பாணினியின் இலக்கண நூல் கி.மு. 187 க்குப்பின் உருவாகி, கி.பி. 400 வரை இடைச்செருகலும் திருத்தங்களும் செய்யப்பட்டன.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபொழுது சிந்துவெளி நாகரிகத்திலும், வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழிய (திராவிட) மொழிகளே பேசப்பட்டு வந்தன. இந்தத் தமிழிய (திராவிட) மொழிகள் ஆரியர்களின் வேத மொழியோடு சேர்ந்து பல பிராகிருதக் கிளை மொழிகளாக உருவாகின.
இந்த பிராகிருத மொழியையும், பண்டைய வேதமொழியையும் இணைத்துத்தான் பாணினி அசுடாத்தியாயி என்ற சமற்கிருத இலக்கண நூலை எழுதினார்.
இவரது காலம் கி.மு. 350 என ஏ. பெரீடேல் கீத் (A. Berriedale Keith) கூறுகிறார். கி.மு. 300 என்கிறார் ஆர்தர் ஏ. மக்டொனெல் (Arthur A.Macdonell). ஆனால் பிற்கால அறிஞர்கள் அதை ஏற்கவில்லை.
பதஞ்சலி, தனது மகாபாசியத்தில் பாணினியில் உள்ள 3983 பாடல்களுக்குப் பதிலாக 1720 பாடல்களுக்கு மட்டுமே விளக்கம் தந்துள்ளார். மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங் (Hiouen-Thsang) பாணினியின் நூலில் 1000 பாடல்கள் மட்டுமே இருந்தன எனக் கூறுகிறார்.
பாணினியின் பாணினியத்தில் வரும் பரிபாசைகள் சில பாணினி அறியாதவை எனவும் அவை பின்னால் சேர்க்கப்பட்டவை எனவும் மார்க்சுமுல்லர் கூறுகிறார். பாணினியத்தின் பின் இணைப்புகள் யாவும் கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரை சேர்க்கப்பட்டவை எனவும் வேர்ச்சொல் ஆய்வில் பாணினியத்தில் முரண்பட்ட தகவல்கள் தரப்பட்டுள்ளன எனவும் கூறுகிறார் ஏ.சி.பர்னெல் (A.C. Burnell).
தாதுபதா பற்றிய பகுதியில் பல ஆசிரியர்களின் பங்களிப்பைக் காணலாம் என கோல்டுசுடக்கர் கூறுகிறார். ஔஃபிரெக்ட் (Aufrecht) என்ற வடமொழி அறிஞர் வேறு பல இடைச்செருகல்களும் உள்ளன என்கிறார்.
பாணினியத்திற்கு பின் இணைப்பாகத் தரப்பட்ட உணாதி சூத்திரங்கள் இடைச்செருகல்கள் என மார்க்சுமுல்லர் நிறுவியுள்ளார். இதைப்போன்றே தாதுபாதா, கணபதா, இலிங்கானுசாசனா, பரிபாசாக்கள் போன்றவையும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவைதான் என்பதை வடநூல் வல்லார் அறிவர்.
பாணினி பட்டியலிடும் வேர்ச்சொற்களில் 60 விழுக்காட்டிற்கு மேல் கற்பனையான பொருளைத் தருபவை எனவும் அவை வடமொழி இலக்கியங்களில் காணப்படாதவை எனவும் மேலை வடமொழிக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பர்னெல் தனது ஆங்கில நூலில் 87 முதல் 108 வரையான 22 பக்கங்களில் பல வகைகளில் ஆய்வு செய்து, பின் இணைப்புகளும் இடைச்செருகல்களும் கொண்ட பாணினி இலக்கண நூலின் காலம் கி.பி. 300 எனத் தெரிவித்துள்ளார்.
சமற்கிருத இலக்கணத்திற்கான தேவை கி.மு. 187க்குப்பின் வைதீக பிராமணியம் தோன்றிய பின்னரே உருவாகிறது. ஆகவே பர்னெல் கூறிய கி.பி. 300 என்பதையும் கணக்கில் கொண்டு, பாணினியின் இலக்கணம் கி.மு. 187க்குப்பின் தான் உருவாகி இருக்க வேண்டும் எனவும் அது உருவாகிய பின்னரும் அதில் கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரை இடைச்செருகல்களும் திருத்தங்களும் செய்யப்பட்டு வந்துள்ளன எனவும் உறுதி செய்யலாம்.
இதற்கு நூல் சான்று கொடுத்திருக்கலாம்.