வரலாறு விரும்பிகள் சங்கம் -
இந்த குமரியில் கன்னி பகவதியார்க்கு ஒரு திருக்கோவில் அமைந்துள்ளது, நித்தம் குமரியாக இந்த தேவி தவமிருப்பதாக தொன்மங்கள் கூறுகின்றன. கூடலார் கூடுமொரு குமரி முனை ஓரத்தில் குடிகொண்ட இந்த குமரி தெய்வத்திற்கு பல மன்னர்கள் திருப்பணி செய்துள்ளார்கள், குறிப்பாக சோழர்கள், வேணாட்டார் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தார்.
மகோதையபுரத்தை தலைநகராக்கி ஆண்ட இரண்டாம் சேரவம்ச காலத்தே அதன் பகுதியாக வேணாடு விளங்கியது, பின்னர் வேணாடு தனி நாடானது, தென்பாண்டி நாட்டிற்கு அப்புறத்து திகழ்ந்த ஆய் நாடு பின்னாளில் வேணாட்டுடன் இணைந்தது, இவ்வேணாடு பின்னாளில் திருவிதாங்கூர் சமஸ்தானமாய் விளங்கியது.
வேணாட்டை திருவடி என்ற பட்டபெயருடன் கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 18 வரை 42 அரசர்கள் தன்னாட்சியோடு ஆண்டுள்ளனர். இவற்றுள் ஒருவர் பூதள வீர உதய மார்த்தாண்டன் என்பார், இவரது கல்வெட்டுகள் குமரி, கொல்லம், திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் காணக்கிடைக்கின்றன.
இவர் காலத்திலே வேணாடு சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதி வரை பரவியது.
கொல்லமாண்டு 708 இல் ஒரு மார்கழி மாதம் ஹஸ்த நட்சத்திரம் மற்றும் அட்டமி கூடிய நாளில் மஹாராஜா களக்காட்டில் தன்னுடைய பெயரில் அமைத்த கிராமமான வீரமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலத்தில் எழுதுந்தருளியிருந்த போது குமரியில் மகிழ்வோடு குடிக்கிண்டிருக்கும் குமரி பகவதியார்க்கு அமுதுபடிக்கும் மற்றும் நித்யபூசைக்கும் நிவந்தம் அளித்து இந்த கல்வெட்டை வெளியிட்டுள்ளார்.
காலையில் நடைபெறும் பூசை தன்னுடைய பெயரால் "உதயமார்தாண்டன் சந்தி" என்று விளங்கும்படி ஏற்பாடு செய்தார்.
இந்தக் கல்வெட்டானது குமரி பகவாதியார் கோவிலின் பைரவர் நடைக்கு முன் உள்ள தூண்களில் நான்கு புறம் பொறிக்கப்பட்டுள்ளது.
நமது பக்கத்தில் நாம் எழுதிவரும் நவராத்திரி தொடர்பதிவுகளில் இந்த குமரி பகவதி கல்வெட்டை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
வரி 1: அருளிச்செயல் குமரிப்ப
வரி 2: கவதி நாச்சியார் கொ
வரி 3: யில் தானத்தாற்கு எ
வரி 4: ழுநூற்று எட்டா மாண்
வரி 5: டு மார்கழிமாதம் இருப
வரி 6: த்து ஒன்றாந் தெயதி அமரபக்
வரி 7: கத்து அட்டமியும் வியளா
வரி 8: வாட்சையும் பெற்ற அத்தகத்தி
வரி 9: ன் நாள் செய்துங்கநாட்டு
வரி 10: ச் சங்கரநாராயண வென்
வரி 11: று மண்கொண்ட பூதலவீ
வரி 12: ர ஸ்ரீ வீர உதையமாத்தாண்
வரி 13: டவன்ம திருப்பாப்பூர் மூத்
வரி 14: த்த வராய நாம் முறத்தாநா
வரி 15: ட்டுக் குமரியில் நித்தல் மா
வரி 16: பூசை கொண்டு எழுந்த
வரி 17: ருளி இருந்தருளும் நாச்சியா
வரி 18; ர் குமரிப் பகவதி நாச்சியா
வரி 19: ற்கு வீரமாத்தாண்டன் சந்
வரி 20: தி உழா பூசை அமுதி செய்து
வரி 21: அருளும்படி நாள் ஓ
வரி 22: ன்றுக்கு அமுதுபடி
இலங்கை களுத்துறையில் ஐந்நூற்றுவர்காளிக்கு அளித்த நிவந்தம் பற்றி காண்போம்.இலங்கையில் மேற்கு மாகாணத்தில் கொழும்புக்கு சுமார் நாற்பது கிலோமீட்டர் தெற்கே #களுத்துறை எனும் நகரம் அமைந்துள்ளது, இற்றைக்கு தமிழர்கள் அவ்வளவாக அந்தப் பகுதியில் இல்லை என்று அறிகிறோம், ஆனால் அங்கு காளிக்கு நிவந்தம் அளித்த கல்வெட்டொன்று பதிவாகியிருப்பது இலங்கை தமிழ் சாசனங்கள் நூல் வாயிலாக அறிகிறோம்.களுத்துறை மாவட்ட நீதிபதி வீட்டினருகே ஒரு கல் துண்டில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது, அந்தவிடத்தில் ஒரு அரசமரம் இருந்துள்ளது, முன்னாளில் அங்கு #காளிக்கு ஒரு கோயில் இருந்திருக்கிறது பின்னாளில் அது மறைந்து போயிருக்க கூடும் ஆனால் அந்த கல்வெட்டு பதிவாகி இருக்கிறது.