கோடி சூரிய பிரகாசம் உடைய ஆன்ம பிரகாசத்தை இந்த திரைகள் மறைத்து இருக்கின்றன
அப்போது ,இந்தத் திரைகள் எவ்வளவு ஆற்றல் மிகுந்தவையாக கோடி சூரிய பிரகாசத்தை மறைக்கின்றது?
இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள்.
இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்:
நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது?
நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது?
என்று விசாரிக்க வேண்டியது.
அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள்.
அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம்.
இவ்விசாரணை முகத்திலிருந்தால்,
நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற
முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்.
அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென
ஸ்தோத்திரித்தும்,
தெய்வத்தை நினைத்தும்,
நமது குறையை ஊன்றியும் -
இவ்வண்ணமாக,
இருக்கின்றபோதும்
படுக்கின்றபோதும்
இடைவிடாது இவ்விசாரத்தோடு
ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால்,
தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.