கள்ளக்குறிச்சி அருகே நாகலூரில் 1200 ஆண்டுகள் பழமையான செக்கு கல்வெட்டு மற்றும் சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
ஆய்வு மற்றும் கட்டுரை: ஆறகளூர் பொன்.வெங்கடேசன்
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுர்கம் வட்டம், நாகலூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்களான விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன் மற்றும் சங்கீதா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த ஆய்வில் 1200 ஆண்டுகள் பழமையான பிற்காலப் பல்லவர் கால செக்கு கல்வெட்டு, 1080 ஆண்டுகள் பழமையான சோழர் கால கல்வெட்டு, சோழர் கால சிவன் கோயில் கல்வெட்டு மற்றும் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொண்டைமான் கல்வெட்டு என முக்கிய வரலாற்று ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பழங்கால கல் செக்கு மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி
பழங்காலத்தில் மின்சாரம் இல்லாத காலகட்டத்தில், கோயில்களிலும் வீடுகளிலும் விளக்குகளை எரிக்கவும், சமையல் தேவைகளுக்கும் எண்ணெய் மிக முக்கியமானதாக இருந்தது. இதற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கல்லால் ஆன சிறு உரல் போன்ற கல் செக்குகள் பயன்படுத்தப்பட்டன. குறுநிலத் தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் போன்றோர் இத்தகைய கல் செக்குகளை உருவாக்கி, கோயில் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தானமாக அளிப்பது வழக்கமாக இருந்துள்ளது.
தானமாக வழங்கப்படும் போது, அதைச் செய்து கொடுப்பவர் தன் ஊர், தந்தை பெயர் மற்றும் தன் பெயரையும் அந்தச் செக்கில் கல்வெட்டாகப் பொறித்துத் தருவது அக்கால மரபாகும். செக்கில் எண்ணெய் ஆட்டுபவர்கள், அதற்குரிய கூலியாக ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெயைக் கோயிலுக்கோ அல்லது அரசுக்கோ செலுத்தி வந்தனர்.
நாகலூர் செக்கு கல்வெட்டு (1200 ஆண்டுகள் பழமையானது)
நாகலூரில் மாரியம்மன் கோயில் தெருவில் சாலையோரம் கிழக்குப்புறமாகச் சாய்ந்து, பாதி புதையுண்ட நிலையில் ஒரு கல் செக்கு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்தச் செக்கின் வெளி விளிம்பு விட்டம் 67 செ.மீ, உள் விளிம்பு 54 செ.மீ மற்றும் நடுவில் உள்ள குழியின் ஆழம் 32 செ.மீ ஆகும்.
உரலின் மையப்பகுதியில் ஒரு வரியில் வளைவாகக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் எழுத்தமைதியைக் கொண்டு, இது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிற்காலப் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம். தமிழ் மற்றும் கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டு ‘ஸ்ரீ’ என்ற மங்களச் சொல்லுடன் துவங்குகிறது.
‘ஸ்ரீ குந்தை காடன்முரி செய்வித்தது’
இதில் ‘குந்தை’ என்பது தந்தையின் பெயராகவும், ‘காடன்முரி’ என்பது கல் செக்கைத் தானம் கொடுத்தவரின் பெயராகவும் கருதலாம்.
இக்கல்வெட்டில் ‘செய்வித்தது’ என்ற சொல்லில் வரும் ‘ய்’ என்ற யகரம் மிகவும் வித்தியாசமான முறையில் வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு (கி.பி. 940)
நாகலூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலின் கருவறையில், பெருமாள் சிலைக்கு முன்பாகப் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. 88 செ.மீ நீளமும், 64 செ.மீ அகலமும் கொண்ட இக்கல்லில் மொத்தம் 14 வரிகள் உள்ளன. அதில் 5 வரிகள் மட்டுமே தற்போது படிக்கும் நிலையில் உள்ளன.
இது 1080 ஆண்டுகளுக்கு முற்பட்ட, முதலாம் பராந்தக சோழனின் 33-ஆம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டாகும் (கி.பி. 940). இக்கல்வெட்டு ‘ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மருக்கு’ என்ற முதலாம் பராந்தக சோழனின் மெய்க்கீர்த்தியோடு தொடங்குகிறது.
தற்போது நாகலூர் என்று அழைக்கப்படும் இவ்வூர், இக்கல்வெட்டில் ‘நாவலூர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நாவல் மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம். பரனூர் கூற்றத்தின் கீழ் இந்த நாவலூர் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புதான் நாவலூர் என்ற பெயர் ‘நாகலூர்’ என மருவியுள்ளது.
ஆனந்ததாண்டயத் தொண்டைமான் கல்வெட்டு (17-ஆம் நூற்றாண்டு)
இதே வரதராஜப் பெருமாள் கோயில் கருவறையின் வெளிப்புறத் தெற்குப் பக்கச் சுவரில் 5 வரிகளைக் கொண்ட ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இதன் எழுத்தமைதியைக் கொண்டு இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கலாம். இந்த கல்வெட்டிலும் இவ்வூர் நாவலூர் என்றே அழைக்கப்பட்டுள்ளது.
ஆனந்ததாண்டயத் தொண்டைமான் என்பவர், இப்பெருமாள் கோயிலுக்கு ஆயிரம் குழி நஞ்சை நிலத்தைச் ‘சர்வமானியமாக’ (வரி விலக்கு அளிக்கப்பட்ட தானம்) வழங்கியதை இது குறிப்பிடுகிறது. சந்திரன் உள்ளவரை இந்தத் தானம் நிலைத்திருக்க வேண்டும் என்றும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ கயிலாயமுடைய நாயனார் கோயில் கல்வெட்டு
நாகலூரில் உள்ள ஸ்ரீ கயிலாயமுடைய நாயனார் என்ற சிவன் கோயிலின் முன்பாக உள்ள ஒரு பலகைக் கல்லிலும் மிக முக்கியமான ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. நட்டு வைக்கப்பட்டிருப்பதால் கல்வெட்டின் ஒரு பகுதி பூமிக்கு அடியில் புதைந்துள்ளது. இதன் முன்புறம் 13 வரிகளும், பின்புறம் 9 வரிகளும் காணப்படுகின்றன. இது வீர ராஜேந்திர சோழனின் 13-ஆம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்ததாகும்.
ஸ்வஸ்திஸ்ரீ வீர ராசெந்திர
சோழ தெவற்கு யாண்டு கங(13) மிலா
டாகிய ஜனநாத வளநாட்டு பரனூற்
கூற்றத்து நாக[ங]லூர் ஸ்ரீ கயிலாயமுடை
ய நாயனார்க்குத் துறையாடையான் ஊரா
ன ஆடுவானன் நந்தி மூவராயனென் முன்பு உ
டைய நிலம் பத்து நான் விட்ட நிலம் பத்
த்து இவ்வேலியும் பூசை செலவுகாக நான்
கண்ட திரு ஸ்ரீவிளக்கு விட்ட புன்செய் நாலு வெ
லியும் திருவரஞ்சிரமுடையார் அமாவாசி
நிலத்தி மரக்கால் பதக்கு பாடி காவல்
நன்செய் நிலத்திலே வந்த மா கலமு
(இதன் தொடர்ச்சி பூமிக்குள் புதைந்துள்ளது)
இ தெவற்கு திரு நாடி செய் [யீ]
ஸ்வர தாக இக்கொயில் காணி உ
யய்யன் சுறசி எஞ்சான் ஸ்ரீ காழி[ய]ப்பன்
ளனையுந் தம்பிமார்களும் - - - -
த் தென்கரையுடையான் [தெ தண்டமுடையான்] நந்தி ப
ட்டயநென் இது விளக்குவான் - - -
மிலா டாகிய ஜனநாத வளநாட்டு, பரனூர்க் கூற்றத்து நாவலூரில் (நாகலூர்) அமைந்துள்ள ஸ்ரீ கயிலாயமுடைய நாயனாருக்கு, துறையாடையான் ஊரான ஆடுவானன் நந்தி மூவராயன் என்பவர் தனது நிலத்தையும், பூசைச் செலவுகளுக்காகப் புன்செய் நிலம் நாலு வேலியையும் தானமாக அளித்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
பல்லவர் காலம் முதல், சோழர் காலம் மற்றும் 17-ஆம் நூற்றாண்டு வரை நாகலூர் கிராமம் மிகச் சிறந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட தொடர்ச்சியான வாழ்விடமாக இருந்துள்ளது என்பதை இந்தக் கல்வெட்டுகள் மெய்ப்பிக்கின்றன. சாலை ஓரத்தில் கேட்பாரற்றுச் சாய்ந்து கிடக்கும் 1200 ஆண்டுகள் பழமையான கல் செக்கு மற்றும் பழமை வாய்ந்த இக்கல்வெட்டுகளைப் பாதுகாக்கத் தமிழகத் தொல்லியல் துறையும் அரசும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
கள்ளக்குறிச்சி அருகே நாகலூரில் 1200 ஆண்டுகள் பழமையான செக்கு கல்வெட்டு மற்றும் சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
