முல்லைத் திணைமாந்தர் தலைவன் தாமான் தோன்றிக்கோன்

24 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jan 2, 2026, 8:26:16 PM (10 days ago) Jan 2
to vallamai
International Journal of Tamil Language and Literary Studies IJTLLS என்ற மின்ஆய்விதழில் 15.07.2020 அன்று பதிப்பித்த ஆய்வுக்கட்டுரை. 

 முன்னுரை

0.1 புறநானூறு- பா- 399ன்  தலைவனான தாமான் தோன்றிக்கோனின் இனம், வாழ்விடம் ஆகியவற்றைக் கண்டறிவது இவ் ஆய்வுக்கட்டுரையின் 
நோக்கம் ஆகும்.

0.2 தொல்தமிழகத்தின் சமூகநிலையை அறிவதற்கு முதல்நிலைத் தரவாகும் தகுதி உடையது புறநானூறு. அந்நூலில் இன்னும் கூர்ந்து நோக்க வேண்டிய பகுதிகள் பல உள. புறநானூற்றைத் தொகுத்தோர், முதலில் பதிப்பித்த உ.வே.சாமிநாதையர், பின்வந்த உரையாசிரியர் அனைவரும் வியக்கத்தக்க பணிகளைச் செய்துள்ளனர். ஆயின் முல்லைத்  திணைமாந்தர் தலைவனாகிய தாமான் தோன்றிக்கோன் பற்றி முழுமையான தகவல் கிடைக்கவில்லை.

0.3 தோன்றிக்கோன் என்னும் சொற்றொடரின் ஆய்வு; அவன் சார்ந்த இடத்தை அறிவுறுத்தக் கூடியது. அவனைப் பற்றிய பாடலும், பாடிய ஐயூர் முடவனார் பற்றிய தகவல்களும் முதல்நிலைத் தரவுகள் ஆகின்றன. அவ்விடத்து இயற்கையாகிய மரம், ஏரி பற்றிய கள ஆய்வுத்தகவல்களும், கூகுள் வரைபடமும் இரண்டாம் நிலைத் தரவுகளாகின்றன. 20ம் நூற்றாண்டு ஆய்வாளர் கருத்துக்கள் மூன்றாம் நிலைத் தரவுகளாகின்றன.

1.0 தாமான் தோன்றிக்கோன் இடையர் தலைவனாவான்.

1.1 ஐயூர் முடவனார் தாமானிடம் சென்று தன் வண்டியில் பூட்ட ஒரு பகடு கேட்டபோது அவன் பல பசுக்களையும், காளையையும் தானமாகக் கொடுக்கிறான்.

“... விசும்பின் / மீன்பூத் தன்ன உருவப் பல்நிரை
ஊர்தியொடு நல்கியோனே” (புறம்.399)
எனும் பாடற்பகுதி விண்ணிலுள்ள மீன்களை ஒப்ப எண்ணிறந்த பசுக்களையும், ஊர்தியாகக் கூடிய காளையையும் கொடுத்தான் என்கிறது. அவன் இடையர் தலைவனாக இருந்ததால் தான் அவ்வாறு கொடுக்க முடிந்தது.

1.2 புறப்பாட்டின் இறுதி அடி அவனைத் ‘தோன்றிக்கோ’ என அழைக்கிறது. புநானூற்றைத் தொகுத்தோர் ‘தாமான் தோன்றிக்கோன்’ என்று இயற்பெயரோடு விரித்துச் சுட்டுகின்றனர். ‘கோன்’ என்னும் பின்னொட்டு ‘-ஆர்’ விகுதி சேர்ந்து ‘கோனார்’ ஆகி இன்றும் இடையர் குலத்தவரைக் குறிப்பதுண்டு. எனவே தோன்றிக்காட்டின் கோனாகிய  இடையன் என்னும் பொருள் கிடைக்கிறது.

1.3 ஐயூர் முடவனார் தன் பாடலில் தோன்றிக்கோனைப் புகழும்போது;

“அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்” (மேற்.) 

என்கிறார். இங்கு தோன்றிக்கோனை அறவோர்க்கெல்லாம் தலைமை சான்ற அறவோன் எனவும், வீரர்க்கெல்லாம் தலைமை சான்ற வீரன் எனவும், நிலத்தில் இறங்கி உழும் மள்ளருக்கெல்லாம் தலைமை சான்ற மள்ளன் எனவும், தொன்மையான பூர்வ குடிகளின் தலைவன் எனவும் புகழ்கிறார். இதனால் தோன்றிக்கோன் வேளிர் (உழுவித்த வேளாளர்) என்று அழைக்கப்பட்ட குறுநில மன்னன் இல்லை; அவர்கட்கு முற்பட்டுத் தமிழகத்தில் தோன்றி வாழ்ந்த தமிழகத்து மண்ணின் மைந்தராகிய திணைமாந்தருள் முல்லை நிலத்து இடையர் தலைவன் என்பது உறுதியாகிறது.

1.4 உ.வே.சாமிநாதையரின் 1923ம் ஆண்டு பதிப்பில் இடம்பெறும் குறிப்பு உழுவித்த வேளாளர் என்னும் வேளிர் பட்டியலைத் தருகிறது. அப்பட்டியலில் தாமானுக்கு அவர் இடம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (புறநானூறு- உ.வே.சாமிநாதையர்- ப.ஆ.- 1923- 2ம் பதிப்பு- பாடப்பட்டோர் வரலாறு- ப.- 77). எனவே வேந்தனும் வேளிரும் அல்லாத தாமான் முல்லைத்திணை மாந்தர் தலைவன் என்று உறுதிபடக் கூறலாம்.

2.0 தாமானின் தோன்றிக்காடு அருவி வழிந்தோடும் மலை சார்ந்து இருந்தது. அது தோன்றி மரங்கள் நிறைந்தது.

2.1 “இழுமென இழிதரும் அருவி 
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே” (மேற்.)

என்கிறார் புலவர். அருவி வழிந்தோடும் வானளவு உயர்ந்த மலையின் சாரலில் இருந்த தோன்றிக்  காட்டின் தலைவன் என்று பொருள் கிடைக்கிறது. 

2.2 தமிழகத்து இடப்பெயர்கள் ஆங்காங்கு பெரிதும் காணப்படும் தாவரங்களை அடியொட்டி அமைவதுண்டு. சான்றாக:

புளியங்குடி - புளியமரங்கள் நிறைந்த பகுதி (தென்காசி மாவட்டம்)
வெற்றிலையூரணி - வெற்றிலைக்கொடி மிகுந்த ஊருணி (விருதுநகர் மாவட்டம்)
ஆலங்குடி- ஆலமரத்தால் பெற்ற பெயர் (தஞ்சாவூர் மாவட்டம் )
ஆலமரத்துப்பட்டி- ஆலமரத்தால் பெற்ற பெயர் (விருதுநகர் மாவட்டம்)
இருக்கங்குடி- எருக்கம் புதர்கள் மிகுந்த ஊர்  (விருதுநகர் மாவட்டம்)
கவிரமலை- முள்முருங்கை மரம் நிறைந்த மலை (பொதிகையில்)
பனை விளை- பனைமரங்கள் நிறைந்த ஊர் (நாகர் கோயில் வட்டம்)
வாகைக்குளம்- வாகை மரங்களால் பெற்ற பெயர் (தூத்துக்குடி மாவட்டம்) 

இவை போன்று தோன்றிமரங்கள் மிகுந்த காட்டுப் பகுதியின் தலைவன் தோன்றிக்கோன் என்பதில் முரண் எழ வழியில்லை. 

3.0 தாமானின் வாழ்விடம்: 

3.1.0 தாமானின் தோன்றிக்காடு கொடைக்கானல் மலையில் கொடைக்கானல் நகராட்சிக்குத் தெற்கிலுள்ள பேரிஜாம் ஏரியைச் சுற்றியும், அதன் கிழக்குத்  தாழ்வரையிலும்  இருந்தது. 

3.1.1 தாமான் பேரேரி < பேரிஜாம்லேக் மீட்டுருவாக்கம்: 

‘பேரிஜாம்’ என்ற பெயர் ‘தாமான் பேரேரி’ என்பதன் திரிபு ஆகும். ‘பேரேரி > பேரி’ என்னும் மாற்றத்திற்குரிய சான்றாதாரங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. ‘பேரி’ என்னும் பின்னொட்டைக் கொண்ட  இடப்பெயர்கள் 
தென்தமிழகத்தில் பல உள. அவற்றுள் சில:

திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரியும், ராஜசிங்கப் பேரியும். 
தென்காசி பாவூர்ச்சத்திரம் அருகில் குறும்பலாப்பேரி 
ஈஞ்சார், அழகாபுரிக்கு அருகில்  கிருஷ்ணப்பேரி 
தூத்துக்குடிக்கு வடக்கில் சங்கரப்பேரி 
ராஜபாளையம் அருகே சலங்கப்பேரி 
சாஸ்தா கோயில் அணைக்குத் தெற்கே நச்சடைப்பேரி

மேற்சுட்டிய அனைத்து இடப்பெயர்களையும் ஏரிகளோடு தொடர்புடையனவாகவே கூகுள் வரைபடம் காட்டுகிறது. ‘பேரேரி’ என்னும் சொற்றொடர் பொதுமக்கள் வாய்மொழியில் முயற்சிச்சுருக்கம் காரணமாக
'பெரிய + ஏரி = பேரேரி > பேரி'  
என மருவுதல் இயற்கை. தமிழகத்துப் பேரேரிகளின் பெயர்களில் எல்லாம் ‘பேரி’  பின்னொட்டாக  அமைய; ‘பேரிஜாம் லேக்’ என்ற தொடரில் ‘பேரி’ முன்னொட்டாக அமைந்த காரணம் அந்நியராகிய ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏற்பட்ட மொழியியல் மாற்றமாகும். ஆங்கிலேயர் கோடை காலத்தில் விரும்பி உறைந்த இடத்தில் ஆங்கில வழக்கு மிகுவது இயற்கையே. வெரே லெவிங் என்ற மதுரை மாவட்ட ஆட்சியாளரின் விருப்பத்திற்குரிய மலைவாசஸ்தலம் ஆகையால்;
அவர் வாழ்ந்து; பல நற்பணிகளைச் செய்து; மக்களிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்று இருந்ததைக் கொடைக்கானல் வரலாறு கூறுகிறது (The Hindu-Madras Miscellany History and Culture- 07.Oct.201- “Levinge Still Remembered” Levinge still remembered - The Hindu). ஆட்சியாளர் போக்கில் மக்களும் ‘லேக்’ என்று அழைக்க; ‘பேரி’ பொருளற்ற முன்னொட்டாக இடம் மாறியுள்ளது.

சக 

(தொடரும்)














 

kanmani tamil

unread,
Jan 3, 2026, 7:46:46 PM (9 days ago) Jan 3
to vallamai

(பார்க்க- படம்- 1)

image.jpeg

படம்- 1 பேரிஜாம் லேக் 

‘பேரிஜாம்’ என்ற பெயரில் ‘தாமான்’ என்ற பெயரை அடையாளம் காணத் துணை செய்வது; தென்கன்னட மாவட்டத்தில் பண்டு வானவாறு என்ற பெயரில் கடலோடு கலந்து தற்போது ஹோனவார் என மருவி வழங்கும் (சேரவாற்றின் திரிந்த வடிவமாகிய) ஷீராவதியின் போக்கில் வந்து வீழும் ஜோக் அருவி (Jog falls). துளு நாட்டில் அமைந்துள்ள இவ்வருவிப்பகுதி சங்க இலக்கியத்தில்;

“தோகைக்காவின் துளுநாடன்ன”- (அகம்.15) 

என்று குறிக்கப்படுகிறது.

தோகைக்கா >>> தோக்கா >>> ஜோக்

என்ற மாற்றம்; ஆங்கிலேய ஆட்சியரின் உச்சரிப்பு இயலாமையால் நிகழ்ந்துள்ளதெனத் தெரிகிறது. இதற்கு ஆங்கிலேயரது மொழிவழக்கின் தன்மையே காரணம் ஆகும். ஆகார ஈறு கெட்டு மொழி முதல் ‘த்>>>ஜ்’ ஆகியுள்ளது. மேற்சுட்டிய மாற்றத்தோடு ஒத்த தன்மை உடையதாக;

தாமான் >>> ஜாம்

என்னும் மாற்றமும் அமைகிறது. ‘ஆன்’ ஈறு கெட்டு மொழிமுதல் ‘த்>>> ஜ்’ ஆகியுள்ளது. இவ்வாறு  ‘பேரிஜாம் ஏரி’ என்ற பெயரில் நாம் தாமான் பேரேரியை மீட்டுருவாக்கம் செய்ய இயல்கிறது. தாமானின் காட்டிற்கு நீராதாரமாக அமைந்த ஏரியாகையால் தாமானின் பெயரால் வழங்கியுள்ளது. இவ் ஏரி நீரே பண்டு மலையினின்று கிழக்கில் வழிந்தோடி இருக்க வேண்டும். கொடைக்கானல் காட்டிலாகாவின் அனுமதி பெற்ற பின்னரே இவ் ஏரிப்பகுதிக்குச் செல்ல இயலும்.  


3.1.2 தோன்றிக் காடு:

         தாமனின் தோன்றிக்காட்டை இவ்ஏரியின் சுற்று வட்டாரத்தில் காணமுடிந்தால்; அதுவே மேற்சுட்டிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ஏதுவாக அமையும். எனினும் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்றுச் செய்த கள ஆய்வும், கிடைக்கும் நிழற்படங்களும் பேரிஜாம் ஏரிப்பகுதியில் தோன்றிக்காடு இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. தோன்றி மரம் சிவந்த பூக்களைத் தாங்கி நிற்கும் பருவத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். பூக்கள் உதிர்ந்த பின்னர் மீண்டும் பசுமையான இலைகள் துளிர்க்கும். இதன் தாவரவியல் பெயர் Scarlet sterculia என்பதாகும். படம்- 2 பேரிஜாம் ஏரியைச் சுற்றி இருக்கும் உந்துத்தடத்தில் காணக்கிடக்கும் உதிர்ந்த சிவந்த தோன்றிப் பூக்களைக் காட்டுகிறது. https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i74146865-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html


image.jpeg

படம்- 2 சிவந்த தோன்றிக் பூக்கள்  

(தொடரும்)

seshadri sridharan

unread,
Jan 3, 2026, 10:02:19 PM (9 days ago) Jan 3
to vall...@googlegroups.com
நல்ல ஆய்வு 

kanmani tamil

unread,
Jan 4, 2026, 8:16:24 PM (8 days ago) Jan 4
to vallamai

3.1.3 ஐயூர் முடவனாரின் வாழ்க்கைக் குறிப்புகள் புலப்படுத்தும் தாமானின் வாழ்விடம்: 

 ஐயூர் முடவனார் ஒரு கிணைப்பொருநர். தன் வாழ்வின் முற்பகுதியில் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் (புறம்.51) பாடியுள்ளார். பின்னர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நாடிப் புகார் நகருக்குச் செல்லத் துணிந்தார். முடவராகிய அவர் மாட்டு வண்டியில் செல்லும்போது வழியில் சேற்றில் சிக்கிய வண்டியை இழுக்க இயலாமல் அம்மாடு சோர்ந்து அமர்ந்து விட்டது. அவரது கிணைமகள் அருகிலிருந்த குளத்தில் தூண்டில் போட்டு மீனைப் பிடித்து; விற்றுப் பெற்ற பொருளில்; காலநேரம் கடந்து ஆக்கிய பாகற் புளிங்கூழை உண்டு துன்புற்று இருந்த அவரைத் தாமானிடம் சென்று உதவி கேட்க அறிவுறுத்தினர் அப்பகுதி மக்கள். அப்போது பாடியதே புறம்.- 399. பகடு பெற்று அவர் சோழனிடம் சென்று சேர்ந்து அவன் மாண்டதையும் பாடினார் (புறம்.228).

