(பார்க்க- படம்- 1)
படம்- 1 பேரிஜாம் லேக்
‘பேரிஜாம்’ என்ற பெயரில் ‘தாமான்’ என்ற பெயரை அடையாளம் காணத் துணை செய்வது; தென்கன்னட மாவட்டத்தில் பண்டு வானவாறு என்ற பெயரில் கடலோடு கலந்து தற்போது ஹோனவார் என மருவி வழங்கும் (சேரவாற்றின் திரிந்த வடிவமாகிய) ஷீராவதியின் போக்கில் வந்து வீழும் ஜோக் அருவி (Jog falls). துளு நாட்டில் அமைந்துள்ள இவ்வருவிப்பகுதி சங்க இலக்கியத்தில்;
“தோகைக்காவின் துளுநாடன்ன”- (அகம்.15)
என்று குறிக்கப்படுகிறது.
தோகைக்கா >>> தோக்கா >>> ஜோக்
என்ற மாற்றம்; ஆங்கிலேய ஆட்சியரின் உச்சரிப்பு இயலாமையால் நிகழ்ந்துள்ளதெனத் தெரிகிறது. இதற்கு ஆங்கிலேயரது மொழிவழக்கின் தன்மையே காரணம் ஆகும். ஆகார ஈறு கெட்டு மொழி முதல் ‘த்>>>ஜ்’ ஆகியுள்ளது. மேற்சுட்டிய மாற்றத்தோடு ஒத்த தன்மை உடையதாக;
தாமான் >>> ஜாம்
என்னும் மாற்றமும் அமைகிறது. ‘ஆன்’ ஈறு கெட்டு மொழிமுதல் ‘த்>>> ஜ்’ ஆகியுள்ளது. இவ்வாறு ‘பேரிஜாம் ஏரி’ என்ற பெயரில் நாம் தாமான் பேரேரியை மீட்டுருவாக்கம் செய்ய இயல்கிறது. தாமானின் காட்டிற்கு நீராதாரமாக அமைந்த ஏரியாகையால் தாமானின் பெயரால் வழங்கியுள்ளது. இவ் ஏரி நீரே பண்டு மலையினின்று கிழக்கில் வழிந்தோடி இருக்க வேண்டும். கொடைக்கானல் காட்டிலாகாவின் அனுமதி பெற்ற பின்னரே இவ் ஏரிப்பகுதிக்குச் செல்ல இயலும்.
3.1.2 தோன்றிக் காடு:
தாமனின் தோன்றிக்காட்டை இவ்ஏரியின் சுற்று வட்டாரத்தில் காணமுடிந்தால்; அதுவே மேற்சுட்டிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ஏதுவாக அமையும். எனினும் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்றுச் செய்த கள ஆய்வும், கிடைக்கும் நிழற்படங்களும் பேரிஜாம் ஏரிப்பகுதியில் தோன்றிக்காடு இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. தோன்றி மரம் சிவந்த பூக்களைத் தாங்கி நிற்கும் பருவத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். பூக்கள் உதிர்ந்த பின்னர் மீண்டும் பசுமையான இலைகள் துளிர்க்கும். இதன் தாவரவியல் பெயர் Scarlet sterculia என்பதாகும். படம்- 2 பேரிஜாம் ஏரியைச் சுற்றி இருக்கும் உந்துத்தடத்தில் காணக்கிடக்கும் உதிர்ந்த சிவந்த தோன்றிப் பூக்களைக் காட்டுகிறது. https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i74146865-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html
படம்- 2 சிவந்த தோன்றிக் பூக்கள்
(தொடரும்)
3.1.3 ஐயூர் முடவனாரின் வாழ்க்கைக் குறிப்புகள் புலப்படுத்தும் தாமானின் வாழ்விடம்:
ஐயூர் முடவனார் ஒரு கிணைப்பொருநர். தன் வாழ்வின் முற்பகுதியில் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் (புறம்.51) பாடியுள்ளார். பின்னர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நாடிப் புகார் நகருக்குச் செல்லத் துணிந்தார். முடவராகிய அவர் மாட்டு வண்டியில் செல்லும்போது வழியில் சேற்றில் சிக்கிய வண்டியை இழுக்க இயலாமல் அம்மாடு சோர்ந்து அமர்ந்து விட்டது. அவரது கிணைமகள் அருகிலிருந்த குளத்தில் தூண்டில் போட்டு மீனைப் பிடித்து; விற்றுப் பெற்ற பொருளில்; காலநேரம் கடந்து ஆக்கிய பாகற் புளிங்கூழை உண்டு துன்புற்று இருந்த அவரைத் தாமானிடம் சென்று உதவி கேட்க அறிவுறுத்தினர் அப்பகுதி மக்கள். அப்போது பாடியதே புறம்.- 399. பகடு பெற்று அவர் சோழனிடம் சென்று சேர்ந்து அவன் மாண்டதையும் பாடினார் (புறம்.228).
ஐயூர் முடவனாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள
பேரையூர் ஆகும். இவ்வூருக்குச் செவ்விலக்கியக் காலத்துத் தொன்மையான ஊர்களான தங்கால் (இன்றைய திருத்தங்கல்), மல்லிபுத்தூர் (மல்லி கிழான் காரியாதியின் ஊர்) ஆகிய இரு ஊர்களிலிருந்தும் சென்று சேரக்கூடிய பாதைகள் உள்ளன. (பார்க்க- வரைபடம்-1) பேரையூரிலிருந்து செல்லும் தடங்களில் ஒன்று பாண்டியனின் மதுரைக்கு இட்டுச் செல்கிறது; மற்றொன்று பெரியகுளம் என்னும் ஊருக்கு வந்து சேர்கிறது. பெரியகுளம் பேரிஜாம் ஏரிக்குக் கிழக்கிலுள்ள தாழ்வரையை அடுத்து உள்ளது (பார்க்க- வரைபடம்- 2). URL Link.
பெரியகுளத்திலிருந்து உறையூர் செல்லவும் பண்டு தொட்டு வழங்கிய தடமும் உள்ளது.
வரைபடம்-1
வரைபடம்-2
கிணைமகள் குளத்து மீனைப் பிடித்து விற்றுப் பாகற்புளிங்கூழ் சமைத்தாள் என்னும் நிகழ்ச்சி இப்புவியியலுக்குப் பொருந்துகிறது. அத்துடன் அருகில் ‘பேரியூர்’ என்ற பெயரில் இன்றும் வழங்கும் சிற்றூர் தாமான் பேரேரியுடன் இவ்வூரைத் தொடர்புறுத்துகிறது. பேரேரி > 'பேரி'யால் நீர்வளம் பெற்ற ஊர் பேரியூர் ஆயிற்று எனலாம்.
3.2.0 உ.ரையாசிரியரும் பதிப்பாசிரியரும் கூறும் கருத்துகள்:
அதுவே அவரது சொந்த ஊராகக் கருத இடமுள்ளது. வெற்றி பெற்ற வீரன் பற்றிப் பாடும் போது;
“புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்” (மேற்.)
என்பதால் அவர் புன்செய்க்காடு சார்ந்த ஊரினர் என்று தெளிவாகிறது. எனவே காவிரி பாயும் உறையூரைச் சேர்ந்தவர் என்னும் கருத்து வலுவற்றதாகிறது.
3.2.2 ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியின் சிற்றையூர் என்ற கருத்தை ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையும் எடுத்துக் கூறியுள்ளார் (மேற்.- ப.- 468). இக்கருத்தையும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் சிற்றையூர் உறையூருக்குத் தெற்கே மிக அருகில் இருப்பது. கப்பல் போக்குவரத்துக்கு இடம்கொடுத்த காவிரிக்கு அருகில்
இருந்த ஊர் புன்செய்க் காடாக இருக்க வாய்ப்பில்லை.
3.2.3 தாமான் தோன்றி மலையின் தலைவன் எனும் கருத்தை உ.வே.சாமிநாதையர் குறித்துச் செல்கிறார் (மேற்.- பாடப்பட்டோர் வரலாறு- ப. 71). இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை என்பதற்கு குறிப்பிட்ட பாடலிலேயே அகச்சான்று உள்ளது. ஐயூர் முடவனார் கிணைப்பறையைத் திருத்திக் கொண்டு தாமனைக் காணச் சென்ற போது கோலூன்றிச் சென்றதாகவே பாடியுள்ளார். முடவனாகிய அவர் தாமானைக் காண;
“மீப்படர்ந்து இறந்து வன்கோன் மண்ணி” (பா- 399)
மலையில் 7000அடி உயரத்திற்கு ஏறிச் சென்றார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. பெரியகுளத்திலிருந்து பேரியூர் நடைப்பயண தூரத்தில் இருப்பதாகவே கூகுள் வரைபடமும் காட்டுகிறது. எனவே தாமானின் வாழ்விடம் தாமான் பேரேரி மூலம் நீராதாரம் பெற்ற மலைப்புறத்துத் தோன்றிக்காடு என்று துணியலாம்.
3.2.4 ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தாமான் திண்டுக்கல்லுக்கு 15கல் மேற்கில் உள்ள தாண்டிக்குடியின் தலைவன் என்கிறார் (மேற்.468). இக்கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. ஏனெனில் தாண்டிக்குடி என்ற பெயர் தான்றிமரம் (Terminalia bellerica) என்ற தாவர வகையின் அடிப்படையில் அமைந்த பெயராகும் (தமிழ் விக்கிப்பீடியா- தான்றி- https://ta.wikipedia.org/s/72v). தாண்டிக்குடியில் தொல்லியலார் ஆய்வும்; அங்கிருக்கும் தான்றிமர வளமும் குறித்த அறிக்கை வெளிவந்து உள்ளது (தமிழி- “வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை”- 02.மே.2015- தமிழி: வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...). தோன்றி மரம் வேறு; தான்றி மரம் வேறு என்பதில் ஐயமில்லை. ஆதலால் தாமான் தோன்றிக்கோன் தாண்டிக்குடியின் தலைவனாக இருக்க இயலாது.
3.2.5 கரூர்க்கு அருகில் உள்ள தாந்தோன்றி மலையைத் தாமானுடன் தொடர்பு படுத்தி ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பேசுகிறார் (மேற்.); தமிழ்விக்கிப்பீடியாவும் அதே கருத்தைச் சொல்கிறது தோன்றி (மலை) - தமிழ் விக்கிப்பீடியா. இக்கருத்தையும் பாடலின் அகச்சான்று கொண்டே மறுக்க இயல்கிறது. வறுமையில் பசித்துன்பத்திற்கு ஆளான ஐயூர் முடவனார் வளமான விருந்துணவிற்கு ஆசைப்பட்டதை அவரது பாடல் காட்டுகிறது. அவர் விவரிக்கும் கிள்ளி வளவனது விருந்துணவு;
"அடுமகள் முகத்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பரூஉக் குற்றரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
மோட்டிரு வாராஅல் கோட்டுமீன் கொழுங்குறை
செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
பாதிரி ஊழ்முகை அவிழ்விடுத்தன்ன
மெய்களைந்து இனனொடு விரைஇ"(மேற்.) அறுசுவை பொருந்தியதாகும். காடி நீர் பெய்த வெள்ளுலையில் வெண்ணெலரிசியை இட்டு; மென்மையாகப் புழுக்கி; மாங்காயின் புளிச்சுவை சேர்த்து வைத்த வரால்மீன் குழம்பும், சுறாமீன் துண்டங்களின் பொரியலும், வள்ளைக்கீரைக் கூட்டும், பாகல் கறியும் சேர்ந்த மேன்மை பொருந்தியது என்கிறார். ஆற்று மீனாகிய வரால் மீனின் குழம்பும் கடல்மீனாகிய சுறாப்பொரியலும் ஒருங்கே கிடைக்கும் இடம் புகார்ப் பட்டினமே. ஆற்று வளமும் கடல் வளமும் ஒருசேரப் பல்கிப் பெருகிய புகார் பற்றிப் பட்டினப் பாலையும் (அடி.63- 66; 176-177), சிலப்பதிகாரமும் (கானல் வரி- பா- 5-9; கடலாடு காதை- அடி.-142, 166) விரிவாகப் பேசுகின்றன. ஐயூர் முடவனார் கிழக்குக் கரையில் இருக்கும் புகார் நகருக்குச் செல்ல மேற்கு நோக்கித் தாந்தோன்றி மலை செல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே அறிவாராய்ச்சிக்குப் பொருந்துவதாக அமையும். தாந்தோணி மலை என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படும் அப்பகுதியில் தோன்றிக் காடு இருந்தமைக்கும் ஆதாரமில்லை.
முடிவுரை:
தாமான் தோன்றிக்கோன் முல்லைநிலத்து இடையர் தலைவன் ஆவான். தாமானின் தோன்றிக்காடு மலை சார்ந்து இருந்தது; தோன்றி மரங்கள் நிறைந்தது. அக்காடு கொடைக்கானல் மலையிலுள்ள கொடைக்கானல் நகராட்சியின் தெற்கில் காணப்படும் பேரிஜாம் ஏரியைச் சுற்றியும், அதையடுத்த தாழ்வரையிலும் இருந்தது. அவனைப் பாடிய ஐயூர் முடவனார் மதுரை மாவட்டத்துப் பேரையூரைச் சேர்ந்தவர் ஆவார். புறானூற்றில் திணைமாந்தர் தலைவர்களும் பாடல் பெற்றுள்ளனர்; ஒவ்வொரு குழுத் தலைவரையும் பற்றி ஆழமாக நோக்கும்போது அக்காலச் சமூகநிலை தெளிவுறும்.
பார்வை நூல்கள்
சிலப்பதிகாரம்- ந.மு.வேங்கட சாமி நாட்டார் (உ.ஆ.)- முதல்பதிப்பின் மறுபதிப்பு- 1968- பாகனேரி த.வை.இ.தமிழ்ச் சங்க வெளியீடு.
பத்துப்பாட்டு- 2ம் பாகம்- பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ.)- கழக வெளியீடு- எண்- 858- முதல் பதிப்பின் மறுபதிப்பு- 1966
புறநானூறு- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.)- 1923- 2ம் பதிப்பு- கமெர்சியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
புறநானூறு- பகுதி- ii- ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- முதற்பதிப்பின் மறு அச்சு- 2007- கழக வெளியீடு- 598
Benefits of Forest Conservation sur Berijam Lake- https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i111775249-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html
தமிழ் விக்கிப்பீடியா- தான்றி- https://ta.wikipedia.org/s/72v).
தமிழ்விக்கிப்பீடியா- தோன்றி மலை- தோன்றி (மலை) - தமிழ் விக்கிப்பீடியா)
(தமிழி- “வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை”- 02.மே.2015- தமிழி: வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...).
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvtuYU9SDJRYbHMzuuWRztJZhSbd0ZT-%3DO3zF-hj3thFw%40mail.gmail.com.