காதல் காப்பீடு
“ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்… “
“ஹல்லோ. ரதி மன்மதா காதல் காப்பீட்டுக் கழகம் ஹியர். உங்களுக்கு சேவை செய்யக் காத்திருக்கிறோம். என்ன வேணும் சொல்லுங்க.”
“அய்யா நீங்க காதல் காப்பீடு செய்யுறீங்களாமே? ஒங்க திட்டம் பத்தி கொஞ்சம் விவரமாச் சொல்லுங்களேன்.”
“சொல்றது என்ன. ஒங்க பேரும், விலாசமும் கொடுங்க. எங்க பிஸினஸ் எஃஸ்பேன்ஷன் மேனேஜர் மிஸ் ரம்பாவெ ஒங்க விட்டுக்கே அனுப்பாறோம். அவுங்க எங்க திட்டங்களெப் பத்தி விளக்கமா ஒங்களுக்கு சொல்லுவாங்க.”
“எளுதிக்கோங்க. அஞ்சனி புத்ரன், தொண்ணூத்தொம்பது, ஆஞ்சனேயர் கோயீல் தெரு, அம்பத்தூர், சென்னை-53.”
“கை தொலை பேசி எண்ணு சொல்லுங்க.”
“இனிமே தான் நல்லதா கை பேசி ஒண்ணு வாங்கணும்னு இருக்கேன். ஒங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன் எந்த கை பேசி பேட்டரி ரொம்ப நாளு வரும்னு.”
“ஓ…. வாங்கலாமே நல்லதா பாத்து. எங்க சிஸ்டர் கம்பெனி பாக்கியா போன்ஸ் சேல்ஸ் உமனெ அனுப்சி வெய்க்குறேன். அவங்க சொல்லுவாங்க எந்த போனு பேட்டரி ரொம்ப நாளு ஒழெய்க்கும்னு.”
“அவுங்க ஸ்ட்ராங்கா இருப்பாங்களா? ரொம்ப நாளு ஒழெப்பாங்களா? ரொம்ப நன்றிங்க.”
“நன்றி… நன்றி.” கூடவே மொண மொணக்கிறார் ‘ரதி மன்மதா, “சேல்ஸ் உமன்னு சொன்னதுமே உடுறாரு ஜொள்ளு. பேரு அனுமாரு. செல் போனே இனிமேதான் வாங்கப் போறாரு. இவரு என்னிக்கு செல் போனு வாங்குறது. என்னிக்கு காதல் பண்ணுறது? என்னிக்கு காப்பீடு பாலிசீ எடுக்குறது? கருமம்… கருமம்.”
“என்ன சொன்னீங்க?”
“நன்றீன்னு சொன்னேங்க.”
-0-
“ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்க்.”
“ஹல்லோ ரதி மன்மதா ஹியர். என்ன வேணும் சொல்லுங்க?”
“எம் பொண்ணெ சென்னைலெ ஒரு இஞ்சினியரிங் காலேஜிலெ சேக்குறதா இருக்கேங்க. அவொ நல்லா படிச்சு நல்ல வேலெய்க்கு வரணுங்க. படிக்குற நாளுலெ காதல் கீதல்னு அவொ கவனெத்தெ எந்த கயவாணிப் பயலும் திருப்பீடக் கூடாதுங்க. அதுக்கு எதுனா பாலிசீ நீங்க……”
“இருக்குங்க. எங்க கிட்டெ ‘நித்ய கன்னி” ந்னு ஒரு பாலிசீ இருக்குதுங்க. அந்த காப்பீடு எடுத்தீங்கன்னா ஒரு வருசம் வரக் கூடிய அசிங்க மேக்கப் கிட்டு ஒண்ணும் செய் முறை விளக்கமும் அனுப்புவோங்க. ஒங்க பொண்ணு அந்த மேக்கப்பு போட்டுக் கிட்டா ஒரு பய கிட்டெ வரமாட்டாங்க. ஒங்க விலாசம் கொடுங்க. எங்க ரெப்ரெசென்டேடிவ்வெ அனுப்பாறோம்.”
-0-
“ட்ரிங்…ட்ரிங்… ட்ரிங்.”
“ஹல்லோ… ரதி மன்மதா ஹியர். என்ன வேணும் சொல்லுங்க.”
“எம் பேரு சோணாசலங்க. எம் புள்ளெ பாக்க ரொம்ப அளகா இருப்பாங்க. அதுனாலெ காலேஜுலெ எப்பொவும் அஞ்சாறு பொண்ணுங்க பலாச் சுளெலெ ஈ மொய்க்கராப்புளெ அவனெச் சுத்திக் கிட்டு ஜொள்ளு உடுதுங்க. எங்கெ படிப்புலேந்து அவன் கவனம் சிதறிடுமோன்னு கவலையா இருக்குதுங்க. அதுக்கு எதுனா…”
“இருக்குதுங்க அதுக்கும் ஒரு பாலிசி எங்க கிட்டெ. ‘ரிஸ்ய ஸ்ருங்கா’ பாலிசீன்னு பேரு அதுக்கு. அந்த பாலிசீ எடுத்துக் கிட்டீங்கன்னா ஒங்க புள்ளெ படிச்சு முடிக்கிற மட்டும் ஒரு பொண்ணெப் பாத்ததும் அவன் மயங்க மாட்டாங்க. ஒங்க விலாசம் குடுங்க. எங்க சேல்ஸ் எஃஸிக்யூடிவெ அனுப்பறோம்.”
-0-
“ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்.”
“ஹல்லோ ரதி மன்மதா ஹியர். என்ன வேணும் ஒங்களுக்குன்னு சொல்லுங்க. சேவை செய்யக் கத்திருக்கோம் நாங்க.”
“அய்யா எம் பேரு ராஜாங்க. நல்ல வேலெலெ இருக்கேன். பாக்கவும் நல்லாவே இருப்பேன். இன்னும் கல்யாணம் ஆகலீங்க. எங்க அப்பாருக்கு காதல்னாலே புடிக்காதுங்க. காதல் கீதல்னு வந்தியானா காலெ ஒடிச்சுக் கையிலெ கொடுத்துடுவேம்பாருங்க. அம்மாக்கு நான் காதல் கல்யாணம் தான் பண்ணிக்கணும்னு ஆசெங்க. அவுங்க பண்ண முடியாமெ போனதெ புள்ளையாவது பண்ணணும்னு ஆசெங்க.”
“ஒங்க ஆசெ என்ன?”
“ரெண்டுமே பண்ணிப் பாக்கணுனுதான் என் ஆசெ.”
“ஜாமாய்ங்க.”
“ஆனா….”
“ஆனா என்ன?”
“சொல்றேன். ரெண்டு விதமும் பண்ணிக் கிட்டா அவுங்க ரெண்டு பேரு நடுவுலெ மாட்டிக் இட்டு என் கதெ கந்தலாயிடுமோன்னு பயமா இருக்குதுங்க.”
“கவலெப் படாதீங்க அதுக்கும் ஒரு பாலிசி வெச்சிருக்கோம் நாங்க. ‘இருதலைக் கொள்ளி பாலிசீ’ ன்னு பேரு அதுக்கு. அந்த பாலிசீ எடுத்திக் கிட்டீங்கன்னா ஒங்க ஒடலு சைசுக்கு தீ அணைக்கும் படைக் காரங்க போட்டுக்கறாப்புளெ அடி தாங்கும் கவசம் ஒண்ணும், அதையும் மீறி ஒங்க கையி காலு ஒடெஞ்சா ஜெயப்பூரு செயற்கை கையோ காலோவும் செஞ்சு தருவோம். ஒங்க பேரும் விலாசமும் குடுங்க. எங்க சேல்ஸ் உமன் மிஸ் மேனகாவெ அனுப்பி வெய்க்கறோம்.”
“மேனகாவா?”
“இருங்க இருங்க. அதுக்குள்ள ஜொள்ளு விடுறீங்களே.”
நடராஜன் கல்பட்டு
19-02-2014
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே