மனிதர்களின் வெறிகள் எவ்வாறெல்லாம் உருகொள்கின்றன...
ஆச்சரியப்படுகிறேன்.
ஏன் இதை எழுதுகிறேன்?
தீபாவளி கொண்டாடப்படும் இந்நேரத்தில் அதை கெடுக்கும் கொடியவர்களின் நஞ்சு மனங்களை பல இடங்களில் காண முடிகிறது.
அதில் சில வெறியர்களோ தீபாவளி தமிழர் திருநாளே இல்லை என்று சொல்லி தமிழர்கள் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடுவதை கெடுக்க முடியுமா என பார்க்கிறார்கள்.
சில இன வெறியர்கள், தீபாவளி ஆரியர் திருநாள் அதனால் தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்கிறார்கள்.
வேறு சிலரோ, தீபாவளியா? ஆபாசம் ஆபாசம் என வழக்கம் போல ஓலமிடுகிறார்கள்.
வேறு சில புல்லுருவிகளோ, தீபாவளியா சிவாகாசி பட்டாசு தயாரிக்கும் போது விபத்தால் பல உயிர்கள் இறந்தார்கள் என முதலைக்கண்ணீர் வடித்து அப்படியாவது தீபாவளியை கொண்டாடாமல் செய்யலாமா என நரி வேலை பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி நரகாசுரன் மட்டுமல்ல ஒட்டு மொத்த அசுரர்களும் தமிழர்களே அதனால் அதை துக்க நாளாக கொண்டாட வேண்டும் என அறிவு கூடிவிட்டதால் வேதம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
மேலே கூறியவர்களை நீங்களும் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். இதைப்படித்தும் இரத்தம் தலைகேறினால் மேலே கூறப்படும் உழறல்களை கூறுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்திருக்க வேண்டும்.
தென்நாட்டு தமிழ் கடவுள் முருகனின் கார்த்திகை திருநாளே வடக்கே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அல்லது தீபாவளியே கார்த்திகையானது என்ற ஒரு கருத்தும் உள்ளது.
முன்பிருந்த பாரத நாட்டின் பரந்த நிலப்பரப்பின் தூரமும் தகவல் தொடர்பின் கால தாமதமும், பருவ மாற்றங்களும் இதற்கு காரணம்.
கார்த்திகை தீபாவளி இந்த இரண்டு பண்டிகைகளும் தீபத்தை ஏற்றி மகிழ்ந்திருங்கள் என்று சொல்பவை.
வேதங்களில் தீ என்பதற்கு அறிவு என்பதே மறைபொருள். இறைவன் ஒளி மயமானவன். அங்கே அஞ்ஞானம் என்ற இருள் கிடையாது.
வெளி உலகில் இருளை அகற்ற தீ ஒளி பயன்படுவது போல அகத்தின் அஞ்ஞான இருளை அகற்ற அறிவு தீயின் ஒளியை நாம் ஏற்ற வேண்டும்.
பாரத நாடு இயற்கையையும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வளரும் நாடு. இயற்கையை காப்பதே மனிதனை காப்பது என அறிந்த நாடு. இயற்கை அழிந்தால் மனிதனும் அழிந்து விடுவான் என்பதை கண்டு கொண்ட நாடு.
இங்கே இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை.
கார்த்திகை மார்கழி மாத காலங்கள் குளிர் நிறைந்த மாதங்கள். குளிர் என்பதால் இக்காலங்களில் நோய் தொற்று அதிகம்.
அப்போது பயிர் செய்யப்பட்டிருக்கும் பயிர்களிலும் பூச்சிகளால் நோய் தாக்கப்படும்.
இந்த பூச்சிகளின் பெருக்கத்தை தடுக்க ஒருவர் மட்டுமே பாடுபட்டால் போதுமா? ஒரு இடத்தில் பூச்சிகள் அழிக்கப்பட்டால் வேறு இடங்களில் இருந்து அவை பரவி விடும்.
எனவே, தீபம் ஏற்றுங்கள். அனைவரும் ஒரே நாளில் ஒரே நேரம் தீபம் ஏற்றுங்கள். வீட்டின் நாலா சுற்றுப்புறங்களிலும் தீபம் ஏற்றுங்கள்.
விளக்கை தேடி வந்து பூச்சிகள் அதில் வீழ்ந்து மாண்டுவிடும்.
நோயின் தாக்கம் குறையும்.
ஒரு நாடு முழுவதும் ஒரே நேரம் தீபம் ஏற்றப்படுவதால் உண்டாகும் பலன் அளவிட முடியாதது. (கவனிக்க: இப்போதுள்ள மின் விளக்குகளால் இந்த பயன் இல்லை)
நோயின் தாக்கம் குறையும்.
குளிரின் தாக்கம் குறையும்.
காற்றின் வெப்பநிலை மாறுபடும்.
திடீரென கேட்கும் பட்டாசு சத்தத்திலும் பல சிறிய பூச்சிகள் செயல் இழக்கின்றன.
ஒரே நேரம் இத்தீபங்கள் ஏற்றப்படுவதால் வெப்ப நிலை மாறுவதால் மழை அதிகமாகிறது.
கார்த்திகையின் அடுத்த நாள் செய்த பண்டங்களின் இலைகளை பெருக்க மழை வரும் என்று கிராமங்களில் வேடிக்கையாக கூற கேட்டிருக்கிறேன்.
தீப ஏற்றுதலுக்கு எத்தனை எத்தனை காரணங்கள்.
இனி முதலில் கூறப்பட்ட இன வெறி கருத்துகளை பார்ப்போம்.
ஆரியம் திராவிடம் என்பதே ஆங்கிலேய அதிகார வெறியன் நம்மீது பொதி சுமப்பதற்காக ஏற்றி வைத்த மூட்டை.
ஆரியம் திராவிடம் என்பதெல்லாம் வெற்று வாதங்கள். இவை வெறும் இன வெறி கருத்துகள். சண்டை உருவாக்க மட்டுமே இவை உதவும். ஒரு வீட்டில் சென்று தம்பியை பற்றி கேவலமாக அண்ணனிடம் கூறி இருவரையும் சண்டை போட வைக்கும் கேவலமான செயலை ஆங்கிலேயன் செய்து அரசியலை அதிகாரத்தில் அமர்ந்து விட்டு நாட்டை சூரையாடிவிட்டு சென்றுவிட்டான்.
நாம் இன்னும் அதே மூட்டையை சுமந்து கொண்டிருக்கிறோம். கேவலம்.
தீபாவளி ஆரியர் திருநாள் அதனால் தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்று சொல்லும் அபத்தறிவுவாதிகள் வெளிநாட்டு பண்டிகளின் போது வெட்கப்படவில்லை என்பதே நடைமுறை உண்மை.
உண்மையில் தீபாவளி ஆரியமோ திராவிடமோ கிடையாது.
இது உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வேறு வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒவ்வொரு கதையும் கூறப்படுகிறது.
சீக்கியர்கள் பொற்கோவில் கட்டுமான பணிகள் துவங்கிய நாளாகவும், சமணர்களின் மகாவீரர் நிர்வானம் அடைந்த தினமாகவும் இதை கொண்டாடுகின்றனர்.
சிலர் லஷ்மி தேவிக்காகவும், சிலர் ராமனுக்காகவும், சிலர் கிருஷ்ணனுக்காகவும் சிலர் சிவனுக்காகவும் கதைகள் கூறி இதே திருநாளை கொண்டாடுகிறார்கள்.
பிரச்சனை என்னவென்றால் தமிழர்கள் இதற்கு இன்னும் கதை கூற வில்லை. கூறியிருந்தால் இது தமிழர் திருநாளாக எப்போதோ ஆகியிருக்கும். உண்மை.
தமிழர்களை இதை விட கேவலப்படுத்த யாரால் முடியும்? யோசியுங்கள்.
இராமயணத்தில் இராவணன் இலங்கையை ஆண்டான் அவன் சிவனை தொழுதான் என்பதற்காக அவன் தமிழனாக இருந்திருப்பான் என நம்புகிறோம் அல்லாமல் அசுரர்கள் அனைவரும் தமிழர்கள் என வேதத்தில் எங்காவது உள்ளதா?
என்ன அடி முட்டாள் தனம் இது.
அசுரன் என்றால் சுரா பானம் குடிக்காதவர்கள் என வேறு ஒரு விளக்கம் கூட தருகிறார்கள். இந்த விளக்கம் என்றிலிருந்து உள் சொருகப்பட்டது என்பது ஆண்டவனுக்கே வெளிக்சம்.
தமிழர்கள் மது அருந்தாதவர்கள் என அபத்தமான விளக்கம் வேறு தருகிறார்கள். அதாவது இப்போது மது அருந்துகிறவர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லையா?
விளக்கமாக பார்ப்போம்.
சம்ஸ்கிருதத்தில் அ, நிர் என்பது எதிர் மறையை குறிக்கும்.
மங்கலம் அமங்கம், நீதி அநீதி, கதி நிர்கதி
அதற்காக அ என்று தொடங்கும் அனைத்து சொற்களும் சமஸ்கிருதம் என்றோ அ என்று தொடங்கினாலே அது எதிர்மறை என்றோ அதன் நேர்மறை சொற்களை இருக்கிறது என்றோ அர்த்தம் இல்லை.
சம்ஸ்கிருதத்தில் 'அ' என்ற சொல்லைப்போலவே 'சு' என்ற சொல்லும் உண்டு.
''சு என்றால் 'நல்ல' என்பது பொருள்.
சீலம் என்றால் குணம் சுசீலம் என்றால் நல்ல குணம்
சுகம் என்றால் மகிழ்ச்சி, சுசுகம் என்றால் நல்ல மகிழ்ச்சி
ஜன என்றால் மனிதன், சுஜன என்றால் நல்ல மனிதன்
சுர என்றால் சமஸ்கிருதத்தில் இறைவன் அல்லது தெய்வத்தன்மை என்பதே பொருள்.
இதன் எதிர் மறையான அசுர என்றால் நல் குணங்கள் அற்ற என்பது பொருள். சு அன்பது நல்ல என்பதை போல அசு என்றால் கெட்ட என்பதே பொருள்.
நர என்றால் மனித என்று பொருள்.
சுரன்
நரன்
அசுரன்
இவை பிறவிகளின் பல வகைகள் மட்டுமே.
சுர பானம் என்றால் நல்ல பானம் அல்லது தெய்வத்தன்மை உடைய பானம். தீர்த்தம்.
அசுர பானம் என்றால் தெய்வத்தன்மை அற்ற பானம், கேடு விளைவிக்கும் பானம்.
சுர என்பதும் சுர பானம் என்பதும் இரு வேறு சொற்கன். ஒன்றை மற்றொன்றில் கற்பிப்பது தவறு.
சுரன் என்பதற்காக அவன் சுர பாணம் குடித்தான் என்பதோ அசுரன் என்பதற்காக அவன் அசுர பானம் குடித்தான் என்றோ கற்பனை செய்து கொள்வது மடத்தனமே.
போகப்பட்டிகையின் (போகி) போது தமிழர்கள் பலரும் மது அருந்திவிட்டு மகிழ்ந்திருந்தார்கள் என்பது வரலாறு.
அசுரர் அனைவரும் தமிழர்கள் என்று சொல்வது தமிழ் என்பது ஈன பாசை என ஈவெ. ராமசாமி அவர்கள் கேவலப்படுத்தியது போல ஒட்டுமொத்த தமிழினத்தையே கேவலப்படுத்தும் செயல்.
ஆனால் இதை கூட ஆமாம் சாமி போடும் சுய புத்தி இல்லாதவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
குடிப்பதும் குடிக்காததும் மொழி கடந்தது. மொழியை வைத்து குடிக்கும் பழக்கத்தை தீராமானிப்பதை என்ன சொல்ல.
மேலே அசுரன் என்ற தமிழர்கள் மது குடிக்காதவர்கள் என்று கூறியவர்களிடம் இதை சொல்ல வேண்டும். விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
மது விற்பனை தீபாவளிக்கு மட்டும் தான் நடக்கிறதா என்பது அவர்கள் அறிவுக்கே தெரியும்.
வேறு பதில்கள் தேவை இல்லை.
புராண கதைகளை ஹிந்துக்கள் நம்புகிறார்களோ இல்லையோ அபத்தறிவுவாதிகள் வரிக்கு வரி அப்படியே நம்பிவிடுகிறார்கள்.
இராவணன் இருந்த கதையையும் இராமனையும் நம்பிதான் அதற்கு எதிராக இராவண
காவியம் எழுதினார்கள். அசுரர்களும் தேவர்களும் சண்டை போட்டதை நம்பி
அசுரர்கள் தமிழர்கள் என கூறி வருகிறார்கள்.
(அசுரர்கள் என்போர்கள் தமிழர்கள் தான் என நல்லவேளை ஒரு பார்ப்பன்
சொல்லிவிடவில்லை. சொல்லியிருந்தால் அபத்தறிவுவாதிகள் தையத்தக்க என நடனம்
ஆடத்துவங்கியிருக்கக்கூடும். )
கடவுளுக்கு மனித உருவம் கொடுத்து வணங்குவதை விட கடவுளை மனித உருவாக நினைத்து அவர்கள் இணைந்த கதையை மனித ஆபாசத்தை கலந்து நம்புவதில் ஒரு ஹிந்துவை விட அபத்தறிவுவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு.
