கேட்போராக இருந்த குழந்தைகளை வாசிப்போராக மாற்றும் முயற்சி – தேவகோட்டையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் வழங்கல்

3 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Jun 25, 2026, 5:27:26 AM (yesterday) Jun 25
to

கேட்போராக இருந்த குழந்தைகளை வாசிப்போராக மாற்றும் முயற்சி – தேவகோட்டையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் வழங்கல்

தேவகோட்டை, ஜூன் :

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் "வாசிப்பு இயக்கம்" திட்டத்தின் கீழ் விலையில்லா கதைப்புத்தகங்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை சிவரஞ்சனி வரவேற்புரை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பு இயக்கப் புத்தகங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கும் நோக்கில் வாசிப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ‘நுழை’, ‘நட’, ‘ஓடு’, ‘பற’ என்ற நான்கு வாசிப்பு நிலைகளுக்கேற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதைப்புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

‘ஒரு கதை – ஒரு புத்தகம் – 16 பக்கங்கள்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல்கள் மாணவர்களின் வயதிற்கும் வாசிப்புத் திறனுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லிக் கொடுத்தோம்; இனி அவர்கள் தாங்களாகவே கதைகளை வாசிக்கும் நிலையை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

கேட்போராக (Listeners) இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக (Readers) மாற்றும் அரிய முயற்சியாக வாசிப்பு இயக்கம் திகழ்கிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கைகளில் சிறிய கதைப்புத்தகங்களை கொண்டு சேர்த்து அவர்களிடம் சுயவாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் முன்னோடியான திட்டமாக இது விளங்குகிறது. குழந்தைகள் புத்தகங்களை தொடர்ந்து வாசித்து அறிவை வளர்த்துக் கொண்டு கல்வியிலும், வாசிப்புத் திறனிலும் சிறந்து விளங்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். வாசிப்பு இயக்கப் புத்தகங்களை பெற்றுக் கொண்ட மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது வாசிப்பு அனுபவத்தைத் தொடங்க ஆர்வம் தெரிவித்தனர்.

தமிழக அரசின் இந்த முயற்சி மாணவர்களிடையே வாசிப்பு கலாச்சாரத்தை உருவாக்கி, அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்பும் முக்கியமான கல்விப் புரட்சியாக கல்வியாளர்கள் பாராட்டுகின்றனர்.

பட விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் விலையில்லா வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களுக்கு தேவகோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் வழங்கினார். அருகில் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.

IMG_2010.JPG
IMG_2008.JPG
IMG_5817.JPG
IMG_5819.JPG
IMG_5822.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages