இலங்கையின் வெள்ளவத்தை வட்டார வழக்கு...
தமிழகத்தில் வட்டாரத்துக்கு வட்டாரம் வழக்குகள் மாறுபடுவதை ரசித்துப் பழகி இருந்தாலும் இந்த இலங்கை வழக்கு... புதிதாக உள்ளதால் மிகவும் ரசித்து வாசிக்க வைத்தது.
/// டிப்பிறசன் கெட்ட சாமான் எண்டுவார் எங்கட அப்பு. எனக்குத் தெரிஞ்ச வெள்ளைக்காற டாக்குத்தர் மருந்தால டிப்பிறசனைக் குறைக்கலாமே தவிர மாத்தேலாது மரணம்தான் முடிவு எண்டுவார். மேல்நாட்டில திடீர் திடீர் எண்டு நடக்கிற துவக்குச் சூடு கத்திக்குத்து எல்லாம் அதுகின்ரை வெளிப்பாடுதான் எண்டுவார் அவர். உந்த டிப்பிறசன் கூடி கனபேர் தற்கொலை செய்திருக்கினம்.
உந்த டிப்பிறசனைக் குறைக்க எண்டு தான் எங்கட சமயத்தில ஆடல் பாடல் பஜனை கூட்டுப் பிரார்த்தனை தியானம் யோகம் பாதயாத்திரை எண்டு கன விசயங்களை அறிமுகப்படுத்தினவை. உந்த டிப்பிறசனைக் குறைக்க எண்டு தான் கோயில்களை உண்டாக்கி திருவிழாக்கள் பண்டிகைகள் விரதங்கள் பூசைகள் புனஸ்காரங்களைக் கொண்டு வந்தவை.
திருவிழாக் காலத்தில குறிப்பாக இரவுத் திருவிழாவில பாட்டு ஆட்டம் கதாப்பிரசங்கம் வில்லுப்பாட்டு நாடகம் மேளக்கச்சேரி சின்ன மேளம் எண்டு கொண்ணந்து சனங்களைக் கொண்டாட்ட மனநிலையில வைச்சு டிப்பிறசனை இல்லாமல் பண்ணினவை. ஊரில குறிச்சிக்கு குறிச்சி கோயிலை உண்டாக்கி ஒரு கோயில் முடிய இன்னொரு கோயில் எண்டு திருவிழாக்களை நடத்தி சனங்களை கொண்டாட்ட மனநிலையில வைச்சிருந்தவை.
உந்தக் கோயில் திருவிழாக்கள் தை தொடங்கி ஆடி வரை நடக்கும். பேந்து ஆடியில துடங்கி தை வரை உழவு விதைப்பு அருவிவெட்டு சூடடிப்பு எண்டு பிசியா வேலையில கண்ணும் கருத்துமா இருக்கிறபடியால சனத்துக்கு டிப்பிறசன் இருக்காது எண்ட படியால திருவிழாக்கள் இருக்காது எண்டாலும் விரதங்களுக்கும் கூட்டுப் பிரார்த்தனைகளுக்கும் குறைவிருக்காது.
அதாலதான் கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்...ஆலயம் தொழுவது சாலவும் நன்று..ஊன் உடம்பு ஆலயம் உள்ளம் பெரும் கோயில் எண்டு கோயில் வழிபாட்டை முக்கியப் படுத்தினவை. அதால முந்தி எங்கட சனத்துக்கு டிப்பிறசன் எண்டு ஒண்டு வந்ததில்லை.
ஆனால் பேந்து கடவுள் மறுப்பு, நாகரீகம், முற்போக்கு, பெரியார் சொன்னார் மாக்ஸ் சொன்னார் அந்தப் புத்தகம் படிச்சன் இந்தப் புத்தகம் படிச்சன் அந்த ஞானி அப்பிடிச் சொன்னார் இந்த ஞானி இப்பிடிச் சொன்னார் எண்டு வெளிக்கிட்டு கோயில் பக்கம் போகவிடாமல் டிப்பிறசன் கூடின ஒரு சமூகத்தை உருவாக்கி வைச்சிருக்கிறம். குறிப்பாக இண்டைய இளஞ் சமுதாயத்தை நாசப்படுத்தி வைச்சிருக்கிறம்.
