இன்று ஆகஸ்ட் பதிமூன்று. உடல் உறுப்பு தான நாள். இந்த “மஞ்சள் பட்டாசெ” ப் படியுங்கள்.
மஞ்சள் பட்டாசுக்கும் உடல் உறுப்பு தானத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? மேலெ படியுங்க புரியும்.
மஞ்சள் பட்டாசு
தீபாவளி வரும் பின்னே. பட்டாசு வரும் முன்னே.
முன் நாட்களில் சீனாவிலிருந்து வரும் பட்டாசுக் கட்டுகளில் சுமார் நூறு பட்டாசுகள் இருக்கும். அவற்றில் ஒன்று மஞ்சள் பட்டாசு. மஞ்சள் பட்டாசு வெடிக்காது. பின் ஏன் ஒவ்வொரு கட்டிலும் ஒரு மஞ்சள் பட்டாசு?
மஞ்சள் பட்டாசை உரித்துப் பார்த்தால் உள்ளே வெள்ளைக் களிமண் பொடி இருக்கும். மருந்துப் பொடி இருக்காது. வெடிக்காத மஞ்சள் பட்டாசுக்கும் ஒரு வேலை உண்டு. ஒவ்வொரு தொழிலாளியும் எவ்வளவு பட்டாசுக் கட்டுகள் தயார் செய்தார் என்பதைக் கணக்கிட அவருக்கு அளிக்கப் பட்ட மஞ்சள் பட்டாசுகளில் மிஞ்சியவற்றை எண்ணுவார்களாம் முதலாளிகள்.
இந்த உலகில் உபயோகமற்றது என்று எந்தப் பொருளும் இல்லை. “காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்று சொல்வதுண்டு. ஆனால் அந்தக் காதற்ற ஊசி கூட காலில் குத்திய முள்ளை எடுக்கவோ, காபி பில்டரில் கண்களின் அடைப்பினை நீக்கவோ உபயோகப்படும். (இந்த எண்ணத்தில் சேர்த்து வைத்ததுதான் எங்கள் ஆஸ்தி, மூன்று உள் பரண்களிலும், மற்றும் ஒரு சிறிய உள் பூராவும்.)
உபயோகத்தில் இல்லாத பொருட்களை உடனே தூக்கி எறிந்து விட வேண்டும் என்பது மேலை நாட்டவர் கொள்கை. நம் நாட்டிலும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் கடை பிடிப்பது இந்தக் கொள்கையைத்தான். தனக்கு வேண்டாத பிளாஸ்டிக் குப்பை, ஓடாத டீவீ, எறியாத ட்யூப் லைட் இவற்றைத் தூக்கி எறிந்து விடுகின்றனர், பக்கத்தில் இருக்கும் காலி மனையிலேயோ அல்லது தெருவிலேயோ. பிறரைப் பற்றி யாருக்கு என்ன கவலை? தன் வீட்டுக் குப்பை வெளியே போனால் போதுமே.
(புகைப் படம் க.ந. நடராஜன்)
(குப்பை கொட்டித் திரும்பும் மகாராஜியின் மண்டையும் படத்தில்)
சரி மஞ்சள் பட்டாசுக்கு மீண்டும் வருவோம். நம் உடலும் ஒரு மஞ்சள் பட்டசுதான். உயிர் போனபின் இறந்தவர் எவ்வொளவு நெருங்கிய உறவினராயினும் அவர் உடலை ஓரிரு நாட்களுள் புதைக்கவோ, எரிக்கவோ செய்கிறோம். இல்லை என்றால் உடல் அழுகி அதிலிருந்து துர் நாற்றமும் கோடிக் கணக்கான கிருமிகளும் வெளியே வர ஆரம்பிக்கும்.
மஞ்சள் பட்டாசான உயிர் போன நம் உடலுக்கும் ஒரு உபயோகம் இருக்கிறது. ஆவி பிரிந்த மூன்று மணி நேரத்திற்குள் உடலினை ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கும் மருத்துவ மனைக்கு சேரச் செய்தால் அந்த மஞ்சள் பட்டாசினைப் பிரித்து அதனுள் இருந்து சில உருப்புகளைத் தேவைப் பட்டவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உபயோகிப்பார்கள். இவற்றுள் முக்கியமானவை கண்கள், மூத்திரக் காய்கள், கல் ஈரல், நுரையீரல் ஏன் இதயமும் கூடத்தான்.
இப்படி மஞ்சள் பட்டாசினை உபயோகமுள்ள ஒன்றாக மாற்ற நினைக்கும் போது கவனிக வேண்டிய முக்கியமான இரு விஷயங்கள் உள்ளன. அவை:
1. உயிர் பிரிந்த மூன்று மணி நேரத்திற்குள் உடல் மருத்துவ மனையைச் சென்றடைய வேண்டும்.
2. மருத்துவ மனையில் இருந்து இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். இதைச் செய்யவில்லை என்றால் இறந்தவரது ஆஸ்தி பூதம் காத்த புதையல் ஆகிவிடும். இறந்த பின்னும் பற்றுதலா என்கிறீர்களா? ஒருவருக்கும் உபயோகமின்றி ஒன்று அழியக் கூடாதே என்ற நல்லெண்ணம்தான்.
மஞ்சள் பட்டாசினையும் உபயோகமுள்ள ஒன்றாக மாற்றுவோமா? செத்தும் கொடுத்த சீதக்காதி ஆவோமா?
நடராஜன் கல்பட்டு
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே