இன்று செப்டம்பர் ஐந்து. நம் நாட்டில் “ஆசிரியர் தினம்” என்று கொண்டாடப்படும் நாள். மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவார்களின் பிறந்த நாள்.
ஆரிரியர் தினம் என்ற உடன் என் கண் முன்னே வரிசையாய் வந்து நிற்கிறார்கள் எனது ஆசிரியர்கள் பலரும். நீங்களும் பாருங்களேன் அவர்களை என்னுடன் சேர்ந்து.
1. கல்லறைப் பள்ளியும் கனிவான ஆசிரியையும்:
நான் வளர்ந்த பொன்மலையில் எங்கள் வீட்டில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் ஒரு கல்லறை. அதன் அருகே ஒரு துவக்க நிலைப் பள்ளி. அதனை கல்லறைப் பள்ளி என்றே எல்லோரும் அழைப்பார்கள்.
கல்லறைப் பள்ளியில் இரண்டே இரண்டு பெண் ஆசிரியர்கள் மட்டுமே, இருவருமே சாந்த குணம் உடையவர்கள். மாணவ மாணவிகளைத் தங்கள் குழந்தைகள் போல பாவித்து அன்போடு நடத்துவார்கள்.
ஆசிரியர் தினம் – ஒரு தொடர்
2. கனகரத்தினமும் கைப் பிரம்பும்:
கல்லறைப் பள்ளி ஒரு ஆரம்ப நிலைப் பள்ளி. அங்கு நான்காம் வகுப்பு வரையில் மட்டுமே இருந்தது. ஆகவே எனது தந்தை என்னை பொன்மலை ரயில்வே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்திட நினைத்தார்.
இரண்டாம் வகுப்பு ஆசிரியர் கனக ரத்தினம் அவர்கள். ஆறடிக்கும் மேலான உயரம் உடையவர். கரு கருவென மின்னிடும் கருப்பு நிறம். கருத்து தடித்த மீசை. கையிலே நீண்டதோர் பிரம்பு. அன்னாட்களில் ஆசிரியரும் கைப் பிரம்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
அவரைக் கண்டதுமே என் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவர் என் கையில் ஒரு பிரித்த புத்தகத்தைத் திணித்து, கைப் பிரம்பை உயர்தி, “படி” என்றார் உரத்த குரலில்.
அன்று வரை கனிவான பெண் குரலுக்குப் பழகி இருந்த எனக்குக் கண்கள் குளமுடைத்தன. கண்ணெதிரே இருந்த கிளி படமும், “கிளி ஒரு அழகான பறவை. பச்சை நிறமும், வளைந்த சிவப்பு மூக்கும் கொண்ட பறவை அது. கிளி பழம் தின்னும்” என்று இருந்த வரிகள் எங்கோ பறந்து மறைந்தன. விம்மி விம்மி அழுத படி நின்றிருந்தேன்.
“இரண்டாம் வகுப்புக்கு லாயக்கில்லை. ஒன்றாம் வகுப்பிலே போடுங்கள்” என்றார் என்னை பரிசோதனை செய்த ஆசிரியர்.
மீண்டும் சென்றேன் ஒன்றாம் வகுப்பு. முன் போல் பெண் ஆசிரியை. பலமான அஸ்தி வாரத்தோடுதான் நான் ஆரம்பித்தேன் என் படிப்பை!
ஒரு நாள் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன் சொன்னான், “ஏய் உனக்குத் தெரியுமா? நம்ம டீச்சரோட புருசன் செத்துப் போயிட்டானோ இல்லெ ஓடிப் போயிட்டானோ தெரியலே. அவுங்க இப்போ ரெண்டாம் கல்யாணம் பண்ணிக் கிட்டு இருக்காங்கடா” என்று. படிப்பது என்னவோ ஒன்றாம் வகுப்பில் தான். இருந்தாலும் சில மாணவர்களின் மனதிலே என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று வியந்தேன்.
என் வகுப்பிலே இரண்டு சகோதரர்கள். அவர்கள் பெயர் இன்றும் என் நினைவில் இருக்கிறது. ஆனால் சொல்ல மாட்டேன். அவர்களு மூத்தவன் என்னை விட ஐந்து வயது பெரியவனான என் ஒரு அண்ணனோடு ஒன்றாம் வகுப்பில் படித்தவன்! நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து இரண்டாம் வகுப்பு சென்றபோது அவனும் என்னோடு இரண்டாம் வகுப்புக்கு வந்தான். அதற்குக் காரணம் அன்னாட்களில் ஒரு மாணவனை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே வகுப்பில் நிறுத்தி வைக்கக் கூடாது என்று ஒரு விதி இருந்து எனக் கூறுபார்கள்.
3. மீண்டும் கனகரத்தினம்:
மறுபடியும் வந்து சேர்ந்தேன் கனகரத்தினம் பிள்ளையவர்கள் வகுப்பிற்கு. எனது பக்கத்து இருக்கையில் உப்பிலி என்ற பையன். அவனுக்கு அடுத்த இருக்கையில் லில்லி என்ற பெண்.
ஒரு நாள் திடீரெனெக் கத்தினான் உப்பிலி, “சார் டில்லி கிள்ளிட்டா சார்” என்று அழுதபடி. அன்று விழுந்து பிரம்படி அவனுக்கு. லில்லி அவருக்குப் பிடித்த மாணவி ஆயிற்றே!
ராவ்ஜீ:
மூன்றாம் வகுப்பு ஆசிரியர் ஒரு ராவ்ஜீ. மந்த்ராலயா ராகவேந்த்ர ஸ்வாமியின் வழி நடப்பவர்.
‘பெப்பர் அண்ட் ரைஸ் க்ரே’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போன்ற இள நரை நரைத்த குடுமித் தலை. அதன் மீது ஒரு கருப்புக் கலர் குல்லாய். தலையின் பின் புறம் ரப்பர் ஸ்டேம்ப் கொண்டை. வெள்ளைப் புள்ளிகள் கொண்ட கரு நீலக் கலர் கோட்டு. வெள்ளைச் சட்டைக்கு மேல் வேஷ்டி கட்டி, அதனை நழுவிடாத படி இறுக்கப் பிடித்திடும் தோல் பெல்ட்டு.
வகுப்பினுள் நுழையும் முன், ராவ்ஜீ கண்களை மூடிக் கொண்டு அண்ணாந்து பார்த்து கைகளைக் கூப்பிக் கொண்டு மூன்று முறை சுற்றுவார், மனதுள் ஏதோ ஜபித்த படி.
என்ன வேண்டிக் கொண்டிருப்பார் அவர்? இந்த நாள் ஆசிரியராக இருந்தால் இன்றைய தினம் நல்லபடியாக இருக்க வேண்டுமே ஆண்டவா எனக்கு என்று வேண்டிக் கொண்டிருப்பார். ஆனால் அவர் அன்றைய நாள் ஆசிரியராயிற்றே?
எனக்கு ஆத்திசூடி, கொன்றை வேந்தனும், கணிதத்தில் பெருக்கலும், ஆங்கில எழுத்துகளும் ஆரம்பித்து வைத்தவர் அவரே.
ஆசிரியர் தினம் – ஒரு தொடர்
4. மணி அய்யரும் அவர் சைக்கிளும்:
நான்காம் வகுப்பு ஆசிரியர் மணி அய்யர். பள்ளிக்கு தினமும் சைக்கிளில் தான் வருவார். உருவத்தில் XL அளவானாலும் சுளுவாக, வேகமாக வந்திடுவார் அவர் தன் சைக்கிளிலே. பள்ளியில் உள்ள சைக்கிள்கள் அனைத்திற்கும் ஒரு போட்டி வைத்தால் அதில் முதல் இடம் பெறுவது மணி அய்யர் சைக்கிளாகத்தான் இருக்கும். அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. என்ன தெரியுமா?
முன் நாட்களில் பள்ளிகளில் ஆண்டு துவங்கிடும் போது வகுப்புக்கு சட்டாம் பிள்ளை என ஒரு மாணவனைத் தேர்ந்தெடுப்பார் ஆசிரியர். (மானீடர் என்று ஆங்கிலத்தில் அழைப்பார் இப் பொறுப்பை.).
மணி அய்யர் எப்போதும் வகுப்பிலே உடல் வலு மிக்கவனையே சட்டாம் பிள்ளையாகத் தேர்ந்தெடுப்பார். காரணம் சட்டாம் பிள்ளையுடைய வேலைகளான கரும் பலகையைத் துடைத்து வைத்தல், வகுப்புக்குத் தேவையான சாக் பீசினை தலமை ஆசிரியர் அறையில் இருந்து வாங்கிக் கொண்டு வருதல் இவற்றோடு அவரது சைக்கிளை காலையும் மாலையும் துடைத்தும் வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை, நாம் எண்ணை தேய்த்துக் குளிப்பது போல, அவர் சைக்கிளின் சுழலும் பாகங்களுக்கும் எண்ணை விட வேண்டும். வலுவான உடல் கொண்டவன் அவசியம் தானே இப்பணிக்கு?
கணிதமும் ராஜகோபால் பிள்ளையும்:
ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜகோபால் பிள்ளை. மிக நன்றாக பேட்மிண்டன் ஆடுவார். மாவட்ட அளவிலே சேம்பியன். கணிதம் போதிப்பதிலும் சேம்பியன் அவர். சற்றே கடுகடுத்த முகம். அதிகம் பேச மாட்டார்.
ஒரு நாள் கணக்கு ஒன்றைத் தந்து எல்லோரையும் போடச் சொன்னார். எனது பக்கத்தில் இருந்த வெங்கடராமன் என்ற மாணவனும் நானும் அந்தக் கணக்கைப் போட்டு விட்டோம். ஆனால் வேறு யாரும் போடாததால் பிள்ளையவர்களே அக்கணக்கைக் கரும் பலகையில் போட ஆரம்பித்தார். அப்போது ஒரு வரியில் தடங்கல் வந்து ஒரு கணம் நின்றார். மறு கணம் அந்த வரியை அழித்து விட்டு வீண்டும் அங்கிருந்து தொடர்ந்தார்.
சும்மாயிருந்திருக்கக் கூடாதா நான்? “வாத்தியாருக்கே தடவுதுடா” என்றேன் வெங்கட்ராமனிடம். மெல்லத்தான் சொன்னேன். இருந்தாலும் முதல் வரிசையில் நான் இருந்ததால் அவர் காதில் விழுந்து விட்டது அது.
“என்னது தடவுதா? இப்போ நீ தடவு” என்றபடி சரமாரியாய்ப் பூஜை செய்தார் அவர் கைப் பிரம்பால் எனக்கு. அன்று கற்றேன் நான் அடக்கம் என்பது என்ன, ஏன் தேவை அது என்று.
ஆசிரியர்களும் தீபாவளியும்:
ஆறாவது, ஏழாவது வகுப்பு ஆசிரியர்களான நடராஜ அய்யர், கோபால அய்யர் இவர்களைப் பற்றி நான் அதிகமாய்ச் சொல்லிட எதுவும் இல்லை. அவர்கள் இருவரும் கண்டிப்பானவர்கள். வகுப்பில் சரியாகப் படிக்காதவர்கள், குறும்பு செய்பவ்வர்கள் இவர்கள் மீது தங்கள் பிரம்புகளை குறைவின்றிப் பிரயோகிப்பவர்கள். ஆனால் என்னிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. அதற்கு வகுப்பில் அதிகம் பேசாதவன், குறும்புகள் செய்திடாதவன் என்பதோடு கீழுள்ளதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வருடா வருடம் தீபாவளி வந்தால் திருச்சி டவுனில் இருந்து மொத்த விலையில் பட்டாசு, மத்தாப்பு வாங்கி வந்து அவர்களுக்கு சப்பளை செய்வான் என் அண்ணங்களில் ஒருவன். அதனை அவர்கள் வீட்டிற்குக் கொண்டு சேர்த்து பணம் வசூலித்து வருவது நான் தான்.
ஆசிரியர் தினம் – ஒரு தொடர்
5. இ. ஆர். உயர் நிலைப் பள்ளியும் நடராஜ அய்யரும்:
எட்டாம் வகுப்பிற்கு திருச்சி தெப்பக் குளம் அருகே இருந்த இ.ஆர். உயர் நிலைப் பள்ளிக்கு வந்தேன். அதன் தலமை ஆசிரியர் நடராஜ அய்யர். மிக கண்டிப்பானவர். பள்ளிக்கு யாரும் தாமதமாக வரக் கூடாது. அப்படி வருபவர்களை வரிசையாய் நிறுத்தி வைத்து, கைகளை நீட்டிக் கொள்ளச் சொல்லி தன் நீண்ட பிரம்பால் ஓங்கி அடிப்பார். உள்ளங்கை பழுத்து விடும். ஆனால்……. அவர் கணித பாடம் நடத்துவதில் புலி.
காலமும், வேகமும், தூரமும் (time and motion study) பற்றிய கணக்கு சொல்லித் தரும் போது தன் கணீர் குரலில் உரக்கச் சொல்வார், “ஒரு ரயில் ஒரு பாலத்தைக் கடக்க வேண்டுமானால் அது பாலத்தின் நீளத்தையும் தன் நீளத்தையும் கடக்க வேண்டும்” என்று. கணீரென ஒலித்துக் கொண்டிருக்கிறது அவர் வார்த்தைகள் இன்றும் என் காதுகளில்.
மீசு கிருஷ்ண அய்யரும் நெடு மால் திரு முருகனும்:
எட்டாம் வகுப்பு ஆசிரியர் மீசு கிருஷ்ண அய்யர். ஏதோ காரணத்தால் அவர் சில நாட்கள் வர வில்லை. அப்போது மாற்று ஆசிரியராக உயரமான ஒரு ஆசிரியர் வந்தார். வகுப்பில் ஒரு குறும்புக்காரப் பையன். அவர் வகுப்புள் நுழையும் போது மெல்லப் பாடுவான்,
“நெடுமால் திரு முருகா
நித்தம் நித்தம் நின் எழவா
இந்த வாத்தியார் சாகாரா
எந்தன் வயிற்றெரிச்சல் தீராதா” என்று.
எப்போதும் மெல்லப் பாடிடும் அவன் அன்று சற்று சத்தமாகப் பாடி இருக்க வேண்டும். அது அவர் காதில் விழுந்திட நேராகக் கையில் உயர்த்திய பிரம்போடு அவனை நெருங்கினார். அவன் ஓட ஆரம்பித்தான் வகுப்பின் உள்ளேயே. அவரும் துரத்தலானார். இரண்டு சுற்றுகளில் களைத்துப் போன அவர் தன் இருக்கைக்குத் திரும்பினார். அவர் சொன்னார் அப்போது, “நீ மட்டும் என் கையில் கிடைக்கட்டும். என் பிரம்பால் சொல்கிறேன் உனக்கு பதில். அப்போது என்ன செய்வாய் பார்க்கலாம் நீ?” என்றார்.
முந்தரிக் கொட்டை நான் சும்மா இருந்திடாது, “அப்போது அவன் ஆனந்தக் கண்ணீர் விடுவான் சார்” என்றேன். நேராக என் அருகே வந்து ஆசிரியர் பிரம்பால் எனக்கு இரண்டு அடி கொடுத்து, “நீ விடு இப்போது ஆனந்தக் கண்ணீர் விடு” என்றார். அன்று முதல் அடுத்த நான்காண்டுகளுக்கு என் பெயர் ஆனந்தக் கண்ணீர் என்றாயிறு!
ஒன்பதாம் வகுப்பு ஆசிரியரும் சரித்திர பாடமும்:
எவ்வளவு முயன்றும் எனது ஒன்பதாம் வகுப்பு ஆசிரியரின் பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது. என் மனக் கணினியிலே அந்த இடத்திலே ஒரு சொட்டை விழுந்துள்ளது போலும். ஆகா வந்து விட்டது நினைவுக்கு. சேஷையர் என்பது அவர் பெயர்.
ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் பூகோளம் மற்றும் சரித்திர பாடம் நடத்தும் விதமே அலாதி. மனதில் பதியும் படியாக இருக்கும் அவர் உபயோகித்திடும் உத்திகளால்.
பத்து பதினொன்று வகுப்புகளும் ராமநாத அய்யரும்:
இவர் பாடங்கள் நடத்தும்போது, பாட புத்தகங்களைத் தவிற மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டியதின் அவசியம் பற்றி அடிக்கடி கூறுவார். பாட புத்தகங்களைப் படிக்கும் போதே தூக்கம் வந்திடும் எனக்கு அதன் முக்கியத்துவம் அப்போது புரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்குப் பின் திருச்சிக்கு வேலை நிமித்தம் நான் சென்றபோது ஒரு நகை வியாபாரின் வீட்டிற்கு தேனீர் அருந்தச் சென்றிருந்தேன், அவர் வீட்டில் எங்கு திரும்பினாலும் புத்தக அலமாரிகள். எண்ணிலடங்காத புத்தகங்கள். அதைக் கண்டு வியந்த என்னிடம் அவர் சொன்னார், “ராமனாத அய்யரிடம் படித்த நான் புத்தகங்கள் படிக்க வில்லை என்றால் எப்படி?” என்று. அன்றைய மறு நாள் ஆசிரியர் ராமனாத அய்யரின் வீட்டைத் தேடிப் பிடித்து சென்று, அவர் கால்களில் விழுந்து வணங்கினேன்.
முப்பது ஆண்டுகள் தாண்டிய போதும் அவர் என்னை மறந்திட வில்லை. அவரது சைக்கிள் ஒரு நாள் கெட்டுப் போய் விட, எனது சைக்கிளை இரவல் வாங்கிக் கொண்டு சென்றதை நினைவு கூர்ந்தார் அவர். கண்கள் பனித்திட விடை பெற்றேன் அவரிடம். மேலும் முப்பத்தோரு ஆண்டுகள் தாண்டி விட்டன. இன்றவர் இறைவனடி நிழலில் இளைப்பாரிக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழாசிரியர் மா. பெரியசாமிப் பிள்ளை:
பெரியசாமிப் பிள்ளை உண்மையிலேயே பெரிய சாமி தான். பள்ளி மாணவர்களுக்கான தமிழ் இலக்கண புத்தகம் எழுதியவர் அவர். இன்றும் மட மடவென என் நினைவுக்கு வருகிறது அவர் இரட்டைக் கிளவி பற்றி சொல்லித் தந்தவை.
ஆனால் ஒன்று. அவர் கேட்கும் கேள்விகளுக்கு தவறான விடை அளித்தால், அவர் வலது கை முட்டியை இறுக்கிக் கொண்டு, பற்களை நற நற வென்று கடித்துக் கொண்டு நம் தலையில் ஒரு குட்டு வைத்தால் உழக்கு ரத்தம் வந்திடும்.
கல்லூரி ஆசிரியர்கள்:
ஆங்கில ஆசிரியர்கள் வாசுதேவன் கல்லூரி ‘லைப்ரரியில்’ புத்தகங்கள் எடுத்துப் படிப்பதன் அவசியம் பற்றி அழகாக விளக்கினார் ஒரு நாள். மறு நாள் கல்லூரி லைப்ரரியில் இருந்து எடுத்தேன் ‘திருத்தக்கதேவர்’ என்னும் புத்தகம், தேவர் என்றால் ஏதாவது சாமர்த்தியமான கள்வனைப் பற்றியதாக இருக்குமோ என்ற எண்ணத்தில்.
பிரித்தால் புத்தகத்தை அடித்து எனக்கு ‘ஷாக்கு’. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ஜீவக சிந்தாமணியைப் படைத்தவராம் அவர். வாங்கி வந்த வேகத்தில் திருப்பித் தந்தேன் புத்தகத்தை. படிப்பதென்றால் வேம்பாயிற்றே எனக்கு, அதுவும் கவிதைகள்! இப்போது வருத்தப் படுகிறேன் பிறரைப் பார்த்து.
ஆங்கிலக் கவிதைகள் பாடம் நடத்தியவர் தண்டபாணி என்பவர். அவர் பாடம் நடத்திய விதம் என்னை மிகவும் ஈர்த்த ஒன்று.
தாவரவியல் பாடம் நடத்தியவர் ஒரு வங்க தேசத்தவர். அவருக்கு எந்த ஒரு தாவரத்திற்குமான தமிழ்ப் பெயர் தெரியாது. கொடிகள் பற்றி வந்த பாடத்தில் வந்தது ஒரு பெயர், “ஆர்டபோடரிஸ் ஓடராடசிம்மஸ்” என்று. “தட் இஸ் கந்தலி சம்பா கந்தலி சம்பா” என்றார் அவர். அடுத்த வீட்டு சம்பாவையே தெரியாத எனக்கு கந்தலி சம்பாவை எப்படித் தெரியும்?
காலாண்டு முடிந்து அறையாண்டு துவங்கியது. வங்க தேசத்தவ்ர் சென்றார் வங்க தேசம். வந்தார் பாதியார் பாலம்,
“ஆர்டபோடரிஸ் ஓடராடசிம்மஸ் அது தாண்டா மனோ ரஞ்சிதம் மனோ ரஞ்சிதம்” என்பார் அவர். “டாலிகோஸ் லேப் லேப் அது தாண்டா அவரேக்கா அவரேக்கா” என்பார் அவர். உள்ளங்கை நெல்லிக் கனி ஆனது தாவரவியல் பாடம் எனக்கு.
தமிழ் ஆசிரியர் “கோனார் நோட்ஸ்” புகழ் ஐயம்பெருமாள் கோனார். அழகாக நடத்துவார் பாடம். ஆனால் மிகவும் கணிடிப்பானவர். வகுப்பில் குறும்பு செய்பவர்களை, ஒருமையில் “வாடா போடா” என்று தான் அழைப்பார். தன் மேடைக்கு அழைத்து அங்கு உட்காரச் செய்திடுவார்.
அடுத்த ஆண்டு எனக்கு வந்த தமிழ் ஆசிரியர் மெத்தப் படித்த புசி. புன்னைவன நாத முதலியார். பரம சாது அவர். அவருண்டு அவர் கை புத்தகம் உண்டு என்று இருப்பவர். அவர் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்ததும் குறும்பர்கள் வகுப்பை விட்டு ஒவ்வொருவராக வெளியேறுவார்கள். ஆனால் இதை அனுமதிப்பாரா “பிரின்சிபால்” எஹ்ரார்ட் பாதிரியார்! எலி வருகைக்காகக் காத்திருக்கும் பூனை போல மூலையில் ஒளிந்திருந்து வெளி வருபவர்களைத் தன் அறக்கு அழைத்துச் சென்று தக்க தண்டனை அளிப்பார்.
ஆசிரியர் தினமான இன்று நினைவு கூர்கிறேன் இவர்கள் அனவரையும் எனது மற்ற பாட ஆசிரியர்களையும் இன்று நான்.
நடராஜன் கல்பட்
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே