வாழ்க்கையில் வள்ளுவம்
நான் திருக்குறளை முற்றிலுமாக, ஏன் நூற்றில் ஒரு பங்கு அளவுக்குக் கூட, படித்ததில்லை. பள்ளி நாட்களில் பாடமாகச் சில வரும். பஸ்ஸில் பயணிக்கும் போது என் கண்களில் படும் சில. அன்பர்கள் மடல்களில் சிலவற்றைப் படிப்பேன். அவற்றுள் மிகச் சில என் மனத்துள் பதிந்திடும். அவற்றினை ஒரு இழையாக அளித்திட நினைக்கிறேன். அன்பர்களும் தங்கள் மனத்துள் திருக்குறள் தோற்றுவித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் இந்த இழை இனிதே தொடரும்.
வாழ்க்கையில் வள்ளுவம் –1- குழல் இனிது யாழ்………
குழலினிது யாழ்இனிது எம்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதார்
n திருவள்ளுவர்
நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பொரு நாள். வலது கையை நீட்டி வைத்துக் கொள்ளச் சொல்லி அதில் தலை வைத்ததுப் படுத்தாள் எனது முதல் பெண். இடது கையை நீட்டிடச் சொல்லி அதில் படுத்தாள் மூன்றாமவள். தாமதமாக அறைக்குள் வந்த இரண்டாமவள் சொன்னாள், “அப்பா உன் கப்பத்துலெ சாச்சுக்க நகமே இல்லியே….”
இதைச் சொன்னவள் என் மார்பின் மீது ஏறிப் படுத்தாள்.
அவள் சொல்வதாக நினைத்து, “அப்பா உன் பக்கத்துலெ தாச்சுக்க (படுத்துக்க) இடமே இல்லியே….”
இன்றும் என் காதுகளில் ஒலித்திடுது தேனாய் அவள் மழலைச் சொற்கள். இதை விடவா இனிது குழலும் யாழும்?
என்றுமே பொய்த்திடாது வள்ளுவன் வாக்கு!
06-02-2012 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம் -2- யாகாவாராயினும்……..
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
n திருவள்ளுவர்
ஆஸ்திரேலியாவில் ஒரு நண்பர் விட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தோம்.
தொலைக் காட்சியில் விளையாட்டுகள் நிகழ்ச்சி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. மேடு பள்ளங்கள் நிறைந்த அழகான ஒரு புல் வெளி. ஒருவர் நடந்து கொண்டிருந்தார் அதில். அவர் கையில் ஒரு மட்டை. அவர் பின்னே ஒரு சிறு கும்பல். சற்று தூரத்தில் ஒரு சிறுவன் முதுகில் மூட்டை ஒன்றுடன். அந்த மூட்டையில் பல வித மட்டைகள் துறுத்திக் கொண்டிருந்தன. புரிந்து விட்டது எனக்கு என்ன விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது என்று.
கோல்ஃப் ஆட்டம்
வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாதா நான்? “கோல்ஃப் ஆட்டம் பணக்கார சோம்பேறிகளின் பொழுது போக்கு” என்றேன்.
அவ்வளவுதான். பிடித்துக் கொண்டார் வந்திருந்த விருந்தினர். “உங்களுக்கு என்ன தெரியும் கோல்ஃப் ஆட்டம் பற்றி? ஆடிப் பார்த்திருக்கிறீர்களா?”
அப்போதாவது சாமர்த்தியமாகப் பின் வாங்கி இருக்க வேண்டும் நான். செய்ய வில்லையே? “எனக்கு கோல்ஃப் ஆடு களத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ட்ரேக்டர் கம்பெனியின் விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது. அதில் ஒருவர் மட்டையால் பந்தை அடித்திடுவார். மண் வாரித் தெரிக்கும் நாலா புறமும்.. அப்போது ஒலித்திடும், ‘நிலத்தை உழுதிட இதை விடச் சிறந்த வழியொன்று இருக்கிறது. ஒரு …… ட்ரேக்டர் வாங்கிடுங்கள்’ என்று வரும் அந்த விளம்பரத்தில்” என்றேன் நான்.
அவ்வளவுதான் பிடித்துக் கொண்டார் அவர் என்னை, “ஒரு விளையாட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாத போது, அதை விளையாடிப் பார்த்திடாத போது, அது பற்றிப் பேசக் கூடாது” என்றார் அவர் தன் குரலை சற்றே உயர்த்தி.
பின்னர் அறிந்து கொண்டேன் அவர் பெங்களூரில் இருந்து கோல்ஃப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்தவர் என்று!
அன்று நான் என் நாவை காத்திருந்தால் வருந்த வேண்டி இருந்திருக்காதே பல நாட்கள் அன்று நடந்ததை எண்ணும் போதெல்லாம். சரியாகத் தான் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.
06-02-2012 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம் –3- அடுத்து காட்டும் பளிங்கு…
அடுத்து காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
n திருவள்ளுவர்
ஆசிரியர் கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் மாணவர்களுக்கு, கரும்பலகையில் எழுதியபடி. ஒரு வரியில் சற்றே தடுமாரி எழுதியதை அழித்து மாற்றி எழுதினார். முன் வரிசையில் உட்கார்ந்திருந்த நான் என் பக்கத்தில் இருந்தவனிடம், “வாத்தியாருக்கே தடுமாறுதுடா” என்றேன் சன்னக் குரலில்.
“என்னடா சொன்னே நீ?” என்று கேட்டார் என்னைப் பார்த்து. பதிலளிக்க வில்லை நான். அவர் முகமே காட்டியது அவர் நான் சொன்னதைக் கேட்டு விட்டார் என்பதை. அடுத்த கணம் விழுந்தது அவர் கைப் பிரம்பில் இருந்து அடிகள் சரமாரியாக என் மீது.
என்றுமே பொய்த்திடாதோ வள்ளுவன் வாக்கு?
19-04-2012 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம் -4- கொல்லாமை
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை
n திருவள்ளுவர்
1947 ஆகஸ்டு மாதம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. சுமார் இரு நூறு ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்து நாட்டை விட்டு வெளியேறினர். வெடித்தது நாட்டில் இனக் கலவரம். ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கலானார் மக்கள் வட இந்தியாவின் பல பகுதிகளில்.
“சகோதரர்களுக்குள் சண்டை வேண்டாம்” எனக் கால் நடையாய் வீடு வீடாய்ச் சென்று அகிம்சை போதித்தார் அரைக் கச்சை மட்டுமே அணிந்த ஒருவர். அவரையும் சுட்டுக் கொன்றான் வெறியன் ஒருவன்.
இன்றந்த அகிம்சை போதகரை உலகமே போற்றிடுது மகாத்மா என்று. பார் புகழ் எய்தினார் வான் புகழ் வள்ளுவன் போலவர்.
என்றுமே பொய்த்திடாது வள்ளுவன் வாக்கு!
06-02-2012 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம் –5- பெண் ஏவல் செய்வார்
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.
விளக்கம்: ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண் பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
***
“என்னாங்க…... ஒங்க அம்மாவோட லொள்ளு தாங்கலீங்க. இப்பிடிப் பண்ணா குத்தம். அப்பிடிப் பண்ணாக் குத்தம்னு எதுனா ஒண்ணு நாள் முச்சூடும் சொல்லி கிட்டே இருக்காங்க. பேசாமெ அவுங்களெக் கொண்டு போயி எங்கெனா முதியோர் இல்லத்துலெ உட்டூட்டு வாங்க. அப்பொதான் எனக்கு நிம்மதி கெடெய்க்கும்.”
“செய்யுறேன்.”
ஒரு வாரத்திற்குப் பின்:
:என்னாங்க….”
‘என்ன இப்போ?”
“என்னாலெ தனியா ஊட்டு வேலெ அத்தினியும் செய்ய முடிலேங்க.”
“அதுக்கு என்னெ என்ன பண்ணச் சொல்லுறே இப்போ? அம்மாவெப் போயி முதியோர் இல்லத்துலேந்து கூட்டியாரச் சொல்லுறியா?”
“இல்லீங்க. நாளெ காலேகெ அஞ்சு மணிக்குக் கோயாம்பேடு பஸ் ஸ்டேண்டுக்குப் போயி எங்க அம்மாவெக் கூட்டியாறச் சொல்லுறேங்க. அவங்களுக்கு நான் இன்னிக்கி போனு போட்டேன். அவுங்களும் கெளெம்பி வரேன்னு சொன்னாங்க.”
“சரி செய்யுறேன்.”
என்றுமே பொய்த்திடாது வள்ளுவன் வாக்கு.
17-04-2012 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம் (7) நன்றி மறவாமை
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
அன்றொரு நாள்
பெய்தது அடை மழை
என்றுமே பிடிக்கு மெனக்கு
நனைந்திட மழையினில்
சென்ற ஜன்ம வாசனையோ
இந்த ஜன்ம ரசனையோ
அறிந்திடேன் நான்
வீட் டருகிலோர் நந்த வனம்
சென்ற மர்ந்தேன்
அங்கிருந்த காலி இருக்கை யொன்றில்
அடுத்த கணம்
வந்த தங்கு
சொட்டுச் சொட்ட நனைந்த
குட்டி நாயொன்று
குழந்தை யதைக் கையி லெடுத்தே
வழித் தெடுத்தேன் அதன்
உடல் நனைத்த நீரதனை
நின்றிட வில்லை யதன்
உடல் நடுக்கம்
சட்டையுள் வைத்தேன்
குட்டி நாயதை
என்னுடல் சூட்டினை
அதற் களித்திடவே
மழை நின்ற பின்
எடுத்து விட்டேன்
வெளியில் குட்டி நாயை நான்
அண்ணாந்து பார்த் தென்னை
ஆட்டிய தது தன்
குச்சியென இருந்த வாலை
அன்று முதல் இன்று வரை
எங்கு பார்த்தாலும் என்னை
அழகாய் ஆட்டிடுது தன் வாலை
அந்த நாய்
சொல்லிடுதோ அது எனக்கு
நன்றி மறப்பது நன்றன்று
என்றுமே பொய்த்திடாது
வள்ளுவன் வாக்கென்று?
(படங்கள் இணைய தளங்களில் இருந்து)
16-05-2012 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம் (8) நாவிதம்
இனிய உளவாக இன்னாத கூரல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
n திருவள்ளுவர்
இன்று நான் சென்றேன்
அன்பு முடி திருத்தகம்
திறந்திடக் கதவை நான்
உள்ளிருந்து வந்த தொரு குரல்
வாங்க சார் உக்காருங்க
எங்கெ காணும்
ஒங்களெ கொஞ்ச நாளா
ஊருக்குப் போயிருந்தீங்களோ
ஊருலெ எல்லாரும் நல்லா இருக்காங்களா
அடுத்து நுழைந்தான்
ஆறு வயதுச் சிறுவன்
அன்புடனே அவனுக்கும் அழைப்பு
வாங்க தம்பீ ஒக்காருங்க
கூடவே இயக்கினார்
தொலைக் காட்சிப் பெட்டியை
வைத்தார் அதில் கார்டூன் நெட்வொர்க்
இன்றல்ல நேற்றல்ல
கேட்டிடுறேன் இது போல் இதமான வார்த்தைகளை
எழுபத்தைந்து எண்பது ஆண்டுகளாய் நான்
என் மனத்துள் எழுந்தது ஒரு கேள்வி
என்றுமே நாவில் இதமான வார்த்தைகள்
எழுவதால் தான் வந்ததோ அவர்க்கு
நாவிதர் என்ற பெயர்
பெயர் இன்று மாறினாலும்
முடி திருத்துனர் என்றே
மாறிடவில்லை அவர்
நாவின்று எழும் இதமான சொற்கள்
யாரும் இருந்திட மாட்டார்
எதிரியாய் நாவிதம் கொண்டோர்க்கே
என்றுமே பொய்த்திடாது வள்ளுவன் வாக்கு!
22-09-2012 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம் (9) தயக்கம் - செய்வதா வேண்டாமா?
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
1975. எண்ணை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் தனது சில முக்கிய வாடிக்கையாளர்களின் சௌகரியத்திற்காக அவர்கள் நிலத்தில் தன் சொந்த சிலவில் நிறுவி இருந்த பெட்ரோல் டீசல் பம்ப்புகளை அவர்களுக்கே இனாமாக அளித்து விடுவது என்ற முடிவை எடுத்தது. அதன் விளைவாக தங்களது கம்பெனியின் விற்பனை அதிகாரிகளை அந்த பம்புகளில் உள்ள சாதனங்களின் பட்டியல் தயாரித்து அந்த வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்து அந்த வாடிக்கையாளர் அல்லது அவரது நிறுவன அதிகாரிகளின் கையொப்பம் பெற்றிடச் சொன்னது.
திருச்சியில் டி.வி.எஸ். நிறுவன மேலதிகாரி தடங்கல் ஏதும் சொல்லிடாது கையொப்பமிட்டார். வேரொரு ஊரில் இருந்த அதிகாரி கையொப்பம் இட மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், “நான் கையொப்பமிடக் கூடாத போது கையொப்பமிட்டு, அது மேலதிகாரிகளின் பார்வைக்கு வந்தால் எனக்கு திட்டு விழும். அதே சமயம் நான் கையொப்பமிட்டிருக்க வேண்டிய போது கையொப்பமிடா விட்டாலும் மேலதிகாரிகள் என்னைத் திட்டலாம்.
செய்யக் கூடாததை செய்து வாங்கிடும் திட்டு செய்ய வேண்டியதை செய்யாவிடின் கிடைக்கும் திட்டை விட அதிகமாக இருக்கும். அதனால் எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். மற்ற ஊர்களில் என்ன நடந்தது என்பதைக் கேட்டறிந்து கொண்டு முடிவெடுக்கிறேன்” என்றார்!
என்றும் பொய்த்திடாதோ வள்ளுவன் வாக்கு!
07-10-2012 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம் (10) மழை
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று”
மழை வந்திட
மண் குளிர்ந்தது
கண்ட என்
கண்ணுந் தான்
சீனி மிட்டாய் கண்ட
சின்னக் குழந்தை போல்
கண்டேன் வாடி யிருந்த செடிகளிலே
பச்சைப் பசேலெனப் புதிய இலைகள்
நிலம் நம்பி வாழ்ந்திடும்
உழவர் கண்களிலும் ஓர் புதிய ஒளி
மழை நீர் வெறும் நீரல்ல. தாவரங்கள் நன்றாய் வளர்ந்திடத் தேவையான நுண் சக்திகள் கொண்ட ஒன்று அது. அதை அமிர்தம் என்று சொல்வதில் தவறேதும் இல்லை.
என்றுமெ பொய்த்திடாது வள்ளுவன் கூற்று.
30-10-2012 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம் (11) மீண்டும் கண்ணாடி
அடுத்து காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் என்று
கண்ணாடி முன் நிற்கின்றான்
கௌடில்யன் என்ற சாணக்யன்
நாணிழுத்த வில்லொத்த புருவமும்
கீழ் நோக்கி வளைந்த வாயும்
காட்டிடுதே வைரமொத்த
அவன் திடச் சித்தம் தனை
கூரிய பார்வையும்
கழுத்ததன் தசைகளும்
காட்டிடுதே அவை யிலிருந் தவனை
நந்தன் வெளியேற்றிய நாளில்
எரிமலையாய் அவனுள் வெடித்த
நெஞ்சக் கனலை
அவிழ்ந்த சடை காட்டுது
அழித்திடுவேன் பூண்டோடு
அந்த நந்த வம்சத்தினை யென
அன்றவன் எடுத்த சபதம் தனை
காண்பவர் முகம்
காட்டிடும் கண்ணாடி
முகமோ காட்டிடு மவர்
உள் நாடி
அறிந்து தானிதை
அன்றே சொன்னானோ வள்ளுவன்
என்றுமே பொய்த்திடாதோ வள்ளுவன் வாக்கு?
11-10-2011 நடராஜன் கல்பட்டு
வாழ்க்கையில் வள்ளுவம்
12 – இன் சொல் பேசல்
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
சொடக்குப் போடும் நேரத்துலே
மடக்குக் கட்டிலெ விரிச்சே
தடக்குன்னு சாஞ்சாரு அதில்லே பெரியவரு
படக்கு படக்குன்னு
அடிச்சிக்கிட்டெ மாரிலே கை ஒண்ணெ வெச்சபடி
சொடக்குப் போடும் நேரத்திலே
நின்னிடிச்சு அவர் மூச்சு
குடுத்து வெச்சவரு அவரு
கூடினவங்க சொன்னாங்க
சொடக்குப் போடும் நேரத்திலே
மட மடன்னு வந்து எறங்கீச்சு பாட்டிலுங்க
குடிச்சுப் புட்டே பாட்டிலு சரக்கெ
குத்தாட்டம் போட்டாங்க
அடிச்சுக் கிட்டே தமுக்கு ஒண்ணெ
சொடக்குப் போடும் நேரத்துலே
படுக்க வெச்சே பாடையிலே
எடுத்துக் கிட்டே போனாங்க
சுடுகாட்டுக்கே உசிரு போன ஒடலெ
சொடக்குப் போடும் நேரத்துலே
முடிஞ்சிடும் வாழ்க்கை யிதுன்னே
மடப் பயலுங்க நாம புரிஞ்சிக்காம
போடுறோம் சண்டெ பிறரோட
சொடக்குப் போடும் நேரமானாலும்
பேசினா இன் சொல்லெ
ஆயுசு பூரா நெலெச்சு நிக்கு மது
தெரியாமலா சொன்னாரு வள்ளுவரு
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடுன்னு?
08-11-2015 நடராஜன் கல்பட்டு
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே