கண்டதுண்டோ கண்ணன் போல்
“கண்ட துண்டோ கண்ணன் போ லபோ லபோ லபோல”. கணீரென எழுந்தது அண்டை வீட்டில் இருந்து ஒரு குரல்’
“அந்தாளு ஏன் இப்பிடி லபோ லபோன்னு கத்துறான்னே புரிலெ எனக்கு. வெளிலெ வெய்யுலா இருக்குதே. நாயித்திக் கெளெமையாவும் இருக்குதே ஊருலேந்து வந்த களப்பு தீர கொஞ்ச நேரம் ரெஸ்டு எடுத்துக்கலாம்னு படுக்கப் போனா உடுறானா அந்த ஆளு? ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாளு லபோ லபோன்னு கத்துற அவன் கொறவளெயெப் புடிச்சு அளுத்திக் கொன்னே போடப் போறேன் அந்த ஆளெ. ஆமாம் சொல்லீட்டேன்.”
“ஆமாம் நாயித்திக் கெளெமெ மட்டுந்தான் ரெஸ்டு எடுத்துக் கிறீங்களாக்கும்? வாரத்துலெ ஏளு நாளுந்தான் வேலெ வெட்டிக்குப் போகாமெ ஊட்டுலெ ரெஸ்டு எடுத்துக்கறவரு நீங்க.”
“ஏய் வாணாண்டீ…… நான் என்ன வேணுமின்னா ஊட்டுலெ ஒக்காந்து இருக்கேன்? நீ பெரிய வேலேலெ இருக்கே. மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்குறே. ஒன்னெ வேலெயெ உடச் சொல்லீட்டு நீ ஊட்டெப் பாத்துக்கோ நான் வேலைக்குப் போறேன்னு சொன்னா ஒன் பிஞ்சு மனசு வாடிப் போவாது? அந்த நல்லெண்ணத்துலெ தானேடீ நான் ஊட்டுலெயே குந்தி இருக்கேன்.”
“நல்லா இருக்குதுங்க ஒங்க நாயம். ஆடு நனையுமேன்னு ஓனாயி அளுதீச்சாங் கெறாப்புலெ.”
மீண்டும் எழுகிறது பக்கத்து வீட்டில் இருந்து குரல், “சொன்னது நீ தானா சொல் சொல் என் உயிரே….” என்று.
“ஏய் கேட்டியாடீ கேட்டியாடீ. அவரோட உயிராமே உயிரு நீ? என்னடீ நடக்குது எனக்குத் தெரியாமெ? இதுக்குத்தான் என்னெ ஊரிலேயே உட்டூட்டு நீ மட்டும் வந்தியா இங்கெ? ஒன்னோட ஆபீசுலேயே வேலெ பாக்குறானா அவனும்? சவுகரியமா இருக்குமேன்னுதான் பக்கத்து ஊட்டையே வாடகைக்கு எடுத்துக் கிட்டையா?”
கணீரென ஒலிக்கிறது அண்டை வீட்டுக் குரல், “கண்ணே கலை மானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே”.
“யாருக்கு யாருடீ கண்ணு? கலை மானாம், கன்னி மயிலாம்….? கவரி மான் குடும்பண்டீ எங்க குடும்பம். காட்டுறேன் பாரு அவனுக்கு நான் யாரூன்னு.”
“இதெப் பாருங்க விசயம் புரியாமெ ஒளராதீங்க. இப்போவே வாங்க போகலாம் பக்கத்து ஊட்டுக்கு.”
“போலாம், போலாம். இப்பொவே போலாம். எனக்கும் ரெண்டுலெ ஒண்ணு இன்னிக்கி தெரிஞ்சாவணு மில்லெ?”
“வா வசந்த முல்லையே…..” அடுத்து பாடுகிறார் பக்கத்து வீட்டுக் காரர்.
“ஒம் பேரும் தெரியுமோ அந்த ஆளுக்கு? வசந்த முல்லையாமே வசந்த முல்லெ? என்ன பண்ணுறேன் பாரு அவனெ இந்த கோடையிடி கோவிந்தன்.”
இருவருமாகச் சென்று பக்கத்து விட்டின் கதவு மணியை அடிக்கின்றனர்.
அண்டை வீட்டுக் காரர் பெண்டாட்டி சகிதம் வந்து கதவைத் திறக்கிறார்,
“வாம்மா வசந்தா வா. வாங்க மாப்பிள்ளே. நீங்க வரப் போறீங்கன்னு வசந்தா சொல்லீச்சு. அதான் இன்னிக்கி ஒங்களெ விட்டுக்குக் கூப்பிட்டு விருந்து வெய்க்கணும்னு பேசிக்கிட்டு இருந்தோம். ஊருலேந்து வந்த களெப்புலெ இருப்பீங்க. சாயங்காலமா வந்து கூப்பிடலாம்னு இருந்தோம். அதுக்குள்ள நீங்களே வந்தூட்டீங்க. ஒங்க கல்யாணத்தும் போது லண்டன்லெ இருந்தோம். புதுசா வேலெ ஏத்துக் கிட்ட துனாலெ லீவு எடுக்க முடீலெ. அதான்….”
“ஆமாம் சொல்லிக் கிட்டே இருப்பாரு இவரு ஒண்ணு உட்ட அண்ணன் தங்கச்சியானாக்கூட சொந்த அண்ணன் தங்கெ போலத்தான் பழகுவோம் நாங்க, இப்பொ அவொ கல்யாணத்துக்கே போக முடியாமெ போயிடிச்சேன்னு. ஒனக்கு இந்த ஊருலெ வேலெ ஆயிருக்குன்னதும் பரம சந்தோசம் இவருக்கு. நீ ஊடு பாரூன்னு சொன்னதும் பக்கத்துலெயே பாக்கணும்னு சொல்லிக் கிட்டு இருந்தாரு. நம்ம அதிஷ்டம் பக்கத்து ஊடு காலியாச்சு ஒடனே அதெப் பேசி முடிச்சீட்டாரு.”
“அண்ணே ஒன் சினிமாப் பாட்டு மோகம் வெளி நாடு போயிட்டு வந்தாலும் ஒன்னெ உடலே போலெ இருக்கு?”
“அது எங்கெ உடும் அவரெ? எப்பொ பாரு எதுனா ஒரு பாட்டெப் பாடிக்கிட்டே இருப்பாரு. பூராப் பாட்டெப் பாடுவாரான்ன அதுதான் இல்லெ. ஆயிரம் பாட்டுக்கு அடி தெரியும் நூறு பாட்டுக்கு நுனி தெரியும்னு சொல்லுவாங்களே அது போலத்தான் இவருக்கு.”
“சரி சரி வாசலுலேயே நின்னு பேசிக் கிட்டு இருந்தா எப்படீ? உள்ளெ வாங்க.”
“அது அது…..”
“என்னமோ சொல்ல வராரு மாப்ளே. சொல்லுங்க மாப்ப்ளே.”
“அது ஒண்ணும் இல்லேண்ணே. ஊருலேந்து வந்ததுமே வந்திருக்கணும். அதுவும் வெருங்கையெ வீசிக்கிட்டு வந்திருக்கக் கூடாதூன்னு சொல்ல வராரு.”
“நமக்குள்ளெ என்ன மாப்ளெ ஃபார்மாலிடி யெல்லாம்?”
மூவர் சிரித்திட ஒருவர் முகத்தில் அசடு வழிந்திட நால்வரும் நுழைகின்றனர் வீட்டுக்குள்.
நடராஜன் கல்பட்
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே