சகோதர பாசம்
நான்கு நாட்களுக்கு முன் ஒரு பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவி என்னிடம் வந்து, “தாத்தா நான் பள்ளிக் கூடத்துலெ நடக்கற பேச்சுப் போட்டிலெ கலந்துக்கப் போறேன். தலைப்பு ‘சகோதர பாசம்’. இந்தாங்க கம்பராமாயண புத்தகம். பள்ளி நூலகத்து லேந்து கொண்டு வந்தேன். கொஞ்சம் எனக்கு பேச்சு ஒண்ணு எழுதிக் குடுங்க” என்றாள்.
ராமாயணம் என்றாலே பெரியது என்று பொருள் தொனிக்க, “என்னடா பெரிய ராமாயணம் சொல்றே?”என்பார்கள். ஒரு நால் இரவில் நான் ராமாயணம் படிக்க வேண்டும். அதிலிருந்து பேச்சுப் போட்டிக்கு நான் எழுதித் தரவேண்டும். ஆகிற காரியமா இது?
அவள் கேட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த் வார்த்தையும் எத்தனை நாட்களுக்கு வரும்? மேலும் சுயமாக சிந்திக்காமல், வேறொருவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து கொண்டு பேசினால் நடுவில் ஒரு வார்த்தை மறந்து விட்டாலும் அதோ கதிதான். சுயமாக சிந்தித்திருந்தால் ஒரு வார்த்தை மறந்தாலும் மற்றொரு வார்த்தையால் அந்த இடத்தை நிரப்பிச் சொல்ல வந்த கருத்தினை சொல்லிட முடியும் தடையின்றி.
நான் அவளிடம் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்து, “நீ முதலில் உனக்குத் தோன்றுவதை எழுதிக் கொண்டு வா. பின் நான் உனக்குச் சொல்லித் தருகிறேன் எப்படிபேசினால் நீ எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு சரியாக இருக்கும் என்று” எனச் சொன்னேன்.
“இன்று போய் நாளை வா” என்று ராவணனிடம் சொன்ன ராமனைப் போல்தான் சொன்னேன் நானும். ஆனால் அன்று போனவள் இன்று வரை திரும்ப முகம் காட்டவில்லை.
அவள் மறு நாள் வந்திருந்தால் அவளுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை என் மனதுள் என் சிற்றறிவிற் கேற்ப ஒரு மாதிரி யோசித்து வைத்திருந்தேன். அதை இப்போது அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
தயவு செய்து மடலைப் படித்து விட்டு என்னுடன் விவாததில் இறங்கி விடாதீர்கள். அதற்கு பதிலளிக்கும் ஆற்றலும் அறிவும் எனக்கில்லை.
‘சகோதர பாசம்’ என்ற உடன் அந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதில்‘சகோதரன்’ ‘பாசம்’ என்ற இரண்டு சொற்கள் உள்ளன. சக என்றால் கூட என்று கொள்ளலாம். ‘சக மாணவி’, ‘சக ஊழியர்’ என்னும் வார்த்தைகளில் வந்திடுவது போல. உதரம் என்றால் வயிறு. பாசம் என்பது அன்பும் பரிவும் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆக சகோதர பாசம் என்றால் உடன் பிறப்புகளுக்குள், அதாவது ஒரே வயிற்றில் பிறந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இவர்களுக்கு உள்ளேயான பரஸ்பர அன்பு என்று பொருள் படுகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கு இதற்கு மேலும் பொருள் உண்டு என்பதைப் பின்னால் பார்க்கலாம்.
சகோதர பாசத்தின் ஆழத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ராமாயணம் படிக்க வேண்டும் அல்லது அந்தக் கதையை நாம் பிறர் சொல்லக் கேட்டிடல் வேண்டும். காரணம் அதில் பல இடங்களிலும் சகோதர பாசத்தின் வெளிப்பாட்டினைக் காணலாம்.
கூனியின் சூழ்ச்சியால், கைகேயி, பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும், ராமன் பதினான்கு வருடங்கள் காட்டுக்குச் செல்லவேண்டும் எனப் பிடிவாதம் பிடித்திட, லட்சுமணன் ‘அண்ணனோடு நானும் செல்வேன்’ என்கிறானே அங்கு ஆரம்பிக்கிறது சகோதர பாசத்தின் முதல் வெளிப்பாடு.
ராமன், சீதை, லட்சுமணன் இவர்கள் ஆற்றைக் கடந்திடப் பரிவுடன் பரிசிலோட்டிய குகனைக் கண்டு,“குகனுடன் இன்று ஐவரானோம்” என்கிறான் ராமன். அவனையும் தனது சகோதரனாக்கிக் கொள்கிறான் அவன். இது சகோதர பாசம் என்பது உடன் பிறந்தோரிடம் மட்டுமே காட்டப் பட வேண்டிய ஒன்றில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அடுத்து நாடு திருபிய பரதன் தன் அண்ணன் ராமனுக்கு எற்பட்ட நிலை கண்டு பதறி போய்க் காட்டுக்கு ஓடிச் சென்று ராமனைக் கண்டு பிடித்து நாடு திரும்ப வேண்டுகிறான். ராமன் ‘தந்தை தாய் சொல்லைக் காப்பாறுதல் தனயனின் தலையாய கடமை’ என்று சொல்லி நாட்டுக்குத் திரும்ப மறுத்திட அவனது செருப்புகளை வாங்கித் தன் தலை மேல் சுமந்து நாடு திரும்பி அதற்கு முடி சூட்டுகிறான் பரதன். இது சகோதர பாசத்தின் உச்சம் கட்டம் எனலாமோ?
காட்டிலே ராமனின் அழகில் மயங்கிய சூர்ப்பனகை, அவனை அடைய எண்ணி அதற்குத் தடையாக இருப்பாளோ சீதை என்ற நினைப்பில் அவளைத் தாக்க, அவள் மூக்கை அறுக்கிறான் லட்சுமணன். மூக்கறுபட்ட சூர்ப்பனகை அண்ணன் ராவணனிட்ம் சென்று முறையிட, அவன் ராமனைக் கொன்றிட நினைக்கிறான். இது ஸ்கோதரியின் மீது ஒரு அண்ணனுக்கு உண்டான அளவுக்கு மீறிய பாசம்.
சீதையின் அழகு பற்றி சூர்ப்பனகை ராவணனிடம் கூற, அவனுக்கு சீதையை அடைந்திடும் ஆசை வருகிறது. அப்போது அவன் தம்பி விபீஷணன் அவனைத் திருத்த முயல்கிறான் நல்ல அறிவுரைகள் சொல்லி. இது அவனுக்கு அண்ணன் மீதான சகோதர பாசத்தின் விளைவு. ஆனால் விபீஷணனின் வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகிறது.
வாலியைக் கொன்ற பின் சுக்ரீவனைப் பட்டத்திலேற்றி ராமன் சொல்கிறான், “குன்று சூழ்வான் மகனொடு அறுவரானோம்” என்று.
ராவணனை விட்டகன்ற விபீஷணன் ராமனிடம் சரணடைகிறான்.
அப்போது ராமன் சொல்கிறான், “பின்பு வந்த அகனமர் காதலையா உன்னொடு எழுவரானோம்” என்று. இங்கும் சகோதர பாசமே.
ராம ராவண யுத்தம் ஆரம்பித்து விட்டது. ராவணன் தவறான பாதையில் செல்கிறான் என்பதை உணர்ந்த கும்பகர்ணன் அவனுக்கு புத்தி மதி சொல்ல ஆரம்பிக்கிறான். ஆனால் அதைக் கேட்காது தன் நோக்கத்திலேயே குறியாய் நிற்கும் ராவணன் பக்கமே நிற்கிறான் போரில் கும்பகர்ணன். இதுவும் சகோதர பாசமே.
இப்படித் திரும்பிய இடமெல்லாம் ராமாயணத்தில் சகோதர பாசம் ஓளி விட்டுப் பிரகாசிக்கிறது.
ஒரே உதரத்தில், அதான் வயிற்றில், தோன்றியவர் களுக்குள் மட்டுமே காட்டிட வேண்டும் சகோதர பாசத்தினை என்று நினைக்க வேண்டாம். எல்லா உயிகளிடத்துமே நாம் காட்டிட வேண்டும் அன்பும் பரிவும்.
கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான்,
“அத்வேஷ்டா சர்வ பூதானாம்
மைத்ரக் கருண ஏவச” என்று.
அதன் பொருள்,
“உயிரினங்கள் எல்லா வற்றிடமும் துவேஷம் வேண்டாம்
காட்டிடு அன்பையும் கருணையையும்”
என்பதாகும்.
இதைத்தான் ஆங்கிலத்தில் ‘யூனிவர்சல் பிரதர்ஹூட்” எனச் சொல்கிறார்களோ?
14-08-2010
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே