•விருப்பாச்சி கோபால நாயக்கர்•

17 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Nov 25, 2022, 5:08:02 AM11/25/22
to வல்லமை
•விருப்பாச்சி கோபால நாயக்கர்•
(ஆவணக் காப்பகத்தில் உறங்கும் உண்மைகள்)
•செப்டம்பர் 5 ம் தேதி கோபால நாயக்கர் தூக்கிலிடப்பட்டாரா?•
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று வ.உ.சிதம்பரனார், வெள்ளையத் தேவன் ஆகிய விடுதலைப் போராளிகளின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கரின் நினைவு நாளும் இதே நாளில்தான் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோபால் நாயக்கரின் மகன் பொன்னப்ப நாயக்கரின் கொள்ளுப் பேரன் ஸ்ரீதர் வேலுசாமி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்ட தினத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எழுத்து மூலம் அவர் அனுப்பிய விண்ணப்பம், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத் துறை, ‘செப்டம்பர் 5ஆம் தேதிதான் அவர் தூக்கிலிடப்பட்டார் என்பதற்கான ஆவணங்கள் ஏதும் இத்துறையில் இல்லை’ என்று பதிலளித்துள்ளது.
1801இல் நடைபெற்ற காளையார்கோவில் போருக்கு முன்பும் பின்பும் நடந்த தென்தமிழகத்தின் போராட்ட நிகழ்வுகள் தொடர்பான ஆவணங்களைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகம் - வரலாற்று ஆராய்ச்சி மையத்தில் கோபால் நாயக்கர் முதன்முதலாகப் பிடிபட்ட மார்ச் 23, 1801 முதல் அவர் தூக்கிலிடப்பட்ட நாள்வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் லெப்டினென்ட் கர்னல் ஜேம்ஸ் இன்ஸ் எழுதிய கடிதங்களைப் படித்தபோது கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்ட செய்தி இருந்தது.
•விருப்பாச்சி பாளையக்காரர் தூக்கிலிடப்பட்டது நவம்பர்:20•
கோபால் நாயக்கர் இரண்டாவது முறை பிடிபட்ட பிறகு நடந்தவை குறித்து ஜேம்ஸ் இன்ஸ் எழுதுகிறார்: ‘விருப்பாச்சி கோபால் நாயக்கர், குழந்தை வெள்ளை, வெள்ளையன் சேர்வைக்காரர் மூவரும் விருப்பாச்சியின் இடிந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டனர்.’ இன்ஸின் கடிதத்தின் மூலம் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் இறப்பு 1801 நவம்பர் 20ஆம் தேதி என்பது உறுதியாகிறது. செய்தி மக்கள் தொடர்புத் துறை, தூக்கிலிடப்பட்ட நாள் எதுவெனத் தெரியவில்லை என்று கூறியதற்கு விடை கிடைத்துள்ளது. பூலித்தேவனிடமிருந்து தொடங்கி மெல்ல ஆங்காங்கே பற்றிக்கொண்ட பிரிட்டிஷ் – பாளையக்காரர்கள் மோதல் 1801இல் தீவிரம் பெற்றது. சின்ன மருதுவின் ஒருங்கிணைப்பில் நாங்குநேரி தொடங்கி பூனா வரையிலும் போராட்டக்காரர்கள் களத்தில் இருந்தார்கள்.
•தூக்கிலிடத் தேடிய காரணங்கள்•
ராணுவ வியூகங்களைக் கடந்து, கொஞ்சம் சுழிச்சக்கரம் (அன்றைய நாணயம்), கொஞ்சம் கௌல் (நில உரிமை), கிழக்கிந்தியக் கம்பெனியின் அணுக்கம் ஆகியவற்றால் விளைந்த துரோகத்தில் தென்தமிழகப் பாளையக்காரர்களின் எழுச்சி, வீழ்ச்சியில் முடிந்தது. மருது சகோதரர்களோடு காளையார்கோவில் போரில் நேரடியாக ஈடுபட்டவர்களையும், போர் நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களையும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தூக்கிலிட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் தென்தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தூக்கிலிடப்பட்ட 1801 அக்டோபர் - நவம்பர் மாதத்தைய காட்சிகளைக் கண்முன்னால் கொண்டுவந்தால், இப்போதும் மனம் பதறும். தூக்கிலிடப்பட்டவர்களில் விருப்பாச்சிப் பாளையக்காரர் கோபால் நாயக்கரும் ஒருவர். ‘திண்டுக்கல் கலெக்டருக்குத் தபால் அனுப்பிவைக்கக் குதிரையொன்று கேட்டபோது, குதிரைச் சேவகனோடு குதிரை ஒன்றை அனுப்ப மறுத்துவிட்டார்’ என்பதுதான் கோபால் நாயக்கருக்கு எதிரான முதல் குற்றச்சாட்டு.
1801 ஜூன் 12 அன்று மதராஸ் கவர்னர் எட்வர்ட் கிளைவ், சின்ன மருதுவுக்கு எதிராக வெளியிட்ட பிரகடனத்தில், விருப்பாச்சி கோபால் நாயக்கர் சின்ன மருதுவுடன் இணைந்து கம்பெனிக்கு எதிராக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டுகிறார். ‘கம்பெனிக்கு எதிராக’ என்ற குற்றச்சாட்டில், குதிரை கொடுக்க மறுத்தது போன்ற ‘பெரிய’ காரணங்களும் உள்ளடங்கியிருந்ததைப் பார்த்தால், அன்றைய பாளையங்களை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு காரணங்களைத் தேடியது புரியும்.
•குதிரைக்காக கோபால நாயக்கரைக் காட்டிக் கொடுத்த தாசில்தார், தாசில்தாரைக் கொன்ற சின்ன மருது•
உண்மையில், தென்தமிழகத்தில் நடந்த போர்களில் விருப்பாச்சி நாயக்கரின் பங்களிப்பு அதிகம்; சிவகங்கை ராணி வேலு நாச்சியார் கைக்குழந்தையுடன் ஆதரவின்றி நின்ற சமயத்தில் அமைச்சர் தாண்டவராயப் பிள்ளை, பெரிய மருது, சின்ன மருது போன்ற தளபதிகளுடன் இழந்த தம் சிவகங்கையை மீட்பதற்குப் படை திரட்டும்வரை, ஏழாண்டுகள் விருப்பாச்சிக் காடுகளில் தங்கியிருக்க அடைக்கலம் கொடுத்தார். தென்தமிழகப் போராளிகளுக்கு விருப்பாச்சி பாளையத்தின் கருமலை அடிவாரமே ரகசியப் புகலிடம். ஆயுதப் பயிற்சி, போர் முன்னெடுப்புகள், சக போராளிகளுடன் கடிதப் போக்குவரத்து, போராட்டங்களுக்குப் பண உதவி, ஆயுத உதவியென்று விருப்பாச்சிப் பாளையத்தைப் போராளிகளின் நம்பிக்கையிடமாக வைத்திருந்தவர் கோபால் நாயக்கர். திண்டுக்கல்லின் முதல் பேஷ்குஷ் கலெக்டர் ஹுர்டிஷ் பதவியேற்ற 1798 முதல், கலெக்டரும் ராணுவ அதிகாரிகளும் கோபால் நாயக்கரைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்ததோடு, அவரது நடவடிக்கைகள் குறித்து கவர்னருக்குத் தொடர்ந்து கடிதமும் எழுதிவந்துள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் போராளிகளின் மறைவிடங்களைச் சொற்ப வெகுமானங்களின் மூலம் கண்டறிந்தது. கோபால் நாயக்கரின் மறைவிடத்தை நத்தம் தாசில்தார் நத்தர்கான் காட்டிக்கொடுத்தார். காட்டிக்கொடுத்த தாசில்தாருக்குக் கிடைத்த பரிசு கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு குதிரை.
கைதுசெய்யப்பட்ட ஐந்தாவது நாள், மகன் முத்துவெள்ளை நாயக்கருடன் சேர்ந்து கோபால் நாயக்கர் தப்பினார். குதிரை பரிசு பெற்ற தாசில்தாரைச் சின்ன மருதுவின் ஆட்கள் கொன்றுவிட, கம்பெனி அதிகாரிகளின் கோபம் கோபால் நாயக்கர் மீதும் சின்ன மருதுவின் மீதும் அதிகமானது. கோபால் நாயக்கரும் அவர் மகன் முத்துவெள்ளை நாயக்கரும் 1801 மே 6 அன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டார்கள். போராளிகளைக் கைதுசெய்த உடனேயே அவர்கள் பிரபலமாக உள்ள இடத்துக்கு இழுத்துச் சென்று தூக்கிலிடும் கம்பெனி, கோபால் நாயக்கர் விஷயத்தில் சற்று நிதானம் காட்டியது. அதற்குக் காரணமாக கோபால் நாயக்கரின் முதுமையும் அவரது நற்குணங்களும் என்கிறார், திண்டுக்கல் லெப்டினென்ட் கர்னல் ஜேம்ஸ் இன்ஸ்.
தென்தமிழகத்தில் நடைபெற்ற போரில் மருது சகோதரர்கள், ஊமைத்துரை, யத்தலப்ப நாயக்கர், சின்னமலை, ஷேக் உசேன் போன்ற போராட்டக்காரர்களுக்கு வழிகாட்டியாகவும் புரவலராகவும் இருந்த கோபால் நாயக்கரைத் தூக்கில் போட்ட லெப்டினென்ட் கர்னலின் கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு, நவம்பர் 20ஆம் தேதியைக் கோபால் நாயக்கரின் நினைவுதினமாகக் கடைப்பிடிக்க வேண்டும். வரலாற்று ஆவணம் கிடைக்கப்பெறாத நிலையில், அவர் தூக்கிலிடப்படுவதற்கு 75 நாட்களுக்கு முன்பாகவே அனுசரிக்கப்பட்டுவரும் செப்டம்பர் 5ஆம் நாளுக்குப் பதில், நவம்பர் 20 என்று அறிவிக்கப்பட வேண்டும். உண்மையான தரவுகள் கிடைக்கும்போதெல்லாம் வரலாறு தன்னைத் திருத்தி கொள்வது வாடிக்கைதான், இல்லையா? நவம்பர் 20: விருப்பாச்சி கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்ட நாள் - மு.ராஜேந்திரன், முன்னாள் ஐ.ஏ.எஸ்.,
மூலம் : தமிழ் இந்து
நன்றி: வழக்கறிஞர் கலைமணி அம்பலம்

வேந்தன் அரசு

unread,
Nov 29, 2022, 1:40:46 AM11/29/22
to vall...@googlegroups.com
<மு.ராஜேந்திரன், முன்னாள் ஐ.ஏ.எஸ்>என் பெயரன் 

வெள்., 25 நவ., 2022, பிற்பகல் 3:38 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTW39CCjs1R6E4CRzmZ1o%3DAtHGrcKi9ax25v_XJ4KLTLA%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages