
*வாழப்பாடி அருகே 9ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள நீர்மூழ்கிகுட்டை என்ற ஊரில் 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துடன் கூடிய நடுகல்லை சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
நீர்மூழ்கிகுட்டை அரசினர் ஆரம்ப பள்ளியில் கலைச்செல்வன் என்ற ஆசிரியரிடம் நான்காம் வகுப்பு படிக்கும் அவிசேக் என்ற மாணவன் கொடுத்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,ஆசிரியர் கலைச்செல்வன்,ஓமலூர் சீனிவாசன்,டாக்டர் பொன்னம்பலம், சுகவன முருகன், ஜீவநாராயணன், ஆசிரியர் பெருமாள், பெரியார் மன்னன், ஆகியோர் அடங்கிய குழு நீர்மூழ்கிகுட்டை பகுதியில் ஆய்வினை மேற்கொண்டது.அப்போது மாரிமுத்து என்பவரின் விளைநிலத்தில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துடன் கூடிய ஓர் நடுகல்(வீரக்கல்) கண்டறியப்பட்டது.
இந்த நடுகல்லானது 31/4 அடி உயரமும் 31/4 அடி அகலத்துடன் உள்ளது.
இதன் மேற்புறம் 6 வரியில் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.இதில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 85 ஆகும்.எழுத்தமைதி வரலாற்று பின்புலம் கொண்டு இது 9ஆம் நூற்றாண்டு என முடிவு செய்யலாம்.
ஒரு அடி உயரமும் இரண்டரை அடி அகலமுள்ள இடத்தில் எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன.எழுத்துக்களின் கீழே நடுகல் வீரனின் உருவம் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. வீரனின் உயரம் இரண்டு அடி,அகலம் ஒன்றேமுக்கால் அடியாகவும் உள்ளது.
வீரனின் வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் காணப்படுகிறது.தலைப்பகுதியில் கொண்டையும்,காதணியாக பத்தரகுண்டலமும் காட்சியளிக்கிறது.இடுப்பில் குறுவாள் உள்ளது.
வீரனின் கீழே வலதுபக்க மேல்பகுதியில் ஈச கீழ் பகுதியில் கெண்டியும் உள்ளது.நடுகல்லானது தென் திசையை நோக்கி உள்ளது.
9ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் வலுவிழந்தபோது ஆங்காங்கே குறுநில மன்னர்கள் வலிமை பெற்று சிறு,சிறு பகுதிகளை ஆண்டு வந்தனர்.பெரிய பேரரசுகள் ஏதும் உருவாகாத காலகட்டத்தில் இந்த நடுகல் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. எனவே இதில் ஆட்சியாண்டு பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.
இந்த காலகட்டத்தில் ஆத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை
இராமாடிகள் என்பவர் ஆட்சி புரிந்து வந்துள்ளார்.அப்போது அவரின் மகன் பெருமான் என்பவர் பூலாம்பாடி என்ற ஊரின் மீது படையெடுத்து சென்றுள்ளார். இந்த பூலாம்பாடி என்பது தற்போது பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரின் அருகே உள்ள ஊராக இருக்கலாம். அந்த படையெடுப்பில் கலந்து கொண்ட பிள்ளைப்பாடி என்னும் ஊரை சேர்ந்த பாராவன்னார் என்பவரது மகன் பொன்னகுன்றி என்பவன் வீர மரணம் அடைந்தான் என்ற செய்தி இந்த வட்டெழுத்து கல்வெட்டில் உள்ளது. அந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
இராமாடிகள் என்ற குறுநில மன்னரின் வம்சம் ஆத்தூர் பகுதியை ஆட்சி செய்தது தமிழக வரலாற்றுக்கு ஒரு புதிய செய்தியாகும். இந்த பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தொல்லியல் சான்றுகள் கிடைக்கும்.இவ்வாறு சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்*
*ஆறகழூர் பொன்.வெங்கடேசன்*
