"செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வாலூன் வல்சி மழவர்..." பதிற்.55
ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பழைய உரைகாரரைப் பின்பற்றிச்; 'செவ்வூனும் மிக்க துவரையும் கலந்து அரைத்த துவையல் ஆதலால்; "வெண்துவை" என்றும்; சிவந்த ஊன் ஆயினும் அத்துவையல் தன் செம்மை தோன்றாது ஆயினமையின்; "செவ்வூன் தோன்றா" என்றும் கூறினார்.' என்கிறார்.
பழைய உரைகாரர் 'செவ்வூன் தோன்றா வெண்துவை என்றது அரைத்துக் கரைத்தமையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவை என்றவாறு...' என்கிறார்.
'துவை' = துவையல் என அவர்கள் இருவரும் கூறும் பொருள் பொருந்தவில்லை.
'ஊன்துவை அடிசில்' = ஊன் மிகுதியாகக் கலந்த சோறு என்பதில் எந்தக் குழப்பமும் வரவில்லை ஆதலால்; 'வெண்துவை... வாலூன் வல்சி' என்ற தொடரிலும்; துவை = 'கலந்த' என்ற பொருளே பொருத்தமானது ஆகிறது.
பழையவுரைகாரர் தாவரவுணவு மட்டுமே அறிந்தவர் எனப் புரிகிறது. ஔவை சு.துரைசாமிப் பிள்ளை அவர் சொன்ன பொருளை அப்படியே ஏற்றுக் கொண்டு தொடர்கிறார்.
கறிக்காகப் பேணி வளர்த்த ஆட்டின் இறைச்சி செந்நிறம் தெரியாத அளவு வெள்ளையாகக் கட்டிக் கொழுப்பு சூழ்ந்து இருப்பதை அசைவப் பிரியர் அறிவர். அதனால் தான் வெண்ணெல்லின் அரிசியோடு சேர்த்துச் சமைத்த சோறைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்;
"செவ்வூன் தோன்றா வெண்துவை... வாலூன் வல்சி"
எனப் பாடி உள்ளார். இந்த அசைவ விருந்து மட்டும் இன்றிச் சைவ விருந்தும் அளித்ததை; "முதிரை... வாலூன் வல்சி" என விதந்து பொருள் கொள்ள வேண்டும்.
பொருள்கோள் வகைகளைக் கருத்தில் கொண்டு மேற்சுட்டிய பதிற்றுப்பத்து பாடல் பகுதிக்குப் பொருள் கொள்ளும் போது 'வாலூன் வல்சி' என்ற தொடர் 'செவ்வூன் தோன்றா வெண்துவை ன'யுடன் சேர்ந்து அசைவ விருந்தையும் 'முதிரை'யுடன் சேர்ந்து சைவ விருந்தையும் குறிக்கும் ஒரு சொல் அல்லது சொற்றொடர் ஊஞ்சல் கயிறு போல இருபுறமும் சென்று சேர்ந்து பொருள் தருவது தாப்பிசைப் பொருள்கோள் ஆகும். இங்கு 'வாலூன் வல்சி' ஊஞ்சல் கயிறு போல இருபுறம் சென்று சேர்ந்து பொருள் தருகிறது.
முதிரை = துவரை முதலிய பயறு வகைகள்.
வெண்ணெல் அரிசியோடு துவரம்பருப்பு சேர்த்துச் செய்யும் 'அரி(சீம்)சியும் பருப்பு சாதம்' இன்றுவரை மிகவும் போற்றப்படும் உணவு வகையாக உள்ளமை நோக்கற்கு உரியது. இதற்குக் 'கொங்கு பிரியாணி / கவுண்டர் வீட்டு பிரியாணி' என்ற பெயர்வழக்கு இருப்பது குறிப்பிடத் தக்கது. பொதுமக்கள் வழக்கை U Tube காணொலியில் காண்க.
இன்றும் கேரளத்தில் 'சாப்பாடு ஆயிற்றா?' என்பதை 'ஊனு கழிஞ்சோ?' என்று தான் வினவுகின்றனர். இங்கு 'ஊன்' = 'உணவு' ஆகிறது. வெண்ணெல்லின் அரிசியால் ஆன உணவு ஆகையால் "வாலூன்" எனப்படுகிறது.
'ஊன் வல்சி' இருபெயரொட்டாக அமைந்துள்ளது.
இறைச்சியின் செம்மையை மறைத்துக் கொழுப்பு மிகுந்து இருக்க; வெண்ணெல் அரிசியோடு சேர்த்துச் செய்த சோறு, துவரம்பருப்பை வெண்ணெல் அரிசியோடு கலந்து சமைத்த சோறு என இருவகைச் சோற்றையும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவர்க்கு அளித்தான்.
இன்றும் பொதுமக்கள் துவரை போன்ற பிற பயறு வகைகளைச் சேர்த்தும் சோறு சமைக்கின்றனர்.
(தொடரும்)
சக