Re: From Gulam Mohideen,Orthopaedic Surgeon,Thanjavur

31 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jan 19, 2025, 6:18:51 AM1/19/25
to vallamai

குலாம் மொகிதீன் ortho...@gmail.com

Thu, Jan 16, 9:02 PM (3 days ago)
to me


///Amma, VANAKKAM
I am from Thanjavur, an orthopaedic Surgeon, a junior to Dr Pugalenthi Pandian.
I saw your Maruthuva Kalai Chorkal e-book.
I also came to know that you have translated Prof M Natarajan's Book.
Just a few minutes ago I spoke to Dr Pugalenthi Pandiyan. He said he will send me your contact details.
meanwhile I got your email from the e-book.
I would like to talk to you for further details.This for a write up regarding maruthuva Kalai Chorkal in Orthopaedics.
Mikka Nandri///

என்னிடம் இருந்த இரண்டு கட்டுரைகளை அனுப்பி இருக்கிறேன். அவை வருமாறு...

மருத்துவக் கலைச்சொல்லாக்கம்- சில சிக்கல்களும் தீர்வுகளும்  

முனைவர் ச.கண்மணி கணேசன் (ப.நி.),

முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர்,

ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி,

சிவகாசி.

626189 


(இக்கட்டுரை காலம்தோறும் அறிவியல் தொழில் நுட்பம் என்ற தலைப்பில்; அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 1998ல் நடத்திய கருத்தரங்கில் வாசித்து அளித்தது.)


முன்னுரை 

மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாமாண்டு மாணவர்  பயிலும் 'The Text Book Of Orthopaedics And Traumatology' -M.Natarajan' என்ற புத்தகத்தின் ஒரு பகுதியை மட்டும் 'காய அறுவையியல் மருத்துவப் பாட நூல்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்துள்ளேன். இது நூலாக 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிட்டு முடிந்து விட்டது. அப்பணியை மேற்கொண்ட போது மருத்துவக் கலைச் சொற்களை உருவாக்குங்கால் ஏற்பட்ட அனுபவங்கள் இக்கட்டுரைக்கு ஆதாரமாக அமைகின்றன. இப்போது கலைச்சொல் ஆக்கம் வேகம் எடுத்து இருப்பதால்; பின்பற்றப்பட்ட நெறிமுறைகளை அளிப்பது ஏற்புடைத்து என்று கருதி இக்கட்டுரையை அளிக்கிறேன். 


அகராதிகள்:

'மருத்துவக் கலைச்  சொற்கள்' என்ற பெயரில் மருத்துவர் சாமிசண்முகம் அவர்கள் கி.பி.1990ல் பதிப்பித்துள்ள ஒரு கலைச்சொல்  தொகுதி மிகவும் பயனுள்ளதாகும். ஏ.சிதம்பரநாதன் செட்டியார் பதிப்பித்துள்ள ஆங்கிலம்- தமிழ் அகராதியும் ஓரளவு கலைச்சொல் ஆக்கத்திற்குத் துணை நின்றது. அத்துடன் மருத்துவர் பயன்படுத்தும் மருத்துவ அகராதி என்ற ஆங்கில நூல் தரும் விளக்கப் பகுதிகளும் புதுச்  சொல்லாக்கத்திற்குத் துணை செய்தன.     


இருதுறை இணைப்பு:

தமிழ்த் துறையைச் சேர்ந்தவர் மருத்துவ நூலை மொழி பெயர்த்து எழுதும் போது; மருத்துவரின் துணையையும் உடன் ஏற்றுக் கொள்வதே சிறந்த முறையில் நூல் அமைய வழி வகுக்கும். தமிழ்த் துறையைச் சேர்ந்தவர் தமிழின் தரத்தைப் பாதுகாத்தும், மருத்துவர் மருத்துவக் கருத்துகளின் சரியான அமைப்பு, எளிமை, தெளிவு முதலியவற்றைப் பாதுகாத்தும் செயல்படுவர். இந்த இணைப்பு பொருளற்ற பிடிவாதத்தைத் தவிர்த்து, ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்கவும், கற்றுக்கொள்ளவும் ஏதுவாக அமையும் போது தலைசிறந்த மொழிபெயர்ப்புகள் உருவாக வாய்ப்புண்டு. 

மருத்துவரின் துணையுடனேயே துணிந்து தீர்க்க வேண்டிய சிக்கலும் ஏற்படுகிறது. சான்றாக ஆங்கிலப் பேச்சு வழக்கில்  fever என்ற சொல் காய்ச்சலைக் குறிக்கிறது. pyrexia என்பது அதற்குரிய மருத்துவக் கலைச்சொல். தமிழில் காய்ச்சல் என்ற பேச்சு வழக்குச் சொல்லையே கலைச்  சொல்லாகவும்  பயன்படுத்தலாமா? அல்லது கலைச்சொல்லாக இன்னொரு சொல் வழக்காறு வேண்டுமா என்ற ஐயம் எழுகிறது. எதிர்காலத்தில் பேச்சு வழக்கிற்கு இணையான கலைச்சொல் இல்லாமை ஒரு குறைபாடாக ஆகிவிடக் கூடாதே என்ற ஐயத்தை ஒரு மருத்துவரால் தான் தீர்த்து வைக்க முடியும். மூலநூலாசிரியர் மருத்துவர் எம்.நடராசன் காய்ச்சல் என்ற சொல்லையே கலைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம்; இதனால் எதிர் காலத்தில் சிக்கலோ, குறையோ நேராது என்று கருத்துரைத்தமையால் காய்ச்சல் என்ற சொல்லே கலைச்சொல்லாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. 

'open reduction' என்ற கலைச்சொல்லைத் திறவை நேராக்கம் என்று பெயர்த்துப் பழகிய மருத்துவரிடம் அதை ' அறுவை நேராக்கம் ' என்று சொல்வது தரமான மொழிபெயர்ப்பு என்று எடுத்துக் கூறிய போது மனமுவந்து ஏனெனில் அறுத்துத் தானே உடற்பகுதியைத் திறந்து நோக்குகின்றனர்.மொழித் துறையினர் கூறும் கருத்துக்களை மருத்துவர் அவ்வப்போது புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வர் என்பதற்கு இது ஒரு சான்று.


பலருடன் கலந்து ஆலோசித்தல்:

ஒரு மருத்துவரின் துணையை மட்டும் நாடி மொழி பெயர்ப்பது மிக நல்ல பலனைத் தர வழியில்லை .ஏனெனில் மருத்துவர்க்குள்ளும் சில சொல்லாக்கங்களில் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. சான்றாக wound debridement என்ற கலைச்சொல்லுக்கு  'புன்திசு நீக்கம் என்ற தொடரை மருத்துவர் புகழேந்திப் பாண்டியன் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மருத்துவர் நடராசன் 'புன்திசு நீக்கம் ' என்ற தொடர் தெளிவாக இல்லை. 'அழுகல் திசு நீக்கம் ' என்றே பயன்படுத்த வேண்டும் என்கிறார். அழுகிய திசு புன்திசுவாகத்தான் இருக்க முடியும். அது மட்டுமின்றி அழுகலின்  பல்வேறு படிநிலைகளில் உள்ள திசுக்களையும் புன்திசு என்ற சொல் முழுமையாகக் குறித்துப் பொருத்தமாக அமையவும் இயலும். இதனால் ' புன்திசு நீக்கம் ' நல்ல தமிழ்க்கலைச் சொல் என்கிறார் மருத்துவர் புகழேந்திப் பாண்டியன். இந்த இரு மருத்துவர்களுக்கு இடையில் ஏற்படும் கருத்து மாற்றத்திற்கு அவர்களின் தமிழ்ப் பயிற்சியில் உள்ள வேறுபாடே காரணம். இவ்வாறு இருவேறு மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்கும் போது எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய சொல் எது என்று தெரிய வாய்ப்பு ஏற்படுகிறது. அறிவியல் கலைச்  சொல்லாக்கம் எளிமைக்கு முதலிடம் கொடுக்க வேண்டிய நியதி இருப்பதால் wound debridement=அழுகல் திசு நீக்கம் என்றே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது .

தெளிவிற்கு முதலிடம் 

'devitalised muscle tissue'என்ற ஆங்கிலத் தொடர் 'மாள்தசைத்திசு' என மொழி பெயர்க்கப்பட்டது. 'மாண்டதசைத்திசு' என்று பயன்படுத்துவதே சிறந்தது; அது தான் புரிகிறது  என இரு மருத்துவரும் ஒருமித்த கருத்தைக் கூறினார்.  மாண்டதசைத் திசு என்பதன் செறிந்த வடிவமே  'மாள்தசைத்திசு' ஆகும். மொழித் துறையினருக்குத் தெளிவாகப் புரியும் இத்தொடரால் மருத்துவருக்குத் தெளிவு ஏற்படவில்லை. எனவே தெளிவிற்காக ‘மாண்ட தசைத்திசு’ என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதாகிறது. 


தமிழிலுள்ள பழைய காரணப்பெயர்கள்:

ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு நேரான எளிய தமிழ்ச் சொற்கள் காரணப் பெயர்களாகப் பண்டுதொட்டுத் தமிழில் வழங்கி வந்திருப்பின் அவற்றையே தமிழ்க் கலைச்சொற்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சான்றாக radius என்ற ஆங்கிலப் பெயருக்கு நேரான தமிழ்ப் பெயராக ஆரையெலும்பு என்ற காரணப்பெயர் பண்டுதொட்டுத் தமிழில் வழங்கியுள்ளது.

ஆங்கிலத்தில் radius என்ற பெயரைக் கணிதவியலிலும் காண முடிகிறது. உடற்கூறியலிலும் காண இயல்கிறது. கணிதவியலில் ஒரு வட்டத்தின் விட்டத்தில்  பாதி  ஆரம் ஆகும். ஒரு ஆரம் வட்டத்தின் நடுப் புள்ளியிலிருந்து அதன் சுற்றெல்லையில்  எந்தப் புள்ளியையும் தொட இயலும். இதனால் ஒரு வட்டத்தின் ஆரஅளவு  நிலையானதாகிறது. இந்த ஆரத்தின் பண்பு ஆரையெலும்புக்கும் பொருந்தி வருகிறது. கைமுட்டித் துருத்தியிலிருந்து  தொடங்கும் இந்த எலும்பு கை மணிக்கட்டு மூட்டு வரை நீள்கிறது. முன்கையைப் புரட்டிய நிலையிலிருந்து மல்லார்ந்த நிலைக்குத் திரும்பும் போதும், மல்லார்ந்த நிலையிலிருந்து புரட்டிய நிலைக்கு மாற்றும் போதும்; கைமுட்டித்துருத்தி மூட்டு வட்டத்தின் நடுப்புள்ளி போல் அமைய; மணிக்கட்டு மூட்டில் அமைந்துள்ள ஆரையெலும்புமுனை வட்டத்தின் சுற்றெல்லையில் ஆரம் நகர்வது போல் நகர்கிறது. இவ்வாறு ஆரைஎலும்பின் பெயர்க் காரணத்தைத் தெளிவாக விளக்க இயல்வதால் நாம் ஆரையெலும்பு என்ற பெயர் வழக்கையே ஏற்றுக் கொள்ளலாம்.

மருத்துவநூலைக் கற்பிப்போருக்கு எளிமையாக இருக்க வேண்டுமாயின் ரேடியசு என்ற சொல்லையே வழக்கில் இருத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் நடராசன். மொழித்துறை சார்ந்த தமிழுள்ளம் அத்தகு பயன்பாட்டில் இருக்கும் குறையையும் சேர்த்துச் சிந்திக்கிறது. காரணப் பெயரான பழந்தமிழ்க் கலைச்சொல் மறைய வாய்ப்பு ஏற்பட்டு விடும். அதற்குப் பதிலாக ஆரையெலும்பு என்ற சொல்லை வழக்கிற்கு கொண்டு வந்தால் சில ஆண்டுகளுக்குள் மருத்துவம் கற்பிப்போர் அச்சொல்லுக்குப் பழகி விடுவர். மொழியின் உயிர்ப்பும் அடங்காது.

ஃபிபுலா என்ற ஆங்கிலப் பெயருக்கு நேராகச் சிம்பெலும்பு என்ற காரணப் பெயர் பண்டு  தொட்டுத் தமிழில் வழங்கியுள்ளது. கீழ்க்காலில் இரண்டு எலும்புகள் உள்ளன. ஒன்று கீழ்க்காலெலும்பு என்னும் டிபியா; இன்னொன்று சிம்பெலும்பு என்னும் ஃபிபுலா. சிம்பெலும்பு நடமாட்டத்திற்கு அடிப்படைத் தேவையான எலும்பன்று. கீழ்க்கால்  எலும்புக்குச் சிம்பெலும்பு ஒரு ஆதாரமாக- சிம்பாக அமைந்து (தொடரும்).



On Sun, Jan 19, 2025 at 4:41 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இரண்டாவது கட்டுரையும் அனுப்பி விட்டேன்.
சக 

On Sun, Jan 19, 2025 at 1:17 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஒரு கட்டுரையை நீங்கள் கொடுத்த Google முகவரிக்கு அனுப்பி இருக்கிறேன். 
சக 

On Sat, Jan 18, 2025 at 10:01 PM குலாம் மொகிதீன் <ortho...@gmail.com> wrote:

On Fri, 17 Jan 2025, 20:33 kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
I'm sorry. The University authorities (MK UNIVERSITY published it.) gave me three copies only; of which I donated one copy to a library (I don't remember which library... I'm 71yrs. old); one copy to pukazh and only one is with me. 

I read two papers in connection with translation of text books in two seminars. I'll share their copy to you if you send me your mail id. which has a Google account. 

Sk

On Fri, 17 Jan 2025, 7:23 pm குலாம் மொகிதீன், <ortho...@gmail.com> wrote:
Amma, Vanakkam

May I know of any other Medical Tamil related work of yours.

You Maruthuva Kalai Sorkall pdf version e-book is with me.

Can I have a copy of your Prof M Natarajan's translated book published by MKU as well.

I was the Co-Ordinator of the first ever Ortho Tamil Conference conducted in Thanjavur in 2023.

Mikka nandri

Gulam Mohideen 
Thanjavur

On Fri, 17 Jan 2025 at 06:53, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

Thank you for your mail.
Sk


On Thu, 16 Jan 2025, 9:02 pm குலாம் மொகிதீன், <ortho...@gmail.com> wrote:

Amma, VANAKKAM

I am from Thanjavur, an orthopaedic Surgeon, a junior to Dr Pugalenthi Pandian.
I saw your Maruthuva Kalai Chorkal e-book.
I also came to know that you have translated Prof M Natarajan's Book.
Just a few minutes ago I spoke to Dr Pugalenthi Pandiyan. He said he will send me your contact details.
meanwhile I got your email from the e-book.

I would like to talk to you for further details.This for a write up regarding maruthuva Kalai Chorkal in Orthopaedics.

Mikka Nandri

Gulam Mohideen M
94430 24556
16.01.2025
--
M.Gulam Mohideen


--
M.Gulam Mohideen

kanmani tamil

unread,
Jan 20, 2025, 9:26:24 PM1/20/25
to vallamai

செயல்படுகிறது. எனவே ஃபிபுலாவைச்    சிம்பெலும்பு என்று அழைப்பது பொருத்தமாகும்.

உலகம் முழுமையும் மருத்துவக் கலைச் சொற்களுக்கு ஒரே மாதிரியான பெயர்களே வழங்க வேண்டும். அதுவே அறிவியல் உலகத்திற்கு வசதியாக அமையும் என்று மருத்துவர் நடராசன் கூறுகிறார். தாய் மொழியிலுள்ள காரணப் பெயரை ஒதுக்கி விடாமல் பயன்படுத்தி உலக முழுமைக்கும் பொதுவாக வழங்க வேண்டிய பெயரை அடைப்புக்குறிக்குள் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதால் மொழித்துறையார் பொறுப்பும் ஊறு அடைவதில்லை. அறிவியலார் கடமையும் செவ்வனே முற்றுப் பெறுகிறது. பண்டுதொட்டு வழங்கி இடைக்காலத்தில் மயங்கிய நிலையில் மறைந்துள்ள சிம்பெலும்பு, ஆரையெலும்பு போன்ற பெயர்களை இன்று மீண்டும் வழங்கி உயிர்ப்பு அளிப்பது அறிவியல் தமிழின் தரத்தை நிலைநாட்டும். 

சிம்பெலும்பு (ஃபிபுலா) 

ஆரையெலும்பு (ரேடியசு)

காரையெலும்பு (க்ளெவிக்ல்) 

அங்கைப் படகெலும்பு (ஸ்காபாய்டு)

குதிகாலெலும்பு (கால்கேனியம்) என்று பயன்படுத்தும் போது அறிவியல் உலகின் வசதி எவ்விதத்திலும் பாதிப்படையாது. தமிழில் மருத்துவம் கற்கும் மாணவருக்கும் இது தடையாக அமையாது. அத்துடன் அல்னா, டிபியா, ஃபீமர், ஸ்பைன், ஸ்பைனல் கார்ட், ஃபாலங்ஸ் என்ற உலகப் பொதுவான பெயர்களை வழங்கும் போது கீழ் வரும்

முன்கை எலும்பு (அல்னா)

கீழ்க்காலெலும்பு (டிபியா)

தொடையெலும்பு (ஃபீமர்)

முள்ளெலும்பு (ஸ்பைன்)

தண்டுவடம் (ஸ்பைனல் கார்ட்)

விரலெலும்பு (ஃபாலங்ஸ்)

உள்ளங்கைஎலும்பு (மெட்டாகார்ப்பல் போன்) 

போன்ற வழக்குகள் எளிமை சார்ந்தவை. இன்றுவரை    வழக்கிலுள்ள மேற்சுட்டிய சொற்களை ஒதுக்குவதற்குக் காரணமே இல்லை.


