திருநெல்வேலி வண்ணாரப் பேட்டை தீத்தாரப்ப முதலியார் - மீனாம்பாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த� செப்டம்பர் 11 1882 அன்று பிறந்த இரசிகமணி டிகேசி என்று அழைக்க பட்ட சிதம்பரநாத முதலியார் மறைவு நாள் இன்று பெப்ரவரி 16 1954
டி.கே.சிதம்பரநாத முதலியார் என்ற டி.கே.சி தமிழில் ரசனை முறைத் திறனாய்வு அல்லது அழகியல் திறனாய்வுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர். 1940-50 ஆகிய காலப் பகுதியில் இயங்கிய இவர், தமிழில் திறனாய்வைக் கிட்டத்தட்ட இயக்கம்போலவே நடத்தியவர்.
தம்முடைய திறனாய்வு முறைக்கு, மேலைநாட்டு இலக்கியக் கொள்கையையோ வேறு எதனையுமோ முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாத இவர், ரசானுபவத்தையும், தாள லயத்தையும், சொற்சுவையையும் அடியொட்டியே தம்முடைய பார்வையை வகுத்துக் கொண்டார். இதற்கு இவருக்குத் தளமாக இருந்தது, முக்கியமாக, கம்ப ராமாயணமாகும். கம்பன் பெயரால் உள்ள பாடல்களையெல்லாம் கம்பரே படைத்தார் என்பதை இவர் ஒத்துக்கொள்வதில்லை,
1514 பாடல்களை மட்டுமே (தரமான) கம்பனுடைய பாடல்களாக இவர் ஒத்துக் கொள்வார்.
இவர் வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தாலும், அப் பணியைத் தொடராமல் தமிழுக்காகவே வாழ்ந்த டி.கே.சி. திருநெல்வேலியில் 1924-ம் ஆண்டு "இலக்கியச் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புத்தான் பிற்காலத்தில் "வட்டத்தொட்டி' எனப் பெயர் பெற்றது.
தமிழால் அறிவியல் மட்டுமன்றி அனைத்துக் கலைகளையும், இயல்களையும் கற்க முடியும் என முழக்கமிட்ட டி.கே.சி. தமிழ்க் கவிதையில் மறைந்து கிடந்த கருத்துகளை எல்லாம் வெளிக்கொணர்ந்த காரணத்தால் "ரசிகமணி' என பெயர் சூட்டி அவரைத் தமிழுலகம் பாராட்டியது.
தமிழை முழுமையாக அனுபவித்த டி.கே.சி. தேவகோட்டையில் 1941-ம் ஆண்டு நடைபெற்ற தமிழிசை மாநாட்டில் தலைமையேற்று தமிழிசையின் மேன்மையை எடுத்துரைத்தார். இவ்வாறு அனைத்துக் கலைக்கும் தொண்டாற்றிய டி.கே.சி. 1927-ம் ஆண்டு சென்னை மேல்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் அவர் சங்கத்தமிழ் குறித்து முழக்கமிட்டார். 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையப் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றிய அவர், கோயில்களில் தமிழ்நாட்டு பழங்கலைகளை நிகழ்த்தி அக் கலைகளைச் செழிக்கச் செய்தார்.
இதய ஒலி, கம்பர் யார் உள்ளிட்ட அவரின் நூல்களும், முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகிய பதிப்புகளும் டி.கே.சி.யின் சிறப்பைத் தெளிவுபடுத்தும். வட்டத்தொட்டி நாயகர், வளர்தமிழ் ஆர்வலர், ரசிகமணி, குற்றால முனிவர் எனப் பல்வேறு பெயர் பெற்றவர் ஆவார் .