டாக்குடரெப் பாக்கலாமுன்னு ஜி,எஸ்.டி. ரோடுலெ போயிகிட்டு இருந்தேன். எனக்கு முன்னாடி ஒரு தடம் 52 பேருந்து போயிக்கிட்டு இருந்தீச்சு.
பேருந்து பின்னாடி ஒரு நாலடிக்கு மூணடி மஞ்ச கலரு போர்டு தொங்கிக் கிட்டு இருந்தீச்சு. அதுலெ கொட்டெ கொட்டெ எளுத்துங்களுலெ எளுதி இருந்தீச்சு “தாஷோ யாரு?..... என்ன சொன்னாரு?” ன்னு.
ஆமாம். இந்த தாஷோ யாரு? ஓஷோ கேள்விப் பட்டிருக்கேன். இந்த தாஷோ யாருனா புதுசாக் கெளெம்பி இருக்குற ஆன்மீக வியாதியா? அவரு என்ன சொல்லி இருப்பாரு? இந்தக் கேள்விங்க என் மண்டெயெக் கொடைய ஆரம்பிச்சிது.
ஒருக்கா முன்னெ “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” ந்னு எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக விளம்பரங்க வந்தீச்சே அது மாதிரி எதுனா இருக்குமோ? என்னவா இருக்கும் இது? ஆண்டவா ஒண்ணும் புரியலையே. இப்பிடி எண்ணிக் கிட்டே போயிக் கிட்டு இருந்தேனா?
அப்போ தடால்னு ஒரு சத்தம். என் தலெ போயி ஸ்டியரிங்க் வீலுலெ இடிக்க நெத்திலெயும் மூக்குலேயும் நல்ல அடி. லேசா ரத்தம் கசிய ஆரம்பிச்சீச்சு நெத்திலேந்து .
சாதாரணமா ஒரு காரெ ஓட்டுறவரு பிரேக்கு போடுறாருன்னா அந்தக் காரோடெ பின்னாடி சிவப்பு விளக்குங்க எரியும். எம் முன்னாடி போயிக் கிட்டு இருந்தது ஒரு கவர்மெண்டு பேருந்து இல்லியா? இந்த அறிவிப்பெல்லாம் நான் அதுலெ எதிர்பாக்கலாமா?
அடுத்த நிமிசம் எங்கேருந்தோ ஒரு போலீசுக் காரரு வந்தாரு. களுகு வம்சமாச்சே அவுங்க. மூக்குலே வேக்குமே அவுங்களுக்கு.
“லைசென்ஸெ எடுங்க. ஆர்சீ புக்கு எங்கே?”
ரெண்டெயும் வாங்கிக் கையிலெ வெச்சுக் கிட்டு கேட்டாரு, “ஒங்க பேரு என்ன?’ ந்னு.
“எம் பேரு நடராசனுங்க” ன்னேன்.
“நாளெ காலெலெ 9 மணிக்கு பரங்கிமலெ போலீசு ஸ்டேஷனுக்கு வந்து வாங்கீட்டுப் போங்க சார்” இதுங்களென்னாரு..
“யோவ் நாலு பேரு வாங்கையா இங்கெ. இந்த வண்டியெ ஒரு ஓரமாத் தள்ளுங்க” ந்னு போலீசுக் காரங்களுக்கே சொந்தமான அதிகாரக் குரலுலெ சொன்னாரு. காரெத் தள்ளி முடிச்சதும் காரெப் பூட்டி சாவியெக் கையிலெ எடுத்துக் கிட்டாரு. கூடவே வேடிக்கெ பாத்துக் கிட்டு இருந்த ஒருத்தரெக் கூப்பிட்டு, “யோவ் ஒரு ஆட்டோ புடிச்சு இந்த ஆளெ கத்திப்பாரா ஜங்ஷனு கிட்டெ இருக்குற ஆசுபத்திரிக்கு கூட்டீட்டு போயி காயத்துக்குக் கட்டு போடச் சொல்லுய்யா” ன்னாரு.
அந்த ஆளு ஆட்டோ ஓண்ணெ நிறுத்தி, என்னெ கைத் தாங்கலா புடிச்சு அதுலெ ஏத்தி ஆசுபத்திரிக்குக் கூட்டீட்டு போனாரு.
அங்கெ போனதும் வரவேற்பு அறெலெ ஒக்காந்து இருந்தவங்க கிட்டெ, “இவரு ரோடுலெ போயிக் கிட்டு இருந்தப்போ கல்லு ஒண்ணு தடுக்கி விளுந்து அடி பட்டுக் கிட்டாரு. இவருக்கு கொஞ்சம் மொதலுதவி பண்ணி அனுப்பீடுங்க” ந்னாரு.
“சார் ஆட்டோக்கு பணம் குடுக்கணும் சார். 200 ரூவா எடுங்க” ன்னாரு என்னெப் பாத்து.
“ஏம்பா ஒரு கிலோ மீடரு கூட இல்லெ. அதுக்கு இரணூறு ரூவாயா?” ந்னேன்.
“சார் அங்கேருந்து இங்கெ ஒரு கிலோமீடரு கூட இல்லெ தான். ஆனா நான் என் ஊடு போய்ச் சேரவாணாம்? இதுக்குதான் சொல்லுவாங்களோ வேலீலெ போற ஓணானெ எடுத்து வேட்டிக் குள்ளெ உட்டுக் கிட்டு…” ந்னு? குடு சார் சீக்கிரம். நான் போவணும்.”
வேறு வழியின்றிக் கக்கினேன் ரூவாய் இரு நூறு அந்த ஆளு கையிலெ.
காயெத்தெ ஸ்பிரிட்டுலெ தோச்ச பஞ்சாலெ தொடெச்சிக் கிட்டே. டாக்குடரு கேக்குறாரு, “எப்பிடீங்க பட்டீச்சு அடி?” ன்னு
அவரு கேட்டது என் காதுலெ உளுந்தீச்சுங்க. ஆனா பாருங்க அது மூளெ வரெ எட்டலீங்க. அங்கெ தான் அடெச்சுக் கிட்டு இருக்குதே தாஷோ யாரு? என்ன சொன்னாரு? ங்கெற கேள்விங்க.
ஒருக்காலு தாஷோ, “நீ என்ன காரியம் செஞ்சுக் கிட்டு இருந்தாலும் அதுலெ 110 சதவீதம் கவனம் வேணும்னு” சொல்லி இருப்பாரோ?
ஏனுங்க ஒங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன் தாஷோ யாரு, அவரு என்ன சொன்னாருன்னு.
நடராஜன் கல்பட்டு
02-09-2013
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே