வணிகரிடம் இருந்து வணிகக் குழு தண்டிய வரிகள்

18 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jun 15, 2026, 4:05:43 AM (8 days ago) Jun 15
to வல்லமை, hiru thoazhamai, அகரமுதல மடல்கள், இலக்குவனார் திருவள்ளுவன், சிறகு இதழ், archcomm...@gmail.com, ketharanathan saravanan
                                                                    வணிகரிடம் இருந்து வணிகக்குழு தண்டிய வரிகள் 


paneer 1.png

தமிழ்நாட்டில் பண்டு வணிகர்கள் குழுக்களாக இயங்கி இங்கு உற்பத்தியான பண்டங்களை அயல் தேசங்களுக்குக் கொண்டு சென்று விற்றும், இன்னும் சிலர் அயல் தேச பொருள்களை கொணர்ந்து இங்கு விற்றும் வணிகம் செய்தனர் என்பதற்கான கல்வெட்டு சான்று இது. இவ்வாறு திசைஆயிரத்து ஐநூற்றுவர், தேசிகள், நான்கு திசைதேசிகள், நானாதேசிகள், பதினெண்பூமி தேசிகள், பதினெண் விசயத்தார், அஞ்சுவண்ணத்தார் என இவர்கள் குழுவாக செயற்பட்டதால் அதற்கு சாத்து என்றும் பெயர் உண்டு. இந்த வணிக சாத்துகள் தமக்கும் தம் வணிக பொருளுக்கும் பாதுகாப்பு வேண்டி தமக்கென வலுவான யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை கூட வைத்திருந்தனர். இவற்றின் முக்கியத்துவம் அறிந்த வேந்தரும் மன்னவரும் தமது போர்த் தேவைகளுக்காக இவ்வணிகப் படைகளை பயன்படுத்திக் கொண்டனர். வெற்றியும் அடைந்தனர். இதனால் வாணர் போன்ற மன்னவர் வணிகப் படைத் தளபதிகளுக்கு பெண் கொடுத்தும் பெண் எடுத்தும் உறவு பேணினர். அஃதோடு நில்லாமல் இந்த வணிகப் படைகளை பேணுவதற்காக சில இடங்களில் வணிகர் வரித் தண்டிக் கொள்ளும் உரிமையும் வழங்கி இருந்தனர். அவ்வாறான செய்திகள்  இந்த வணிகக் குழுக்கள் சில கோவில்களுக்கும் சமண பள்ளிகளுக்கும் செய்த நிவந்தங்கள் மூலம் கிடைக்கின்ற கல்வெட்டுச் செய்திகளால் அறிய வருகின்றது. கீழே அப்படி ஒரு கல்வெட்டுச் செய்தி குளித்தலை வட்டம் துவரைக் குறிச்சியில் இருந்து கிடைக்கின்றது. இது திரு மார்கழி உற்சவம் நடத்துவதற்கும் இன்னும் பிற தெய்வ காரியங்களுக்கும் தமது வரி வருவாய்களில் சிலவற்றை வணிக குழுக்கள் ஒதுக்கித் தந்தன. அவற்றை இங்கே விளக்கமாக காண்போம். 

கல்வெட்டில் புழங்கும் சில சொற்களுக்கு அகராதிகளில் நேரடிப் பொருள் இல்லை. அச் சொற்களுக்கு முன்வரும் சொல் பின் வரும் சொல், அடிக்கடிப் பயன்பாட்டை வைத்து தான் ஒரு நெருக்கமான பொருளை கொள்ள முடிகின்றது. காட்டாக, மாராப்பு என்பதை திரை, மூடி, wig, cover என்று கருத முடிகின்றது. வெண் காதி ஒரு மருந்து மூலிகை. கோட்டை என்பது தையல் இலை அடுக்கு கட்டு. 

இவ்வகை வரிகளை பிற கல்வெட்டுகளில் காண்பது அரிதாகவே உள்ளது. ஏனென்றால் இவை மக்களிடம் இருந்து  நேரடியாகத்  தண்டவில்லை மாறாக இவ் வணிக குழுக்கள் வணிகரிடம் இருந்தே மொத்தமாக இவ்வரிகளை திரட்டி அதை வணிகர் மக்கள் மீது சுமத்தும் ஒரு மறைமுக வரி (indirect tax) ஆகும். மக்கள் யாரும் பொதியாக பொருள் கொள்ளமாட்டார் உதிரியாகவே கொள்வார். ஆனால் இங்கே வரி என்ற பணம் பொதிக்கு சொல்லப்படுவதில் இருந்து இதை புரிந்து கொள்ள முடிகின்றது. 
  1. [!] கருணை எயிதி தன்மை இனிது நடாத்தி
  2.  திசை விளங்கு திசை யிரத்தி ஐ நூற்றுவறோமும் ஏறு சாத்து இறக்கு சாத்து  நடாத்தி 
  3. _ _ _ பதினெண் பூமி தேசித் திசை விளங்கு திசையாயிரத்து 
  4. நிகழா நின்ற தேசித் திசை விளங்கு 
  5. விழா நடாத்தி நிகழா நின்ற நான்கு திசைப் பதினெண் பூமித் தேசித் திசை 
  6. செட்டிகள் தளச் செட்டிகள் சித்திரமேழியை துனையாகத் தமை 
  7. _ _ _ _ வண்ணபுகழ் நடாத்தவும் மரம் பெரியான் திறந்த 
  8. நல்லொழுக்கமும் தாளாண்மையும் 
  9. மீனமும் பண்ணி இற்றை நாளாலமைந்த
  10. திருமாற்கழித் திருநாளுக்கும் பல நிமந்தகளுக்கு 
  11. பட்டணப்பகுதி 
  12. பொதிக்கு பணம் 
  13. வெண்காதிக்கு பணம் 
  14. உப்புப் பொதிக்கு பணம் 
  15. நூற் பொதிக்கு  பணம் 
  16. சுங்கநெற்  பொதிக்கு பணம் 
  17. அரிசிப் பெருவரைப் 
  18. பொதிக்கு பணம்
  19. துவரைப் பொதிக்கு பணம்
  20.  மிளகு பொதிக்கு பணம்    
  21. சுக்குப் பொதிக்கு கடுகு பொதி
  22. புடவைக் கட்டுக்கு பணம் 
  23. நென் புடவைக்கு  
  24. பருத்திப் பொதிக்கு பணம் 
  25. வெண்கலப் பொதிக்கு 
  26. தானியப் பொதிகளுக்கு பணம்  
  27. கோட்டை பொதிக்கு 
  28. ஆமணக்குப் பொதிக்கு பணம்   
  29.  இரும்பு பொதிக்கு பணம் 
  30. பசுவெண்ணைய்க்கு பணம் 
  31. புளிவண்டிக்கு பணம் மயிர் மாராப்புக்கு 
  32. சந்தன மாராப்புக்கு பணம் 
  33. ஆனைக்கு குதிரைக்கு ஒட்டைக்கு பணம் 
  34. கரைக்கு மற்று மாராப்புக்கு கடவதாகவும் 
  35. சேவுக்கு பீலிக்கு தேன்சுமைக்கு மெழுகு சுமைக்கு 
  36. உலண்டு மாராப்பு பொதிக்கு 
  37. மஞ்சள் கருப்பு கட்டிப் 
  38. பை அவிழாக்கட்டுக்கு பணம் 
  39. கலமாராப்புக்கு பணம் 
  40. எட பொதிக்கு உப்பு வண்டிக்கு பணம் 
  41. ஆமணக்கு வண்டிக்கு [!]
விளக்கம்: இக்கல்வெட்டு முன்னும் பின்னும் உடைந்துள்ளதுபோல தோன்றுகிறது. முன் பகுதி சிதைந்துள்ளதால் இக்கல்வெட்டின் காலமும் எந்த அரசரின் ஆட்சி ஆண்டு என்பதும் அறிய முடியாமல் போய்விட்டது. திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் மெய்க்கீர்த்தியுடன் கல்வெட்டு தொடங்குகிறது. அருள் நெஞ்சம் கொண்டவராக தம் வாழ்க்கையை இனிதே நடத்தும் திசை எல்லாம் விளங்கும் திசை ஆயிரத்து ஐநூற்றுவரான நாம் பிற ஊருக்கு பண்டம் ஏற்றியும் (ஏறு சாத்து) பிற ஊரில் உள்ள பண்டத்தை இங்கே கொணருவித்தும் (இறக்கு சாத்து) வணிகம் நடத்தி பதினெண்பூமி தேசியரின் புகழ் ஒளிர திசை ஆயிரத்திலும் நிலைத்து நின்ற நான்கு திசை பதினெண் பூமி தேசித் திசை செட்டிகள், தளச்செட்டிகள் சேர்ந்த சித்திரமேழி வணிகரை துணையாக உடைய நாம் வண்ண புகழ் நடத்தி மரம் பெரியான் போன்ற வெளிப்படையான நல்லொழுக்கமும் விடாமுயற்சியும் (தாளாண்மை) நாள் நட்சத்திரமும் பார்த்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாள் அமைந்த திருமார்கழி மாத திருவிழாவிற்கும் பல தெய்வ காரியங்களுக்கும் வேண்டி பட்டணப் பகுதியில் இருந்து இங்கு வரும் பொதிக்கு வரியும், வெண்காதி வரியும், உப்பு பொதிக்கு வரியும், நூல் பொதிக்கு வரியும், சுங்கமிட்ட நெல் பொதிக்கு வரியும், அரிசி பேரளவு பொதிக்கு வரியும், துவரைப் பொதிக்கு வரியும், மிளகுப் பொதிக்கு வரியும், சுக்கு பொதிக்கு கடுகு பொதிக்கு வேட்டி புடவை கட்டுக்கு வரியும், மெல்லிய ஆடைக்கு (நென்புடவை) பருத்திப் பொதிக்கு வரியும், வெண்கலப் பொதிக்கு வரியும், தானியப் பொதிகளுக்கு வரியும், தையல் இலை கட்டு (கோட்டை) பொதிக்கு வரியும், ஆமணக்குப் பொதிக்கு வரியும், இரும்பு பொதிக்கு வரியும், பசுவெண்ணெய்க்கு வரியும், புளிவண்டிக்கு வரியும், தேவரடியார், நாடக நடிகர் ஆகியோர் புனையும் சவுரி மயிருக்கு (மாராப்பு, wig), சந்தன குச்சி திரைக்கு வரியும், யானை குதிரை ஒட்டகத்திற்கு வரியும் திரட்டி திருநாள் பணச் செலவிற்கு (கரை) பந்தல், தட்டி (மாராப்பு) செலவிற்கு செலவிடவும் சாமரம், மயில் விசிறி, ஒரு சுமை தேன், ஒரு சுமை மெழுகு ஆகியவற்றுக்கு கோரை அல்லது பிரம்பு திரைக்கு (உலண்டு, curtain) வரியும், மஞ்சள், கரும்புக் கட்டிப் பை (வெல்லம்) அவிழ்க்காத கட்டுக்கு வரியும், இடைவெளியுள்ள தட்டிக்கு (கலமாராப்பு) வரியும், எடைப் பொதிக்கு உப்பு வண்டிக்கு வரியும், ஆமணக்கு வண்டிக்கு என்பதோடு கல்வெட்டு செய்தி இல்லை. எனவே கல்வெட்டைத்  தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் இறைவன் பெயர் இன்னும் மேலான செய்திகள் ஏதும் இல்லை. வணிகர் மன்னர்கள் போலவே கோவில்களுக்கு நிவந்தங்கள் செய்துள்ளனர் என்பது இக்கல்வெட்டால் அறியவருகிறது. 

பொதுவாக கல்வெட்டு வாசிப்போர் பலர் எல்லாக் கல்வெட்டுச் சொற்களுக்கும் பொருள் அறிய முற்படுவதில்லை. ஏதோ அந்த நேரத்திற்கு எதையோ விளக்கினால் போதும் என்று நூல் அச்சிட்டு வெளியிடுகின்றனர். அதனால் அந்த பிழையான விளக்கம் 20 - 30  ஆண்டுகள் ஆனாலும் அங்கீகரிக்கப்பட்ட விளக்கமாக ஆகிவிடுகின்றது. பின்பு புதிதாக எவரேனும் அந்த விளக்கத்தை மறுத்து புது விளக்கம் தந்தாலும் அதை யாரும் ஏற்பதில்லை என்பதே காணக்கூடியதாக உள்ளது என்பதே பரிதாப நிலை.   
    

paneer 2.png


பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் புலப்படுத்துகின்ற வணிகக் குழுக்கள் மற்றும் படைப்பிரிவுகள் வரலாறு, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க பன்னீர்செல்வம். பக்கம் 314 - 315  

seshadri sridharan

unread,
Jun 15, 2026, 1:01:02 PM (8 days ago) Jun 15
to வல்லமை, hiru thoazhamai

seshadri sridharan

unread,
Jun 15, 2026, 7:10:04 PM (8 days ago) Jun 15
to வல்லமை, hiru thoazhamai, அகரமுதல மடல்கள், இலக்குவனார் திருவள்ளுவன், சிறகு இதழ், archcomm...@gmail.com, ketharanathan saravanan
Reply all
Reply to author
Forward
0 new messages