உந்த இளஞ் சமூகத்தை நாசப்படுத்தில பூசை செய்யிறவை, பிரசங்கம் செய்யிறவை, கோயில் நடத்திறவையின்ரை கோல்மால் விளையாட்டுகளும் ஒரு காரணம் எண்டுவார் குஞ்சப்பு.அதாலதான் அவங்கள் இப்ப போதை அது இது எண்டு பாதை மாறிப்போறாங்கள். இல்லாட்டில் மோட்டச்சயிக்கிளை முறுக்கி ஆற்றையும் கவட்டுக்கை விடுகிறது, கூட்டமாச் சுத்திறது சத்தமாப் பாட்டுப் போட்டு ஆடுறது அடிபிடி சண்டை சச்சரவு வாள்வெட்டு கோஸ்டிச் சண்டை எண்டு டிப்பிறசனைக் குறைக்க எண்டு ஓடுப்பட்டுத் திரியிறாங்கள். இது விளங்காமல் நாங்கள் அவங்களை எப்ப பாத்தாலும் குறை சொல்லிறம்.
கிட்டடியில எங்கட வாரி வளவு பிள்ளையார் கோயில் வைரவர் பொங்கல் நடந்தது. ஊரிக்கில் பெண்டுகள் ஆண்டுகள் பெடியள் பெட்டையள் எல்லாம் கூடிப்பொங்கினவை. அதில முக்கியமா என்ரை சொந்தக்காரி ஒருத்தி வெள்ளவத்தையில கண்டால் எட ஆனந்தா எனக்குச் சரியான வருத்தம். மூட்டுகள் வீங்கிப் போச்சு...இருந்தால் எழும்பேலாது எழும்பினால் இருக்கேலாது. அவன் டாக்குத்தன் பை நிறையக் குளுசையளைத் தந்திருக்கிறான். சோத்தைத் தின்னிறதோ குளுசையைத் தின்னிறதோ தெரியேல்லை எண்டுவா.
என்ரை இன்னொரு சொந்தக்காரி அவவும் வெள்ளவத்தையில தான் இருக்கிறா. தெருவில கண்டு என்னடி அக்கை எப்பிடி இருக்கிறாய் எண்டால்...அட ஆனந்தா இந்தக் கோதாரி விழுந்த ஆத்திறட்டீஸ் வந்து மூட்டுகள் எல்லாம் தேஞ்சு போச்சு பாத்றூம் போகவே பயமாக்கிடக்கடா எண்டுவா. அவ நடக்கேக்கை ஏழாத்துப் பிரிவில போற நயினாதீவு லோஞ்சி மாதிரி தாண்டி மிதந்து தான் நடப்பா.
வைரவர் பொங்கல் அண்டு ரெண்டு பேரும் மரக்கறி வெட்டுகினம் தண்ணி அள்ளுகினம் அடுப்பு மூட்டுகினம் அரிசி கிளையினம் புக்கைப்பானைய ஏப்பையால துளாவுகினம் அப்பிடியடி இப்பிடியடி எண்டு கதைக்கினம்.ஒரே ஆதளி மாதளிப்பட்டினம்.
என்ரை இன்னொரு சொந்தக்காரி எடேய் ஆனந்தா எடுத்த படத்தை நெற்றில போடுவியே எண்டா. ஏனடி அக்கை எண்ணவும் அடேய் லண்டனில இருக்கிற என்ரை பெட்டை பாப்பாள் எல்லே எண்டா. நான் உடனை பெட்டை பாத்தாப் பரவாயில்லை ஆரும் கலியாணம் கட்டாத முதிர்காளையள் பாத்தால் ஆரடா வாரிவளவில வடிவான ஒரு குமரி இருக்கிறாள் எண்டு சம்பந்தம் கேட்டு வந்தால் ஒரே பிரகண்டமா எல்லே போடும் எண்ட அவ ஒரு வெக்கச் சிரிப்புச் சிரிச்சா பாருங்கோ அது இன்னும் என்ரை கண்ணுக்கை நிக்குது.
அவவுக்கு அப்பிடி ஒண்டும் பெரிய வயசில்லை இப்பதான் கிட்டத்தில அறுபத்தைஞ்சு முடிஞ்சது. ஆகவே கோயிலுக்குப் போவோம் ...கும்பிடுவோம் . கொண்டாடுவோம்...டிப்பிறசனைத் தூரத்துரத்துவோம்.///
நல்ல செய்தி
சக