திசை ஆயிரத்து #ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழு பலநாடுகளிலும் சென்று வாணிகம் செய்யும் வணிகர்களை குறிக்கும், இவர்களின் கல்வெட்டுகள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் கீழ்த்திசை நாடுகளிலும் காணக் கிடைக்கின்றன. அத்தகைய வணிகக்குழு ஒன்று களுத்துறையில் எடுத்த காளி கோவிலுக்கு ராஜாவும் ஊர்தலைவரான முதலிகளும் கொடுத்த நிவந்ததை கூறுகிறது இந்தக் கல்வெட்டு. மன்னனது பெயரில்லாமல் பொறிக்கப்பட்டுள்ள அந்த கல்வெட்டு வாசகம் இப்படி செல்கிறது.1.அஞ்ஞூற்று2.மா காளிக்கு3.ராசாக்கள் கு4.ம்பக் கு5.டுத்த தொட்டா6.யம் வயல்7.ஆயம் இவை8.முதலிக்கு9.கொண்டு குடு10.த்த தானியம்11.ஆயம் இவை...வரிகள் 1 -7 : ஐந்நூற்றுவர் காளிக்கு வயல் மற்றும் தோட்டம் மூலம் வருகின்ற வருமானத்தை குவியலாக ராஜா மூலமும் வரிகள் 8 - 11 : தானியங்கள் மூலம் வரும் வருமானம் முதலிகள் மூலமும் அளிக்கப்படுகிறது.இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை வைத்து அறிஞர்கள் இந்த கல்வெட்டை பதினைந்தாம் நூற்றாண்டு என்று கணிக்கின்றனர்.

சக ஆண்டு 1486 (1564) சித்திரை இருபதாம் தேதியில் பார் வேந்தர் அனைவரும் புகழ்ந்து குற்றேவல் செய்யும் அழகன் சீவலவேளன் மகுடஞ் சூடிக் கொண்டான்
கல்வெட்டு :
சகன் காலமாயிரத்து நானூற்றெ
ண்பத்தாறிற் கலதி சூழ்ந்த செக
ங்காண வீரத்தாக்கி சித்திரை
யிலிருபதாந் தேதி வேந்தர்
புகழ்ந்தேவல் செயப் பூறுவ
திதியாறில் முதல் வாரம் புணர்
பூசத்திற் சுகந்தாதி புனையழகன்
சீவலவேளென் மகுடஞ் சூடினானே

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 CE - 1218 CE)
மெய்க்கீர்த்தி
தென்னகத்தின் வலிமையான பேரரசாகத் திகழ்ந்த சோழப்
பேரரசிடமிருந்து சுமார் பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர்கள் எழுச்சி பெற்று சுதந்திர ராச்சியம் ஸ்தாபிக்க ஆரம்பித்த காலம், இதுவே இரண்டாம் பாண்டிய பேரரசு என்று வரலாற்று அறிஞர்கள் விளிக்கும் அரசு, வடக்கே காகதீய ராச்சியம் வரை போய் தொட்டு நின்றது இரண்டாம் பாண்டியப் பேரரசு.
மூன்றாம் குலோத்துங்கச் சோழரின் காலகட்டத்தில் இதற்கான அடித்தளம் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் இடப்பட்டது, இந்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு முன்னர் மதுரையில் பட்டதிலிருந்தது அவனது சகோதரன் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன், இவனது கல்வெட்டுகள் மதுரை, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் போன்ற இடங்களில் கிடைக்கப்பெறுகின்றன.
இவனது மெய்க்கீர்த்திகள் பூதலவனிதை, பூதல மடந்தை, பூவின் கிழத்தி என்று தொடங்குகின்றன.
இவனது ஆட்சி காலத்தில் மூன்றாம் குலோத்துங்கன் மூன்றாவது முறையாக பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான், முன்னம் கரூரில் வீராபிடேகம் செய்துகொண்டு சோழகேரளன் என்ற பட்டத்தை கொண்டான், பின்னர் மதுரையை தாக்கி வென்று வீராபிடேகமும் செய்து சோழபாண்டியன் பட்டதைக் கொண்டான், குலசேகர பாண்டியன் நாட்டை இழந்து பின்னர் குலோத்துங்கனிடம் மீண்டும் பெற்றதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவன் காலத்தில் இல்லாவிடினும் இவனது தம்பி மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் தஞ்சை முற்றுகையிடப்பட்டு பகை தீர்க்கும் படலம் ஆரம்பித்தது, இந்த குலசேகர பாண்டியன் கல்வெட்டொன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் நெல்லையப்பர் சன்னதி முகப்பில் இடப்புறம் காணக்கிடைக்கிறது, அவனுடைய மெய்க்கீர்த்தியும் பெயரும் தாங்கி.