குறும்பனின் குறும் பாக்கள்
இன்னா நாற்பது இனியவை நாற்பது என்றே பாக்கள் எழுதினர் புலவர்கள் கபிலரும் பூதஞ்சேந்தனாரும். குறும்பன் நான் வரிந்திட்டேன் குறும்பா நாற்பது இங்கே:
01 அற நெறி அறியாதோன்
கற்றிடினும் பிற நேறி
அடைவனோ பரமனடி
02 ஆகவில்லை புத்தனாய்
இன்னு மிந்த பித்தன்
இதவன் சித்தம்
02 குறைந்த சம்பளந்தான்
நிறைந்து பணப் பெட்டி
மனைவி சிக்கனம்
03 பூவென மலர்ந்த தவள் முகம்
கண்டதும் கணவன் கையில்
நகைப் பெட்டி
04 கொட்டிடும் மழை - வானிலை அறிக்கை
உலர்த்துங்கள் உடனே உங்கள்
மொட்டை மாடியில் வத்தல்
06 பால் தந்து வளர்த்தே சிறு வயதில்
கொத்தடிமை ஆக்கி விட்டா ரவ ரென்னை
வாலாட்டி செல்கிறேன் அவர் பின்னே
07 தாயிடமிருந்து பிரித்திடுறார்
வாசமே எனக் கெதிரி
புலம்பியது மல்லிகைப் பூ
08 முள் வேலி இருந்தும் இல்லை பாதுகாப்பு
கிள்ளியே செல்கிறான் கிராதகன் அவன் என்னை
நொந்து சொல்கிறேன் ரோஜாப்பூ நான்ஸ்
09 சீலை விலகிடக் கண்டேன்
அவள் முழு உருவம்
நாடக மேடை திரைச் சீலையது
10 நேற்று வரை நில்லாது சுற்றியவள்
நின்று விட்டாள் இன்று திடீரென
வந்திட மின் வெட்டு
11 பூரண கும்ப வரவேற் பளித்திட
இல்லையே குடத்தில் நீர்
தமிழனின் புலம்பல்
12 நின்றிடாது ஓடுகிறேன் இருந்தும்
இடம் விட்டு நகரவில்லை
என்றது கடியாரம்
13 கண் முன்னே நடக்கிறது கொலை
சலனமேது மில்லை என் மனத்துள்
பார்ப்பது தொலைக் காட்சி
14 யார் சொல்ல யார் கேட்க
நீயா நானா சாவே முடிவா
இரைச்சலிடும் ஒரு காது
15 பற்றுகள் துறந்திடச் சென்றேன் கோவிலுள்
இருக்குமா அங்கு வாசலில்
விட்டு வந்த என் செருப்பு?
16 செய்து காட்டினார் சித்தர் சில வித்தை
பித்தாய் மாறிய தென்
சிறு புத்தி
17 மணந்தான் குறைத்திட பாரம்
வந்தவ ளானாள் அவனுக்கு
பெரும் பாரம்
18 தேடிய பொருள் கிட்டாது வாடிட மனம்
ஓடியது வேகமாய்
காலம்
19 வாசம் காண எட்டிப் பறித்தேன்
வந்த தென் கையில்
வாடிய மலர்
20 கோடிகள் இருக்க சிலர் கையில் – கிழக்
கோடியும் இல்லதோர்
கோடியில் இங்குளர்
21 ஆதியில் இன்றிப் பாதியில் வந்தே நல்
பாதையில் எனை நடத்தினா ளெந்தன்
நல்ல பாதி யவள்
22 அரும் பரும்பாய்
மலர்ந்து முல்லை
சிரித்திட சிறு பிள்ளை
23 வறண்டிட அண்டை மானிலத்தார் மனம்
இரங்கியதோ இறைவனின் மனம்
இருண்டு வானம் பெய்ததே மழை
24 வாடிய மலர் மலர்ந்தது
கண்டதும் கணவன் கை
புதுச் சேலை
25 வானுயறப் பெருமையொடு பறந்த பட்டம்
மறைந்தது எங்கோ அறுந்திட நூல்
வாழ்வே மாயம்
26 சுதந்திரமாய் பறவையெனத் திரிந்தவன்
சிறகொடிந்ததோ இன்று
நடந்திடத் திருமணம்
27 கை தவறியது கண்ணாடி ஜாடி
பொறுக்கிடச் சிதறிய துண்டுகள்
பொங்கியது குருதிப் புனலங்கு
28 திருட்டு மாங்காய் தின்றால் சுகம்
திருட்டு மணம் வென்றால் சுகம்
திருடா திருந்தால் என்றுமே சுகம்
29 ஆற்று மணலைத் தோண்டிட வந்திடுது ஊற்று
ஊன்றிட ஓர் விதை தோன்றிடுது சிறு கன்று
உண்டு ஒவ்வோர் செயலுக்கும் ஓர் விளைவு
30 சொறிகிறேன் சொறிகிறேன்
இரத்தம் வரச் சொறிகிறேன்
கடித்ததோ சிற்றெறும்பு
31 சீக்கிரம் செல்ல நினைத்தவன்
ஓடிச் சென்றான் குறுக்கு வழி
சிக்கிய தவன் காலணி சேற்றிலே
32 அரும்பாடு பட்டுத் திரிந்தான் கானகத்துள் பிடித்திட
விரும்பியே விலங்குகள் படம் – கண்ணில் பட்டதோ
குறும்பா டொன்றே
33 சின்ன வகுப்பில் தந்தாள் டீச்சரம்மா
தின்றிடப் பழங்கள் பல - சென்றிட மேல் வகுப்பு
மென்றிடக் கிடைத்ததோ நிமிட்டாம் பழமும் பிரப்பம் பழமும்
34 எலிக்கு வைத்த பொறியில் சிக்காது பல்லி
தவிட்டுள் மூடி வைத்தாலும்
பழுக்காது பூசனிக் காய்
35 “அன்பே வா” எனக் கட்டி அணைத்தே னவளை
கட்டிய கைகளை கடித்திட அவள்
அங்கே ஓடியது “குருதிப் புனல்”
36 வீசியது பேய்க் காற்று ஓர் கணம்
சாய்ந்து நொடியில் சாலையில் பெரு மரம்
நின்றது போக்கு வரத்து முழு நாள்
37 கொள்ளை கொள்ளை பகலில் கொள்ளை இரவில் கொள்ளை
லாரியில் கொள்ளை ஓடும் ரயிலில் கொள்ளை
உண்டோ இதற் கென்றேனு மோர் கொள்ளை?
38 வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை என்கிறார்
கருப்புக் குண்டோ திருட்டுச் சிந்தை
மனித மனதுக்கேன் இந்த நிற பேதம்?
39 அச்சேற வில்லை ஆசையாய் எழுதிய கவிதை
கிழித் தெறிந்திட அதையென் குழந்தை
நினைத்ததோ அதுவும் தரமில்லை யது வென
40 தட்டிடக் கணினியில் தூசி
பறந்தது குழுமத்துக்கு
அரை குறை மடல்
27-08-2016 நடராஜன் கல்பட்
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே