாக தோன்றினாலும் அது அவர் வளர்ந்த இனத்தின் தாக்குறுத்தத்தால் (influence) ஏற்பட்டததே ஆகும். இன்று தனிமனித சுதந்திரம், தனிமனித விருப்பம், தனிமனித தேர்வு என்ற (individualism) முன்னிலைப்படுத்தப்பட்டு கூடிவாழ்ந்தால் கோடி நன்மை (socialism) என்ற கோட்பாடு இகழப்படுகின்றது. இதன் காரணமாக குடும்பம், பெற்றோர், உற்றார் உறவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.  இது இக்கால செய்தி ஏடுகள் திரைப்படங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட கேடு.   

பதவுரை : மனத்துளது போலக் காட்டி – (ஒருவனின்) மனத்தில் உள்ளதாகத் தோற்றத்தைக் காட்டி; ஒருவற்கு – ஒருவனுக்கு;
இனத்துளதாகும் – அவன் சேர்ந்துள்ள இனத்தின் தன்மையாகவே;
அறிவு – அவனது அறிவு (சிறப்பறிவு) வெளிப்படும்.

 ஒருவன் மனத்தில் உள்ளதுபோல் அறிவு தோன்றும். அது பொய்த்தோற்றம் என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் நல்லினத்துடன் சேர்கிறானா அல்லது தீய இனத்துடன் சேர்கிறானா என்பதைப் பொறுத்தே உருவாகும் அறிவு என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவன் தீய பழக்க வழக்கங்கள் உள்ள இனத்துடன் சேரும் பொழுது அக்கூடாச் சேர்க்கையால் அவனுக்குத் தீய பழக்க வழக்கங்கள் உண்டாகின்றன. அதனால் தீய பண்பினன் ஆகின்றான். அத் தீய பண்புகளுக்கேற்ப அவனது அறிவும் அமைந்து விடுகிறது. அதே நேரம் ஒருவன் நல்லினச் சேர்க்கை உடையவனாக இருந்தால் அவனது இயல்பான நற்பண்புகள் வெளிப்படுவதுடன் மேலும் நற்பண்புகளுக்கு உறைவிடமாகிறான். எனவே, அவனது அறிவு அத்தகைய நற்பண்புகளுக்கேற்பவே உருவாகி அமைகின்றது.

நிலத்தில் விழும் தூய நீர் மண்ணின் தன்மைக்கேற்பத் தன் தன்மை திரிந்து விளங்கும். அதுபோல் சேரும் இனத்தின் இயல்பிற்கேற்ப அறிவும் மாறுபடும் எனத் திருவள்ளுவர் முன்னேர(குறள் 452) கூறியுள்ளார்.

பெரும்பாவச்செயல்கள், ஆணவம், அகங்காரம், தற்பெருமை, நயவஞ்சகம், உள்ளத்தை மறைத்துப் பேசுதல், பொய் பேசுதல், அவதூறு கற்பித்தல், புறம்பேசுதல், அநீதி இழைத்தல், பிறர் பொருள் கவர்தல்,  திருட்டு, கொள்ளை, சூதாட்டம், மோசடி, சோம்பல், மது அருந்துதல், போதைப் பொருள் பயன்பாடு, போதைப் பொருள் விற்பனை, ஏமாற்றிப் பிழைத்தல், பரத்தமை முதலிய பல்வேறு தீய செயல்களில் ஒன்றையோ பலவற்றையோ உடையவர்களாகத் தீயோர் உள்ளனர். இத்தகைய தீய இனத்துடன் சேரும்பொழுது சேருவோரும் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிப் பிறருக்கும் கொடுமை இழைப்பவர் ஆகிவிடுகிறார். தீய பழக்க வழக்கங்களுக்கும் தீய செயல்களுக்கும் ஏற்ப நல்லறிவும் திரிந்து விடுகிறது. நல்லறிவுடையவர்களும் நல்ல திறமை உடையவர்களும் தீய இனத்தால் சேருவதால்  நிலை தடுமாறிச் சீரழிவதை நாம் பலரது வாழ்வில் பார்த்துள்ளோம். இவற்றைக் கதைகள் மூலமும் தொலைக்காட்சி, திரைக்காட்சிகள் மூலமும் நாம் அறிந்து வருகிறோம். எனவேதான் சேரும் இனத்திற்கேற்ப அறிவு அமைவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இதனால் நல்லினத்துடன் சேருவோருக்கு நல்லறிவும் தீய இனத்துடன் சேருவோருக்குத் தீய அறிவும் உண்டாகிறது என்பது உண்மையாகிறது. அஃதாவது அறிவு என்பது சேரும் இனத்தால்தான் உருவாகிறது.

எனவேதான் திருவள்ளுவர் மனம் காட்டும் அறிவைப் பொய்மை எனவும் சேரும் இனத்தால் சேருவதே உண்மையான அறிவு என்றும் கூறுகிறார்.

ஆதலால் சூழலால் உருவாவதே அறிவு என்பதை உணர்வோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்



Reply all
Reply to author
Forward
0 new messages