தனியே வந்த காரணம் என்ன?
தீயாரைக் காண்பதுவும் தீதே, தீயார் சொல் கேட்பதுவும் தீதே என்றெல்லாம் நமக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
அவர்களோடு பேசினால் என்ன வந்து விடப் போகிறது? அவர்கள் சொல்வதை நாம் கேட்டு நடந்தால்தானே தவறு. சும்மா பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கேட்கலாம்.
இராமன் , சும்மா பேசிக் கொண்டிருந்தான் சூர்ப்பணகையிடம். வினை வந்து சேர்ந்ததா இல்லையா ?
இராமன் மேலும் கேட்கிறான் சூர்ப்பணகையிடம்:
"தேவர்களின் தலைவனான இந்திரனைக்கூட ஆட்டி வைக்கும் ஆற்றல் பெற்ற இராவணனின் தங்கை நீ என்றால், உன்னைப் பார்த்தால் செல்வச் சீமாட்டி மாதிரியும் தெரியவில்லை, உன் கூட யாரும் வரவில்லை, தனியாக ஏன் வந்தாய் " என்று கேட்கிறான்.
அவள் தனியாக வருகிறாள், கூட யாருடனோ வருகிறாள். இராமனுக்கு என்ன கவலை அதில்? அவளோடு "சும்மா" பேசிக் கொண்டிருக்கிறான். தீயவர்களோடு சும்மா பேசிக் கொண்டிருந்த இராமனுக்கே அந்த கதி என்றால், நம் நிலைமை எப்படி ஆகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
தீயவர்கள் என்றால் ஏதோ கோரைப் பல்லுடன், கறுப்பா, குண்டா, கழுத்தில் மண்டை ஓடு மாலை போட்டுக் கொண்டு வர மாட்டார்கள்.
சூர்ப்பணகை எப்படி வந்தாள் ? தேவலோகப் பெண் போல வந்தாள்.
"பஞ்சு ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க"...முத்துகள் சிணுங்கியதாம்.
இலக்குமி போல் இருந்தாள் என்று கம்பன் சொல்கிறான்.
கெட்டவர்கள் பார்ப்பதற்கு மிக நல்லவர்கள் போல இருப்பார்கள். மிக மிக இனிமையாகப் பேசுவார்கள். இனம் கண்டு கொள்வது மிகக் கடினம்.
அவர்கள் எந்த வடிவிலும் வரலாம்...உறவினர் வடிவில், நண்பர்கள் வடிவில், அக்கம் பக்கம் உள்ளவர்கள் போல, அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர் வடிவில் இருக்கலாம்.
நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யார் நல்லவர் , யார் கெட்டவர் என்று தெரியாது. எனவே, பேச்சைக் குறைப்பது நலம்.
சூர்ப்பணகை படலத்தில் கம்பன் நமக்குச் சொல்லும் பாடம் இது.
தோற்றம் கண்டு ஏமாறாதே
தீயவர்களோடு சகவாசம் வேண்டவே வேண்டாம்.
பாடல்:
‘இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின், உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின்,
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை; துணையும் இன்றி,
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என்? தையல்!' என்றான்.பொருள்:
கண் இமைக்காத தேவர்கள் தலைவனான இந்திரனையும் சாதாரண வேலைக்காரனைப் போல வேலை வாங்கும் ஆற்றல் கொண்ட, மூன்று உலகத்தையும் ஆளக் கூடிய இராவணனின்தங்கை என்றால் சுமை உள்ள செல்வத்தோடும் நீ வரவில்லை ஒரு துணையும் இல்லைதனியாக வந்து இருக்கிறாய். நீ இப்படி வந்ததற்கு சரியான காரணம் என்ன, பெண்ணே?
என்று கேட்டான் இராமன்.
சுமை உறு செல்வம் என்கிறான் இராமன். சுமந்து வரும் செல்வம், நகை நட்டு. பட்டாடை என்று போட்டுக் கொண்டு வரும் செல்வம்.
இன்னொன்று,
ஒரு அளவுக்கு மேல் போனால், செல்வம் ஒரு சுமை தான். நாம் தான் அதை சுமந்து கொண்டு போக வேண்டும். அதை பாதுகாக்க வேண்டும். எதில் கொண்டு போய் பணத்தைப் போடுவது, எங்கே போட்டால் நல்ல வட்டி வரும், முதலுக்கு மோசம் வந்துவிடக் கூடாது என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும்.
சுமை உறு செல்வம்.
குகப் படலத்தில், அரச உரிமையை , அரசை "துன்பத்தின் இருக்கை" என்பான் குகன்.
- தமிழ்நாயகம்
*********************************************
சித்தானந்தம்