புனல்வாய், புனல்வாயில் என்றால் மதகு, கால்வாய் என்ற பொருள்களைச் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தெளிவாக உள்ளது. காட்டாக, இருப்பையூர் ‘புனல்வாய் இருப்பை’ என்று நற்றிணையிலும், சங்கச் சேரர்களில் தலநகர் வஞ்சி (இன்றைய கரூர்) ஆன்பொருனை (இன்றைய அமராவதி ஆறு) கால்வாய்கள் வெட்டி நீர்வளத்தால் மருத நிலவளம் பெறுவது சிறுபாணாற்றுப்படையிலும், பதிற்றுப்பத்தில் மலைநாட்டு வளம் கூறப் புனல்வாயிலும் கூறப்பட்டுள்ளன. வேளிர் தமிழ்நாட்டில் புனல்வாய்கள் அமைத்து நெல் பயிரிட்டதும், குதிரைகளை வட இந்தியாவில் இருந்து கொணர்ந்ததும், ஐயனார் வழிபாடு ஏற்பட்டதுமான சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட, முதுமக்கள் தாழிப் புதையல் தொடங்கிய காலத்திலேயே புனல்வாய் (அ) புனல்வாயில் குடிகளுக்கு நன்மை என்று ஏற்பட்ட திட்டமாகும். புனல்வாய் -இல் விகுதி ஏற்று புனல்வாயில் என்று வரும். தேவாரத்தில் புனல்வாயில், அதன் பேச்சுவழக்காம் புனவாயில் இரண்டும் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன. இன்றைய திருப்புனவாசல் பாண்டி பதினான்கில் ஒன்று. பக்தி இலக்கியத்தில் பொய்கை, குளங்கள், புனல்வாய் என்று பாடல்களில் உள்ளன. புனல்வாய் என்பது மதகு, கால்வாய், ஆற்றுக்கும் குளங்களுக்கும் நீர்ப்போகுவரத்துக்காக வயல்களின் இடையே செய்வது. இதனை அறியாமல், தற்கால உரைகள் எழுதப்படுதலும் உண்டு. உதாரணமாக, அன்றைய வேளாண்மையில் முக்கியக் கலைச்சொல்லாக இருந்த புனல்வாய் (sluice of a channel, channel) பற்றி அறியாததால் இன்றைய உரைகளில் இக் குறைபாடு எனக் கருத இடமுண்டு. மேலும் இன்றைய உரைகாரர் நகரத்தில் பிறந்து, விவசாயம் பற்றி அறியாதவராகக் கூட இருக்கலாம். கம்பன் பாடலும், திருமுறைப் பாடல்களும் பின்னர்க் காண்போம். புனல்வாய் -இல் விகுதி ஏற்றுப் புனல்வாயில் ஆகிறது. புனல்வாயில் (திருப்புனவாசல்) பற்றிய அப்பர் தேவாரம் காண்க.
ஐ என்றால் அழகு, -இல் விகுதி ஏற்று ஐயில்/அயில் = அழகு என வருதலும் உண்டு:
இவ்வாறு உரைசெய்ய, தமிழ்நாட்டில் உள்ள புனல்வாயில் (=புனல்வாசல்) என்ற ஊர்கள் பலவற்றையும் கூகுள் மேப் ஒன்றில் இட்டுப் பார்த்தால் வெள்ளிடைமலை என விளங்கும். சில தமிழ்நாட்டு ஊர்கள்: புனல்வாயில். கம்பன் பாடலுக்கு இவ்வூர்ப்பெயர் ஆய்வால் தெளிவாகும் உரை பின்னர் எழுதுகிறேன்.
(1) புனல்வாசல், தலைவாசல் வட்டம், சேலம் மாவட்டம்.
(2) புனல்வாசல், பேராவூரணி, தஞ்சை மாவட்டம்
(3) புனல்வாசல், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் 614803
(4) சின்ன புனல்வாசல், கெங்கவல்லி, சேலம்
(5) புனல்வாசல், திருவையாறு வட்டம்
(6) திருப் புனல்வாசல், தேவார ஸ்தலம்
(7) புனல்வாசல், ஆறகழுர், ஆத்தூர் வட்டம், சேலம்
(8) புனல்வாசல், கொள்ளிடக் கரையில்
(9) புனல்வாசல், அதிராம்பட்டினம்
...
நா. கணேசன்
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் பணிபுரியும் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறனிடம் பேசினோம்… “சங்க இலக்கியங்களில் `புனலாடுதல்’ என்ற பெயரில் தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும் விழாக்கள், தண்ணீரில் கொண்டாடப்படும் விளையாட்டுகள் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. நீரை, கடவுளாகவும், வழிபடும் பொருளாகவும் கொண்டாடி இருக்கிறார்கள். பெரிய ஏரிகள், குளங்களில் நீர் தேங்கி வெளியேறும் பகுதிகளின் ஊர்களை நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து `புனல்வாசல்’ என நீரைக் குறிக்கும் வகையில் ஊர்ப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். அது, காவிரிப் பகுதியில் இன்றளவும் இருக்கிறது. `சீவகசிந்தாமணி’ காப்பியத்தில் `போரில் வெற்றி பெற்றால், ஆரவாரம், மகிழ்ச்சி என ஆர்ப்பரித்துக் கொண்டாடுவார்கள். அதே அளவு கொண்டாட்டத்தை உற்சாகத்தோடு தண்ணீரில் கொண்டாடியிருக்கிறார்கள்’ என குறிப்புகள் உள்ளன. உயரமான மாடத்தில் இருந்து பெண்கள் தண்ணீரில் குதித்து விளையாடியிருக்கிறார்கள். நீரைப் பற்றி அதிகளவில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விழா கொண்டாடப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் தண்ணீருக்கான விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். மலைகளில் உருண்டு, மூலிகைகளில் பட்டு, அருவியாகக் கொட்டும் நீரில் குளித்தால் உடலில் உள்ள நோய்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவார்கள். அதுபோலவே காவிரியில் வரும் புது நீரை வரவேற்று, அதில் குளித்து, கும்பிட்டால் எல்லா கஷ்டங்களும் நீங்கி புத்துணர்வோடு இருப்பார்கள். அதனாலேயே ஆடி 18 அன்று காவிரிக் கரையில் கூடி ஆரவாரம் பொங்க ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறார்கள்.
புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் என்பவர் தன் இளமைக் காலத்தில் ஆற்றில் குதித்து, நீச்சல் அடித்து விளையாடுவார். வயதானவுடன், `இனிமேல் நம்மால் இந்த ஆற்றில் முன்புபோல் விளையாட முடியாதே…’ என வருத்தப்பட்டு பாடல் பாடியிருக்கிறார். அந்த அளவுக்கு தண்ணீர் வறட்சி இல்லாமல் செழிப்பாக இருந்திருக்கிறது என்பதை அந்தப் பாடல் காட்டுகிறது’’ என்கிறார் மணி.மாறன்.
ஆறு, ஏரி, குளம் எனப் பெரும் வெள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்பட்ட இந்த விழா, இன்று கடுமையான வறட்சியாலும் போதுமான தண்ணீர் இல்லாமலும் வருடா வருடம் வெடித்துக் காணப்படும் வயல் வெளியைப்போலவே உற்சாகம் இன்றி வறண்டு கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.