பேச்சு வழக்கும் கலைச்சொல்லும்:

ஆங்கிலத்தில் பேச்சு வழக்குச் சொல் ஒன்றும், அதனுடன் தொடர்பு உடைய கலைச்சொற்கள் பலவும் வழக்கில் இருக்கும் போது தமிழிலும் பேச்சு வழக்குச் சொல் ஒன்றும், அதனுடன் தொடர்புடைய கலைச்சொற்கள் பலவாகவும் உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.        

ஆங்கிலத்தில் Cancer என்பது பேச்சு வழக்குச் சொல். தமிழில் அது புற்று என்று அழைக்கப்படுகிறது. மருத்துவத் துறையில் Malignant deposit என்ற தொடரும், Myeloma என்ற சொல்லும் - Matosis என்ற ஈறும், புற்றையே குறிக்கின்றன. Carcinomatosis, Myelomatosis  போன்றவையும் புற்று நோயின் பல படிநிலைகளைக் காட்டும் கலைச் சொற்கள். இச்சொற்கள் Cancer என்ற சொல்லுடன் பொருள் தொடர்பு உடையனவாயினும்; சொல்லமைப்பில் தொடர்பு இல்லாதன. ஆங்கிலத்தில் இருப்பது போல் பேச்சு வழக்குச் சொல்லுடன் பொருள் தொடர்பு மட்டும் கொண்ட, அமைப்பியல் தொடர்பற்ற பல கலைச்சொற்களை உருவாக்க வேண்டுமா? அல்லது தமிழின் இயல்பிற்கேற்ப பொருள் தொடர்புடன் அமைப்பியல் தொடர்பும் உடைய பல கலைச் சொற்களை உருவாக்கி வழங்கலாமா என்ற ஐயம் எழுகிறது.

புற்று என்ற பேச்சு வழக்கிற்கு நேரான கலைச்சொல்லாகப் 'பெருக்கமாற்றம்' என்ற தொடர் அமைகிறது. பேச்சுவழக்கில் நல்லி என்று அழைக்கப்படும் எலும்பு மச்சையில் ஏற்படும் மாற்றம்; ஆதலால் முற்றிலும் பொருள் பொருத்தம் உடைய பிற கலைச் சொற்களாக முறையே

Myeloma - நல்லி நடுமப் பெருக்க மாற்றம்

Myelomatosis - நல்லி நடும மீப் பெருக்க மாற்றம் 

Carcinomatosis - பல்லுறுப்புப் பெருக்க மாற்றம்  

என ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் நேரான தமிழ்க்  கலைச் சொல்லை உருவாக்குவதில் சிரமம் இல்லை. புற்று என்னும் பேச்சு வழக்குச் சொல்லுடன் பொருள் தொடர்பு மட்டும் கொண்டு, சொல் அமைப்பியல் தொடர்பு இல்லாதனவாக  இக்கலைச் சொற்கள் அமைகின்றன. ஆனால் பேச்சு வழக்குச் சொல்லாகிய புற்று என்பதையே கலைச் சொல்லாகவும் பயன்படுத்தும் போது அத்துடன் பொருள் தொடர்பு மட்டுமின்றிச் சொல் அமைப்பியல் தொடர்பும் உள்ள பல கலைச் சொற்களை உருவாக்க வழி உள்ளது.

Cancer - புற்று 

Secondary malignant deposit - இரண்டாம்நிலைப் புற்றுப் படிவு

Myeloma - முன்னோடி அணுப்புற்று

Myelomatosis - முன்னோடி அணுப்புற்றுப் பெருக்கம்

Carcinomatosis - பரவலான நுண் புற்று

இவ்வாறு பொருள் தொடர்பு மட்டுமின்றி அமைப்பியல் தொடர்பும் உடைய கலைச் சொல்லாக்கமே சிறப்பானதாகும்.


அறிவியலின் பல துறைகளும் ஒரு கலைச் சொல்லும்:

அறிவியலின் பல துறைகளில் ஒரே கலைச்சொல் பயின்று வருவதுண்டு.சான்றாக ஆக்சிஜன் என்ற வாயு வேதியியலில் பேரிடம் வகிக்கிறது.அதே வாயு உயிர்களுக்கு அடிப்படைத் தேவையானது. ஆகையால் உயிரியலிலும் இடம் பெறுகிறது. மருத்துவத் துறையில் ஆக்சிஜன் என்ற வாயுவின் பெயரை அடியொட்டிய கலைச்சொற்கள் உண்டு. அச்சொற்களில் ஆக்சிஜன் வாயுவைக் குறிக்கும் கூறினை அதன் உயிரியல் பயன்பாட்டை அடியொட்டி  அமைப்பது பொருத்தமாக அமைகிறது. சான்று: hypoxemia =தமனிய வளிக்குறை . hypo- என்ற முன்னோட்டும், -emia என்ற பின்னொட்டும் குறை என்ற பொருளையே தருவன. -ox- என்ற இடையொட்டு மட்டுமே ஆக்ஸிஜன்  என்ற வாயுவை உணர்த்துகிறது. இச்சொல்லைத் தமனிய ஆக்ஸிஜன் குறை என்று மொழி பெயர்த்து வழங்கலாம். அதைவிட தமனிய உயிர்வளிக்குறை என்று சொல்லும் போது மருத்துவத் துறைக்கும், உயிரியல் துறைக்கும் ஏற்ற வகையில் அவ்வாயு உயிர்க்குரிய அடிப்படைத்தேவை என்ற மெய்ம்மையை நினைவூட்டுவதாக அமைகிறது.

வேதியியலார் அத்துறையில் ஆக்ஸிஜன் ஒரு பொருளின் எரியும் அளவைக் காட்டுவதால் அதை எரியூக்கிவளி என்று அழைக்கலாம். அதனால் ஆக்ஸிஜன் என்ற ஒரு பொருள் வேதியியலிலும், மருத்துவத்திலும் பயன்பாட்டை அடியொட்டி  வேறு பெயர்கள் பெறும் தகுதி உடையதாகிறது.      


ஒலிபெயர்ப்பு:

தேவைப்படும் இடங்களில் கலைச் சொற்களை ஒலி பெயர்த்து வழங்குவது வரவேற்கக்  கூடியதே. சான்றுகள் பின்வருவன:

tissue=திசு

Callus=காலசு

Mesenchymal=மெசங்கைமல்

Iliac= இலியாக்

Carpometacarpal=கார்போ மெட்டாகார்பல்

Deltoid=டெல்டாய்டு


பின் இடுகை ஒட்டுநிலைத் தன்மையும் சொல்லாக்கமும்:

தமிழ் மொழியியல்பு கலைச் சொல்லாக்கத்திற்கு மிகவும் எளிதாக இடம் கொடுக்கக் கூடிய பின் இடுகை ஒட்டு நிலைத் தன்மையுடன் உள்ளது. இதனால் எந்த ஒரு ஆங்கிலக் கலைச் சொல்லாக இருந்தாலும் அதன் பொருளையும் விளக்கத்தையும் புரிந்து கொண்டவுடன் தமிழில் சொற்களை ஆக்க முடிகிறது.சான்றாக;

Fibroblast  - நாரியல் உருமம்

Chondroblast - குருத்தெலும்புருமம் 

Osteoblast - எலும்புருமம்  

என்ற சொல்லாக்கங்களைக் கூறலாம். -blast என்ற பின்னொட்டுக்கு ஏற்ற தமிழ் வடிவத்தைப் பிற நூல்களில் காண இயலாத நிலையில் fibro-, chondro-, osteo- என்ற முன்னொட்டுக்கள் முறையே நாரியல் -, குருத்தெலும்பு-, எலும்பு-, என்று பொருள் படுகின்றன. -blast என்ற பின்னொட்டுக்கு மருத்துவ  விளக்கம் தேடும்போது 'உருவாக்கும் உயிர்மங்கள் ' என்று புரிகிறது. உருவாக்கும் உயிர்மங்கள் என்ற தொடரைச் செறிவாக்கினால் உருமங்கள் என்ற புதுச்சொல்  கிடைக்கிறது. இதன் விளைவாக நாரியல் உருமங்கள் , குருத்தெலும்பு உருமங்கள், எலும்புருமம் ஆகிய கலைச்சொல் தொடர்கள் கிடைக்கின்றன. முன்னர் குறிப்பிட்ட இரண்டு மருத்துவர்களும் இவ்வழக்காறுகளை ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது . 


முடிவுரை:

மொழித் துறையினரும், அறிவியல் துறையினரும் ஒருங்கிணைந்து செய்யும் அறிவியல் நூலாக்கங்களே இன்றைய சூழ்நிலையில் வரவேற்கக்கூடியன. ஆனால் இரு துறையினரும் முரண்படாமல் ஒத்துழைப்பது நன்று. மொழிபெயர்ப்பின் போது; எளிமை, தெளிவு, தமிழியல்பு, அழகு, என்ற வரிசை முறைப்படியே கலைச் சொற்களின் தேர்வுத்தகுதி அமைய வேண்டும். பிற்காலத்தேவை, பரந்துபட்ட வழக்கு உருவாக்கம் முதலியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். பழஞ்சொற்களைக் கண்டு மலைத்தலும், புதுச்சொற்களைக் கண்டு தயங்கலும் தேவை இல்லை. தொடர்ந்த பயன்பாடுகள் அவற்றை இயல்பான தமிழ்ச்சொல் ஆக்கி விடும்.

சக



On Mon, Jan 20, 2025 at 8:27 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தேடிப் பார்க்கிறேன்; நான் மதுரையில் இல்லை. 
சக 

On Sun, 19 Jan 2025, 8:05 pm குலாம் மொகிதீன், <ortho...@gmail.com> wrote:
அம்மா வணக்கம்,

பேராசிரியர் நடராஜன் மொழியாக்க தங்கள் நூல்... நகல் எடுத்தோ / scan செய்தோ கிடைக்க வாய்ப்பு உள்ளதா.... மதுரையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...எனது இளைய நண்பர் மதுரை மருத்துவக் கல்லூரி மனநல பேராசிரியர் (ஓய்வு) மருத்துவர் குமணன் தங்களிடம் வந்து வாங்கிக் கொள்ளவார்.

உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் முன் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினேன்.சிதம்பரம் புறப்பட்டு கொண்டு இருந்ததால் சனிக்கிழமைக்கு மேல் விவரங்கள் அனுப்புவதாக கூறினார்.

மிக்க நன்றி 

குலாம் மொகிதீன்.மு
( துறைத்தலைவர் (ஓய்வு)) தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி 
எலும்பு மருத்துவர் 
தஞ்சாவூர் 

kanmani tamil

unread,
Jan 21, 2025, 8:41:39 PM1/21/25
to vallamai

கற்பிக்கவும் கற்கவும் ஏற்ற கலைச்சொல்லாக்கம்

முனைவர் ச.கண்மணி கணேசன் (ப.நி.),

முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர்,

ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி,

சிவகாசி.

626189 


(மதுரை ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம் 2001-மார்ச் 10&11 ஆகிய இரு நாட்கள் நடத்திய 7ம் கருத்தரங்கம் ஆன அறிவியல் தமிழ்ச் சிறப்பரங்கில் வாசித்து அளித்த ஆய்வுக்கட்டுரை)


முன்னுரை 

தமிழ்வழிக் கல்வி தேவை என்ற உணர்வு அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்யத் தூண்டுகிறது. ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்யும் போது தமிழ்க் கலைச்சொல்லாக்கம் அடிப்படைத் தேவை ஆகிறது.


ஆங்கிலக் காரணப் பெயர்களும் தமிழ்க் காரணப் பெயர்களும் 

ஆங்கிலத்தில் கலைச்சொற்கள் காரணப் பெயர்களாய் அமையும் போது; தமிழிலும் அவற்றுக்கு நேரான காரணப் பெயர்களாகவே கலைச்சொற்களை உருவாக்கினால் தான் காரணகாரியத் தொடர்பு அற்றுப் போகாமல் இருக்கும்.

கலைச்சொல் ஆகும் பேச்சுவழக்கு 

பண்டுதொட்டுத் தமிழில் பேச்சு வழக்காக அமையும் சொல்; ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு நேரான சொல்லாகப் பொருந்தி வருமாயின்; அப்பேச்சு வழக்குச் சொல்லையே கலைச்சொல்லாகவும் வழங்கலாம். 

Patella = முட்டிச்சிப்பி

ஆங்கிலத்தில் Patella என்று வழங்கும் எலும்புப் பெயருக்கு நேராகத் தமிழில் முட்டிச்சிப்பி என்ற பெயர் பேச்சுவழக்காக அமைகிறது. அப்பெயரையே கலைச்சொல்லாக ஏற்று முட்டிச்சிப்பி (பாடெல்லா) என்று வழங்கும் போது தமிழில் மருத்துவம் பயிலும் மாணவர்க்கும், கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கும், ஆராய்ச்சி உலகிற்கும் எளிமையாகவும் தெளிவாகவும் அமையும்.

காரணகாரியத் தொடர்பு               

புதுக்கலைச் சொற்களை உருவாக்கும் போது காலத்தோடு கூடிய காரண வகையை ஆராய்ந்து பயன்படுத்துவது எதிர்காலத்தில் அறிவியல் தமிழ் சிறந்து வளர வழி வகுக்கும். எலும்பு முறிவுகளுக்குச் சிகிச்சை அளிப்பதை மருத்துவ நூல்கள் splinting என்ற கலைச் சொல்லால் குறிக்கின்றன. இச்சொல்லுக்கு ஏ.சிதம்பநாதன் செட்டியாரின் ஆங்கிலம்-தமிழ் அகராதி 'அணைவரி' என்றும் 'சிம்பு' என்றும் பொருள் தருகிறது. மருத்துவர் சாமி.சண்முகம் தனது மருத்துவக் கலைச்சொற்கள் தொகுப்பில் 'சிம்பு' என்கிறார்.  இவ்விரு சொற்களில் 'சிம்பு'  என்ற சொல்லையே மருத்துவர் எம்.நடராஜன் தேர்வு செய்கிறார். இவர் காய அறுவையியல் மருத்துவப் பாட  மூலநூலின் ஆசிரியர். ஆனால் முடநீக்கியல் அறுவை மருத்துவர் புகழேந்திப் பாண்டியன் splint என்ற சொல்லைச் சிம்பு என்று சொல்வது பழைய நாட்டுமுறை வைத்தியத்தை அடியொட்டியது. இன்றைய மருத்துவ முறைப்படி அதை 'அணைவரி' என்று மொழிபெயர்ப்பதே சிறந்தது என்கிறார். 

பழைய நாட்டு வைத்தியத்தில் மூங்கிலைச் சிம்பிவிட்டு, இரண்டாகக்  குறுக்கே பிளந்து, பின்னர் முறிவுப் பகுதியை அணைத்து  அவ்வுடற்பகுதியின் வரிச்சட்டமாக்கிக் கட்டு இட்டனர். இன்று மாக்கட்டு இடும் போது மருத்துவர் எதையும் சிம்பி அணைவரி  ஆக்குவதில்லை.  கட்டுக்குரிய மாவையும், பட்டைத் துணிகளையும் நனைத்து முறிவுப் பகுதியை அணைத்து வரிச் சட்டமாக்குகிறார். சிம்பு, அணைவரி ஆகிய இரண்டு பெயர்களும் காரணப் பெயர்கள் என்பது வெளிப்படை. மருத்துவர் இடும் கட்டு என்றும் அணைவரியாகவே பயன்பட்டது; பயன்படுகிறது; பயன்படும். எனவே மேற்சுட்டிய விளக்கப் பகுதிகளை ஆராயுங்கால் splint என்ற சொல்லுக்கு அணைவரி  என்ற சொல்லைப் பயன்படுத்துவதே தரமான அறிவியல் தமிழுக்கு அடிப்படை ஆதாரமாக அமையும் என்பது பெறப்படுகிறது.


ஒலிபெயர்ப்பில் முன்னெச்சரிக்கை 

தேவைக்கேற்ப கலைச் சொற்களை ஒலிபெயர்ப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே .

Coronal plane = கொரோனல் உருத்தளம்

Duga's sign = டூகஸ் குறி

Colles fracture = கோலிசு முறிவு

Vascular sign of Narath = நாராத் நாள வட்டக் குறி

Shenton's line = ஷெண்டன் கோடு

Bigelou's technique = பிஜ்லோ உத்தி 

தேவையில்லாமல் அடிப்படை ஆதாரக் கலைச் சொற்களை ஒலி பெயர்க்கும் போது தொடர்ந்து அதன் விரிவாகவும் பரந்துபட்டும் அமையும் பிற கலைச் சொற்களை உருவாக்கும் சிறந்த வழிமுறையைத் தடை செய்தாற் போலாகிறது .  

Cell என்ற சொல்லை 'செல்' என்றே வழங்க வேண்டும் எனச் சில   உயிரியல்  வல்லுநர் கூறுவர். இக்கொள்கையை ஏற்று மருத்துவத் துறையில் 'செல்' என்று வழங்கும் போது சில சிக்கல்கள் எழுகின்றன. 

Bone cells =  எலும்பு செல்கள் 

என்று எளிதாக அமைந்தாலும்; Chondroblasts, Osteoblasts, Fibroblasts என்ற சொற்களைத்  தமிழாக்குவது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது.

Osteo- = எலும்பு

Chondro- = குருத்தெலும்பு

Fibro- = நாரியல் எலும்பு

-blast = உருவாக்கும் செல்கள் 

என்று பொருள் படுகின்றன. எலும்பை உருவாக்கும் செல்களை  'எலும்புருவாக்கச் செல்கள் ' என்று பெயரிட்டு வழங்கினால் அது விளக்கச் சொல்லாக அமையுமே அன்றிக் கலைச் சொல்லாக அமையாது. முனைவர் நடராசன்  Cell = உயிரணு என்கிறார். அணு என்பது வேதியலின் atom ஆகும். தனிமத்தின் அடிப்படைச் சிறு கூறு அணு என்னும் atom; உயிரின் அடிப்படைச் சிறு கூறு உயிரணு என்னும் Cell. இது இணைப்பொருத்தம் உடைய கலைச்சொல் தான். இதனை ஏற்றுக் கொண்டால்;

Osteoblast = எலும்புருவாக்க உயிரணுக்கள்

Chondroblast = குருத்தெலும்பு உருவாக்க உயிரணுக்கள் 

என்று நீண்ட விளக்கத் தொடர்களே அமைகின்றன. இவ்விளக்கத் தொடர்களைக் கலைச் சொல்லாக்குவது எவ்வாறு? 

Element = தனிமம் என்று வழங்குவது போல் Cell = உயிர்மம் என்று வழங்கினால் சிக்கல் தீர்கிறது. Bone cells = எலும்புயிர்மங்கள் என்ற தொடர் கிடைக்கிறது. இதன் விளைவாக  -blast என்னும் பின்னொட்டு 'உருவாக்கும் உயிர்மங்கள்' என்று விளக்கம் பெறுகிறது.

Osteoblast = எலும்பை உருவாக்கும் உயிர்மங்கள்

Chondroblast = குருத்தெலும்பை உருவாக்கும் உயிர்மங்கள்

Fibroblast = நாரியல் எலும்பை உருவாக்கும் உயிர்மங்கள்

மேற்சுட்டிய விளக்கத் தொடர்களில் 'உருவாக்கும் உயிர்மங்களை' உருமங்கள் என்று செறிவாக்கினால் புதுக் கலைச்சொல்லாக்கம் நேர்த்தியும் நிறைவும் பெறுகிறது .  

Osteoblast = எலும்புருமங்கள் 

Chondroblasts = குருத்தெலும்புருமங்கள் 

Fibroblast = நாரியல் உருமங்கள் 

தவிரவும் 'செல்' என்று தமிழில் ஏற்கெனவே இரண்டு உருபன்கள் உள்ளன. 

செல் = போ  

செல் = ஓலை முதலிய தாவரப் பொருட்களை அரிக்கும் ஒரு நுண்ணுயிரினம். 

அதனால் Cell = உயிர்மம் என்ற வழக்கே ஏற்கத்தக்கது.


இடையொட்டுக்களின் பயன்பாடு 

ஆங்கிலத்தில் சில பெயர்கள் சிறு மாற்றங்கட்கு உட்பட்டு பெயரடை வடிவத்தைப் பெறுகின்றன. அவற்றைத் தமிழாக்கம் செய்யும் போது சில பொது இடையொட்டுக்களைச் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. சில வேளைகளில் எந்த ஒரு மாற்றமும், ஒட்டுச் சேர்க்கையும் இன்றியே பெயர்கள் பெயரடைகளாகத் தகுதி பெறுகின்றன.

bone = எலும்பு

bony opposition = எலும்பு நேரியைவு

ஆங்கிலத்தில்  bone என்ற பெயர்; பெயரடை வடிவம் பெறும்போது bony என்று மாற்றம் பெறுகிறது. ஆனால் தமிழில் அத்தகைய மாற்றம் தேவைப்படவில்லை. 

/-சார்/ எனும் இடையொட்டு

anatomy = உடற்கூறியல்

anatomical types = உடற்கூறுசார் வகைகள்

anatomical factors = உடற்கூறுசார் பண்புகள்

(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 24, 2025, 12:46:18 AM1/24/25
to vallamai

ஆங்கிலத்தில்  anatomy என்ற பெயர் வடிவம்; பெயரடை வடிவம் ஏற்கும் போது anatomical என்று மாறி வழங்குகிறது. தமிழில் இதற்கு நேராக /-சார்/  என்னும் இடையொட்டு செயல்படுகிறது. உடற்கூறு சார்ந்த வகைகள், உடற்கூறு சார்ந்த பண்புகள் முதலியவற்றை முறையே உடற்கூறுசார் வகைகள் என்றும், உடற்கூறுசார் பண்புகள் என்றும் வழங்கலாம்.

/-அடி/ எனும் இடையொட்டு  

clinic = மருத்துவ மனை 

clinical types = மருத்தடி வகைகள் 

clinical evaluation = மருத்தடி மதிப்பீடு 

clinical union = மருத்தடிச் சேர்க்கை 

Clinic என்ற பெயர் ஆங்கிலத்தில் பெயரடை வடிவத்தை ஏற்கும் போது  Clinical என்று மாற்றம் பெறுகிறது. தமிழில் இத்தகைய மாற்றத்திற்கு /-அடி/ என்னும் இடையொட்டு துணை செய்கிறது. மருத்துவ அடிப்படையில் அமைந்த வகைகள் 'மருத்தடி வகைகள்' என்றும், மருத்துவ அடிப்படையில் அமைந்த மதிப்பீடு 'மருத்தடி மதிப்பீடு' என்றும் மருத்துவ அடிப்படையில் அமைந்த சேர்க்கை 'மருத்தடிச் சேர்க்கை' என்றும் உருப்பெறுகின்றன.

/-இயல்/  எனும் இடையோட்டு 

fibre = நார் 

fibrous scar = நாரியல் வடு 

fibrocartilage = நாரியல் குருத்தெலும்பு 

fibre என்னும் பெயர் ஆங்கிலத்தில் fibrous-, fibro- என்று இரண்டு பெயரடை வடிவங்களைக் கொள்கிறது. ஆனால் தமிழில் /-இயல்/ எனும் இடையொட்டு ஒன்றே இரண்டு பெயரடை வடிவங்கட்கும் ஏற்றதாகிறது. நாரின் இயல்பினை உடைய வடு; நாரியல் வடு ஆகும். நாரின் இயல்பினை உடைய குருத்தெலும்பு; நாரியல் குருத்தெலும்பு ஆகும்.

/-மிகு/ எனும் இடையொட்டு 

Cortex = புறணி 

Cortical bone = புறணிமிகு எலும்பு 

எலும்பில் அகணி, புறணி என்று இரண்டு பகுதிகள் உள்ளன. புறணியில் புறணி உயிர்மங்கள் மிகுதியாக இருக்கும் பகுதி புறணி மிகுஎலும்பு ஆகும். மாறாக புறணியில் பின்னலிழை உயிர்மங்கள் மிகுதியாக இருக்கும் பகுதி பின்னலிழைமிகு எலும்பு   (Cancellous bone) ஆகும். இங்கு /-மிகு/ எனும் இடையொட்டு பெயரை; பெயரடை வடிவம் பெறச் செய்கிறது.

/-மய/ எனும் சொல் இடையில் 

Calcium=சுண்ணம் 

Calcified mass=சுண்ணமயப் பிண்டம் 

சுண்ணம் என்று பொருள்படும் Calcium என்ற சொல்லின் பெயரடை வடிவமாகிய  Calcified என்ற சொல்லின் பொருளை பெறத் தமிழில் /-மய/ என்ற சொல் இடையில் இணைந்து உள்ளது.

/-இய/ எனும் இடையொட்டு 

Surgery = அறுவை 

Surgical intervention = அறுவையியத் தலையீடு 

ஆங்கிலத்தில் Surgery என்ற பெயர் Surgical என்ற பெயரடை வடிவம் பெறுகிறது. தமிழில் அறுவை என்ற பெயர் தலையீடு என்ற பெயருக்குப் பெயரடையாக அமையும் போது இரண்டு சொற்களுக்கும் இடையே /-இய/ எனும் இடையொட்டைச் சேர்க்கும் தேவை உருவாகிறது. இங்கு /-சார்-, -அடி-, -இயல்-, -மிகு-, -மய-/ போன்ற தமிழ் இடையொட்டுக்கள் பொருந்தவில்லை. ஏனெனில்   Surgery எனும் அறுவை ஒரு நிகழ்ச்சித் தொடர் ஆகும். சிகிச்சையின் இடையில் அது தேவைப்படலாம். எனவே அது அறுவை சார்ந்த தலையீடோ / அறுவை அடிப்படையிலான தலையீடோ / அறுவை இயல்புடைய தலையீடோ / அறுவை மிகுந்த தலையீடோ / அறுவை மயமான தலையீடோ அன்று. இடையொட்டு இன்றி அறுவைத் தலையீடு என்று வழங்கினால் மாணவருலகின் பேச்சுவழக்கில் அது வேறு பொருள்படும். அதனால் அவ்வாறு பயன்படுத்துவது நன்று அன்று. புதிதாக ஒரு இடையொட்டு தேவைப்படுகிறது. அது சிறிதாகவும் , தெளிவாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும். எனவே -இய- என்ற இடையொட்டைச் சேர்த்து 'அறுவையியத் தலையீடு ' எனலாம்.


முடிவுரை 

கலைச்சொற்கள் காரணப் பெயர்களாய் அமையும் போது கற்பிக்கவும், கற்கவும் எளிதாக இருக்கும். பேச்சு வழக்கும் கலைச் சொல்லாகும் தகுதி உடையது. காரணப்பெயர் காலத்தோடு ஒட்டியதாய் அமைவதே கலைச்சொல்லின் தரத்தைப் பாதுகாக்கும். தேவைப்பட்டால் கலைச் சொற்களை ஒலிபெயர்க்கலாம். ஒரு கலைச் சொல்லை ஒலிபெயர்க்கும் போது அதன் விரிந்த, பரந்துபட்ட, பலவகைச் சொற்களை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டால் ஒலிபெயர்க்காமல் செறிவான மொழிபெயர்ப்பைப் புத்தாக்கம் செய்வதே அறிவியல் தமிழ் வளர வாய்ப்பளிக்கும். தேவைக்கேற்ப  /-இய, -சார், -அடி, -இயல், -மிகு, -மய/ போன்ற இடையொட்டுக்களைப் பயன்படுத்தலாம். தேவைப்படும் இடங்களில் மொழிபெயர்த்த சொல்லை அடுத்து பிறைக்கோட்டிற்குள் ஒலிபெயர்ப்புச் சொல்லைச் சேர்த்தெழுதுவது ஆராய்ச்சி உலகிற்கு வசதியாக அமையும். இத்தகு மொழிபெயர்ப்புக் கொள்கைகளை அறிவியல் நூலாக்கத்திற்குத் துணைக்கொள்வதால்  தமிழில் அறிவியல் கல்வி சிறப்புறும்.
(முற்றும்)
சக 
Reply all
Reply to author
Forward
0 new messages