வாழ்க்கை என்னும் இயந்திரத்தில் பின்னோக்கி நகர வழி ஒன்று இருந்தால் அனைவரும் திரும்பப் போக விரும்பும் காலகட்டம் கல்லூரிக்காலம். வாழ்க்கைக்குத் தேவையான ஏட்டுக் கல்வியை மட்டுமில்லாமல், அனுபவக் கல்வியையும் பயிற்றுவிக்கும் இடம் கல்லூரி. அடுத்து வாழப்போகும் வாழ்க்கைக்கு தேவையானப் பாடங்களை நமக்கு சொல்லித் தருமிடம்தான் கல்லூரி.
கல்லூரி என்றதும் பெரும்பாலோனோர்க்கு நினைவுக்கு வருவது நண்பர்களும், காதலும்.. காதலித்தவரை கைப்பிடித்தவர்களுக்கு அதை நிறைவேற்ற உதவிய நண்பர்கள் மேல் கோபம் வரலாம். நண்பர்கள் செய்த தியாகம், துரோகம், அதனால் இன்று இருக்கும் நிலைமை, அவர்கள் மூலம் நாம் கற்ற வாழ்க்கை பாடம் எல்லாம் கண் முன்னே தோன்றலாம்.
கல்லூரியில் நிகழ்ந்த விழாக்கள், கொண்டாட்டங்கள், விடுதி விளையாட்டுக்கள், கும்மாளங்கள், சுவர் ஏறிக் குதித்து கண்டத் திரைப்படங்கள், மூத்தோர் - இளையோர் சண்டை இவையெல்லாம் நினைக்கையில் அதன் இன்பமே தனி. இதைத் தாண்டாமல் வந்தவர்கள் நம்மில் சொற்பமே. நம்மில் பெரும்பாலானோர் கல்லூரித் தினங்களை கடந்தே வந்திருப்போம், ஆனாலும் இன்னும் பலர், கல்லூரியில் படிக்க இயலாமல் போன சோகத்தை ஏதாவது கல்லூரி ஒன்றைக்கடக்கையில் அவர்கள் விடும் பெருமூச்சில் அருகில இருந்து உணர்ந்திருப்போம்.
நட்பு, காதல் என்று வாழ்க்கையையே தொலைத்த பலரையும் நாம் கல்லூரியில் பார்த்திருப்போம். நட்புக்காகவும், காதலுக்காகவும் புகை, மது என அடிமையாவதும் இந்தக் காலத்தில்தான். எதிலும் கலக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி பிறகு வருந்துபவர்களும் உண்டு, மகிழ்பவர்களும் உண்டு. ஒவ்வொருவருடைய கல்லூரி அனுபவங்களை படிக்கும் போது நாமும் அவர்களுடன் கால இயந்திரத்தில் பயணித்து நமது கல்லூரிக்கேச் செல்கின்றோம். கல்லூரியின் அரசியல் குணங்களும் நாமறிந்த ஒன்றுதான்.
இப்படிப் பல நிறங்களையும், கலாச்சாரங்களையும், நிகழ்வுகளையும் கொண்ட 'கல்லூரி'யே இந்தப் போட்டிக்கான தலைப்பு. இந்தத் தலைப்பினை அடித்தளமாக அமையும் கதை, கவிதை, சொந்த அனுபவங்கள், கட்டுரைகள், படங்கள், குறும்படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
பரிசு: முதல் பரிசு பெறும் படைப்புக்கு Oviam Hosting நிறுவனத்தார் வழங்கும் ஒரு வருடத்துக்கான தனி இணையச் சேவை (Domain Name & Web hosting for a Year) அல்லது ரூ. 1,250/- மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும். (கிழக்குப் பதிப்பகம் அல்லது எனி இந்தியன்).
நடுவர்கள்: நாம் நன்கறிந்த இரு பதிவர்களே நடுவர்களாக பணியாற்ற சம்மதித்திருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பெயர்கள் வாக்கெடுப்புக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
படைப்பினை அனுப்ப கடைசி நாள்: மார்ச்-20-2009. (இந்திய நேரப்படி11:59 PM)
வாக்கெடுப்பு: 22-மார்ச்-2009 இருந்து 27-மார்ச்-2009 வரை
முடிவுகள்: ஏப்ரல்-2-2009