புராண கதைகள் அனைத்தும் தத்துவத்தை விளக்க ஏற்பட்டவை என்பது ஒரு ஹிந்துவிற்கு தெரிந்திருக்கும். அங்கே கடவுளுக்கு மனைவி என்பது இறைவனின் சக்தி என்ற உண்மை ஒரு ஹிந்து அறிந்திருப்பான். இரு இறைவன் இணைவது இரண்டு சக்தி சேர்ந்து புதிய சக்தி ஆற்றல் உருவாகிறது என அவன் தெளிந்திருப்பான். அதில் கூறப்படும் தத்துவ விளக்கத்தை அவன் உணர்ந்திருப்பான். குழந்தைகளுக்கு கதை களை கூறிவிட்டு அவன் வளர்ந்ததும் உண்மை பொருள் உணர்ந்துகொள்ளட்டும் என விட்டுவிடுவான்.
ஆனால் பலர் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்கள்.
தசரதணனுக்கு அறுபதாயிரம் மனைவிமார்கள் என்பதை நம்பி கேள்வி கேட்கும் அபத்தறிவுவாதிகள் இது நடைமுறை சாத்தியமா என்ற அறிவை கூட பயன்படுத்துவதில்லை.
நரகாசுரன் வராக அவதாரம் பூமியில் பட்டதால் உருவானவன் என்ற கதை சாத்தியமா என்பதை யோசிக்க வேண்டும்.
இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் பூமியில் இருந்தே அதன் சாரத்தை உள்ளடக்கியே பிறந்தாக வேண்டும். நீயும் நானும் இதற்கு விதிவிலக்கல்ல. இது ஆபாசமா வேறு ஏதாவதா என்பது அவரவரைப்பொறுத்தது.
வீராவேசம் கொண்டு இருக்கும் மனநிலையிலோ கெட்ட மனநிலையிலோ இருக்கும் போது உடல் சேர்ந்து கரு உருவானால் அவன் அதே கெட்ட மனநிலையில் தான் குழந்தையும் பிறக்கும். இதுவே வராக அவதாரத்திலும் ஏற்பட்டது. மனநிலை உடல் நிலையை வெகுவாக பாதிக்கும்.
புதிய தலைமுறை நல்லவர்களாக இருக்க வேண்டும் என்றால் மனதில் கேடுகளை நீக்கிவிட்டு கோப தாபங்களை நீக்கிவிட்டு பொறாமைகளை துரத்திவிட்டு சாந்தமான மனநிலையில் சேருங்கள்.
உங்கள் மனிதில் தோன்றும் கெட்ட எண்ணங்கள் உங்களுக்கே கேடு செய்யும். அவைகளை ஒரு கட்டத்தில் நீங்களே அழித்தாக வேண்டும்.
நரகாசுரன் மட்டுமல்ல எந்த கேடுகளும் ஒரு நாள் அழிக்கப்படும்.
அறிவுடன் சிந்தியுங்கள்.
ஒரு ஆலையில் விபத்து எவ்வாறு நடக்கிறது?
மனித கவனமின்மை, வேலை தெரியாமை, இயந்திர பழுது, பாதுகாப்பு வசதி இன்மை.
இதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்.
தீபாவளிக்கு நிறைய பட்டாசு விற்பனை ஆகும் என்ற வியாபார ஆசையில் அவசரப்பட்டு அதிக வேலை தெரியாத ஆட்களை வைத்து பாதுகாப்பின்றி அரசு அங்கீகாரம் கிடைக்காத ஆலையில பட்டாசு தயாரிக்கப்பட்டால் விபத்து நிகழாமல் என்ன செய்யும்?
கருணை அடிப்படையில் பாருங்கள். விபத்தே அவர்களுக்கு பெரியதொரு இழப்பு. இப்போது பட்டாசும் விற்காமல் இருந்தால் அது அவர்களுக்கு மேலும் ஒரு பலத்த இழப்பாகவே அல்லாமல் உதவுவதாக அமையுமா? கண்டிப்பாக இல்லை.
பட்டாசு தொழிற்சாலைக்கு பாதுகாப்பு உபகரணங்களை சரிபார்த்து உரிய அங்கீகாரம் கொடுப்பது, வேலை தெரிந்தவர்களை வேலைக்கு சேர்ப்பது, அடிக்கடி இவைகளை சரி பார்த்து தவறான ஆலைகளை மூடுவது இவை அனைத்தையும் கவனிக்க வேண்டியது அரசே தவிர தீபாவளி அல்ல.
தொலைக்காட்சிகளில் ஒலிம்பிக்கின் போதும் வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளின் போதும் வாண வேடிக்கைகளை கண்டு களிக்கும் போதும் இதே பட்டாசு ஆலைகள் அதன் பின்னால் இருக்கின்றன என்பது ஞாபகம் வர வேண்டும்.
அவ்வாலைகளில் வேலை பார்ப்போர்களுக்கு வேறு வேலை கொடுத்த பின், பட்டாசே வேண்டாம் என ஒருவேளை நாம் முடிவெடுக்கலாம். அதுவரை மூடர்கள் தீபாவளியை குறை கூறிக்கொண்டிருப்பார்கள்.
கடைசியாக,
ஒரு திருவிழா எதற்கு நடைபெறுகிறது? அதன் தேவை என்ன என்பதை பார்ப்போம்.
உணர்ந்து கொள்ளுங்கள். பண்டைய பாரத விழாக்கள் அனைத்துமே மக்களை ஒன்றிணைப்பதற்காகவும், உறவை பலப்படுத்தவும், முக்கியமாக பொருளாதார தேக்கத்தை தடுப்பதற்காகவும் ஏற்பட்டவை. அனைத்து விழாக்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக மட்டுமல்லாது பல காரணங்களை கொண்டிருக்கின்றன.
பொங்கலுக்கு எப்படி விவாசாய பொருள்கள் முக்கியத்துவம் அடைந்து அவை மக்களால் வாங்கப்படுவதால் விவசாயி பயனடைகிறானோ அதே போல ஒவ்வொரு விழாவிலும் ஒவ்வொரு உற்பத்தியாளர் பயனடைகிறார். விற்பனையாளர்கள் பயனடைகிறார்கள்.
விழா என்ற போர்வையில் நடக்கும் சடங்குகளும், வணிகங்களும் ஒருவரது சேர்த்து வைத்திருக்கும் பணத்தை செலவளிக்க வைத்து அதை மற்றவர்களுக்கும் பயன்படும் படி செய்துவிடுகிறது.
இதனால் லாபம் சமுதாயத்திற்கே. செல்வம் ஒருவரிடமே தங்குவது தடுக்கப்படுகிறது. இது தீபாவளியானாலும் பொங்கலானாலும் வேறு எந்த பண்டிகையானாலும் பொருந்தும்.
மக்கள் மகிழ்ச்சி, உறவு பலப்படுதல், பொருளாதார சமப்படுத்தல்
இந்த மூன்று காரணங்கள் இருந்தாலே நாம் இன்னும் எத்தனை
திருவிழாக்களையும் புதிதாக உருவாக்கி கொண்டாடலாம். வேறு காரணங்கள் தேவையே
கிடையாது.
வேறு வேறு பண்டிகைகள் இருக்கும் போது வேற்றுமை உணர்ச்சி வருகிறதே என நீங்கள் கேட்கலாம்.
எந்த மதமானாலும் இனமானாலும் மொழியானாலும் நாடானாலும் ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக்கொள்ளும் போது வேறுபாடுகள் ஒவ்வொன்றாக துடைத்தெறியப்படுகின்றன.
ஆங்கில புத்தாண்டை நான் கொண்டாட மாட்டேன் என்ற விரோத மனநிலை ஒருவருக்கு வரும் போது மட்டுமே அங்கே ஏற்றத்தாழ்வும் பிரிவினையும் வருகிறது. இதை நிலைதான் தீபாவளிக்கும் பொங்கலுக்கும்.
இவைகளை விட்டுவிட்டு, பண்டிகைகளால் வேறுபாடு ஏன் வருகிறது என்றால், என் பண்டிகையை நீ கொண்டாட வேண்டும் அதனால் என மதம் வளரும் என ஒருவன் கூறுவதாலும், இது அடுத்தவன் பண்டிகை இதை நீ கொண்டாடக்கூடாது என ஒருவன் கூறுவதாலும் மட்டுமே வேற்றுமை வளர்க்கப்படுகிறது.
உலகம் சுருங்கி விட்ட இந்த காலத்திலும் பத்தாம் பசலித்தனமாக ஒருவர் தீபாவளியை கொண்டாடக்கூடாது என கூச்சலிடுவது மடமைத்தனம்.
வேற்றுமை வேண்டாம் என்றால் எல்லா பண்டிகைகளுக்கும் உள்ளே கறுவிக்கொண்டிருக்காமல் மனதார வாழ்த்து பரிமாறிக்கொள்ளுங்கள்.
பண்டிகைக்கு காரணங்கள் தேவையில்லை. கொண்டாடுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.
குத்தம் சொல்வோரை 'பாதகம் செய்வோரைக் கண்டால் காறி உமிழ்ந்து விடு பாப்பா' என பாரதி சொன்னது போல செய்ய வேண்டியது தான்.
கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)