ஒரு பொதுச்சொல் தன் அருகில் உள்ள இரண்டு சொற்களுக்கும் பொருத்தி உரைக்கலாம். இவ்வாறுள்ளவற்றின் தமிழ் இலக்கணப் பெயர் என்ன? சில உதாரணங்கள் தருகிறேன்.
இந்த விதியின் பொதுவான அமைப்பு:
அமைப்பு: சொல்₁ + சொல்₂ + பொதுச்சொல்
பொருள்: (சொல்₁ + பொதுச் சொல்) + (சொல்₂ + பொதுச் சொல்)
உதாரணங்கள்:
(1) தங்கம் வெள்ளி நகைக் கடை = தங்க நகை + வெள்ளி நகை - இரண்டு நகைகளும் விற்கும் கடை.
(2) பொலம் பூவாடை = பொன்னாடை + பூவாடை - பொன்னாடை (பட்டுப் பீதாம்பரம்), பூவாடை - பூ வேலைப்பாடு நிறைந்த சேலை - அணிந்த தம்பதியர்.
(3) மஞ்சள் சந்தனம் பூச்சு = மஞ்சள் பூச்சு + சந்தனம் பூச்சு
(4) கந்தரநுபூதி பாடல்: 08
அமரும் பதி கேள்:- அமரும் பதி. அமரும் கேள் என்று கூட்டுக.
அமர்தல் - விரும்புதல்.
இதன் அமைப்பு: (பொதுச்சொல் + சொல்₁) + (பொதுச்சொல் + சொல்₂)
====================
"அமரும் பதிகேள் அகமாம் எனுமிப்
பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம்பொரு தானவ நாசகனே"
பொருள்:-
------------------
குமாரக் கடவுளும் மலையரசனது மகளாகிய பார்வதி தேவியின் திருப்புதல்வரும், போர் புரிந்த அசுரர்களை அழித்தவரும் ஆகிய முருகப் பெருமான், யான் விரும்புகின்ற ஊர், விரும்புகின்ற மனைவி மக்கள் முதலிய சுற்றத்தினர் என்ற புறப்பற்று, நான் என்ற அகப்பற்று ஆகிய இந்த மயக்க அறிவு ஒழியுமாறு, அடியேனுக்கு உண்மைப் பொருளை உபதேசித்த அருட் திறத்தின் தன்மை ஆ! ஆச்சரியமாக இருக்கின்றது.
விரிவான விளக்கம்:-
---------------------------------------
இப்பாடல் முருகவேள் அருணகிரிநாதருக்குச் செய்த உபதேசச் சிறப்பைக் கூறுகின்றது. இது அடிகளாருடைய வரலாற்றைக் குறிக்கின்றது.
அமரும் பதி கேள்:-
அமர்தல் - விரும்புதல். அமரும் பதி. அமரும் கேள் என்று கூட்டுக.
(5) உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு (குறள் - 255)
ஊன் உண்ணாமை, ஊன் உண்ணுதல் என்று கூட்டுக. ஊன் பொதுச்சொல். இது தாப்பிசைப் பொருள்கோள்.
இடைநிலை மொழியே ஏனைஈர் இடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை
(நன்னூல் - 416)
(6) மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா
விடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
- சேந்தனார் திருவிசைப்பா
இப்பாட்டில், முக்கண்ணுடைக் கொழுந்தே, கோமளக் கொழுந்தே எனக் கூட்டிப் பொருள் கொள்ளல் வேண்டும். கோமளம் - பார்வதி (அபிராமி அந்தாதி), சிவன் மகன், உமை மகன் கொழுந்து போன்ற திருவிடைக்கழி இளங் குமரன்.
---------
இவற்றை "ஒன்றொழி பொதுச்சொல்" என்பதில் வகைப்படுத்தலாமா? அல்லது, வேறு இலக்கணப் பெயர் உள்ளதா?
குறிப்பும் வௌிப்படையும்
ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
ஆகுபெயர்அன் மொழிவினைக் குறிப்பே
முதற்குறிப்பு தொகைக்குறிப்போடு இன்ன பிறவும்
குறிப்பின் தருமொழி அல்லன வெளிப்படை.
- நன்னூல் 269
ஒரு செய்யுளில் பொதுச்சொல் அண்மையில் உள்ள இரு சொற்களுடன் ஏறிப் பொருள்கொள்ளும் பாடல்கள் அறிந்தால் தருக.
நன்றி,
நா. கணேசன்