நுந்துகன்று - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் நினைவாக

26 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 2, 2018, 6:34:51 AM2/2/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, sirpi balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, Ramachandran Nagaswamy, Erode Tamilanban Erode Tamilanban, Iravatham Mahadevan, Theodore Baskaran, George Hart, Pas Pasupathy, SUBBAIER RAMASAMI, Ramamoorthy Ramachandran
கவிஞர் சு. பசுபதி அவர்கள் பிள்ளையவர்கள் நினைவுதினத்தில்
அவரது தலைமாணாக்கர் உவேசா எழுதிய திருவாசகப்பாடலில்
அரிய சொல்லைப் பற்றிய செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

நுந்துகன்று:

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ” 

நுந்து கன்று என்பது தாய்ப்பசுவால் வலுக்கட்டாயமாக
(உ-ம்: உதைத்து) வெளியே தள்ளப்படும் கன்று. A calf weaned away by its mother cow.
அதுபோல் என்னை விட்டுவிடாதே என சிவபிரானிடம் வேண்டுகிறது திருவாசகம்.   
நுந்துதல் > உந்துதல். உந்தி கையாலோ, காலாலோ தள்ளப்படும் பந்து. “உந்தீ! பற!”.
நீர் > ஈரம், நுண்ணி > உண்ணி (கிருஷ்ணன் குழந்தை - குருவாயூர்) ... நுந்து > உந்து.
நுந்தாவிளக்கு - தூண்டாவிளக்கு.

நுந்துகன்று என்னும் மாணிக்கவாசகர் பயன்படுத்தும் சொல்லைப்போல
பலசொற்கள் படைக்கலாம் என தோன்றுகிறது. 
நுந்துகன்று = நுந்தப்பெற்றகன்று =  A calf weaned away by its mother cow.

சுற்றுப்புறச் சூழல், இயற்கை பற்றி ஆங்கிலம், தமிழில் எழுதும்
நண்பர் எஸ். டி பாஸ்கரன் ஒருமுறை ‘domesticated animal' தமிழில்
எப்படிச் சொல்வது எனக் கேட்டிருந்தார்:

நுந்துகன்று - நுந்தப்பெறும்கன்று
அதுபோல,
படிவிலங்கு - (படியவைக்கப்படும் விலங்கு) - tamed animal
பயில்விலங்கு - பயிற்றப்படும் விலங்கு - trained animal
வளர்விலங்கு - (மனிதனால்) வளர்க்கப்பெறும் விலங்கு - domesticated animal.

நா. கணேசன்

என் சரித்திரம், உவேசா

வியாழன், 1 பிப்ரவரி, 2018

978. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 4

‘நுந்து கன்று’
உ.வே.சாமிநாதையர்



பிப்ரவரி 1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நினைவு தினம்.

அவருடைய கடைசி நாள்களில் நடந்த ஒரு நிகழ்வை உருக்கத்துடன் உரைக்கிறார் உ.வே.சா.
======

மார்கழி பிறந்தது; அது போய்த் தையும் பிறந்தது; ஒரு வழியும்
பிறக்கவில்லை. ஆசிரியர் நிலை வரவர அதிகமான பயத்திற்குக்
காரணமாயிற்று. தேவாரத்தில் அவர் அப்போது விளக்கிய விஷயங்கள் சில.

ஒருநாள் திருவாசகம் வாசித்து வந்தேன். இலக்கியச் சுவையோடு,
சிவபெருமான் திருவருட் பெருமையை எடுத்துரைத்துக் கேட்போரை
உருகச்செய்யும் பத்திச் சுவையும் நிரம்பியுள்ள அதனை ஆசிரியர் கேட்டு
வரும்போது இடையே கண்ணீர் விடுவார். அந்தத் தெய்விக நூற் செய்யுட்கள் அவர் உள்ளத்தை உருக்கினவென்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

சிவபெருமான் திருவடியை எப்பொழுதும் மறவாத உள்ளத்தினராக இருந்தாலும் அந்நினைவு மற்றச் சமயங்களில் மற்ற நினைவுகளுக்கிடையே தலைமை பெற்று நின்றது. அப்பொழுதோ அந்நினைவையன்றி வேறொன்றும் அவர் உள்ளத்தில்
இடம்பெறவில்லை.

திருவாசகத்தில் திருக்கோத்தும்பியென்னும் பகுதியைப் படித்தேன்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற செய்யுளை வாசித்தேன், ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள்
விளங்கவில்லை. சந்தேகம் கேட்கும் பொருட்டுத் தலை நிமிர்ந்து ஆசிரியரைப் பார்த்தேன். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “நுந்து கன்றாய் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. நாக்குக் குழறியது; தொண்டை அடைத்தது. “வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போல” என்று அந்தக் குழறலோடே சொன்னார். அந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் பெருகியது. தளர்ச்சியால் பேச முடியாமல் இருந்த ஆசிரியர் அந்தப் பாட்டில் உருகிப்போய் அவசமுற்றிருந்தார்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து”

என்ற அடி அவர் உள்ளத்தைப் பிணித்து அன்புணர்ச்சியை
எழுப்பிவிட்டது. மாணிக்கவாசகரது அவ்வாக்கு என் ஆசிரியருடைய நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நோயுற்று மூத்துநின்ற அவருடைய உள்ளக்கருத்தை அந்தச்செய்யுள் தெரிவித்தமையால் அவர் உருகிப் போனார்.

“தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற அடிகளில் மாணிக்கவாசகர் சிவபெருமான் தமக்கு அருளிய
பெருங்கருணைத் திறத்தைப் பாராட்டுகிறார். அவரை ஆண்டு கொண்ட
வண்ணம் தம்மையும் ஆண்டு கொள்வாரோ என்ற ஏக்கமும் ஆசிரியர்
உள்ளத்தே எழுந்தது போலும்! அவர் அப்பொழுது இவ்வுலகில் இருந்தாலும் இந்நினைவுகள் எல்லாம் சேர்ந்து அதனை மறக்கச் செய்துவிட்டன. “இவர் இப்போது நம்மோடு பேசவில்லை. ஆண்டவனோடு பேசுகிறார். இவர் தம் உள்ளமாகிய கோத்தும்பியை மாணிக்கவாசகரைப் போலச் சிவ பெருமான் திருவடி மலரில் ஊதும்படி விட்டிருக்கிறார்” என்ற உண்மையை அப்போது தெளிவாக நான் அறிந்து கொள்ளவில்லை. சிலநேரம் மௌனம் நிலவியது.

அவர் திருவாசகத்தில் ஒன்றி உருகினார்: நான் அவர் நிலைகண்டு
உருகினேன். பின்பு மீண்டும் தொடர்ந்து படிக்கலானேன்.

தொடர்புள்ள பதிவுகள்: 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை



Reply all
Reply to author
Forward
0 new messages