வெண்பா - எனது பார்வையில்

500 views
Skip to first unread message

PRASATH

unread,
Jan 4, 2014, 11:32:02 AM1/4/14
to தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், நட்புடன், kaadhalkirukkalgal, vallamai
நண்பர்களுக்கு வணக்கம்,

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எழுத கையில்/மண்டையில் எதுவும் இல்லாததால் புத்தாண்டிலும் எனது பழைய இழை ஒன்றையே புதுப்பிக்கிறேன்...:)))

இது வெண்பா என்னும் பா வகையை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு எளிய முயற்சி. எனக்கு தெரிந்த வரையில் சொல்ல முய்ற்சி செய்கிறேன். ஆசிரியப் பெருமக்கள் நான் தவறும் இடத்தில் சுட்டிக் காட்டி எனக்கு வழிகாட்டுமாறு வேண்டுகோளை வைக்கிறேன்.

இந்த பாடங்களின் வாயிலாக எவரேனும் வெண்பாவைக் கற்றுக் கொண்டாலும்/கற்றுக் கொள்ள முயற்சி செய்தாலும் மிக மகிழ்வேன்...

பாடம் ஒன்று.
 
எழுத்து
 
எழுத்து குறில், நெடில் என இரண்டு வகைப்படும். 
 
குறில்: அ, இ, உ, எ, ஒ என்னும் ஓசையுடன் முடியும் அனைத்தும் குறில் இனத்தைச் சாரும்.
 
நெடில்: ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ ஆகிய ஆறும் நெடில் இனத்தைச் சாரும்.
 
ஐ பொதுவாக நெடில் இனத்தைச் சார்வதாகக் கருதினாலும் வெண்பாவைப் பொறுத்த வரை ஐ வார்த்தையின் துவக்கத்தில் வந்தால் நெடிலாகவும் வார்த்தையின் மத்தியில் வந்தால் குறிலாகவும் கணக்கில் கொள்ளப்படும்.
 
மையல் = இதில் மை நெடில் 
 
பொய்மையும்= இதில் மை குறில்.
 
அசை 
 
அசை நேரசை நிரையசை என இரண்டு வகைப்படும்.
 
நேர் 
 
குறில் தனித்து இருப்பது நேர் 
குறிலோடு ஒற்று சேர்ந்து வருதல் நேர் 
நெடில் தனித்து இருப்பது நேர் 
நெடிலோடு ஒற்று சேர்ந்து வருதல் நேர் 
 
நிரை
 
இரண்டு குறில் இணைந்து வருதல் நிரை 
இரண்டு குறிலோடு ஒரு ஒற்று சேர்ந்து வருதல் நிரை
குறிலும் நெடிலும் அடுத்தடுத்து வந்தால் நிரை 
குறிலும் நெடிலும் அதன் பின் ஒற்றும் சேர்ந்து வந்தாலும் நிரை
 
வெண்பாவைப் பொறுத்த வரை அசை பிரிப்பது மட்டுமே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் படி.
 
இதற்கான எளிய வழிமுறைகளைப் பார்ப்போமா....

PRASATH

unread,
Jan 4, 2014, 11:38:33 AM1/4/14
to தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், நட்புடன், kaadhalkirukkalgal, vallamai
பாடம் இரண்டு
 
 
நேர்:

ஒரு உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து தனியா வந்தாலோ, இல்லை ஒரு உயிர் எழுத்து அல்லது ஒரு உயிர்மெய் எழுத்தோட ஒரு மெய் எழுத்து சேர்ந்து வந்தாலோ அதை நேர்  சொல்லுவோம்.

உ-ம் : ஆ, ஆம். ஐ, எ, எண், கா, கண். 

நிரை:

இரண்டு எழுத்துகளா வந்தாலோ, இரண்டு எழுத்தோட ஒரு மெய்யெழுத்து சேர்ந்து வந்தாலோ அது நிரை. என்ன ஒன்னு இரண்டு எழுத்தா முதல் எழுத்து  நெடிலா இருக்கக் கூடாது.

உ-ம் : பலா, பழம், அகல், தொடு, விடு.

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ _________________________________________________ 

ஆடு, காடு, நாடு, பாடல், மாடம் இப்படி ரெண்டு எழுத்து இருக்குறதுல முதல் எழுத்து நெடில்ல ஆரம்பிச்சா அது நிரை ஆகாது. 
________________________________________________________
 
அசைகளை எவ்வாறு பிரிக்கலாம். உதாரணத்தோடு பார்ப்போம்.
 
அசை பிரித்தல் படிகள்.

1. ஒரு வார்த்தையில் வரும் மெய்யெழுத்துகளுக்கு அடுத்து ஒரு கோடு போட்டு முதலில் வார்த்தையைப் பிரிக்கவும். இரண்டு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வந்தால் கோடினை இரண்டாவது மெய்யெழுத்துக்குப் பின்னால் இடவும்.

உதாரணம் = அகழ்வாரைத் = அகழ்/வாரைத்/ ; உயிர்க்கும் = உயிர்க்/கும்.

2. முதல் படி முடிந்து மீதமிருக்கும் பிரித்த வார்த்தையில் எங்கெங்கு நெடில் எழுத்துகள் இருக்கிறதோ அதற்கடுத்து ஒரு கோடு போட்டு பிரித்த பகுதியை மீண்டும் பிரிக்கவும்.

உதாரணம் = அகழ்/ வாரைத்/ என மேலே பிரித்த வார்த்தையில் வாரைத் என்பதில் வா நெடில் எழுத்தாக இருப்பதால், இதனை

அகழ்/வா/ரைத்/ என பிரித்து எழுத வேண்டும்.

3. முதல் இரண்டு படிகள் முடிந்த பிறகு மீதமிருக்கும் வார்த்தைப் பகுதிகளில் மெய்யெழுத்துகளுக்கு முன்னால் இரு எழுத்துகளுக்கு மேலே இருந்தால் முதல் இரு எழுத்துகளுக்கு அடுத்து ஒரு கோடு போட்டு மீண்டூம் அப்பகுதியைப் பிரிக்கவும்.

உதாரணம் :

அமரருள் = இதில் மெய்யெழுத்துக்கு முன்னால் நான்கு எழுத்துகள் உள்ளது. அதனால் முதல் இரு எழுத்துகளுக்கு அடுத்து ஒரு கோடு போட்டு வார்த்தையைப் பிரிக்கவும். அம / ரருள்/.

பிறிதோர்சொல் 

இதனை முதல் படியின் படி மெய்யெழுத்துக்குப் பின் ஒரு கோடு போட்டு பிரிக்க பிறிதோர் / சொல்/ எனப் பிரியும்.

இரண்டாவது படியின் படி, நெடில் எழுத்துக்கு அடுத்து ஒரு கோடு போட = பிறிதோ / ர்/ சொல்/ என வரும். ஆனால் நெடிலெழுத்துக்கு அடுத்து மெய்யெழுத்து வரும் பட்சத்தில் இவ்வாறு பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. 
அதனால் பிறிதோர் /சொல்/ எனப் பிரித்தால் போதுமானது.

இதில் பிறிதோர் என்பதில் மெய்யெழுத்துக்கு முன்னால் மூன்று எழுத்துகள் இருப்பதால் மூன்றாம் படியின் படி, முதல் இரண்டு எழுத்துகளுக்கு அடுத்து ஒரு கோடு போட்டு பிரிக்கவும். இவ்வாறு பிரிக்கும் பொழுது பிறி / தோர் / சொல் என ஆகும்.

இதன் பின் முதலில் படித்த பாடத்தின் படி அசை கொடுக்க வேண்டீயது தான்.

அதாவது, ஒரு எழுத்தோ அல்லது ஒரு எழுத்தோடு மெய்யெழுத்துமோ வந்தால் அது நேர். இரண்டு எழுத்தோ இரண்டு எழுத்தோடு ஒரு மெய்யெழுத்தோ அல்லது இரண்டு மெய்யெழுத்தோ சேர்ந்து வந்தால் அது நிரை.

உயிர்க்கும் = உயிர்க் / கும்/ = நிரை  / நேர்

அகழ்வாரைத் = அகழ் / வா / ரைத்/ = நிரை / நேர் / நேர்

பிறிதோர்சொல் = பிறி / தோர் / சொல் = நிரை / நேர் / நேர்.

சரி, இதுவரை குறளில் பார்த்தோம். 

பயிற்சிக்காக இப்போது சினிமா பாடல் பார்க்கலாம். பின்வரும் வரியில் உள்ள வார்த்தைகளை அசை பிரியுங்களேன்.

காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை.

PRASATH

unread,
Jan 4, 2014, 11:42:00 AM1/4/14
to தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், நட்புடன், kaadhalkirukkalgal, vallamai
அடுத்து வெண்பாவிற்கான அடிப்படை இலக்கணம் பார்க்கலாம்.

1. வெண்பாவுல கடைசி வரி மட்டும் மூணு வார்த்தை, மத்த வரி எல்லாம் நாலு வார்த்தையா இருக்கணும்.
 
2. வெண்பா எழுத பயன்படுத்துற வார்த்தைகள் இரண்டு அசை அல்லது மூணு அசையோட இருக்கணும்.
 
உதாரணமா; அன்பும் = இதைப் பிரிச்சா அன்/பும் = நேர்/நேர்.
 
இதுல அன் என்பது ஒரு அசை, பும் என்பது ஒரு அசை. மொத்தம் ரெண்டு அசை.
 
உடைத்தாயின் = உடைத்/தா/யின் = நிரை/ நேர்/ நேர் 
 
இது மூணு அசை.
 
3. இரண்டு அசை வார்த்தை பயன்படுத்துனா முதல் வார்த்தை எந்த அசையில முடியுதோ அதுக்கு எதிரான அசையில அடுத்த வார்த்தை ஆரம்பிக்கணும்.
 
உதாரணமா: அன்பும் அறனும் = அன்/பும் அற/னும்/ = நேர்/நேர்     நிரை/ நேர் 
 
அன்பும் அப்படின்ற ரெண்டு அசை கொண்ட முதல் வார்த்தை நேரசையில முடியுதா. அதனால அடுத்த வார்த்தை நிரையசையில ஆரம்பிக்கணும். அதே போல இங்க அறனும் னு சொல்லும் பொது நிரையசையில் ஆரம்பிக்குதா...
 
இப்போ அறனும் அப்படின்ற வார்த்தை நிரையசையில் ஆரம்பிச்சு நேரசையில முடிஞ்சிருக்கு.
 
அப்போ அடுத்த வார்த்தையும் நிரையசையில் ஆரம்பிக்கணும்.
 
இப்போ பாருங்க, அன்பும் அறனும் உடைத்தாயின்
 
அன்பும் நேர் அசையில முடியுது. அதனால அறனும் அப்படின்னு நிரையசையில வார்த்தை ஆரம்பிச்சிருக்கு.
 
அறனும் என்பதும் நேர் அசையில் முடிஞ்சிருக்கு. அதனால அடுத்த வார்த்தை உடைத்தாயின் அப்படின்றதும் நிரையசையில் ஆரம்பிச்சிருக்கு.
 
இப்போ  உடைத்தாயின் பிரிச்சா உடைத்/தா/யின் = நிரை/ நேர்/ நேர் சரியா...
 
இங்க தான் அடுத்த விதி வருது.
 
4. வெண்பா எழுதும் போது மூணு அசை இருக்குற வார்த்தை வந்தா அந்த வார்த்தை நேரசையில தான் முடியனும். அடுத்த வார்த்தை ஆராம்பிக்குறது நேரசையில் தான் ஆரம்பிக்கணும்.
 
உதாரணமா, உடைத்தாயின் இல்வாழ்க்கை = உடைத்/தா/யின்   இல்/வாழ்க்/கை = நிரை/நேர்/நேர்   நேர்/நேர்/ நேர் 
 
உடைத்தாயின் அப்படின்னு மூணு அசை இருக்குற வார்த்தை நேர் அசையில முடிஞ்சிருக்கு. அதுக்கு அடுத்த வார்த்தை இல்வாழ்க்கை அப்படின்றதும் நேரசையில் ஆரம்பிச்சிருக்கா...
 
இப்போ இல்வாழ்க்கை அப்படின்றதும் மூணு அசை இருக்குற வார்த்தையா போச்சு. அப்போ அடுத்த வார்த்தை என்ன அசையில வரணும்... நேர் அசை தான.
 
இப்போ குறளைப் பார்க்கலாமா, இல்வாழ்க்கை பண்பும் = இல்/வாழ்க்/கை பண்/பும் = நேர்/நேர்/நேர்  நேர்/நேர் 
 
இல்வாழ்க்கை நேர் அசையில முடிஞ்சிருக்கு. அடுத்த வார்த்தை பண்பும் அப்படின்றதும் நேர் அசையில ஆரம்பிச்சிருக்கு. அப்ப சரி.
 
இப்போ பண்பும் அப்படின்றது பார்த்தா இரண்டு அசையோட இருக்கு. நேர் அசையில முடிஞ்சிருக்கு. அப்போ அடுத்த வார்த்தை என்ன அசையில வரணும். நிறை அசை.
 
அதனால, பண்பும் பயனும் = பண்/பும் பய/னும் = நேர்/நேர்   நிரை/ நேர் 
 
இப்போ பயனும் அப்படின்ற வார்த்தையும் நேர் அசையில முடிஞ்சிருக்கு அதனால அடுத்த வார்த்தை நிரை அசையில இருக்கணும்.
 
இங்க இன்னொரு விதி வருது.
 
5. கடைசி வரியில கடைசி வார்த்தை இருக்கு பாருங்க அதுக்கு ஒரு அசை மட்டும் தான் இருக்கணும். ரெண்டு அசை வச்சும் எழுதலாம். ஆனா அப்படி ரெண்டு அசை வார்த்தையில முடிக்க நினைச்சா அந்த வார்த்தையோட சவுண்டு கடைசியில உ ஓசையோட முடியனும்.
 
உதாரணமா, வாழ்வு, பிறப்பு, நன்று இப்படி உ ஓசையோட தான் ரெண்டு அசை வார்த்தை இருக்கணும். இன்னொன்னும் பாருங்க ரெண்டு அசையில ரெண்டாவது அசை நேர் அசையா தான் இருக்கணும்.
 
இப்போ, நம்ம குறளுக்கு வருவோம்...
 
பயனும் அப்படின்ற வார்த்தை நேர் அசையில முடிஞ்சிருக்கு. அடுத்த வார்த்தை தான் குரலோட கடைசி வார்த்தை... இது ஒரு அசையோட இருக்கணும். ரெண்டு அசையோட இருந்தா அது நேர் அசையில உ அப்படின்ற ஓசையோட முடியனும்.
 
பயனும் அது , இங்க பயனும் அப்படின்ற ரெண்டு அசை உள்ள வார்த்தை நேர் அசையில முடிஞ்சிருக்குறதால கடைசி வார்த்தை நிரையசையில் இருக்கணும். இங்க "அது" அப்படின்னு நிரை அசையில குறள் முடிஞ்சிருக்கு.
 
இப்போ குறளை மொத்தமா எழுதி பார்ப்போம்.
 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது.
 
அன்/பும் அற/னும் உடைத்/தா/யின் இல்/வாழ்க்/கை
பண்/பும் பய/னும் அது. 
 
இப்போ மேல சொன்ன விதிகளை இங்க பொருத்திப் பாருங்க... சரியா வருதானு.
 
இதே மாதிரி நீங்க ஏதாச்சும் ஒரு குறளை எடுத்துக்கினு அதுக்கு முதல்ல அசை பிரிச்சு அதுக்கு பின்னால எப்படி இந்த விதி பொருந்துதுன்னு எழுதி அனுப்புங்க...

__________________________________

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
 
நான் வெண்பா முதன் முதலில் கற்றுக் கொள்ள முனைந்த பொழுது, ஈற்றடியின் இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என முடிய வேண்டும் என படித்து விட்டு, எங்கடா ஒரு குறள் கூட நாள், மலர், காசு, பிறப்புன்னு முடியலையேனு யோசிச்சவன்... அப்புறம் தான் புரிஞ்சது முடிய வேண்டிய வார்த்தை நாள், மலர், காசு, பிறப்பு கிடையாது, வார்த்தையின் ஓசைதான் இப்படி இருக்கணும்னு.
 
அதாவது,
 
1. நாள்: இதனை அசை பிரிச்சா வர்றது நேர். அதாவது ஆண், பெண், நீ, நான், நாம். இப்படி நேரசையில் முடியுற வார்த்தைகளா கடைசி வார்த்தை இருக்கலாம். 
 
2. மலர்: இதனை அசை பிரிச்சா வர்றது நிரை. அதாவது களம், பழம், நலம், நிலம், நிலா, பலா இப்படி நிரையசையில் முடியுற வார்த்தைகளா கடைசி வார்த்தை இருக்கலாம்.
 
3. காசு: இதனை அசை பிரிச்சா நேர்/நேர்(நேர்பு) னு இருப்பதோட இறுதி ஓசையானது உகரத்துல முடியது. அதாவது வாழ்வு, சாவு, நான்கு, வேண்டு, தூண்டு மாசு, தூசு இப்படி இரண்டு அசைகள் நேர்/ நேர் னு உ ஓசையோட முடியறாப்புல வார்த்தைகள் இருக்கலாம்.
 
4. பிறப்பு: இதனை அசை பிரிச்சா நிரை/நேர்(நிரைபு) நு இருப்பதோட இறுதி ஓசையானது உகரத்துல முடியது. அது போல, பிறப்பு, சிறப்பு, இறப்பு, உலகு, உணர்வு, குடகு, இப்படி இரண்டு அசைகள் நிரை/நேர் னு உ ஓசையோட முடியறாப்புல வார்த்தைகள் இருக்கலாம்.
 
குறிப்பு: கடைசி வரியின் கடைசி வார்த்தை நேர்/நேர் என வந்து உகர ஒசையோட முடிவதை அசை பிரிச்சு சொல்லும் போது நேர்பு அப்படின்னும் கடைசி வார்த்தை நிரை/நேர் என வந்து உகர ஒசையோட முடிவதை அசை பிரிச்சு சொல்லும் போது "நிரைபு" அப்படின்னும் சொல்லுவோம். 
 
(ஏதும் புரியலைன்னா தாராளமா கேள்வி கேட்கவும்...)

Iyappan Krishnan

unread,
Jun 27, 2014, 11:21:54 PM6/27/14
to vall...@googlegroups.com, thamizh...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, nadp...@googlegroups.com, kaadhalki...@googlegroups.com

(ஏதும் புரியலைன்னா தாராளமா கேள்வி கேட்கவும்...)

எனக்கு ஒண்ணு மட்டும் புரியல. இதுக்கப்புறம் ஏன் தொடரவே இல்லைன்னு. பதில் சொல்லவும். 

PRASATH

unread,
Jul 3, 2014, 1:55:56 AM7/3/14
to தமிழ் வாசல், vallamai, தென்றல், tamizhs...@googlegroups.com, nadpudan, kaadhalkirukkalgal
இப்பல்லாம் யாரு சார் வெண்பா விரும்புறா... :)))
 
புதுக்கவிதை, ஹைக்கூ, குறுங்கவிதை தானே விரும்புறா... :)))
 
ஒரு கை ஓசையா பாடம் எப்படி நடக்கும் சொல்லுங்க...:)))

Anna Kannan

unread,
Jul 3, 2014, 1:57:47 AM7/3/14
to Vallamai
இரண்டு வரிகளில் இரண்டு புறாக்கள் பறக்கக் கண்டேன். 

PRASATH

unread,
Jul 3, 2014, 2:03:50 AM7/3/14
to vallamai
:)))

PRASATH

unread,
Jul 3, 2014, 5:02:20 AM7/3/14
to தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், நட்புடன், kaadhalkirukkalgal, vallamai
வெண்பாவுக்கான அடிப்படை இலக்கணங்களை நாம் பார்த்தோம் அல்லவா...
 
இப்பொழுது வெண்பாவை வெண்பா என அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எழுத மோனை மற்றும் எதுகை பற்றி அறிய வேண்டியது மிக அவசியம்.
 
மோனையைப் பற்றியும் எதுகையைப் பற்றியும் நான் தெரிந்து கொள்ள பயன்படுத்துவது பசுபதி ஐயா அவர்களின் கவிதை இயற்றி கலக்கு என்னும் தொடரில் வெளியான மோனை மற்றும் எதுகை பற்றிய பதிவுகளே... ஐயா அவர்களின் பதிவை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
//

8. மோனை

'தொடையற்ற கவிதை நடையற்றுப் போகும்' என்பது ஒரு பழமொழி. 'தொடை' என்பது கவிதையின்
ஓர் உறுப்பு. (தொடுப்பது தொடை.) கவிதைக்கு நடையழகைக் கொடுப்பதில் மோனை,
எதுகை, இயைபு
போன்றவை மிக முக்கியப் பங்கேற்கின்றன. மேலும், கவிதையை மனப்பாடம் செய்வதற்கும்
இவை உதவுகின்றன. முதலில் மோனை( alliteration)யைப் பற்றி அறிந்துகொள்வோம்.

மோனை: ஒரு சீருக்கும் இன்னொரு சீருக்கும் முதலில் உள்ள எழுத்துகள் ஒத்த
ஓசையுடன் இருப்பது.
(கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாயே" என்பதில் க-க-கா என்பது மோனை
எழுத்துகள். 'க' என்ற
எழுத்துக்கு மோனையாக 'க' மட்டும் அன்றி, 'கா' வும் வருகிறது , இல்லையா?
அதே மாதிரி, ஒவ்வொரு
எழுத்துக்கும் எந்த, எந்த எழுத்துகள் மோனை எழுத்துகளாகும் என்று முன்னோர்
சொல்லியிருக்கின்றனர்.

* உயிர் எழுத்தில் மோனை:

அ, ஆ, ஐ, ஔ --ஓரினம்
இ, ஈ, எ, ஏ --ஓரினம்
உ, ஊ, ஒ, ஓ -- ஓரினம்

காட்டுகள்:
அகல உழுவதை ஆழ உழு (1-3 சீர்கள் மோனை: அ, ஆ)
இருதலைக் கொள்ளி எறும்பு போல ( இ-எ)
ஓட்டைச் சங்கால் ஊத முடியுமா? (ஓ-ஊ)

* உயிர் மெய்யெழுத்தில் மோனை:

க, கா, கை, கௌ -ஒரே இனம்
'க' என்று தொடங்கும் சீருக்கு மோனையாக உள்ள சீர் க, கா, கை, கௌ என்ற நான்கில்
ஒன்றில் தொடங்க வேண்டும்; 'கி' 'கீ' போன்றவை மோனையாகா. அதாவது, 'அ' என்ற
உயிர் ஏறிய
'க்' என்ற மெய்யெழுத்துக்கு மோனை அதே மெய்யெழுத்தில் ('க்') அந்த 'அ'
என்ற உயிருக்கு மோனையான
நான்கு உயிர் எழுத்துகளுள் (அ, ஆ, ஐ, ஔ) ஒன்று ஏறிய சீரே மோனையாக
வரவேண்டும். இதே போல்
மற்ற உயிர்மெய்யெழுத்துகளுக்கும் மோனை எழுத்துகளைப் பட்டியலிடலாம்.

கி, கீ, கெ, கே - ஒரே இனம் ; கு,கூ, கொ, கோ-ஒரே இனம்; ப, பா, பை, பௌ -மோனை இனம்.
.....இப்படியே.

* சில விசேஷ இனங்கள்: சில மெய்யெழுத்துகளுக்கு -- அந்த எழுத்துகளில்
தொடங்கும் தமிழ்ச் சொற்கள்
அதிகமாக இல்லாதலால் -- விசேஷ சலுகைகள் உண்டு.

# ச,த -ஒரே இனம்
காட்டு: தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் (தொ,சு-மோனை)
அதாவது, 'தொ' என்னும் எழுத்திற்கு மோனை எழுத்துகள் எட்டு: தொ, தோ, து, தூ, சொ, சோ,
சு, சூ. இந்த எட்டில் உள்ள எந்த எழுத்துக்கும் எட்டில் எந்த எழுத்தும்
மோனையாக வரலாம்.


# ம, வ -ஒரே இனம் ( ம-வுக்கு உள்ள எட்டு மோனை எழுத்துகள் எவை?)
காட்டு: வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது (வ,மா -மோனை)


# ந,ஞ -ஒரே இனம்
காட்டு: நலிந்தோர்க் கில்லை ஞாயிறும் திங்களும் (ந, ஞா --மோனை)


# பழம் இலக்கண நூல்களில், யா-விற்கு, இ,ஈ,எ,ஏ.. மோனை என்பர்.
தற்காலத்தில், யா -விற்கு அ,ஆ, ஐ, ஔ-வும் மோனை என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.
(பழந்தமிழில் 'ய' வர்க்கத்தில் 'யா' ஒன்றில் தான் தமிழ்ச்சொற்கள்
தொடங்கும்; இப்போது
'யயாதி' போன்ற சொற்களும் வருவதைப் பார்க்கலாம்.) தற்காலத்தில், ஜ, ர
போன்ற எழுத்துகளும்
சொற்களின் தொடக்கத்தில் வருகின்றன, அல்லவா? அதனால், ஜ வுக்கு ச,த மோனை,
ர, ல வுக்கு இ, ஈ, எ, ஏ மோனை என்றும் கொள்ளலாம்.


* மோனை வாய்பாட்டை நினைவுறுத்த, ஒரு பழம் வெண்பா உண்டு. மேற்சொன்ன
பல விதிகளை அது சுருக்கிச் சொல்வதைப் பார்க்கலாம்.

அகரமொடு ஆகாரம் ஐகாரம் ஔகான்
இகரமொடு ஈகாரம் எஏ -- உகரமோ(டு)
ஊகாரம் ஒஓ; ஞந,மவ தச்சகரம்
ஆகாத அல்ல அநு. (அநு- வழி, பின்)

* கோல மலருக் குள்ளே மணமுண்டு என்ற வாக்கியத்தில் மோனை உண்டா?

பார்த்தால் கோ, கு மோனை மாதிரி இருக்கிறது. ஆனால், இது மோனை இல்லை.
ஏனென்றால், அங்கே
இருக்கும் சொல் 'உள்ளே'; ஆனால் கோ-உ மோனை இல்லை!

* மரபுப் பாடல்களில் பொதுவாக பாடல் அடிகளில் மோனை வருவதைப் பார்க்கலாம்.
மோனை அடிகளில் எங்கே வரவேண்டும் ? பொதுவாகச் சொன்னால், நான்குசீர்
அடிகளில் 1,3 சீர்களில்
மோனை வருதல் சிறப்பு. ஐந்துசீர் அடிகளில் 1,5 சிறப்பு; 1,3,5 மோனை
இன்னும் சிறக்கும்.
ஆசிரிய விருத்தங்களில், அந்தந்த விருத்தத்திற்குரிய சீர் வாய்பாட்டைப்
பொறுத்து மோனை வருதல் சிறப்பு.

பயிற்சிகள்:

8.1 கீழ்க்கண்ட மோனைப் பட்டியலை நிறைவு செய்க.
--------------------------------------------
அ,ஆ,ஐ, ஔ : க, . . ; ச, . . .; ந, . . ; ப, . . ; ம, . .

இ, ஈ, எ, ஏ; கி, . . ; சி, . . ; நி, . . ; பி, . . ; மி, . . ;

உ,ஊ, ஒ, ஓ; கு, . . ; சு, . . ; நு, . . ; பு, . . ; மு, மூ,மொ, மோ.

8.2 பயிற்சிகள் 4.4, 5.2- ஐ மோனையுடன் செய்யவும்!

வாலி வந்தான் ; பரிமளா பதுங்கினாள் போன்ற மோனை உடைய சொற்றொடர்கள் எழுதவும்.

குறிப்பு: வாக்கியங்கள் எழுதும்போது, முடிந்தவரை சொற்களை ஒரு சீரில் ஒரு
பாதி, அடுத்த சீரில்
இன்னொரு பாதி என்று பிரிக்காமல் எழுதுவது அழகு. மேலும் ,மோனை 'முழுச்
சொற்களுக்கு'த்தான் பார்ப்பது வழக்கம். தந்திருந் தான்பையன் என்ற தொடரில்,
த-தா மோனை யல்ல!

8.3 முன்பு சொன்ன 4.4, 5.2 பயிற்சிகளையும் சேர்த்து ஒரே வாக்கியம் எழுதலாம்.
காட்டு:
மருமகள் வந்தாள் ; மாமி விளாசினாள்.

இதில் நான்கு வகை நேரும், நான்கு வகை நிரையும் வருவதைப் பார்க்கலாம்.

இதே மாதிரி, 4-சீர் அடியில் 1-3 மோனையுடன், வகைகள் ஒரே முறை மட்டும்
வரும்படி, சில வாக்கியங்கள்
எழுதவும்.

8.4 காதலன் ஒருநாள் கண்ணைச் சிமிட்டினான். (1,3 மோனை)
(கூவிளம், புளிமா, தேமா, கருவிளம்)
செந்தமிழ் நாட்டின் சிறப்பினைப் புகழ்வோம் (1,3 மோனை)
(கூவிளம், தேமா, கருவிளம், புளிமா)

1-3 மோனையுடன், நான்கு வகை ஈரசைச் சீர்கள் (தேமா, புளிமா, கூவிளம்,
கருவிளம்..ஒரே ஒரு முறை)
வரும்படி மேற்கண்ட காட்டுகளைப் போல சில வாக்கியங்கள் எழுதவும்.
* வாக்கியங்கள் எழுதும்போது , முடிந்தவரை சொற்களை ஒரு சீரில் ஒரு பாதி,
அடுத்த சீரில் இன்னொரு
பாதி என்று பிரிக்காமல் எழுதுவது அழகு. தளை சரியாக இருக்கச் சிலசமயம்
இப்படிச் செய்ய வேண்டும்.
இதற்கு 'வகையுளி' என்பார்கள். இப்போது, நாம் தளைக் கட்டுப்பாடு இல்லாமல்
தான் எழுதுகிறோம்.
அதனால் , சிறுசிறு சொற்களையே பயன்படுத்தி , பயில முயலுங்கள்.

8.5 ஒவ்வொரு திருக்குறளிலும் முதல் அடியில் நான்கு சீர்கள் இருக்கும்.

இவற்றில்,

1,3 -மோனை;
1,2 -மோனை;
1,4 -மோனை;
1,2,4 -மோனை;
1,3,4 -மோனை;
1,2,3 -மோனை;
1,2,3,4-மோனை

இவற்றிற்கு வகைக்கொரு காட்டுக் கொடுக்கலாம்.

காட்டுகள்;
*1,2 சீர்களில் மோனை.
(உ-ம்.) பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் (பி,பெ)

* 1,3 சீர்களில் மோனை
(உ-ம்.) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் (ம,மா)

*1,4 சீர்களில் மோனை
(உ-ம்.) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி (அ,ஆ)

*1,2,3 சீர்களில் மோனை.
(உ-ம்.) தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் (தா,த,த)

*1,2,4 சீர்களில் மோனை.
(உ-ம்.) இருள்சேர் இருவினையும் சேரா இ­றைவன் (இ,இ,இ)

*1,3,4 சீர்களில் மோனை.
(உ-ம்.) வானின் றுலகம் வழங்கி வருவதால் (வா,வ,வ)

* நான்கு சீர்களிலும் மோனை(முற்று மோனை)
(உ-ம்) வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் (வை,வா,வா,வா)

இம்மாதிரி, திருக்குறளிலிருந்து வேறு காட்டுகள் கொடுக்கவும் .
( நான்கு சீர் அடியில், 1-3 மோனை சிறப்பு; அதற்கு அடுத்தபடி, 1-4 மோனை
சிறப்பு என்று சொல்லலாம்.)

8.6 எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு
கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?

இப்படி மோனையுடன் இருக்கும் சில பழமொழிகளை எழுதவும்.
காலத்திற்கேற்ற 'புது'ப் பழமொழிகளும் எழுதலாம்!

8.7
ஈரசைச் சீர்களின் வாய்பாட்டைப் பல்வேறு வகைகளில் சொல்லலாம்.

பழம் நூல்களில் சொல்லப் பட்டிருக்கும் ஒரு வரிசை: தேமா, புளிமா,
கருவிளம், கூவிளம். இவற்றை, சுருக்கி,
1,2,3,4 என்றழைக்கலாம்.

இந்த வாய்பாட்டைத் திரும்பத் திரும்பச் சொன்னால் எழுகிறதே ஒரு அழகான
ஓசை... அதுதான்
'ஈரசைக்குரிய வெண் தளை' விளைக்கும் ஓசை! ஒரு சீரும் அடுத்த சீரும் உரசும்
போது/ முத்தமிடும் போது
எழும்பும் ஒருவகை 'செப்பலோசை'. (தளை-பந்தம்; ஒரு சீருக்கும் தொடரும்
சீருக்கும் உள்ள பந்தம்)

1, 2, 3, 4, 1, 2, 3, 4 .... என்று சொல்லிக்கொண்டே போங்கள். ஒரு
சீருக்குப் பின் எந்தவகை சீர் வருகிறது என்பது ஒரே இலக்கண விதியைக்
கடைபிடிப்பது தெரியும்.

மாச் சீரைத் தொடர்ந்து வரும் சீரில் முதல் அசை நிரை; அதே மாதிரி, விளச்
சீரைத் தொடர்ந்து வரும்
சீரில் முதல் அசை நேர்.

சுருக்கமாகச் சொன்னால்,

மாவைத் தொடர்ந்து நிரை
விளத்தைத் தொடர்ந்து நேர்.

இதுவே 'ஈரசைச் சீர்கள் வரும் அடிக்குரிய வெண்டளை' விதி! (இயற்சீர் வெண்டளை என்பர்)

சரி, இந்த வாய்பாடு 1-இல் தான் தொடங்க வேண்டுமா? இல்லை! 2,3,4,1;
3,4,1,2; 4,1,2,3-இலும்
சொல்லலாம், வெண்டளை தட்டாது! (பயிற்சி- 7.2 -இல் வரும் திருக்குறளின்
முதல் அடி எந்த வகை?
பார்த்துக் கொள்ளுங்கள் ! )

சரி, இந்த நான்கு வகைகளை எழுதி , ஒவ்வொன்றுக்கும் ஒரு எடுத்துக்காட்டு
வாக்கியம் பார்ப்போம்.

* தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்
பாய்ந்தால் புலியார்; பதுங்கினால் பூனையார்.

* புளிமா, கருவிளம், கூவிளம், தேமா
புலியாய் வருபவன் பூனையாய்ப் போவான்.

* கருவிளம், கூவிளம், தேமா, புளிமா
புலிகளின் வேலையைப் பூனை செயுமோ?

* கூவிளம், தேமா, புளிமா, கருவிளம்
பூனையைப் பெற்றால் புலியாய் வளருமோ?

இந்த நான்குவகைகளுக்கு 'வெண்டளை வாக்கிய'க் காட்டுகளை, ஒவ்வொரு ஈரசையும் ஒரே முறை
வரும்படி, 1-3 மோனையுடன் எழுதவும்.

***

(தொடரும்)

//

 

நன்றி : பசுபதி ஐயா 

நன்றி : https://groups.google.com/forum/#!msg/yAppulagam/Umr4M2rOzQs/2FA6_NeNQCoJ

PRASATH

unread,
Jul 3, 2014, 5:04:31 AM7/3/14
to தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், நட்புடன், kaadhalkirukkalgal, vallamai

9. எதுகை

மோனை(alliteration) என்பது 'இரு சீர்களின் முதல் எழுத்துகள் ஓசையில்
ஒன்றுவது' என்று பார்த்தோம்.
தமிழ்ச் செய்யுள்களில் எதுகை(Rhyme) என்பது ' இரு சீர்களின் இரண்டாம்
எழுத்து ஒன்றுவது' என்று
சொல்லலாம். காட்டுகள்: கற்று, பெற்று ; பாடம், மாடம் ; கண்ணன், வண்ணன்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.
என்ற குறளைக் காட்டாகப் பார்க்கலாம். பொதுவாகச் சொன்னால்,
தமிழ்ச் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் உள்ள சீர்களுக்குள் மோனை அழகு (அகர
- ஆதி போல்)
இருக்கும். அடிகளுக்கிடையே எதுகை . . முதற்சீர்களில் இரண்டாம் எழுத்து
எதுகையில் ஒன்றும் அழகு
(அகர -பகவன் போல்) . . இருக்கும்.

எதுகையை வைத்துக் கொண்டே செய்யுளுக்கு எவ்வளவு அடிகள் என்றும் கணக்கிட்டு விடலாம்!
'பல' அடிகள் கொண்டவை என்று நாம் கருதும் திருப்புகழ் போன்ற பாடல்களும் 'நான்கு'
அடிகள் கொண்ட விருத்தங்கள் தான் என்று நாம் எதுகையின் துணை கொண்டு
தீர்மானிக்கலாம்!

க.இ.க -2 -இல் பார்த்த கவிமணியின் கவிதை மீண்டும் இதோ:

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
. . வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
. . கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
. . தெரிந்து பாட நீயுமுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
. . வாழும் சொர்க்கம் வேறுண்டா?

இது எட்டு 'வரிக'ளில் இங்கிடப் பட்டிருப்பினும் , வெய்யிற்-
கையிற்-தெய்வ-வையம் இவற்றிலுள்ள
எதுகையை வைத்து இது அடிக்கு ஆறு சீர்கள் கொண்ட நான்கு அடிகள் (எட்டு வரிகள்) கொண்ட
பாடல்தான் என்று சொல்ல முடிகிறது. ( ஐ-காரம் சீரின் முதலிலும் 'அய்'
மாதிரி குறிலாக ஒலித்து,
எதுகைக்குப் பயன்படுவதையும் பாருங்கள்!) மேலும், வெ-வீ, கை-க, தெ-தெ, வை-வா போன்ற
மோனை எழுத்துகள் ஒவ்வொரு அடியிலும் சரிப்பாதியில் , 1-4 சீர் மோனையாக வந்து ,
வரிகளுக்கிடையே மோனையழகு கொடுப்பதையும் பார்க்கலாம். அடிகளுக்கிடையே எதுகை ;
வரிகளுக்கிடையே மோனை . . இதுதான் தமிழ்க் கவிதைகளில் உள்ள பொது நிலை.


* எதுகைக்கு இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றினால் போதாது. முதல்
எழுத்துகள் அளவில் ஒத்துப்
போகவேண்டும். அதாவது, முதல் எழுத்துக் குறிலானால் (நெடிலானால்), எதுகைச்
சீரிலும் முதல்
எழுத்துக் குறிலாக (நெடிலாக) இருக்கவேண்டும். (இது தொடக்கத்தில் பலர்
செய்யும் தவறு) .
தட்டு, பட்டு..எதுகை; ஆனால், தட்டு, பாட்டு ..எதுகை அல்ல.

* சிலசமயம் , மூன்றாம் எழுத்தும் ஒன்றினால் தான் முதல் தரமான, ஒத்த ஓசை


கிடைக்கும்.
(உ-ம்) பண்டு, உண்ண .. இவற்றில் ஓசை இனிமை அதிகமாக இல்லை. பண்டு, உண்டு, கண்டு...
இவை இன்னும் சரியான எதுகைகள். அதனால், முதல் எழுத்து அளவில் ஒன்றி,
முடிந்தவரை மற்ற
எழுத்துகள் ஒன்றுவது சிறப்பு. குறைந்த பட்சம் இரண்டாவது எழுத்தாவது ஒன்ற வேண்டும்!

* தற்காலத்தில் அதிகமாகப் பயன்படும் மற்ற சில எதுகை வகைகளை இப்போது பார்ப்போம்.

* வருக்க எதுகை:
=============
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே. (கம்பர்)

இங்கே ல-விற்கு, லை-எதுகையாக வந்திருக்கிறது. இப்படியே ல-வருக்க உயிர்மெய்களான
ல,லி, லு,லெ, லொ, ..இவற்றில் எந்த எழுத்தும் வரலாம். ல-குறிலாதலால்,
எதுகை எழுத்தும்
குறிலாகவே வந்தால் சிறப்பு. 'லை' நெடிலானாலும், சீரின் நடுவில் வரும்போது
'ஐகாரக் குறுக்கம்'
என்ற விதியால் குறிலாகவே ஒலிக்கிறது. ஓரெழுத்திற்கு அதன் வருக்க
எழுத்துகளில் ஒன்று
எதுகையாக வருவது வருக்க எதுகை. பல இலக்கண நூல்கள் இதை 'இரண்டாந்தர' எதுகை
என்று சொன்னாலும், தற்காலப் பாடல்களில் இந்தவகை எதுகைகள் பெரும்பாலும் வருவதைக்
காணலாம். (பொதுவாக, ஒரு உயிர்மெய் எழுத்திற்கு அதன் வருக்க எதுகையாக மெய்யெழுத்து
வராது. முக்கியமாக, வல்லின மெய்கள் இவ்வாறு உயிர்மெய்களுக்கு எதுகையாக வராது.
அருகிச் சில பழமிலக்கியப் பாடல்களில், இடையின, மெல்லின மெய்கள் அவற்றின்
உயிர்மெய்க்கு எதுகையாய் வருவதைப் பார்க்கலாம். )


* இன எதுகை:
===========
இ­ரண்டாம் எழுத்துக்கள் ஒரே ­இனமாக இருப்பது.

(உ-ம்) தக்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (திருக்குறள்)

'தக்' கும் , 'எச்' சும் வல்லின எதுகைகள். அதே மாதிரி, 'அன்பு' 'நண்பு'
மெல்லின எதுகை.
'வரவு' 'செலவு' இடையின எதுகை. இந்தச் சிறப்பற்ற எதுகைகளில் தற்காலப்
பாடல்களில் 'அன்பன் -
நண்பன்' போன்ற மெல்லின எதுகைகளைத் தான் அவ்வப்போது பார்க்கிறோம். (அதே போல்,
'ர' வும், 'ற'வும் தற்காலத்தில் ஒலியில் நெருங்கினபடியால், ஒன்றுக்கொன்று
( மறையில் - கரையில் போல்)
எதுகையாக வருகின்றன.)

* ஆசிடை இட்ட எதுகை :
===================
ஆசு என்றால் பற்றுக்கோடு.

எதுகையாக வரும் எழுத்துக்கு முன் 'ய்,ர்,ல்,ழ்' என்ற எழுத்துகள் நான்கில்
ஒன்று வந்தால், ஆசிடை
எதுகை எனப்படும். ­இந்த விதியினால், 'வாய்மை-தீமை', 'மாக்கொடி-கார்க்கொடி',
'ஆவேறு-பால்வேறு' ,'வாழ்கின்ற-போகின்ற' என்ற வார்த்தைகள் ஆசிடை எதுகை பெற்று
விளங்குகின்றன. இந்த எழுத்துகள் நடுவில் வந்தாலும் ஓசை கெடுவதில்லை
என்பது ­இந்த வகையின்
உட்பொருள். ( வாய்மை-தூய்மை; மாக்கொடி-பூக்கொடி; வாழ்கின்ற-தாழ்கின்ற ..இவை
'முதல்தரமான' எதுகைகள். ஆனால்... கருத்தைச் சொல்ல , முதல் தர
எதுகைகளைப் பயன்படுத்த முடியாவிட்டால், ஆசிடையிட்ட எதுகை போன்ற சிறப்பில்லா
எதுகைகளைப் பயன்படுத்தலாம் என்பதே இந்தச் சலுகைக்குப் பின்னுள்ள பொருள்.)

* சொற்புணர்ச்சி செய்தபின் தான் எதுகை சரியா என்று பார்க்க வேண்டும். மின்னியல்,
பொன்தகடு..எதுகை அல்ல. ஏனென்றால், பொன்+தகடு= பொற்றகடு!

* ஓசை அழகிற்காக, படிக்காதவர்களும் இயற்கையாக எதுகையை ஆள்வதைப் பார்க்கலாம்.
'எதுகை, மோனை' என்பது 'எகனை, மொகனை' ஆகும். 'ஆட்டம், பாட்டு' என்பது
'ஆட்டம், பாட்டம்' ஆகும். 'விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று காய்க்குமா' என்பது
'வெரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணு காய்க்குமா?" ஆகும்.

* இயைபு:
========

அடித்தொடக்கத்தில் வருவது எதுகை. அடிகளின் இறுதியில் ஓர் எழுத்தோ,
பல எழுத்துகளோ ஒன்றி வருவது இயைபு.

காட்டு:

நந்தவ னத்திலோர் ஆண்டி -- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி --அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி !

இதில் "ண்டி" என்ற எழுத்துகள் ஒன்றிவருகின்றன.
(நந்த -கொண்டு - மெல்லின எதுகை; ந-நா, கொ-கூ மோனைச் சீர்கள்)

===
பயிற்சி:

9.1
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
அகத்தின் அழகு முகத்திலே
அடியாத மாடு படியாது
வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை.

இப்படி அடிக்குள் எதுகை இருக்கும் சில பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதவும்.
'புது' மொழிகளும் எழுதலாம்!

10. சீர்கள் -2

க.இ.க -7 -இல் நான்கு வகையான ஈரசைச் சீர்களைப் பற்றியும், அவற்றின் வாய்பாடுகளாகிய
தேமா(நேர்நேர்), புளிமா(நிரைநேர்), கூவிளம்(நேர்நிரை),
கருவிளம்(நிரைநிரை) என்பதையும் பார்த்தோம்.

மூவசைச் சீர்கள்
============
ஈரசைச் சீர்களுக்குப் பின் நேரோ, நிரையோ வந்தால் மூவசைச் சீர்கள்
விளையும். காய் என்ற சொல்
நேரசையாதலால் , தேமாவிற்குப் பின் நேர் வந்தால் 'தேமாங்காய்' என்று
சொல்லலாம். அதேமாதிரி,
மற்ற ஈரசைச் சீர்களின் வாய்பாடுகளின் பின்னும் காய் என்பதைச் சேர்த்தால்
நேரசையில் முடியும்
நான்கு மூவசைச்சீர்களின் வாய்பாடு கிடைக்கும் .
நேர் நேர் நேர் - தேமாங்காய் ; நிரைநேர்நேர் - புளிமாங்காய்;
நேர்நிரைநேர் - கூவிளங்காய்;
நிரைநிரைநேர் - கருவிளங்காய் .

இப்படி நேர் அசையில் ( அதாவது, 'காயில்') முடியும் மூவசைச் சீர்களைக்
காய்ச்சீர் என்பர்.

அதேபோல், 'கனி' என்பது 'நிரை' அசைக்கு வாய்பாடாக இருப்பதால், நிரையில்
முடியும் மூவசைச்
சீர்களான 'கனிச்' சீர்கள் நமக்குக் கிடைக்கின்றன.

நேர்நேர்நிரை- தேமாங்கனி; நிரைநேர்நிரை-புளிமாங்கனி ; நேர்நிரைநிரை - கூவிளங்கனி;
நிரைநிரைநிரை -கருவிளங்கனி.

ஈரசைச் சீர்கள் நான்காதலால் , அவற்றுடன் நேர், நிரை சேர்த்தால், மொத்தம்
(4x2=8) மூவசைச்
சீர்கள் ( 4 காய் +4 கனி) கிடைக்கின்றன என்பது தெளிவாகிறது.

நான்கசைச் சீர்கள்
=============
நாலசைச் சீர்கள் ஈரசைச்சீர்கள் நான்கின் பின் 'தண்பூ' (நேர்நேர்),
நறும்பூ'(நிரைநேர்),
தண்ணிழல்( நேர்நிரை), நறுநிழல்( நிரைநிரை) என்ற நான்கு ஈரசைச் சீர்களின்
வாய்பாடுகளைப்
பெருக்கினால் (4x4=16) நான்கசைச் சீர்கள் கிடைக்கும். இவை அருகியே
தமிழ்ப் பாடல்களில்
வரும்.

நேர் அசையில் முடியும் நான்கசைச் சீர்கள் எட்டு; அவை 'பூச்'சீர்கள் என்று
அறியப்படும்.
அவை : தேமாந்தண்பூ (தேமா+தேமா), புளிமாந்தண்பூ(புளிமா+தேமா),
கூவிளந்தண்பூ (கூவிளம்+தேமா),
கருவிளந்தண்பூ(கருவிளம்+தேமா), தேமாநறும்பூ( தேமா+ புளிமா),
புளிமாநறும்பூ( புளிமா+புளிமா),
கூவிளநறும்பூ( கூவிளம்+புளிமா), கருவிளநறும்பூ(கருவிளம்+புளிமா) ,
இப்படியே 'நிரை'யில் முடியும்
நான்கசைச் சீர்களை 'நிழற்'சீர்கள் என்று சொல்வார்கள். அந்த எட்டு நிழற்சீர்கள்:
தேமாந்தண்ணிழல் (தேமா+கூவிளம்), புளிமாந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல்,
கருவிளந்தண்ணிழல்,
தேமாநறுநிழல்(தேமா+கருவிளம்), புளிமாநறுநிழல், கூவிளநறுநிழல், கருவிளநறுநிழல்.


பயிற்சிகள் :

10.1
மூவசைக் காய்ச் சீர்களுக்கு முன்னோர் வகுத்த சில அழகான நினைவுத்தொடர்கள்:

தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்

தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

பொன்னாக்கும், பொருளாக்கும், பொருள்பெருக்கும், பொன்பெருக்கும்

எல்லா வகைக் காய்ச்சீர்களும் ஒரே ஒரு முறை வரும்படி, 1-3 மோனை உள்ள, 4-சீருள்ள சில
வாக்கியங்கள் எழுதுக.(ஒவ்வொரு வாக்கியமும் வெவ்வேறு வகை காய்ச்சீரில்
தொடங்கினால் நல்ல பயிற்சி)

காட்டு:
என்னவளே ! இனியவளே! என்காதல் மறந்தாயோ?
(கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்)
10.2

மூவசைக் கனிச் சீர்களுக்கு முன்னோர் வகுத்த சில அழகான வாய்பாடுகள்:

தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி
பூவாழ்பதி, திருவாழ்பதி, திருவுறைபதி, பூவுறைபதி
மீன்வாழ்துறை, சுறவாழ்துறை, மீன்மறிதுறை, சுறமறிதுறை
(சுற-சுறா ; மறி-திரிதல்; துறை-நீர்த்துறை )

எல்லா வகைக் கனிச் சீர்களும் ஒரே ஒருமுறை வரும்படி, 1-3 மோனை உள்ள சில
வாக்கியங்கள் எழுதுக.

காட்டு:
செந்தாமரைப் பூஉறைபவள் திருமகள்பதம் துதிசெய்திடு!

10.3 நான்கு கனிகள் கொண்ட அடிகள் அதிகமாக மரபுக் கவிதைகளில்
வருவதில்லை. ஆனால், 'கனி கனி கனி மா' என்ற வாய்பாடு பயிலும் அடிகள்
உள்ள சந்தக் கவிதைகள் பல உள்ளன. இதற்கு 1-3 மோனையுடன் உள்ள, சில
உதாரணங்கள் காட்டுக. (கனிச் சீர்கள் எந்த வகையானாலும் சரியே; ஒரே
வகை வந்தாலும் சரி. )

காட்டுகள்:

நம்நாட்டினர் கொண்டாடிடும் நவராத்திரி நாளில்
நயவஞ்சக அசுரர்களை நசித்தாள்ஜய துர்க்கை.

நரகாசுரன் செயலால்விளை ஞாலத்துயர் நீக்க
அரிமாவென எழுந்தான்திரு அரியாகிய கண்ணன்.

கரம்சந்திரர் கரம்பற்றின கஸ்தூரியென் றொருவள்
அறவாழ்விலும் சிறைவாழ்விலும் அண்ணல்வழிச் சென்றாள்;

(தொடரும்)

( from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796
)

Iyappan Krishnan

unread,
Jul 3, 2014, 10:48:49 AM7/3/14
to vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, thamizh...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, nadp...@googlegroups.com, kaadhalki...@googlegroups.com
அன்புள்ள ஆசிரியருக்கு...

வெண்பா என்பதற்கு தளை தட்டல் சரியாக இருந்தால் மட்டும் போதுமா ? 

சி. ஜெயபாரதன்

unread,
Jul 3, 2014, 10:58:45 AM7/3/14
to vallamai
வெண்பா பயிற்சியில் எழுத விழைவோர் முதலில் தளை முறிவில்லா வெண்பா எழுதுவதை வரவேற்க வேண்டும்.  எதுகை, மோனை அலங்காரம் அடுத்த கட்டம். 

சி. ஜெயபாரதன் 


2014-07-03 10:48 GMT-04:00 Iyappan Krishnan <jee...@gmail.com>:
அன்புள்ள ஆசிரியருக்கு...

வெண்பா என்பதற்கு தளை தட்டல் சரியாக இருந்தால் மட்டும் போதுமா ? 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Iyappan Krishnan

unread,
Jul 3, 2014, 11:06:37 AM7/3/14
to vall...@googlegroups.com
சார் ... அவ்வ்

சரிவிடுங்க. எங்க வாத்தியார் சொல்லிக் குடுத்தது செப்பலோசை அமைஞ்சா தளை தட்டல் வராம தானா எழுத முடியும்னு.  வெண்பா பயிற்சியில் ஈடுபட முதலில் செப்பலோசை கொண்டு எழுதப் பழக ஆரம்பித்தால் தானா வெண்பா அமையும்னு அடிக்கடி சொல்லிட்டிருப்பாரு. அவரு தப்பா சொல்லிக் குடுத்திருப்பாரு ....  நானும் தப்பா கத்துக்கிட்டேன். 

Iyappan Krishnan

unread,
Jul 3, 2014, 11:10:08 AM7/3/14
to vall...@googlegroups.com
தடங்கலுக்கு மன்னிக்கவும் பிரசாத்.  பாடத்தை தொடரவும். 

PRASATH

unread,
Jul 4, 2014, 12:17:30 AM7/4/14
to தமிழ் வாசல், vallamai, தென்றல், tamizhs...@googlegroups.com, nadpudan, kaadhalkirukkalgal
 
அன்புள்ள ஆசிரியரின் ஆசிரியர்க்கு...
 
எதுகையும் மோனையும் வரப் பெற்று எழுதுவது எல்லாம் வெண்பா ஆகுமா????
:)))

PRASATH

unread,
Jul 4, 2014, 12:18:09 AM7/4/14
to vallamai
செப்பலோசைன்னா என்னனு சொல்லுங்களேன்... :)))

PRASATH

unread,
Jul 4, 2014, 12:30:01 AM7/4/14
to vallamai
தடங்கலும் அல்ல தடத்திலும்கல் அல்ல 
முடங்காதென் பணிதான் முடியும் வரையில் 
கலங்கிட வேண்டாம்நான் கற்றதைச் சொல்வேன் 
விளக்கத் துடனே விழைந்து.

Iyappan Krishnan

unread,
Jul 4, 2014, 3:42:10 AM7/4/14
to vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, thamizh...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, nadp...@googlegroups.com, kaadhalki...@googlegroups.com
அப்படின்னா வெண்பான்னா என்ன சார்? 

இயைபு, தொடை, கருத்து, கவித்துவம் இதெல்லாம் இருக்கனுமா ?  இதெல்லாம் இல்லைன்னா கூட வெண்பா தான்னு சொல்றாங்களே

இயைபும் தொடையும் கருத்து கவித
இருந்தா பரவால்ல இல்லைன்னா - போகட்டும்
நல்லா இருந்தா படிக்கலாம் இல்லாட்டி
கம்னு இருந்துடுவோம் நாம்

மேல இருக்கிறது அப்ப கண்டிப்பா வெண்பாதானே ?

PRASATH

unread,
Jul 4, 2014, 3:56:57 AM7/4/14
to vallamai, தமிழ் வாசல், தென்றல், tamizhs...@googlegroups.com, nadpudan, kaadhalkirukkalgal
அதே தான்... வெண்பான்னா என்னா சார்... :)))
 
 
கம்னு இருந்துடுவோம் நாம்...

Iyappan Krishnan

unread,
Jul 4, 2014, 8:37:05 AM7/4/14
to vall...@googlegroups.com


On Friday, July 4, 2014 12:18:09 PM UTC+8, பிரசாத் வேணுகோபால் wrote:
செப்பலோசைன்னா என்னனு சொல்லுங்களேன்... :)))

ஆங்... அதுவா... செப்பலோசை பலவகைப் படும்.

ஹைஹீல்ஸ் செப்பல்ஸ்.
லோ ஹீல்ஸ் செப்பல்ஸ்
ரப்பர் சோல்/ ஹார்ட் சோல்.. என ஒவ்வொரு செப்பலுக்குமான ஓசை வேறுபடும். 

ஒரு அடிக்கும் அடுத்த அடிக்குமான இடைவெளி சீராக நடக்கும் போது புலப்படும். அது போல வெண்பா ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்குமான ஓசை சீராக இருக்க வேண்டும். சொல்லும் போது பல்லு சுளுக்கிக்கிறா மாதிரியோ...  ஒரு கால் பைக்லயும் இன்னொரு கால் சைக்கிள்லயும் வச்சு நடக்கிற மாதிரியான ஃப்ளோ இருக்கக் கூடாது.  #டேய்... நானா மாட்டுவேன் உன் கிட்ட... போடா போடா..  

PRASATH

unread,
Jul 4, 2014, 9:03:03 AM7/4/14
to vallamai
:)))

மீ கோயிங் லீவ் பார் ஒன வீக்... என்ஜாய்...

Iyappan Krishnan

unread,
Jul 4, 2014, 9:22:14 AM7/4/14
to தமிழ் வாசல், vall...@googlegroups.com
ஆசு, (p. 63) [ ācu, ] s. Fault, defect, blemish, stain, குற்றம். 2. A trifle, any thing small or mean, அற்பம். 3. Armor, coat of mail, கவசம். 4. One or two அசை affixed to the penultimate foot of the second line of an ஆசிடைவெண்பாநேரிசைவெண்பாவிற்றனிச் சொற்குமுன் கூட்டப்படுமசை. 5. A small tube through which the yarn is conducted from the spindle of a spinning wheel to a ma chine,நூலிழைக்குங்கருவிகளிலொன்று. 6. A small particle used in soldering metals, பற்றாசு. 7. A mark or butt, இலக்கு(c.) 8. A kind of arsenic, ஓர்விதபாஷாணம்(p.)


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


On 4 July 2014 21:03, PRASATH <pras...@gmail.com> wrote:
புரியவில்லை ஐயா...


2014-07-04 17:29 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

ஆசின்றி இருப்பதே ஆசிரியருக் கழகு ஆசிரியரே :))

(# நானே தான் )

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 4, 2014, 10:28:02 PM7/4/14
to வல்லமை
ஆசு கவி என்று அழைத்தாரே அன்பர் ஒருவர் என்னை.  பிழையுள்ள (faulty) "கவிதைகள்" படைக்கிறேன் என்றாரோ அவர்?  இதுதான் வஞ்சப் புகழ்ச்சியின் எதிர் பிரயோகமோ?


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Reply all
Reply to author
Forward
0 new messages