ஊரன் அடிகள் (22.05.1933 - 13.07.2022)

29 views
Skip to first unread message

Karthikeyan J

unread,
Jul 14, 2022, 3:23:50 AM7/14/22
to Vallalar Groups
சன்மார்க்கப் பேரொளி அருட்பெருஞ்சோதியில் ஒன்றினார்
ஊரன் அடிகள் (22.05.1933 - 13.07.2022)
ஊரன் அடிகள் 22.05.1933 ஆம் நாளன்று திருச்சிராப்பள்ளி சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் பிறந்தார். 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். தமது இருபத்திரண்டாம் வயதில் ‘சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். பின்பு துறவு மேற்கொண்டார். 23.05.1968 அன்று முதல் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 1970ஆம் ஆண்டு முதலாக வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராகத் தமது பணியைத் துவக்கி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்தொண்டாற்றியவர்.
அடிகளார், சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அறநிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர்.
நூல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் இவரது நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது. அந்நூல்களில் வடலூர் வரலாறு, இராமலிங்கரும் தமிழும், பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள், புள்ளிருக்கு வேளூரில் வள்ளலார், இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள், இராமலிங்க அடிகள் வரலாறு (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்), வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களின் வரலாறு, இராமலிங்க அடிகளின் வரலாறு, கொள்கைகள், பாடல்கள், இராமலிங்க அடிகள் – ஒரு கையேடு (இராமலிங்க அடிகள் சித்தி நூற்றாண்டு விழா மலர்), வள்ளலார் மறைந்தது எப்படி ? (சாகாக்கலை ஆராய்ச்சி), வள்ளலார் கண்ட முருகன், வள்ளலார் வாக்கில் ஓங்காரமும் பஞ்சாக்கரமும்,  வடலூர் ஓர் அறிமுகம் முதலான நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 
வள்ளலாரை அருளாளர்களுடன் ஒப்பிட்டு வள்ளுவரும் வள்ளலாரும், புத்தரும் வள்ளலாரும், திருமூலரும் வள்ளலாரும், சம்பந்தரும் வள்ளலாரும், அப்பரும் வள்ளலாரும், சுந்தரரும் வள்ளலாரும், தாயுமானவரும் வள்ளலாரும், வள்ளலாரும் காந்தி அடிகளும், வள்ளலாரும் பாரதியும் என்கிற தலைப்புகளில் நூல் எழுதியுள்ளார்.
இவர் பதிப்பித்த நூல்கள், இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள் – ச.மு. கந்தசாமி பிள்ளை, இராமலிங்க சுவாமிகள் சரிதம் (செய்யுள்) – பண்டிதை அசலாம்பிகை அம்மையார், திரு அருட்பா - ஆறு திருமுறைகளும் சேர்ந்தது, திரு அருட்பா (உரைநடைப்பகுதி), திரு அருட்பாத் திரட்டு முதலானவை ஆகும்.
திருஅருட்பா ஆறு திருமுறைகளையும் நன்கு ஆராய்ந்து கால முறைப்படிப் பகுத்துச் செம்மைப்படுத்தியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, திரு அருட்பா திரட்டு ஆகியவற்றைச் செம்பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
பதினெட்டுச் சைவ ஆதீனங்களின் வரலாற்றினைப் பெரும் முயற்சியெடுத்துத் தொகுத்துச் “சைவ ஆதீனங்கள்” என்ற பெருந்தொகுப்பை வெளியிட்டார். மேலும் “வீரசைவ ஆதீனங்கள்” என்ற பெருந்தொகுப்பையும் வெளியிட்டார். இவ்விரு தொகுப்பினையும் சென்னையில் வெளியிட எம்மைப் பணித்தார். சென்னையிலுள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் 22.05.2002 இல் அடிகளாரின் 70 ஆம் அகவை தொடக்க நாளன்று வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்து மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழும் பேறு எனக்குக் கிடைத்தது.
தமிழகத்தின் பல்கலைக்கழகங்களாகிய அண்ணாமலை, சென்னை, அழகப்பா முதலிய பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பல ஆற்றியுள்ளார். சைவ சித்தாந்தப் பெருமன்றத்தில் இவர் வள்ளலார் தொடர்பாக ஆற்றிய உரை, தொடர் நூல் வடிவம் பெற்றுள்ளது. 
இமயம் முதல் குமரி வரை பலமுறை யாத்திரை செய்துள்ள ஊரன் அடிகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், பிரான்ஸ், பிரித்தானியா, ஜெர்மனி, குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தவர். தமிழகத் துறவியர் பேரவையின் துணைத் தலைவராக விளங்கினார். கோயம்பத்தூர் கற்பகம் பல்கலைக்கழகம் அடிகளாருக்கு முனைவர் பட்டம் (டி.லிட்) வழங்கிச் சிறப்பித்துள்ளது.
தம்முடைய வாழ்நாள் முழுமையும் வெள்ளாடைத் துறவியாக வாழ்ந்தவர். அருட்பாவில் அணுஅணுவாய்த் தோய்ந்தவர். தற்கால வள்ளலார் எனப் பலராலும் போற்றப்பட்டவர். 13.01.2021 ஆம் நாளன்று தமிழக அரசு முதன்முதலில் “அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது” என்ற பெயரில் விருதை உருவாக்கி 2020 ஆம் ஆண்டிற்கான விருதாக ஊரன் அடிகளாருக்கு வழங்கிச் சிறப்பித்தது.  தமிழகத்தில் வாழ்ந்த பல தமிழ்ச்சான்றோரோடு மிகவும் நெருக்கமாகப் பழகியவர். அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் பேரன்பை மிகுதியும் பெற்றவர். அவருடன் நெருக்கமாக இருந்தவர். 
அடிகளாருடன் மலேசியா சென்று வந்த அனுபவமும் எனக்கு உண்டு. சைவம், சித்தாந்தம், சன்மார்க்கம் இவற்றின் கலைக்களஞ்சியமாக வாழ்ந்த சன்மார்க்க தேசிகர்  13.07.2022 ஆம் நாளன்று இரவு 1 மணி அளவில் சிதம்பரத்தில் மருத்துவமனையில் அருட்பெருஞ்சோதி ஆண்டவரோடு கலந்தார். 
கட்டுரையாளர்
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தமிழ்மொழித்துறையின் மேனாள் தலைவர்
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600 005.


*💦  💦💦💦💦💦💦💦💦ஆன்ம  உருக்க  அஞ்சலி!  தயவுடையீர்.வந்தனம்.                                                               13.7.2022.புதன்கிழமை. இரவு 10.30.மணியளவில்   சன்மார்க்க ஞான தேசிகர்  தவத்திரு.ஊரன் அடிகளார் அய்யா( அகவை 90)அவர்கள் உயிரடக்கம் பெற்றார் என்ற செய்தியினை மீளாத் துயருடன் தெரிவித்துக்கொள்கின்றோம்         சன்மார்க்க உலகின் ஒப்பற்ற சிந்தனைச் சிற்பியாய் கருத்தோவியமாய், நூல் ஆசிரியராய், அறங்காவலராய் சன்மார்க்க ஆராய்ச்சியாளராய், தமிழுலகின் முதுபெறும் சான்றோராய், சன்மார்க்க உலகின்  ஞான வித்தகராய்த் திகழ்ந்து  மண்ணுலகும் விண்ணுலகும் வாழ்த்திடும் மாதவ அருட்குருவாய் விளங்கிய  தவநிறை.ஊரன் அடிகளார் அய்யா அவர்களின் மலர்ப்பதங்களைத் தொழுது அவர்தம் புனித தேக நல்லடக்கம் இன்று (14.7.2002)  வியாழன் மாலை 4.00 அளவில் வடலூரில் நடைபெறும் என்பதனையும்  ,அவர்தம்    புனித ஆத்ம ஜோதி திருவருளாய் ஒளிவீசிட   அனைத்துலக சன்மார்க்க தயவாளர்களின் ஆன்ம உருக்க அஞ்சலி பிரார்த்தனை   வடலூர் அடிகளார்  இல்லத்தில்   நடைபெறும் என்பதனை  பரம்பொருள் திருவடி வணங்கி சமர்ப்பிக்கின்றோம்.                     🙏🏽அனைத்துல சன்மார்க்க  சங்க தயவாளர்கள்.* 
IMG-20220522-WA0024.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages