குதிக்கும் தலை(சிடி தலெ),பொம்மிடி,தர்மபுரி:
பொம்மிடி கிராமத்தின் பிரதான சாலையில் இருந்து சற்று உட்புறமாக உழுது கிடந்த நிலத்திலே
சிறிது தூரம் நடந்து சென்ற பின் தொலைவில் தெரிந்த ஒரு பெரிய வேப்ப மர நிழலில் அமைந்த பலகை கல் தூரத்திலிருந்தே தெரிகின்றது.
அதன் அருகில் சென்று பார்வையிட்டபோது,"உலைய உள்ளமொடு உயிர்க் கடனிறுத்தோர், தலை தூங்கு நெடுமரம்" என்று சங்கப் பாடலில் கூறிய காட்சியை காண முடிந்தது.
சுமார் நான்கடி அகலமும் ஐந்தடி உயரமும் உள்ள பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக, கீழ் வலது ஓரம் ஒரு மனித உருவம் அமர்ந்த நிலையில் இருக் கைகளை கும்பிட்ட நிலையிலும்,அவர் தலைமுடி ஒரு வளைந்த மூங்கில் கழியில் கட்டப்பட்டுள்ளது. அவர் எதிரே இடதுபுறம் யானை மீது அமர்ந்து ஒருவர் கையில் நீண்ட வாளுடன் காட்சி அளிக்கிறார்,அவர் தலைக்கு மேல் வெண்கொற்றக்குடை உள்ளது.அதற்கு மேல் இவ்வீரரை வானுலகம் அழைத்துச் செல்லும் இரு தேவதைகள் உருவமும் பக்கத்தில் பழங் கன்னட மொழியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு கூறும் தகவல்,பத்தாம் நூற்றாண்டில் நுளம்ப மன்னர் ஐயப்ப தேவன் என்பவரின் படையை சார்ந்த வீரன் ஒருவன் தன் அரசனின் படையின் வெற்றிக்கு வேண்டி தெய்வத்துக்கு தன் தலையை அரிந்து 'தூக்குதலை' கொடுத்துள்ளார்.
வீரர் தன் தலைமுடியை மூங்கிலில் வளைத்து முடியை பிணைத்து அமர்ந்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டதால் வளைந்த மூங்கில் நிமிர்கிறது,அந்த வேகத்தில் துண்டிக்கப்பட்ட தலை துள்ளி மேலே செல்கிறது,இந்த காட்சியை "சிடிதலெ" என ஹளே கன்னடத்தில் குறிப்பிடுகின்றனர். தமிழில் "குதிக்கும் தலை" என்பது இதன் பொருள்.
இந்த நிகழ்வு நடந்த இவ்விடத்தில் அவர் நினைவாக இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்கும், ஆயிரம் வருடங்களை கடந்தும் இவ்வீரரின் தியாகத்தை நினைவூட்டுகிறது, வயல்வெளியில் தனித்து காணப்படும் இவ்வறியா நடுகல்.
பி.கு: இது புதிய கண்டுபிடிப்பு அல்ல.
வழிகாட்டி அழைத்து சென்று என்னை படம் எடுத்த
நண்பர் மோகனுக்கு நன்றி.