ஐயூர் முடவனாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள 

பேரையூர் ஆகும். இவ்வூருக்குச் செவ்விலக்கியக் காலத்துத் தொன்மையான ஊர்களான தங்கால் (இன்றைய திருத்தங்கல்), மல்லிபுத்தூர் (மல்லி கிழான் காரியாதியின் ஊர்) ஆகிய இரு  ஊர்களிலிருந்தும் சென்று சேரக்கூடிய பாதைகள் உள்ளன. (பார்க்க- வரைபடம்-1) பேரையூரிலிருந்து செல்லும் தடங்களில் ஒன்று பாண்டியனின் மதுரைக்கு இட்டுச் செல்கிறது; மற்றொன்று பெரியகுளம் என்னும் ஊருக்கு வந்து சேர்கிறது. பெரியகுளம் பேரிஜாம் ஏரிக்குக் கிழக்கிலுள்ள தாழ்வரையை அடுத்து உள்ளது (பார்க்க- வரைபடம்- 2).  URL Link.

பெரியகுளத்திலிருந்து உறையூர் செல்லவும் பண்டு தொட்டு வழங்கிய தடமும் உள்ளது.


image.jpeg

வரைபடம்-1


image.jpeg

வரைபடம்-2


கிணைமகள் குளத்து மீனைப் பிடித்து விற்றுப் பாகற்புளிங்கூழ் சமைத்தாள் என்னும் நிகழ்ச்சி இப்புவியியலுக்குப் பொருந்துகிறது. அத்துடன் அருகில் ‘பேரியூர்’ என்ற பெயரில் இன்றும் வழங்கும் சிற்றூர் தாமான் பேரேரியுடன் இவ்வூரைத் தொடர்புறுத்துகிறது. பேரேரி > 'பேரி'யால் நீர்வளம் பெற்ற ஊர் பேரியூர் ஆயிற்று எனலாம். 

         

3.2.0 உ.ரையாசிரியரும் பதிப்பாசிரியரும் கூறும் கருத்துகள்:


3.2.1 தாம் கண்ட ஏடுகளில் ஐயூர் என்பது; திருச்சிக்குக் கிழக்கே உள்ள சிற்றையூர் என்றும், உறையூர் என்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதை உவே.சாமிநாதையர் சுட்டிக்காட்டியுள்ளார் (மேற்.- பாடினோர் வரலாறு- ப.- 23). ஐயூர் முடவனாரின் சொந்த ஊர் உறையூர் எனில் அவர் தன் வாழ்வின் முற்பகுதியில் பாண்டியனைத் தேடி வந்தமைக்குத் தகுந்த காரணமில்லை. அது மட்டுமின்றி; அவரது வல்லாண் முல்லைத் துறையில்  அமைந்த பாடலில் தன் சொந்த வாழ்விடத்து நிகழ்ச்சியைப் பாடுவது போலவே பாடியுள்ளார் (புறம்.314). முல்லைத்திணை சார்ந்த; அதாவது காடு சார்ந்த ஊரில் நிகழ்ந்த போரையே விவரிக்கிறார்.

(தொடரும்)
சக

kanmani tamil

unread,
Jan 6, 2026, 8:49:49 PM (6 days ago) Jan 6
to vallamai

அதுவே அவரது சொந்த ஊராகக் கருத இடமுள்ளது. வெற்றி பெற்ற  வீரன் பற்றிப் பாடும் போது;

“புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்” (மேற்.) 

என்பதால் அவர் புன்செய்க்காடு சார்ந்த ஊரினர் என்று தெளிவாகிறது. எனவே காவிரி பாயும் உறையூரைச் சேர்ந்தவர் என்னும் கருத்து வலுவற்றதாகிறது.

3.2.2 ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியின் சிற்றையூர் என்ற கருத்தை ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையும் எடுத்துக் கூறியுள்ளார் (மேற்.- ப.- 468). இக்கருத்தையும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் சிற்றையூர் உறையூருக்குத் தெற்கே மிக அருகில் இருப்பது. கப்பல் போக்குவரத்துக்கு இடம்கொடுத்த காவிரிக்கு அருகில்  

இருந்த ஊர் புன்செய்க் காடாக இருக்க வாய்ப்பில்லை.

3.2.3 தாமான் தோன்றி மலையின் தலைவன் எனும் கருத்தை உ.வே.சாமிநாதையர் குறித்துச் செல்கிறார் (மேற்.- பாடப்பட்டோர் வரலாறு- ப. 71). இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை  என்பதற்கு குறிப்பிட்ட பாடலிலேயே அகச்சான்று உள்ளது. ஐயூர் முடவனார் கிணைப்பறையைத் திருத்திக் கொண்டு தாமனைக் காணச் சென்ற போது கோலூன்றிச் சென்றதாகவே பாடியுள்ளார். முடவனாகிய அவர் தாமானைக் காண;

“மீப்படர்ந்து இறந்து வன்கோன் மண்ணி” (பா- 399) 

மலையில் 7000அடி உயரத்திற்கு ஏறிச் சென்றார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. பெரியகுளத்திலிருந்து பேரியூர்  நடைப்பயண தூரத்தில் இருப்பதாகவே கூகுள் வரைபடமும் காட்டுகிறது. எனவே தாமானின் வாழ்விடம் தாமான் பேரேரி மூலம் நீராதாரம் பெற்ற மலைப்புறத்துத் தோன்றிக்காடு என்று துணியலாம்.

3.2.4 ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தாமான் திண்டுக்கல்லுக்கு 15கல் மேற்கில் உள்ள தாண்டிக்குடியின் தலைவன் என்கிறார் (மேற்.468). இக்கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. ஏனெனில் தாண்டிக்குடி என்ற பெயர் தான்றிமரம் (Terminalia bellerica) என்ற தாவர வகையின் அடிப்படையில் அமைந்த பெயராகும் (தமிழ் விக்கிப்பீடியா- தான்றி- https://ta.wikipedia.org/s/72v). தாண்டிக்குடியில் தொல்லியலார் ஆய்வும்; அங்கிருக்கும் தான்றிமர வளமும் குறித்த  அறிக்கை வெளிவந்து உள்ளது (தமிழி- “வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை”- 02.மே.2015- தமிழி: வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...). தோன்றி மரம் வேறு; தான்றி மரம் வேறு என்பதில்  ஐயமில்லை. ஆதலால் தாமான் தோன்றிக்கோன் தாண்டிக்குடியின் தலைவனாக இருக்க இயலாது.

3.2.5    கரூர்க்கு அருகில் உள்ள தாந்தோன்றி மலையைத் தாமானுடன் தொடர்பு படுத்தி ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பேசுகிறார் (மேற்.); தமிழ்விக்கிப்பீடியாவும் அதே கருத்தைச் சொல்கிறது  தோன்றி (மலை) - தமிழ் விக்கிப்பீடியா. இக்கருத்தையும் பாடலின் அகச்சான்று கொண்டே மறுக்க இயல்கிறது. வறுமையில் பசித்துன்பத்திற்கு ஆளான ஐயூர் முடவனார் வளமான விருந்துணவிற்கு ஆசைப்பட்டதை அவரது பாடல் காட்டுகிறது. அவர் விவரிக்கும் கிள்ளி வளவனது விருந்துணவு; 

"அடுமகள் முகத்த அளவா வெண்ணெல் 

தொடிமாண் உலக்கைப் பரூஉக் குற்றரிசி 

காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல் 

ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி 

மோட்டிரு வாராஅல் கோட்டுமீன் கொழுங்குறை 

செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல் 

பாதிரி ஊழ்முகை அவிழ்விடுத்தன்ன 

மெய்களைந்து இனனொடு விரைஇ"(மேற்.) அறுசுவை பொருந்தியதாகும். காடி நீர் பெய்த வெள்ளுலையில் வெண்ணெலரிசியை இட்டு; மென்மையாகப் புழுக்கி; மாங்காயின் புளிச்சுவை சேர்த்து வைத்த வரால்மீன் குழம்பும், சுறாமீன் துண்டங்களின் பொரியலும், வள்ளைக்கீரைக் கூட்டும், பாகல் கறியும் சேர்ந்த மேன்மை பொருந்தியது என்கிறார். ஆற்று மீனாகிய வரால் மீனின் குழம்பும் கடல்மீனாகிய சுறாப்பொரியலும் ஒருங்கே கிடைக்கும் இடம் புகார்ப் பட்டினமே. ஆற்று வளமும் கடல் வளமும் ஒருசேரப் பல்கிப் பெருகிய புகார் பற்றிப் பட்டினப் பாலையும் (அடி.63- 66; 176-177), சிலப்பதிகாரமும் (கானல் வரி- பா- 5-9; கடலாடு காதை- அடி.-142, 166) விரிவாகப் பேசுகின்றன. ஐயூர் முடவனார் கிழக்குக் கரையில் இருக்கும் புகார் நகருக்குச் செல்ல மேற்கு நோக்கித் தாந்தோன்றி மலை செல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே  அறிவாராய்ச்சிக்குப் பொருந்துவதாக அமையும். தாந்தோணி மலை என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படும் அப்பகுதியில் தோன்றிக் காடு இருந்தமைக்கும் ஆதாரமில்லை.

முடிவுரை:

தாமான் தோன்றிக்கோன் முல்லைநிலத்து இடையர்  தலைவன் ஆவான். தாமானின் தோன்றிக்காடு மலை சார்ந்து இருந்தது; தோன்றி மரங்கள் நிறைந்தது. அக்காடு கொடைக்கானல் மலையிலுள்ள கொடைக்கானல் நகராட்சியின் தெற்கில் காணப்படும் பேரிஜாம் ஏரியைச் சுற்றியும், அதையடுத்த  தாழ்வரையிலும்  இருந்தது. அவனைப் பாடிய ஐயூர் முடவனார் மதுரை மாவட்டத்துப் பேரையூரைச் சேர்ந்தவர் ஆவார். புறானூற்றில் திணைமாந்தர் தலைவர்களும் பாடல் பெற்றுள்ளனர்; ஒவ்வொரு குழுத் தலைவரையும் பற்றி ஆழமாக நோக்கும்போது அக்காலச் சமூகநிலை தெளிவுறும்.   

                     பார்வை நூல்கள்

  1. சிலப்பதிகாரம்- ந.மு.வேங்கட சாமி நாட்டார் (உ.ஆ.)- முதல்பதிப்பின் மறுபதிப்பு- 1968- பாகனேரி த.வை.இ.தமிழ்ச் சங்க வெளியீடு.

  2. பத்துப்பாட்டு- 2ம் பாகம்- பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ.)- கழக வெளியீடு- எண்- 858- முதல் பதிப்பின் மறுபதிப்பு- 1966  

  3. புறநானூறு- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.)- 1923- 2ம் பதிப்பு- கமெர்சியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.

  4. புறநானூறு- பகுதி- ii- ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- முதற்பதிப்பின் மறு அச்சு- 2007- கழக வெளியீடு- 598    

  5.  Benefits of Forest Conservation sur Berijam Lake- https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i111775249-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html

  6. தமிழ் விக்கிப்பீடியா- தான்றி- https://ta.wikipedia.org/s/72v).  

  7. தமிழ்விக்கிப்பீடியா- தோன்றி மலை-  தோன்றி (மலை) - தமிழ் விக்கிப்பீடியா

  8.   (தமிழி- “வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை”- 02.மே.2015- தமிழி: வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...). 

(The Hindu-Madras Miscellany History and Culture- 07.Oct.201- “Levinge Still Remembered” Levinge still remembered).

(முற்றும்) சக
image.jpeg
image.jpeg

Raju Rajendran

unread,
Jan 8, 2026, 7:41:45 PM (4 days ago) Jan 8
to vall...@googlegroups.com
சிறப்பு. துரைசாமி காலத்தில் கூகுள் படங்களின் துணை இல்லையே.

புத., 7 ஜன., 2026, 7:19 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvtuYU9SDJRYbHMzuuWRztJZhSbd0ZT-%3DO3zF-hj3thFw%40mail.gmail.com.


--

Raju M. Rajendran
Reply all
Reply to author
Forward
0 new messages