பாரதியார்?
இன்று செப்டம்பர் பதினொன்று. மகா கவி பாரதியார் இறந்த தினம். அவருக்கு அஞ்சலியாய் அளித்திடுறேன் இதை.
பாரதியார் என்றதுமே
பாரதி யாரெனெக் கேட்கு மின்னாளில்
பாரதி யாரென்றே காட்டிட விழைகின்றேன்
பாரதிர பாட்டெழுதிய
பாரதி பற்றிச் சொல்லியே
பாமரும் படித்ததுமே
பொருள் கண்டிடும் வழிதனிலே
பாட்டெழுதியே
வழி வகுத்தான் புதுக் கவிதை
என்றொன்று தோன்றிடவே
பச்சிளங் குழந்தைகளை
சோர்வு நீக்கி
ஊக்கமளித்திடக்
கூவி அழைத்திட்டான்
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா என்றே
நிற மத சாதி
பேதமில்லை அவனுக்கே
சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்
எனச் சொல்லியே
பசு மரத் தாணியாய் பதிய
வைத்திட்டான் குழந்தைகள் மனத்திலே
இப் பேதங்கள் கூடாதென்றே
வெள்ளை நிறத் தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
ஈன்றது பலநிறக் குட்டிகள்
எனக் கதை யொன்று சொல்லி
நிறம் பலவானாலு மவை
ஒரு தாய்க் குழந்தைக ளன்றோ எனக் கேட்டு
ஜாதி மத நிற பேதம் மனம் விட்டு நீங்கிட
நீதி யொன்று புகட்டினான்
உலகெலாம் ஓர் குலம் என்றவன்
மாந்தரை மட்டுமா சொன்னான்
ஓர் குலமென்று
காக்கை குருவி எங்கள் ஜாதி
எனச் சொல்லி
அவற்றையு மன்றொ சேர்த்திட்டான்
காக்கைச் சிறகின் நிறமதில்
கண்டானவன் நந்த லாலாவின்
கரிய நிறம
நிறமதை மட்டுமா கண்டான்
கரிய மாலினையும் அன்றோ கண்டான்
கண்டா னவன் கண்ணனைப்
பல கோணங்களில்
குழந்தையாய்த் தோழனாய்த்
தாயாய்த் தந்தையாய்
சேவகனாய் அரசனாய்
சீடனாய்க் குருவாய்
ஆள்பவனாய்க் குல தெய்வமாய்
காதலனாய்க் காதலியாய்
ஒவ்வொரு நிலைக்கும்
பாட்டுகள் பல படைத்தான்
கண்ணனைக் குழந்தையாய்
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா
எனெக் கொஞ்சிடும் போது
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ
என்று பாடி நம் கண்ணில் நீர்
வரச் செய்திட்ட மந்திர வாதி யவன்
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணனைக் காதலனாய் எண்ணி
சரசமாடும் வேளையில்
அழகுள்ள மலர் கொண்டு வந்தே என்னை
அழ அழச் செய்து பின் கண்ணை மூடிக்கொள்
தலையிலே சூட்டுவே னென்பான்
என்னைக் குருடாக்கி மலரினைத்
தோழிக்கு வைப்பான் என்றெழுதி
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணனை நம் கண் முன்னே
கொண்டே நிறுத்திடுவான்
காதலனாய் மட்டுந்தானா கண்டானவன்
காதலியுமாக வன்றோ கண்டானவன் கண்ணனை
காதலியின் கண்களைப் பார்த்ததும்
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ என்ற
கேள்வியு மன்றோ எழுப்பிட்டான்
கவிதைகள் மட்டுமா எழுதினான்
கதைகள் கட்டுரைகள் என்று மளித்திட்டான்
பகவத் கீதைக்குத் தமிழ் உரை எழுதினான்
பாஞ்சாலத்துப் பாஞ்சாலியைத்
தமிழில் சபதம் செய்திட வைத்தான்
பாஞ்சாலி சபதம் எழுதியே
பெண்களுக்குப் படிப்பறிவும் சுதந்திரமும்
தந்திடல் அவசியம் என்றெண்ணி
பெண்கள் தம் பெருமை பகர்ந்திட
பாட்டொன்று எழுதினான்
பூட்டைத் திறப்பது கையாலே – நல்ல
வீட்டைத் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே என்றே
பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய் என்றொரு
பாட்டினை எழுதியே
மன்னிப்பின் மாண்பினை
மக்களுக்கே எடுத்துரைத்தான்
குடு குடுப் பாண்டியாய் வந்தே
பாண்டி நாட்டுக் கவியவன்
நற்செய்திகள் பல சொல்லிட்டான்
மாந்தருள் தைரியம் தோன்றிட
அச்ச மில்லை அச்ச மில்லை
என்றொரு பாட்டினில்
தைரியம் இழக்காதிருக்க வேண்டிய
நிலைகள் சொல்லி
உச்சி மீது வானிடிந்து விழுந்த போதிலும்
அச்ச மில்லை அச்ச மில்லை
என்றே முடித்திட்டான்
மொழிப் பற்று நாட்டுப் பற்று
இவற்றுக்குப் பஞ்சமே யில்லை பாரதியிடம்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
என்றவன் சொன்னான்
பாரத தேச மென்று பெயர் சொல்லுவார் – மிடி
பயம் கொல்லுவார் என்றே
பெண்கள் விடுதலையும்
சாதிப் பெயரால் நடந்திடும்
கொடுமைகளில் இருந்து விடுதலையும்
மட்டுமே அல்ல அவன் நோக்கு
நாட்டு விடுதலை
நிச்சயம் வேண்டு மென்றே
நாளெல்லம் உழைத்தான் மக்களைத்
தன் எழுத்தால் ஊக்கு வித்தே
பத்திரிகையையும் விட்டிட வில்லை பாரதி
சுதேச கருத்துக்கள் பரப்பி வந்த
சுதேச மித்திரன் ஆசிரியாராய்
சில காலம் உழைத்திட்டான்
வந்தே தீரும் நிச்சியமாய் ஒரு நாள்
விடுதலை நமெக்கென்றே
அன்றே கொட்டினான் ஜெய பேரிகை
கொட்டு முரசேயென்று
மாறின வீர கோஷமாய்
அவனது படைப்புகள்
விடுதலைப் போராளிகளுக்கே
வெறுப்பு கொண்ட வெள்ளையர்
ஓட ஓட விறட்டிட
தஞ்ச மடைந்தான்
பிரெஞ்சு நிலப் புதுச் சேரியில்
வெள்ளையர் பொது மன்னிப்பு
அறிவித்திட நாடு திரும்பிய பாரதி
தங்கினான் திரு வல்லிக் கேணியில்
நல்லவை யெல்லாமே ஒருநாள்
முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்
என்பதோர் வழக்குச் சொல்
ஆதி சங்கரும் ஏசு நாதரும்
நல்லவை பல செய்தே
இறையடி சேர்ந்தா ரன்றோ தம்
இள வயதில்
இசை ஞானி மோசார்ட்
இறந்ததும் முப்பத்தி ஐந்திலே
பாரதிக்கு மட்டு முண்டோ விதி விலக்கு
நாற்பதை அடையுமுன்னே
அவரும் சேர்ந்தார் இறையடி
நாள் தோரு மவர் தன் கையால் பழமளித்த
யானை யொன்று தாக்கிய சில நாளில்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று பாடிய பாரதியின் தாகம் தீர்ந்ததா
என்றால் தீர்ந்த தென்பேன்
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது
நம் நாட்டுப் பெண்களுக்கும் தான்
கம்பன் வள்ளுவன் வரிசையில்
வந்ததென்றோ அவன் பெயரும்
பாரோர் போற்றிட மகா கவியென்றே
11=09=2016 நடராஜன் கல்பட்டு
--
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே