குப்பைமேனி மூலிகையின் மருத்துவ குணங்கள்
குப்பைமேனி மூலிகை ஒரு அறிமுகம்.......
தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.
குடும்பம் :- EUPHORBIACEAE.
மூலிகை என்றால் காடுகளில் மட்டும் கிடைக்கக் கூடியது என்று நாம் நினைப்போம், ஆனால் அப்படி அல்ல, மூலிகைகள் காடுகள் தவிர நமது வீட்டருகே, சாலை ஓரங்களில், தோட்டங்களில், வயல் வரப்புகளில் என்று ஏராளமாக வளர்கின்றன, நாம் களைகள் [வேண்டாத செடிகள்] என்று ஒதுக்கும் புல், செடி, கொடிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மருத்துவத் தன்மை இருக்கும், அவற்றில் சிலவற்றை கற்ப்பக மூலிகைகள் என கூறுவார்கள். அதில் ஒன்று தான் குப்பைமேனி மூலிகை. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்த குறுஞ்செடி இது சுமார் 50 செ.மீ. உயரம் வளர கூடியது.
இது இந்தியாவில் அநேக இடங்களில் காணப்படும் செடி, இதன் இலை பச்சை நிறத்தில் முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகு அளவில் பச்சையாக இருக்கும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும்.
பெயர் காரணம்..............
“குப்பை போல் ஆகிவிட்ட மேனியை சீர்படுத்தி பொன்மேனி ஆக்கும்“
தன்மை கொண்டதால் இந்தப்பெயர் பெற்றது என்று கூறலாம், இதன் வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.
மருத்துவ குணங்கள் :
தோல் நோய் நீக்கும் குப்பைமேனி........................
குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும்.
பெண்கள் சிலருக்கு மேல் உதட்டில் ரோமம் முளைத்து இருக்கும் அவர்கள் குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை மாவு போல் அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மீசை இருக்கும் பகுதியில் இரு வாரங்கள் பூசி வந்தால், முடி உதிர்ந்து முகம் பளிச்சிடும்.
வயிற்றுப் பிரச்சினைகளை குணபடுத்த .............
குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு மண்டலம் (48 நாட்கள்) உண்டு வந்தால் வாயுப்பிடிப்பு நீங்கும், குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும், சரும நோய்கள் அகலும், சுவாச நோய்கள் நீங்கி உடலும் ஆரோக்கியம் பெறும்.
வலி நிவாரணம் பெற...............
பூச்சி கடி விஷக்கடிக்கு..............
குப்பை மேனி இலையை மை போல் அரைத்து வண்டு, தேள், பூரான், பாம்பு, வெறிநாய்க்கடி மற்றும் எலிக்கடியின் கடிபட்ட இடத்தில் பத்து போட விஷம் முறியும்.
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்த்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி (என்ன கடித்தது என்று தெரியாத போது) முதலியவை குணமாகும். மேகப்புண்ணும் (பிறப்புறுப்புகளில், மலக்குடல், வாய் அல்லது விரல்களில் வலியற்ற புண்) குணமடையும் .
மலச் சிக்கல், மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
குப்பைமேனி சமூலத்தை (சமூலம் என்றால் இலை, தண்டு, பூ, காய், வேர் என அனைத்தும் சேர்ந்தது எனப் பொருள்) எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் எட்டு விதமான பவுத்திர நோய் தீரும்.
சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் கோழைச் சளி..........................
குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து (வாந்தி அல்லது பேதியாக) கோழையை அகற்றும், இருமலைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை குணப்படுத்தும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.
சில பொதுவான மருத்துவ குணங்கள்..........
குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் வாதம், நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும். சித்த பிரமை குணமடைய வாய்ப்பு உண்டு. .
பேதி மருந்து தயாரிக்க குப்பைமேனி பயன்படுகிறது.
எப்போதும் எந்த மூலிகைகளையும் உள்ளுக்கு சாப்பிட எடுத்துக் கொள்ளும் போது முதலில் சிறிது அளவு உபயோகித்துப் பார்த்து பின் தொடர்வது நல்லது. இது அனைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும்.
குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.