எப்படி ஆனார் நண்பராய் இன்னம்பூரான்
கல்வெட்டும் கல்பட்டும்
டெலிபோன் மணி அடிக்க ஓடிச் சென்று அதை எடுக்கிறேன் ஆவலுடன் எந்த மகளிடம் இருந்து வந்திருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றிட.
“ஹல்லோ…. யாரு பேசறது?”
“நடராஜன் சார் வீடுங்களா?”
“ஆமாம்.”
“அவரு இருக்கருங்களா?”
“நான் நடராஜந்தான் பேசறேன். என்ன வேணும் ஒங்களுக்கு?”
“நான் ஒங்களெப் பாக்கணும்.”
“அப்பிடியா? என்னெப் பாக்கணுமா? என்னெ எதுக்குப் பாக்கணும்?”
“ஒங்க விலாசம் தந்தீங்கன்னா அதெ நேரிலெ வந்து சொல்றேங்க. கொஞ்சம் விலாசம் சொல்றீகளா?”
“கொஞ்சம் என்ன முழு விலாசமே சொல்றேன். எழுதிக்கோங்க. நம்பர் இருபது, முதல் மெயின் ரோடு, எம்.சி.நகர், சித்லப் பாக்கம், சென்னை, அறுபத்தி நாலு.”
“நன்றிங்க. எப்பொ வந்தா பாக்கலாங்க?”
“எப்பொ வாணா வரலாம். நான் வீட்டுலெதான் இருப்பேன்.”
“நாளைக்கு மதியம் ஒரு மூணு மணிக்கு வரலாங்களா?”
“தாராளமா வாங்க. நான் விட்டுலெதான் இருப்பேன்.”
மறு நாள் மதியம் மூன்று மணிக்கு கதவு மணி அடிக்க நான் போய் க்ரில் கதவைத் திறக்கிறேன். எழுபதைத் தாண்டிய, பேண்டு சட்டை அணிந்த ஒருவர் நீற்கிறார். “வாங்க…வாங்க” என்று வரவேற்கிறேன் வந்தவரை. தனது ஷூவைக் கழற்றி விட்டு பெரியவர் உள்ளே வருகிறார்.
“உக்காருங்க” என்று சொல்லியபடி லைட்டையும் ஃபேனையும் போடுகிறேன்.
பெரியவர் ஆரம்பித்தார், “ஒங்களெப் பத்தி என்னோட நண்பரு ஒருத்தரு ரொம்பப் பெருமையா சொல்லீண்டு இருந்தார். நீங்க அவரு பங்கேற்கெற சில குழுமங்களுலெ எழுதுறீங்களாம். அந்த காலத்துலெ பென்சிலு, பேனா, பேபருன்னு இருக்கலே. அப்பிடியே பேப்பரு இருந்தாக்கூட அதுலெ எழுதறது ரொம்ப நாளைக்கு இருக்காது.”
“ஆமாம் ஆமாம்.”
“இது தெரிஞ்சுதான் ஆதி காலத்துலெ கல்லுலெ வெட்டி எழுதி வெச்சாங்க. அதுங்களெ ஆராய்ச்சி பண்ணிதான் அந்த நாளு பத்தி இப்போ நாம பல விஷயங்களெத் தெரிஞ்சுக்கறோம். கல்வெட்டுங்களெப் பாத்து விஷயம் தெரிஞ்சுக்கெறது எல்லாராலேயும் செய்யக் கூடிய காரியம் இல்ல. அதுனாலெ அந்த கல்வெட்டுகளெ படிச்சு ஆராய்ச்சி பண்ணவங்க புத்தக வடிவிலேயோ இல்லெ கணினி வழியாவோ சேமிச்சு வெச்சா அது பிற்கால சந்ததிக்கு ரொம்ப உதவியா இருக்கும்.”
“ஆமாம் ஆமாம்.”
“நீங்க கல்வெட்டுகளெ ஆராய்ச்சி பண்ணுறதாக் கேள்விப் பட்டேன்.”
“கல்வெட்டு ஆராய்ச்சியா? நானா? எனக்கும் கல்வெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே சார்.”
“அப்பிடியா? நீங்கதானே நடராஜன் கல்வெட்டு?”
“சார் நான் நடராஜன் கல்வெட்டு இல்லே சார். நடராஜன் கல்பட்டு சார். கல்பட்டுங்கெறது எங்க தாத்தா ஊரு சார்.”
“அப்பிடியா? பின்னெ நீங்க எதெப் பத்தி எழுதுறீங்க?”
“நான் பாத்து ரசிச்ச பறவைங்க பத்தி எழுதறேன். நகைச் சுவைன்னு தோணுறதெ கதெ, கவிதெ, கட்டுரைன்னு எழுதறேன்.”
இதற்குள் என் மனைவி சாந்தா வந்தவருக்கும் எனக்கும் காப்பியும் பிஸ்கேட்டும் கொண்டு வந்தாள்.
இப்படித்தான் ஆரம்பித்தது ஒரு பெரிய வலைப் பதிவருக்கும் எனக்கும் ஆன தொடர்பு. ஒரு எழுத்து மாறிப் போய் எவ்வளவு பெரிய மனிதருடன் எனக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என்று மனதுக்குள் மகிழ்ந்து கொண்டேன்.
நடராஜன் கல்பட்டு
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே