நரிக் கொம்பு

2,612 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 31, 2015, 7:21:24 AM5/31/15
to அப்பண்ணா, A K Rajagopalan, Mazalais, தமிழ் சிறகுகள், Thamizhthendral, தமிழ்ப் பயணி, அந்தியூரன் பழமைபேசி, நட்புடன்

நரிக் கொம்பு





அன்று ஞாயிறு ஆதலால் சாவுகாசமாக எழுந்திருந்து கையில் காப்பி டம்ப்ளர் தினசரி சகிதம் வாசலில் வந்து திண்ணையில் அமர்ந்தேன்.  அடுத்த கணம் கேட்டது ஒரு உரத்த குரல், “நரிக் கொம்பு வாங்கலையா நரிக் கொம்பு” என்று,

 

என்னது நரிக்குக் கொம்பா?  என் ஆச்சிரியத்தை அடக்க முடிய வில்லை.  குரல் எழுப்பியவனைக் கூப்பிட்டேன், “இங்கெ வாப்பா” என்று.  அவனும் வந்தான்.

 

“சாமீ நரிக் கொம்பு வேணுங்களா?” என்றபடி தோளில் மாட்டி வந்த தோல் பையைக் கீழே இறக்கி வைத்தான்.

 

“நரிக்கு ஏது கொம்பு?  மாட்டுக்கு இருக்குது.  மானுக்கு இருக்குது.  நரிக்குக் கிடையாதே?”

 

“யாரு சொன்னாங்க சாமீ நரிக்குக் கொம்பு கிடையாதூன்னு? இங்கெ பாருங்க” என்றபடி தன் பையுள் இருந்த கரிக் கட்டை ஒன்றை எடுத்துத் தரையில் நரி என்று எழுதினான்.  “நரிக்குக் கொம்பு இருக்குதா இல்லியா?  கொம்பு இல்லாட்டி அது மனுசனாயிடுது இல்லே?  அதான் “நர” ன்னு ஆயிடுது இல்லே?”

 

அவன் பேச்சு சாமர்த்தியம் எனக்குப் பிடித்திருந்தது,  “சரி,,, ஒன்னோட நரிக் கொம்பாலெ என்ன உபயோகம்?” என்று கேட்டேன்,

 

“கருக்காலெ புடிச்ச நரியெ சுருக்கவே நறுக்கி உப்புக் கண்டம் போட்டு, மான் தோலுக்குள்ளாரெ இருபத்தொரு நாளு சுருட்டி வெச்சு அப்பாலெ எடுத்து சாப்பிட்டா அத்தோட பலனே அலாதீங்க.  கண்ணாலம் தட்டிப் போன பொண்ணுக்கு கண்ணாலம் குதிருங்க.  படிப்பு வராத பையனுக்கு படிப்பு நல்லா வந்து பள்ளூடத்திலேயே மொதலா வருவாங்க.”

 

எனக்கு பெண் பிள்ளை இல்லை,  ஆனால் இருக்கிறானே ஒரு பையன் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருடம் படித்துக் கொண்டு.


“சரி,  எனக்கு ஒரு துண்டு நரிக் கொம்பு குடு.  ஆமாம் என்ன வெலெ அது?”

 

“நூறு ரூவா சாமீ.”

 

“என்னது  நூறு ரூவாயா?”

 

“சாமீ நீ கடெய்க்குப் போயி சாமான் ஏதும் வாங்குறது இல்லியா?  வெலெ வாசியெல்லாம் வெசம் போல ஏறி இருக்குது இல்லெ?  நரிக் கொம்பு மட்டும் அன்னிக்கி வித்த வெலெலேயே கெடெய்க்குமா சாமீ?”

 

“உள்ளே சென்று நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்து அவன் தந்த தோலில் சுருட்டிய ஒரு சிறு உருண்டையை வாங்கிக் கொண்டு வீட்டுள் திரும்பினேன். 

 

சற்று நேரத்திற்கெல்லாம் கதவு மணி அடித்திட, கதவைத் திறந்தால் அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார் அங்கு.

 

“என்னய்யா அந்த ஆளு கிட்டெ என்ன வியாபாரம் பண்ணீங்க?” என்றார் அண்ணாச்சி,

 

“நரிக் கொம்பு வாங்கினேங்க” என்றேன்.


“கேப்பேலெ நெய்யு வடியுதுன்னா கேக்குறவனுக்கு புத்தி வாணாம்” னாரு அண்ணாச்சி.

 

அப்பொ நான் ஒரு முட்டாளு தானுங்களா?  என்னையறியாது என் வாய் முணு முணுத்தது சந்திர பாபுவின் பாட்டு ஒன்றை.


(படம் கூகிளார் உபயம்)

 

31-05-2015                       நடராஜன் கல்பட்டு 


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Reply all
Reply to author
Forward
0 new messages