புதுமனை புகு தமிழ் திருமறை சிவ வாசி சித்து (வாஸ்து) வழிபாடு
Siva Vaasi Sithu(Vaastu) House Warming Prayers in Tamil Holy Incantation
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
இன்று 13-5-2014 (செவ்வாய்கிழமை),வளர்மதியில் பெயரால் ‘அருளகம்’ (Home of Grace /Home for internalizing the Grace) என்று விளங்கவிருக்கும் 17, லோரொங் பஞ்சோர் இன்டா 1, தாமான் பஞ்சூர் பெர்மாய் நிபோங் தெபால்
( 17 , Lorong Pancur Indah 1 , Taman Pancur Permai, Nibong Tebal) எங்களின் புது மனை தமிழ் திருமறை சிவ வாசி சித்து (வாஸ்து) வழிபாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும், அன்பான வணக்கங்களும், பணிவான நன்றிகளும்.
புது மனை குடி புகும் போது, வாசி சித்து (வாஸ்து) வழிபாடு செய்வதின் சிறப்புகள் என்ன? அதன் ஆகம உட்பொருள் என்ன? எப்படி வாசி சித்து (வாஸ்து) கலை அறிவு , தமிழர்கள் கண்ட சிறந்த அறிவியலாக விளங்குகிறது? போன்ற
கேள்விகளுக்குச் செயல்வழி விளக்கமாக இந்த தமிழ் திருமறை சிவ வாசி சித்து (வாஸ்து) வழிபாடு வெளிபடுகிறது. (மிகச் சுருக்கமாக ,அதன் அறிவியல்,செயல் உத்தி முறைகள் விளக்கப்படும்)
வாஸ்து (வாசி சித்து) ஒரு மூடநம்பிக்கையின் வெளிபாடா?
எந்த அறிவு மனித வளர்ச்சியை மூடமாக்கி (blind) செயலை முடமாக்குகின்றதோ( impeding ) அதுவே மூடநம்பிக்கையாகும். இன்று வாஸ்து என்று அழைக்கப்படும் நமது முன்னோர்கள் கண்ட வாசி சித்து மிகச் சிறந்த அறிவியல்
கலை. அதனினும் மேலாக வாசி சித்து ஓர் ஆன்மீக உயர் பெயர்ப்பு செயல்முறை உத்தி. ( Beside rigorous science, Vaastu is a spiritual elevational transformative process. It is not superficial belief. The aggressive comersialization of Vaastu practices distorted Vaastu’s
genuine purpose into superficial state) ஆனால் இன்று சமயப்பேரில், அறிவியல் பெயரில் அறிவுக்குப் பொருந்தா பல காரணம் அறியா, பொருள் புணரா சடங்குகளை வர்த்தக ஊடகமாக்கி, பலவீனமான மக்களின் அறிவை மூடமாக்கி, மனித உணர்வுகளில் அற்ப ஆசைகளை தூண்டி, பெரும் பொருட்செலவில் அறிவின்
தெளிவை, அறிவியலை ஊனமாக்குகின்ற கருவியாக வாஸ்து ஆக்கப்பட்டது நமது அறியாமையின் பெரும் வீக்கமே. சிவ அருளால் இந்த போக்கை தமிழர் விட்டு ஒழிக்க எங்களின் இந்த முயற்சி சிறிதாகினும் உதவட்டும்.
வாசி சித்து (வாஸ்து) கலை என்பது என்ன?
வாசி என்பது நலத்தையும், அறிவின் ஏரண (reasoning) திறத்தையும், கணித அளவையையும் (measurement) குறிக்கும். சித்து (intellect ) என்பது உயிர் பொருளின் அறிவு உணர்வியக்கம் அல்லது உயிர்ப்பியல் ஆகும். வாசி
சித்து கலை என்பது உயிரில்லா அசித்துப் (அறிவற்ற சடப்- material) பொருள்களுக்கு, ஒரு நலம் பொருந்திய , கள (பரிமாண) அளவு (dimensional accomodation) ஏற்கும், சித்து ஊட்டம் கொடுக்கும் அரும்பெரும் கலையாகும். (Vaastu is an art of injecting or installing the aesthetically
valued, appropriately designated and dimensionaly accomodative intellect into material- as a kind of anthropomorphization or to attribute human form or personality to things not human) வாசி சித்து வெவ்வேறான வடிவங் கொண்ட அசித்துப் ( சடப் ) பொருட்களுக்கு நயம்
செய்யும் சித்து ஊட்டி, செயல் கள (பரிமாண) அளவு பொருந்திய சக்திகளன்களாக மாற்றி, அறிவை,செயலை விருத்தி செய்யும் திறவுகோளாகும். (In modern computer science & technological terms, it is similar to a kind of intellectualy designed software installation into an designated
techno wired hardware ). இந்த வாசி சித்து , சிவா (சிவ) சித்தாக மாறும் பொழுது தந்தராயணமாகவும், மந்திராயணமாகவும், எந்திராயணமாகவும் வெளிபடும். உதா: திருமுருகனின் சிலை வடிவு அசித்து (வஸ்து-சடம்). அதில் திருமுருக தெய்வத் தன்மையைச் சித்தாகப் பதிக்க(பிரதிட்டைச் செய்ய)
அங்கு வாசி சித்து (வாஸ்து) கலை, அறிவியலாகின்றது. உயிரில்லா சடப்பொருளில், உயிர் இயக்க அறிவு உணர்வை பதிக்க முடியுமா? எப்படி? இது எந்த அறிவியல்? என்று கேட்போருக்கு, இதுதான் இறப்பு அறிவியல் என்று பதில் கூற வேண்டும். உங்களின் உடல் சடப்பொருள், நீங்கள் சித்துப் பொருள்.எப்படி
இறைவன் உங்களின் சித்து உயிரை ,அசித்துப் (சடப்) பொருளாகிய உடம்பில் பொருத்தி வாசி சித்து செய்கின்றானோ, அதேபோல் உங்கள் சித்தினை (உயிரினை) உடம்பிலிருந்து அகற்ற இறப்பு உங்களுக்கு சம்பவிக்கின்றது. இந்த வாசி சித்து கலையை நமது முன்னோர்கள் செவ்வனே அறிந்து, இக்கலையின்
இலக்கை சிவ சித்து கலைக்குப் பெயர்த்தனர்.சிவத்தின் உலகப் படைப்பில் ஒவ்வொரு பொருளின் அறிவியல் பயனீடும் (scientific consumption of objects) உயிர்களுக்குச் சிவ அருள் வெளியாகக்(Space of Siva’s grace) வெளிபடுவதால், இயற்கையையே சித்தாகக்(அறிபொருள் உணர்வாகக்) காணும்
திறனை தருவது சிவ சித்து.இந்த சிவ சித்துப்பார்வை , அறிவியல் மட்டும் அல்ல, அது மிக உயர்ந்த ஆன்மீகம். ஒவ்வொரு பொருளோடு ,உயிர்களின் பயனீட்டு உணர்வை இணைக்கும் விரிவான அறிவியலாக வாசி சித்துக் கலை செயல்படுவதை, சங்க இலக்கியங்கள், சமய புராணங்கள், தெய்வத் திருமறைகள்,
சித்தாந்த சாத்திரங்கள் இயல் நெறி & நூல் நெறி ( Hermeneutic Science or Interpretive Science ) ஆகக் கண்டு வளர்த்துள்ளனர். உதாரணத்திற்கு , காரைக்கால் அம்மையாரின் அற்புத திருவந்தாதி சின்னம நூல் நெறியின் ( Hermeneutic Semiotic/ Icon thinking ) வழி எப்படி சிவ திரு
உருவக் கோலங்கள், ,சிவ அணிகள் வழிபடுபவரின் உணர்வில் சிவ சித்து செய்கின்றன என்று விரிவாகப் பேசும். உயர் நிலையில் இவ்வாறான அறிவே பதி பசு பாச அநாதி மெய்யுணர் கோட்பாட்ற்கு வித்திட்டு,சிறந்த வாழ்வியல் முறையை நமக்கு வகுத்து தந்துள்ளன. (விரிக்கின் பெருகும் நிற்க).
அதற்காக வீடு?
வாழ்க்கையின் மிகச் சிறந்த,உயர்ந்த பேறாக, உயிர்களின் இலக்காக (destiny) கருதப்படுவது வீடுபேறு ( Moksha) ஒன்றே. வீடுபேறு என்பது உயிர்களின் ஆணவ, கன்ம, மாயை (bondages called darkness, karma and maya )
கட்டுக்களை சிவ அருளால் காய்த்து (starved) , மசித்து(deformed), நசிக்கும்(destroyed) மறு பிறப்பில்லா வாழ்வியல் முடிவாகும். உலக வாழ்க்கையில் வீடுபேறு உணர்வை, அறிவை அனுபவக் களனாக ஆக்கும் பெரும் முயற்சியை இல்வாழ்க்கையின் வழி அறிவதே சாலச் சிறந்தது என்று அன்றே
தமிழர்கள் அறிந்து தெளிந்துள்ளனர். வீடுபேற்றின் இருந்தறிவை ( experiential state of moksha begin at home ) இல்லறத்திலேயே துவங்க வேண்டும், உணர வேண்டும் என்று உலக வாழ்க்கையில் இல்லறத்தார் வாழும் ஒரு சிறு கட்டிட இருப்பிடத்தை ‘வீடு’ என்று அழைத்தனர்.மனை வாழும் வீட்டின்
இருப்பிடம் சிறியதானாலும், கொள்கையினாலும் உணர்வாலும் பேரண்ட அருள்வெளியில் நுழையும் ‘வீடுபேறு’ இருப்பு நிலை உணரும் அருளாளர்களாக இல்லத்தார் உருவாக வேண்டும் என்பதே இதன் காரண மறைபொருளாகும்.( The implicit reason for ‘home’ is to realize the Godhood as Ammai-mother
Appar-father and to imbibe the deep meaning of Moksha as an ultimate Home) அம்மை அப்பராய் எண்ணிலி (infinite) உயிர்களுக்கு அருள் செய்யும் இறைவன் அண்டத்தை வீடாகக் கொண்டவன். இறைவனின் திருக்குறிப்பை ( Holy Intention) அறிய ,அவன் கருணையை உணர , அவனின் அருளை தெளிய
‘வீடு’ என்ற இல்லற வாழ்வு, உயர் கல்வி கூடமாகின்றது (Home is a higher educational instituition which will produce compassionate human with Godhood Ammai-mother Appar-father attributes ) உதா. குழந்தைப்பேறின் வழி நல்லுயிர் பேணி வளர்க்கும் கல்வியை இல்லறத்தார் மேற்கொள்ளும்
போது, அவர்களுக்கு அம்மை அப்பராய் இறைவன் உயிர்களை(நம்மை) பேணி காக்கும் பேரன்புணர்வு வெளிபடுதலும்,நல்ல பெற்றோறின் இலக்கணம் தெளிவாகுதலும் சாத்தியமாகின்றது.இதைவிடச் சிறந்த கல்வி அறிவு இவ்வண்டத்தில் ஏதாகினும் இருக்க முடியுமா? ‘வீடு’ அருளை அகப்படுத்தும் ‘அருளகமாக’
உருபெற்றால்,அண்டத்தை வீடாகக் கொண்ட அம்மை அப்பரின் அறத்தினை அறிய ‘வீடு’ வாழ் இல்லத்தாருக்கு எளிது என்றால் அது பொய்யாகுமா?
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. திருக்குறள்-0047
இயல் நெறி (phenomenological hermeneutics) வாழ்வு, பிழையாது இல்வாழ்க்கை வாழ்பவன், முக்தி நெறி அல்லது வீடுபேறு தேடும் முயற்சியில்
தலைமை வகிக்கின்றான் என்பதனை திருவள்ளுவரின் வள்ளுவம் வழுத்து கூறுவது, வாழ்வை மித்தை என்று பொய்யாக்க முயலும் அனைத்து வேதாந்தத்திற்கும் இழுக்கு, பெறும் முழுக்கு என்று அறிவோமாக.
மனை வாசி சித்து என்பது என்ன?
மனை வாசி சித்தை வாச (இருப்பிட) சித்து அல்லது வசை (சூழப்பட்ட) சித்து என்று அழைக்கலாம். இது சூழப்பட்ட இருப்பிட (மனை) சடப்பொருட்களில் சித்து தன்மையை ஏற்றும் வாசி சித்துவின் ஒரு கலைப்பிரிவாகும்.
எப்படி மனை வாச ( இருப்பிடத்தை) சித்து செய்வது ?
மனை வாச ( இருப்பிட) சித்து ஒரு புது நிலத்தில் வீடு கட்டி, குடும்ப வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பு, அங்கு சூழப்பட்ட மண்ணுயிர்களோடும், பஞ்சபூத சக்திகளோடும்,அதன் இயற்கை அமைப்பினோடும்,தங்களை இணைத்து (associate),
இணங்கச்செய்யும் ( being in agreement or harmonious with) சாதனா கலையாகும். (Vaastu for home is an practical arts of linking the self with divine space and being in agreement or harmonious with the surrounded dynamic system like micro and macro species,nature
and pancha boothas the five elements to achieve the spiritual elevation) முதலில் குடி புகும் இல்லம் தெய்வத் தன்மை பெறவேண்டும், அதில் ‘வீடுபேறு’ என்ற உணர்வு ஆழமாகப் பதிக்கப்பட வேண்டும். இல்லத்தார் உளவியல், அறிவியல், உடலியல் இம்மூன்று நிலைகளிலும் சூழப்பட்ட
புது இயற்கை சூழலை ‘வீடுபெறு’ அல்லது தெய்வத்தன்மை எய்தும் நோக்கில் உணர்வால் ஒன்ற, அறிவால் தெளிய, செயலால் சித்திப்பெற,பொருள், சக்தி பயனீடு செய்ய வழிவகைச்செய்ய வேண்டும். அதனை மனை வாச ( இருப்பிட) சித்து செவ்வனே செய்கிறது. எப்படி?
i)
முதலில் மனையின் எட்டு (8) திசைகளின் பஞ்சபூத ஓட்டத்தை நன்கு அறியச்செய்கிறது. இது மிக முக்கியம். மனையின் காற்று ஓட்டம், ஒளி பாய்வு, மண்ணின் தரம்,குணம், நீர் ஓட்டம்,
வெளி அகல் வடிவு, நமது அன்றாட அடிப்படை வாழ்வியல் நலத்தை, நயத்தை, மனை இயங்கு,இயக்கு முறையை உறுதிசெய்யும். உதா: காற்று ஓட்டம் குறைவாக, உள்ள அறையில் மடல் செடியை நட அங்குள்ள, கரியமிலவாயுவை குறைத்து, உயிர்(பிராண) காற்று அதிகரிக்க உதவும்.வெளியில் கமுகு (பாக்கு) வகை
மரங்கள் உயிர்(பிராண) காற்று அதிகரிக்க பெரிதும் உதவும். (பஞ்சபூத ஆய்வு விரிக்க நூலாகும். நிற்க).
ii)
விட்டில் சூழப்பட்டிருக்கும் மண்ணுயிர்களின் அறிவை தரும்.
iii)
மனைவாழ் இல்லத்தாரின் அருள் நிலை கூட்டும்.
iv)
ஆக்கச் சக்தியை நிலை நிறுத்தும். மேலும் பல.
இன்று தமிழர்கள், இவ்வாறன நமது முன்னோர்கள் கண்ட பூத(physics),மூலிகை (herbal botany),உயிரியல் (biology), மூலப் பொருள்(material), தாது , கனிம (minerals), தர்க்கம்/ஏரண( logic),
அறிவியல் அறியாதவர்களாக, யார் யார் சொல் கேட்டு குருட்டறிவினை ஏற்கும் வாய்சொல் வீரர்களாக, வள்ளுவர் கூறிய எப்பொருளாயுனும் அதனின் மெய்பொருள் காணாதவர்களாக இருப்பது எங்கணம் தகும்?
எப்படி மனை வாச ( இருப்பிட ) சித்து சிவ சித்தாகப் பெயர்ச்சியடைகிறது?
தமிழர் மண்ணை ,சடமாகக் காணாது, அங்கு கன்னியாம் தன்மை அம்மையை சக்தி குண்டமாக, விந்துவின் பேர் வடிவாக பூமியைக் கண்டனர். கன்னி தன்மை கொண்ட விந்துவில் (மண்ணில்), நாதமாக(விதைகள் விதைக்க) கிளக்க, பல சித்துகள்
(செடிகள்) சனிப்பிக்கப்படுகின்றன. அதே வித்தையை மனை வாச சித்துவின் போது மனை நிலத்தின் விந்துவாகிய மண்னை ஆவுடையாராக்கி வாசப்புருடனான நாதத்தை இலிங்கமாக வடிவமைத்து விதைக்க, சிவ சித்துப்பெற்ற சிவலிங்கமாக மனை பிரதிட்டை ஆகின்றது. வாசப்புருடன் என்பவர் சிவத்தின் ஆகருடச்
சக்தியை(attraction force) நிலத்தில் பாய்ச்சுபவர். அருள் சிவலிங்கமாக பிரதிட்டையான மனை பிண்டச் சிவலிங்கம் (micro form of Sivalinga) , அண்டலிங்கத்தோடு(makro form of Sivalinga) இணந்து, இணைங்கி, பேரண்ட பெருவெளியில் இணையப்பெற்ற(universally networked) பேறு நிலயினை
அடைகின்றது. இந்த வாச ( இருப்பிட ) சித்து சிவ சித்தாகப் பெயர்ச்சியடையச் செய்யும் வழிபாடே வீடு வாழ் இல்லத்தார் வீடுபேற்றை இலக்காகக் கொண்டு பயணிப்பதற்கு வேண்டிய ஊட்டச்சத்தாக உருபெறுகிறது.
புது மனை புகும் இல்லத்தார் இந்த வாச சித்து செய்யும் கலையை சிவ வழிபாடக மிக எளிமையாக செய்ய முடியும் என்பதனை விளக்குவதாகக் கீழ்வரும் புதுமனை புகு தமிழ் திருமறை சிவ வாசி சித்து (வாஸ்து) வழிபாடு விரிக்கும்.
ஆசிரியராக ஒருவரின் வழி காட்டுதலின் வழி, இல்லத்தார் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய வழிபாடு. ஆசிரியர் (இயலுமானால்) கிழக்கு பார்த்து அமரவேண்டும்.
வாசப்புருட
எந்திரம் : முதலில் ஒரு வெள்ளை துணியில் 9 x 9 கட்டங்கள் வரைந்து, வாசப்புருடரை வரைந்து கொள்க. நான்கு முனைகளிலும் சூலம் வரைக. வாசப்புருட எந்திரத்தை பலகையின் மேல் வைத்து, சிவ அண்டலிங்கத்தை பிரம்ம வாச இருப்பிடத்தில் (நடு 9 சதுரங்கள்) வெற்றிலையின் மேல் வைக்கவும்.
வெற்றிலை ஆகாய பூத மூலிகை.அது வாத ஓட்டத்தை சமன் செய்ய வல்லது. (குறிப்பு : வழிபாடு செய்வதற்கு முன்பு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்)
-
பிள்ளையார் வழிபாடு
மஞ்சள் + அருகம்புல் பிள்ளையாரைப் பிடித்து வெற்றிலையின் மேல் வைத்துப் பொட்டிடுக பூவிடுக. தலை வாழை இலையின் மேல் ஒருபுறம் வைக்கவும். இலையின்
மேல் அரிசி தூவி நிரப்பவும்.
உட்பொருள் வெளிபட பிரணவ ஓங்காரம்
ஓம் =அ+ உ + ம் என்று 3 முறைகள் ஓதவும்
மோதகக்(பிள்ளையார்) குட்டுகளைக் குட்டிக் கொள்க
எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே
எல்லாம்வல் லான்ற னையே ஏத்து.
திருவருட்பா 3267 திருவள்ளலார்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
திருமுறை
11.020.1 கபிலதேவ நாயனார்
விளக்கம்: எங்களின் செயல் கைகூட செயலின்
இயக்கமான நடராச சிவனார், அரண் நின்று, ஆனை முகத்தான் வலிமை (பீடு) தர கைகூப்பி,சிரம் தாழ்த்தி, அன்பால் வேண்டுகிறோம்.
-
அருள்
தீர்த்தம் ஆக்கல்
சிறு குப்பியில் 7 முறை நீர் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி, கையால் பாத்திரத்தை மூடிக்கொள்ளவும்
ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
திருமுறை 6.057.10 திருநாவுக்கரசர்
விளக்கம்:
காவிரி, நல்யமுனை... புனித தீர்த்தங்கள் சூழும், இடத்தில் திகழும் கூத்தனார், நம்மைக் கூவிக் கரை ஏறும்படி அழைத்து, இப்பிறவியை அறுத்து நாம் விண்ணவர் உலகம் எல்லாவற்றையும் தாண்டித்
சிவலோகத்தில் சென்று சேரும்படி, மாயை கலவாத தம் அருட்குணம் ஆறின் உள்ளும் படுத்தி நம்மை ஆட்கொள்ள வேண்டுகிறோம்.
‘ஓம் சிவாய நம’ x 3 முறைகள்
‘ஓம்’ x 7 முறைகள்
‘ஓம் சிவத்திரு வடிவே சூழ்ந்து காக்க ‘
நீரில் மஞ்சள் + அறுகம்புல் + தூய சந்தனம் சேர்த்து, (இரசாயன கலவையில்லா) பூ போட்டு, நீரை வழிபாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பருகக் கொடுத்தல்.
விளக்கம்: அருள் தீர்த்தம் பெற்று உணர்வுகளை, 7 ஆதார சக்தி களன்களில் ஊடுருவ தயார் செய்தல்
‘
-
கணபதியை எழுந்தருளச்
(ஆவாகனம்)
செய்தல்
இருகைகள் ஏந்தி
எழுந்தருள (ஆவாகனம் செய்ய) வாருங்கள் ஐயா என்ற முத்திரையில்
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
திருமுறை
1.123. திருஞானசம்பந்தர்
விளக்கம்:
உமையம்மை பெண்யானை வடிவுகொள்ள, சிவன் தான் ஆண்யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடியவர்கள் நமக்கு இடர்களைக் கடியக் கணபதியைத் இங்கு தோற்றுவித்தருளிட வேண்டுகிறோம்.
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வண்ண மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே...!
முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் வந்தெனுக் கருளி
கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்திணை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
நாவால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயிற் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயந்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடமென
அருள் தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமு நீறும் விளங்க நிறுத்திக்
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையை தந்து எனை யாண்ட
வித்தக வினாயக விரை கழல் சரணே...!
அவ்வை வினாயகர் அகவல்
விளக்கம்: வினாயகப் பெருமான் இங்கு எழுந்தருளிச் (ஆவாகனம்) செய்து குருவடிவாகி நமது
நெஞ்சக் கருத்தின் நிலையறிந்து, நாம் நாவால் எழுப்பும் கருத்தறிவிக்க, இங்கு திருவடி வைத்து திறமிது பொருளென வித்தகம் காட்ட(ஞானம் புகட்ட) வேண்டுகிறோம்.
கணபதிக்குத் தூப தீபம் காட்டி பாடப்படுவது
கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.
திருமுறை 12.01.2 சேக்கிழார்
விளக்கம்: கற்பிக்கப் பெறும் கற்பனைகளையெல்லாம்
கடந்து நிற்கும் ஒளி வடிவாகிய இறைவன், தன் கருணையால் திருச்சிற்றம்பலத்துள் நின்று ஆடும் வடிவு கொண்டு, யாவர்க்கும் அற்புதம் விளைக்கும் திருக்கோலத்தில்,சோதியாய், அருள வேண்டுகிறோம்.
-
திருமுருக வழிபாடு
இருகைகள் ஏந்தி எழுந்தருள (ஆவாகனம் செய்ய) வாருங்கள் ஐயா என்ற முத்திரையில்
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
கந்தர் அநுபூதி 51
அருணகிரிநாதர்
விளக்கம்: திருமுருகன் குருவாய் எழுந்தருளி
உருவாய் அருவாய் உள்ள மறைபொருளுக்கு பொருள் விளக்கமாக வந்து தந்து அருள வேண்டுகிறோம்
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
திருப்புகழ் 21
அருணகிரிநாதர்
விளக்கம்:
பாதி மதி நதி சிவன் அருளிய வீர தீர குமரேசன், ஆடு மயிலினில் ஏறி, அமரர்கள் சூழ இங்கு வர வேண்டுகிறோம்
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
கந்தர் அலங்காரம் 38
அருணகிரிநாதர்
விளக்கம்:குமரேசன்
எழுந்தருளிய இவ்விடத்தில் இடர்தரும் காலம்,ஊழ்,கோளம்,காலன் இவை யாவும் ஒடுக்கம் பெறும், ஒழுங்கு பெறும் என்று நம்புகிறோம்.
5.
தட்சிணாமூர்த்தி வழிபாடு
இருகைகள் ஏந்தி
எழுந்தருள (ஆவாகனம் செய்ய) வாருங்கள் ஐயா என்ற முத்திரையில்
அறிவைம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபரனாமே.
திருமுறை 10.1.4.7 திருமூலர்
விளக்கம்: ஆணவமாகிய இயற்கைப் பாசத்தில்
இடர்ப்படும் உயிர்களுக்கு விடுபடும் நெறியை அறிவிப்போனாக, குருவிர்க்குள் மேலான ஞானாசிரியனே, தெற்கு நோக்கி காலனின் ( இயமனின் ) செயலுக்கு காலனாக இருப்பவனே, இங்கு எழுந்தருள வேண்டுகிறோம்.
6. கோளறு வழிபாடு
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
திருமுறை 2.085.1 திருஞானசம்பந்தர்
விளக்கம்: அர்த்தநாரியாய் எங்கள் உளம் புகுந்து ஞாயிறு, திங்கள் முதலான நவக்கோள்கள் குற்றம் அற்ற நலத்தை
அடியார்களாகிய எங்களுக்கு மிகவும் நல்லனவாகச் செய்ய வேண்டுகிறோம்..
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும் அருநெதி
நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
திருமுறை 2.085.3 திருஞானசம்பந்தர்
விளக்கம்:
சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து எங்கள் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் நல்லனவாக அடியார்களாகிய
எங்களுக்கு இவ்வழிபாட்டில் தர வேண்டுகிறோம்.
7. கலச ஏற்பாடு
தூய நீரை ஒரு பாத்திரதில் ஊற்றி ஓதப்படுவது
ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
திருமுறை 6.057.10 திருநாவுக்கரசர்
தூப தீபம் காட்டி ஓதப்படுவது
சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
திருமுறை 8.29.1 மாணிக்கவாசகர்
விளக்கம்: சோதிப் பிழம்பானவனே! ஒளிப்
பிழம்பில் உள்ள கதிர்களாய் உள்ளவனே! சூழ்ந்த ஒளியை உடைய விளக்குப் போன்றவனே! சுருண்ட கூந்தலை உடைய உமாதேவியின் பாகத்தை உடையவனே! மேலானவனே! அடியவர்களாகிய நாங்கள், உன்னை விரும்பி அழைத்தால், அதென்ன? என்று கேட்டு அருள் புரிய இங்கு வர வேண்டுகிறோம்.
தூபப்புகையை நூல் சுற்றிய
கலசத்தின் உள் காட்டி + ‘ஓம்’ x 3 முறைகள்
i)
கலசத்தில் நீரை ஊற்றி, நாணயங்கள் + எலுமிச்சம்பழம் இவற்றை உள்ளே போடவும்
ii)
மாவிலை செருகி + தர்ப்பைக் கூர்ச்சம் கலச வாயில் செருகி
iii)
கலச வாயில் தேங்காய் அமர்த்தி
iv)
தேங்காய்க்கு முடிக்கூர்ச்சம் தர்ப்பையால் ஆக்கி
v)
கலசத்திற்கு மாலை/ பஞ்சு நூல் துணி அணிந்து
ஒரு கூர்ச்சத்தால் கலசத்தை தொட்டு,
மன்னுந் திசைவேதியில் மங்கல ஆகு திக்கண்
துன்னுஞ் சுடர்வன்னி வளர்த்துத் துதைந்த நூல்சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூநீர்
உன்னும் செயல்மந் திரயோகர் நிறுத்தினார்கள்.
திருமுறை 12.15.38 சேக்கிழாரக்சி
விளக்கம்: சிவமூர்த்தியாருக்கு ஆதித்திய
கிழக்குத் திசையில் அமைந்த, மங்கலம் நிரம்பிய வேள்வியில், விளங்கிடும் சுடருடைய தீயை வளர்க்க, நூல் சுற்றிய கலசங்களிலும், குடங்களிலும் நிரப்பப் பெற்ற தூய நீரை, மந்திரங்களை ஓதும் நாங்கள் நிறுத்தியுள்ளோம்.
இலையின் மேல் உள்ள அரிசியில் தாமரை வரைந்து, அரிசியின் மேல் கலசத்தை வைத்து அதன்
அடியில் தொட்டு ‘ ஓம் அயனே போற்றி ‘
இடையில் தொட்டு ‘ஓம் அரியே போற்றி ‘
முடியில் தொட்டு ‘ஓம் அரனே போற்றி ‘
இப்பொழுது ஒரு கூர்ச்சையால் சிவ அண்டலிங்கத்தையும், கலசத்தையும் தொடச் செய்து
ஓதவும்.
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.
திருமுறை 10.9.10.1 திருமூலர்
விளக்கம்: சிவனது சத்தி திருக்கூத்து
எங்கும் நிகழ்வதாம். எதற்கும் கட்டுப்படாத,எங்கும் நிறைந்த சிவசக்தியை, சிவனருள் திருவிளையாட்டால், அருவ நிலை அகன்று இந்தக் கலசத்தின் சித்து பொருளாய், சிவ வாசி சித்து செய்ய வேண்டுகிறோம். எங்கும் எல்லாம் சிவமயமாய் இருத்தலால், இங்கு நிகழும் இந்தச் புதுமனை புகு
தமிழ் திருமறை சிவ வாசி சித்து (வாஸ்து) வழிபாடும் அவனது திருவருள் விளையாட்டேயாம்.
தூப தீபம் காட்டுதல்
8. காப்பு நாண் கட்டல்
நூலில் மஞ்சள் தடவி தயார் செய்த நாணை
வழிபாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கொடுத்து
எல்லோரும்
நாண் கட்டும் முன்பு, தங்களின்
‘வீடு’ வாழ் இல்லத்தார் நல்லறம் காண வேண்டி மனதில் உறுதிமொழியாகக் கொண்டு,
‘என் கருத்தை
சிவனடியில் வைக்கின்றேன், சிவனே காப்பு’
என்று மனதில் சொல்லி நாணை கட்டவும்.
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
திருமுறை 6.019.8 திருநாவுக்கரசர்
விளக்கம்: அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி, அவர்களுடைய விருப்பங்களை
அறிந்து நிறைவேற்றுபவனாய், மாசற்றவனாய், திகலும் சிவனடியை சிந்திக்கப் பெற்றேன் நானே.
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
ளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
திருமுறை 8.21.1 மாணிக்கவாசகர்
விளக்கம்: உமையம்மையினிடத்தே, நடு உள் பொருளாய் சிவன் அடங்கித் தோன்றி; இந்த அடியார் இடையே நீங்கள் இருவீரும்
இருந்து, எங்கள் எண்ணம் நிறைவேறும் படி எங்களுக்கு முன்னே நின்று, திருவருளைச் செய்வீர்களாக.
9. வேள்வி குண்டத் தீ மூட்டல்
வேள்வி என்பது நமது அறிவிலும், உணர்விலும் எழும் அறிவு திரிபு
(Mental Distortion) , மன விகாரம் போன்ற இருள் (பாசத்) தடைகளை தீய்த்து எரிப்பது.அதுவே நமது மூலாதாரதில் மூண்டெழும்
தீயாகும். அதே வேளையில். நாம் ஏற்கும் வேள்வி தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழித்து,மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து,அங்கு சுற்றி இருக்கும் நீர்நிலைகள், காற்று போன்ற சூழலை நச்சுத் தன்மை
அடையாதவாறு பாதுகாக்க உதவும்,
வேள்வி குண்டத்தில் சேர்க்கும் குச்சிகள் & இலைகள் : ‘வேம்பு, ஆலம், தேவதாரு,விலாமிச்சை, வெட்டிவேர் , பேய்மருட்டி,அகில், சந்தனம் போன்ற மூலிகைகள் ஆகும்.
குண்டத்தின் வடகிழக்கில் 8 தர்ப்பைகள் கட்டி
‘ ஓம் வாகிசுவரன், வாகிசுவரி போற்றி ‘
‘ ஓம் வாகிசுவரன், வாகிசுவரி எழுந்தருளுக போற்றி ‘ x 2
குண்டத்தில் நெருப்பிடல் :
i)
நெய் விடுக
ii)
கற்பூர கட்டியைக் கொளுத்திக் குண்டதைச் சுற்றி ஆரதிகாட்டி ‘ ‘ஓம் சிவாய நம’ ‘ஓம் சிவத்தழல் செம்மல் எழுந்தருழுக’
‘ஓம் சிவசோதி பொலிந்தருள எழுந்தருழுக’
iii)
மலரிட்டு அர்ச்சித்தல்
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.
திருமுறை 10.4.8.59 திருமூலர்
விளக்கம்: வயிற்றுத் தீயும், குண்டத் தீயுமாகிய ஓமத் தீக்களிலும் ஒப்பற்ற ஒருத்தியாய் அம்மை இருந்து அவற்றை
அடையும் பொருள்களைச் செரிப்பித்தும், அவியாக்கியும் உதவுகின்ற சக்தியான திருவைந்தெழுத்தையே துணையாகப் பற்றி நாங்கள் இந்த வேள்வி தீயை வளர்கின்றோம்.
வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
திருமுறை 6.018.1 திருநாவுக்கரசர்
விளக்கம்: சிவம் இங்கு உள்ள அடியார்களின்
கண்முன் கூர்மை பொருந்திய மூவிலைச் சூலமும், நீண்ட சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய முடி மாலையுடன் வேள்வி தீயில் தோன்ற வேண்டுகிறோம்.
தூப தீபம் காட்டுதல்
அமுது படைக்க பாடுதல்
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.
திருமுறை 10.7.11.2 திருமூலர்
விளக்கம்: வேள்வித் தீயில் உன்னை வழிபடும்
நாங்கள் அத்தீயில் இடும் உணவை ஏற்று, இலிங்கத்தில் முன் வைத்துக் கையை அசைத்துக் காட்டுகின்ற பொருளை நீ கண்டு, அருள் புரிய, உனது திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற தெய்வத் தமிழ் திருமறைப் பாடல்களை அமுதாக அளிக்கின்றோம் பெற்றுக்கொள்வாயாக.
10. புவனாதி பதி எழுந்தருளச் (ஆவாகணம்) செய்தல்
பிண்ட நாத லிங்கம்: மூன்று வகை( வண்டல், களிமண், மணல்) மண்ணில் பிண்ட நாத லிங்கம் (ஆவுடையார் இல்லாதது ) ஆக்கி, வெற்றிலையில் வைத்து வாசப்புருட
எந்திர ஈசான முகத்தில் வைத்து கூர்ச்சையால் சிவ அண்டலிங்கம் தொட்டு நிற்க வேண்டும்.
‘சிவ அண்டலிங்க பெரியோன் பிண்டநாதலிங்கத்தில் எழுந்தருள்க’
என்று ஓதுக
கற்பூர தூப தீபம் காட்டி மலர்சொரிக.
புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனேய உலகின் அடற்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறைஎன மாலுற்ற வாறே.
திருமுறை 10.9.29.13 திருமூலர்
விளக்கம்: எல்லாப் புவனங்கட்கும் அதிபதி
சிவனே; புண்ணியத்தின் பயனாய்க் கிடைப்பவனும் அவனே, யாவர்க்கும் தந்தையும் இவனே; உலகத்தை நடத்துபவனும் அவனே; எண்ணிலி உயிர்களுடன் நிற்பவனும் அவனே; ஆகலின் சிவமே நாம் உணரும் மெய்யுணர்வாகும்.
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.
திருமுறை 10.4.5.27 திருமூலர்
விளக்கம்: அரிய பொருளாய்ப் பொருந்திய
உண்மையை உணரப் பெற்ற புவனை` எனப்படுகின்ற திரிபுரைக்குத் தலைவனாகிய சிவனது செம்மையான திருவடிகளையே அனைவரும் ஒருங்கு கூடிப் போற்றுவோம்.
பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.
திருமுறை 10.7.25.4 திருமூலர்
விளக்கம்: சதாசிவ மூர்த்தி நம்மை இயல்பாகவே
பற்றி நிற்கின்ற, வெறுக்கத் தக்க அக இருளை நீக்குதற் பொருட்டு நம் உயிருக்கு உயிராய்க் கலந்து நின்று, தீக்கை புரிய எழுந்தருள வேண்டுகிறோம்
பஞ்சபூதமாய் சிவம் எழுந்தருள ஓதவும்:
இப்பொழுது வழிபாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும், வேள்வியில் தமது அறிவிலும், உணர்விலும் உள்ள தடைகளை தீய்த்து எரிக்க குச்சிகளை போடவேண்டும்.
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருட்பெருஞ் ஜோதி
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி
காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
அனலினுள் அனலாய் அனல்நடு அனலாய்
அனலுற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
அனலுறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனலுற வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனைஎன வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
புனலுறு புனலாய்ப் புனல்நிலைப் புனலாய்
அனைஎனப் பெருகும் அருட்பெஞ் ஜோதி
புவியினுள் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள விரிந்த அருட்பெருஞ் ஜோதி
விண்ணிலை சிவத்தின் வியனிலை அளவி
அண்ணுற அமைந்த அருட்பெருஞ் ஜோதி
வளிநிலைச் சத்தியின் வளர்நிலை அளவி
அளிஉற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நெருப்பது நிலைநடு நிலைஎலாம் அளவி
அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புவிநிலைச் சுத்தமாம் பொற்பதி அளவி
அவையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் திண்மையை வகுத்ததிற் கிடக்கை
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் நாற்றம் வகுத்ததில் பல்வகை
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் பற்பல வகைகரு நிலஇயல்
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன்பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் தண்மையும் நிகழ்ஊ றொழுக்கமும்
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினிற் பசுமையை நிறுத்தி அதிற்பல
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறஇயல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் சுவைநிலை நிரைத்ததில் பல்வகை
ஆருறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல
ஆர்கொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்இயல் பலபல நிறைத்ததிற் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
தீயினில் சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயினில் வெண்மைத் திகழ்இயல் பலவாய்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பூஎலாம் திகழுறு திறம்எலாம்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை ஒளியே திகழுற அமைத்ததில்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை அருநிலை திருநிலை கருநிலை
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயினிற் பக்குவஞ் சேர்குணம் இயற்குணம்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயியல் பலபல செறித்ததில் பலவும்
ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிரியல்
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடைப் பூவியல் கருதுறு திறஇயல்
ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் பெருநிலை கருநிலை அளவில
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை ஈரியல் காட்டி அதிற்பல
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் பக்குவக் கதிஎலாம் விளைவித்
தாற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியினில் ஒலிநிறை வியனிலை அனைத்தும்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை
அளிகொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கும் அருட்பெருஞ் ஜோதி
வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள்
அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
திருவருட்பெருஞ்சோதி அகவல் வள்ளலார்
விளக்கம்: சிவன் பஞ்ச பூத இயக்கங்களை
வகுத்து, அமைத்து செயல் புரிவது அருட்பெருஞ் ஜோதி என்பதால் பஞ்ச பூத இயக்கத்தில் சிவத்தின் திருகுறிப்பு விளக்கம் காண்போம்.
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.
திருமுறை 8.33.1 மாணிக்கவாசகர்
விளக்கம்: சிவபெருமான், உயிர்களுக்குத்
தேவையானது அறிந்து, அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், அருளுபவனும் அவன் அல்லவோ? அகவே நீ விரும்பி எதனை அருள் செய்தனையோ அதனையே ஏற்று, பெற்றவராகின்றோம்.
11..திசை தெய்வ வழிபாடு
ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும் பிஞ்ஞக னெந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந் திருப்பயற் றூர னாரே.
திருமுறை 4.032.6 திருநாவுக்கரசர்
விளக்கம்: திருப்பயற்றூரனார் தீ நீங்காத
கையினராய், தீபங்கள் நீங்காத சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய், தலைக்கோலம் அணிந்தவராய், நமக்குத் தந்தையாராய், தலைவராய், ஞாயிறு, சந்திரன்களாகவும், யமன், வருணன், அக்கினி, நிருதி, வாயு, மேம்பட்ட சாந்த வடிவினனாகிய ஈசானன் ஆகிய எண்திசை காப்போராகவும் உள்ளார்.
வாசப்புருட எந்திரத்தின் 8 திக்குகளையும் கூர்ச்சையால் தொட்டு ‘ஓம் சிவாய நம ‘ என்று ஓதுக.
மனையின் ஒவ்வொரு திக்குகளுக்கும் சென்று ஓதவேண்டும்
i)
கிழக்கு:
ஆதித்தன் - இந்திரனின் தலைவன்
ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும்
சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.
திருமுறை 10.7.22.3 திருமூலர்
விளக்கம்:
அறிவு கொழுத்தும் ஆதித்தியன், நமது அன்பில் வெளிபடுவாராக .
ii)
தென்கிழக்கு: சோதியன்-அக்கினியின் தலைவன்
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. திருமுறை 10.1.1.4 திருமூலர்
விளக்கம்:
ஆதித்தன் தீயினும் வெய்யனாக இருப்பினும்,தாயைப் போல் நம்மை காக்க வேண்டுகிறோம் .
iii)
தெற்கு: கால பைரவர் - காலனின்(இயமனனின்) காலன்
ஞால மேழுமாம் ஆல வாயிலார்
சீல மேசொலீர் காலன் வீடவே.
திருமுறை 1.094.2 திருஞானசம்பந்தர்
விளக்கம்:
கால பைரவர் துணையோடு
காலன்(இயமன்) தீண்டாதிருக்க வேண்டுகிறோம்.
கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.
திருமுறை 10.1.16.1 திருமூலர்
விளக்கம்: கல்லா அரசனை விட கூற்றுவன்
மிக நல்லவன். கல்லா அரசன் தனது அறியாமை காரணமாக ஒரு குற்றமும் செய்யாதார்க்கும் ஆராயாமல் கொலைத் தண்டம் விதிக்கக் கூடும்,அனால் கூற்றுவன் அறமுடைய நல்லாரை அணுகான்.
iv)
தென்மேற்கு: சுடலையாடி - நீத்தார் தலைவன் ( தென்புலத்தார் இறைவன்) நிருதியின் ஏவகன்
|
இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே
திருமுறை 7.094.9 திருநாவுக்கரசர்
விளக்கம்: சுடலையாடி சிவனை என்றும்
அன்போடு துதிக்கின்றவர் நிலையாத இவ்வுலக வாழ்வை நீத்த பின்பும் எஞ்ஞான்றும் அழியாத இடத்தை பெற்று தொலையா செல்வத்தை அடைய வேண்டுகிறோம்.
v)
மேற்கு: சந்திரசேகரன்- வருணனின் காவலன்
மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.
திருமுறை 10.3.18.15 திருமூலர்
விளக்கம்: இயங்கும் இல்லமாகிய உடம்பினுள்
பகைவர்கள் வலிமைபெறாது இருக்க மதியின் எழுங்கதிர் வீசி மாய்க்கின்ற சந்திரசேகரரை வேண்டுகிறோம்.
vi)
வடமேற்கு:
நடராசன்- வாயு நகர்ச்சிக்கு வழிகாட்டி
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே. திருமுறை 6.098.7 திருநாவுக்கரசர்
விளக்கம்: நிற்பனவும், நடப்பனவும்,
நிலனும், நீரும் , நெருப்பும், காற்றும், நெடுவானும், புன்மையதும், பெரியதும், அரியதும், அன்புடையார்க்கெளியதும், அளக்கலாகாத் தற்பரமும், சதாசிவமும் ஆகிய நடராசன் நன்மைகளையும், பொலிய வேண்டுகிறோம்.
vii)
வடக்கு: மகேஸ்வரன்- சோமனின் (குபேரன்) தலைவன்
நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு)
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் றானும்
உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.
திருமுறை 10.8.13.12 திருமூலர்
விளக்கம்: மகேஸ்வரன், உள்ளதில் ஏறும்
8 திக்கு இயக்கங்களையும் நலமே நேர் செய்ய,வேண்டுகிறோம்.
viii)
வடகிழக்கு: சதாசிவன்- ஈசானனாக
நீர்கலசம் (நீர்கலசத்தின் மேல் தேங்காய்)
ஈசான மூலையில் வைக்கவும்,
பிறகு
ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் தூய
திருமுறை 11.008.28 சேரமான் பெருமாள் நாயனார்
விளக்கம்: வாயால் படி ,மனதால் புணர்ந்த
மந்திரத்தால் வேண்டி ஈசான சதாசிவனின் அருளை வேண்டுகிறோம்.
12 புவானாதிபதியின் நாதலிங்க பதிப்பு (பிரதிட்டை)
வீட்டின் கிழக்கு / ஈசான விந்து நிலத்தில்(ஆவுடையார் செய்து- மண்ணில் சிறு குழி செய்து), நாத பிண்டலிங்கத்தில் உறுபெற்ற புவனாதிபதியை வைத்து,
பஞ்சகாவியங்கள், சந்தனம், பந்நீர் ஊற்றி மலர்சொரிந்து, தூபதீபங் காட்டி ஓதுக.
இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்-
இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே.
திருமுறை 10.7.2.1 திருமூலர்
விளக்கம்: எட்டுத் திசைகளாய் விரிந்து
காணப்படும் உலகம் முழுதுமே இலிங்கம். அறுபத்து நான்காகச் சொல்லப்படுகின்ற கலைகளும் இலிங்கம். இறைவன் உலகத்தைத் தனது அருட்குறியாகவே உண்டாக்கினான் என்று அறிய சிவ சித்து எங்கும், எதிலும் இலிங்கமதாகுவது தெளியப்பெறுவோம்..
உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவா
உலகில் எடுத்தது சத்தி குணமா
உலகம் எடுத்த சதாசிவன் றானே.
திருமுறை 10.7.2.2 திருமூலர்
விளக்கம்: சதாசிவன் உலகில் சத்தி முதலாய்
இருந்து வெளிபட
வேண்டுகிறோம்.
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு
நடுவு படிகம்நற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே. திருமுறை 10.7.4.6 திருமூலர்
விளக்கம்: சதாசிவலிங்கம் ஐந்து முகங்கள்
கொண்டு, நடுவு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு` என்னும் திசைகளில் பொருந்த வேண்டுகிறோம்.
13. கோ பூசை
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
திருமுறை 4.011.2 திருநாவுக்கரசர்
விளக்கம்: எப்படி பசுவின் பஞ்சகாவியங்கள்( பால், வெண்ணை,நெய்,மூத்திரம், சாணம்
இதன் கலவை ) சிவ அரனை சாடி மங்கலம் செய்கின்றதோ, நமச்சிவாய மந்திரம் நம்
நாவை நயம் செய்ய வேண்டுகிறோம்.
தங்கும் அகில யோனிகட்கும்
மேலாம் பெருமைத் தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள்
எல்லா மென்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர்
கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்துந் தாமுடைய
அல்ல வோநல் ஆனினங்கள்.
திருமுறை 12.20.19 சேக்கிழார்
விளக்கம்: பஞ்சகாவியங்களாக பசுக்கள் சிவனின் அங்கம் அனைத்து, நிற்பதுபோல், நாமும்,சிவனை அனைத்து வாழ வேண்டுகிறோம்.
பஞ்சகாவியத்தை நீரில் கலந்து, மனையில் தெளித்து, மனையை
மங்கலமாக்குதல். வேள்வி தீயில் அழிந்த நுணுயிர்களை, பஞ்சகாவியத்தில் உள்ள நலம் செய்யும் நுணுயிர்கள், நிரப்பி வீட்டு நுண்ணுயிர் இயக்கங்களைச் செயலாக்கம் பெறச்செய்தல். ,
14. அன்னபூரணி/அபிராமி வழிபாடு
மனையின் இல்லத்தாள், வேள்வி அக்கினியைக் கொண்டு அடுப்பில் தீ மூட்டி பால் காய்த்தல்.
தீயினில் சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயியல் பலபல செறித்ததில் பலவும்
ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
திருவருட்பெருஞ்சோதி அகவல் வள்ளலார்
சமையலறை தரையில் பஞ்சகாவியத்தில் சிவலிங்கம் எழுதி, ‘ஓம் சிவாய நம’ ஓதி
சமையலறை அன்னபூரணிக்குத் தூப தீபம் காட்டி மலர்சாத்தி
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
திருமுறை 5.001.1 திருநாவுக்கரசர்
விளக்கம்: அன்னம் நல்கும் தில்லைத்
திருச்சிற்றம்பலம் மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் செய்து, மீண்டும் பிறவி பெற்றால் நல்ல மனிதப் பிறவியை கொடுக்க வேண்டுகிறோம்.
ஆம்அயன் மால் அரன்ஈசன் சதாசிவன்
தாம்அடி சூடிநின் றெய்தினர் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே.
திருமுறை 10.7.4.6 திருமூலர்
விளக்கம்: உலகிற்கு முதல்வராம் அயன்,
மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்` என்னும் ஐவர் தாமும் சத்தியை நடுவாகக் கொண்டு காமன், சாமன், சூரியன், அங்கி, சந்திரன் என்னும் இவர்களும் வணங்க பெரும் அபிராமியை இங்கு வந்து வீற்று அருள வேண்டுகிறோம்..
சமையலறை மனையின் நலக் கருவறையாக, சக்தி ஊட்ட நிலனாக திகல செய்யப்படுவது அன்னபூரணி வழிபாடு. காய்த்த பாலை கலச வழிபாட்டிற்கு பிரசாதமாக்கவும்.
15. தீபத் திருமகள் வழிபாடு
காமாட்சி அம்மன் விளக்கு, மற்றும் இரு குத்து விளக்கை அரிசியின் மேல் வைத்து, மனைக்கு உரிய இல்லத்தரசி விளக்கேற்றுதல்..
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே.
திருமுறை 10.7.10.5 திருமூலர்
விளக்கம்:
திருவருளாகிய திருவடியுணர்வைப் பொருந்தி அறிவருள் வெளியாகிய சிவபெருமானை உணருங்கள். அத்திருவருள் ஒளிமுன் பிறவி காரணமாக ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சிவபெருமானை
உணர்த்தும் திருவருளாகிய இயற்கை அறிவு விளக்கைப் பெற வேண்டுகிறோம்.
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
திருமுறை 4.011.8 திருநாவுக்கரசர்
விளக்கம்:
வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதைப்போல். உள்ளத்திற்கு விளக்காக திருவைந்தெழுத்து ‘நம சிவாய’ ஒளியாக வேண்டுகிறோம்.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
அபிராமி அந்தாதி அபிராமி பட்டர்
விளக்கம்: உதிக்கின்ற சூரியகதிர்களாகக்
திலகம் உடைய அபிராமி,நமக்கு அரண் செய்து, நல்லன செய்யும் செல்வங்களை தந்து, தளரா நெஞ்சினராய் இருக்க வேண்டுகிறோம்.
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமண்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே
சகலகலாவல்லி மாலை குமரகுருபர அடிகள்
விளக்கம்: கலை அறிவு மேலும் மனையில்
மனையார் கண்ணுங் கருத்துமாய் நிறைய சகல கலாவல்லியை
வேண்டுகிறோம்.
16 பொது வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.
கந்த புராணம் கச்சியப்ப சிவாச்சாரியார்
விளக்கம்: உலக வளம், பயிர் வளம், குறைவிலாது
உயிர்கள் பெற்று, அறம் காக்கும் அரசு செய்து வாழ வேண்டுகிறோம்.
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
திருமுறை 1.080.5 திருஞானசம்பந்தர்
விளக்கம்: சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள,
வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே செல்வமாய் பெற , வேண்டுகிறோம்.
17 சிறப்பு வாழ்த்து
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே.
திருமுறை 10.1.44 திருமூலர்
விளக்கம்: இல்லறத்தில் நிற்பவரும் பெரிய
தவத்தவரேயாவர். இல்லறத்தவராயினும் துறவறத் தவராயினும், சிவனது திருவருளில் நின்றும் அதனை அறிந்து அழுந்தமாட்டாதவர்க்குப் பேரின்பம் உண்டாதல் இல்லை என்பதை யாவரும் அறிய வேண்டுகிறோம்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
திருமுறை
3.052.5 திருஞானசம்பந்தர்
விளக்கம்: மண்ணில் உயிர்கள் வளமோடு
இன்பவாழ்வு வாழவும் யாதொரு குறையுமிலாத நல்லகதிக்கு, பெண்ணில் நல்ல மனையாளாக இருக்க நல்ல மனையாளனாக இருக்க, உமைபாக சிவத்தை வேண்டுகிறோம்.
18. தீப ஆராதனை
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.
திருவேகம்ப மாலை 9, பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)
விளக்கம்:
நாங்கள் கல்லாத கருதாதப் பிழைகளைப் பொறுத்தருள வேண்டும் கச்சியேகம்பனே
ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள் ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி யேறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.
திருவருட்பா ஆறாந்திருமுறை 2551-2553 வள்ளலார்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
திருமுறை 2.066.1 திருஞானசம்பந்தர்
விளக்கம்: சிவபிரானது திருநீறு, இயக்கும்
திருமந்திரமாக நினைப்பவரைக் காக்க வேண்டுகிறோம்.
ஓம் சிவாயநம
திருநீறு, அணிந்து , சந்தனம் குங்குமம் இட்டு, விழுந்து கும்பிடுதல்.
1)
எங்கள் மனை வாசி சித்து பெற்ற சிவமனையாக என்றும் நிலைபெற எம்பெருமான் பெருமாட்டி சிவப்பரம்பொருளை வேண்டுகிறோம்.
2)
எங்கள் மனை உள்ளன்பு நிறைந்த சிவ அருள் போற்றும் மனையாகத் திகல ‘அருளகம்’ என்று பெயரிட்டு, நம் முன்னோர்களின் அடிச்சுவடுகள் மனையில் உருபெற்று, நிலைபெற்று எங்கள் அறிவிலும் உணர்விலும்
உலாவர அவர்களின் ஆசி வேண்டுகிறோம்.
3)
இற்கை அன்னையைப் போற்றும் அருள் வெளி நிலனாக, பஞ்ச பூத சக்தி ஊட்டமாக எங்கள் மனை இயக்கம் பெற வேண்டுகிறோம்.
4)
எங்களின் பெற்றோர்,உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், நண்பர்கள் இன்றும் என்றென்றும் எங்கள் வாழ்வில், உணர்வில் கலந்து விளங்க வேண்டுகிறோம்.
திருசிற்றம்பலம்
நன்றி
அருளகம் வாழ்
ஞாலன், தமிழ்செல்வி,சிவக்குமார்.
|
|
கும்பநீரை எல்லோருக்கும் தெளித்தல்.
18. பெரியோர் ஆசிபெறுதல்
**********சிவ அருளால் வழிபாடு நிறைவு பெறுகிறது. ************
ஆக்கம்,
முனைவர் இரா.சிவக்குமார்
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
Universiti Sains Malaysia