சென்னை : நாற்பது ஆண்டுகளுக்கு பின், 393 இடங்களில் தனித்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பத்து மாநகராட்சிகளில் ஒரு கவுன்சிலர் பதவியை கூட கைப்பற்றவில்லை. சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. சென்னை உள்ளிட்ட பத்து மாநகராட்சிகளின் கவுன்சிலர் பதவிக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சில மாநகராட்சிகளில் அக்கட்சி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. மதியம் 4 மணி நிலவரப்படி, 10 மாநகராட்சிகளில் ஒரு கவுன்சிலர் பதவியைக் கூட அக்கட்சி கைப்பற்றவில்லை. ஆனால், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் கவுன்சிலர் பதவிகளை அக்கட்சி கணிசமாக கைப்பற்றியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், வழுத்தூர் ஊராட்சியின் தலைவர், கடையநல்லூர் நகராட்சியில் ஆறு கவுன்சிலர்கள், ஆம்பூர் நகராட்சியில் நான்கு கவுன்சிலர்கள், புளியங்குடி நகராட்சியில் இரண்டு கவுன்சிலர்கள், தென்காசி நகராட்சியில் ஒரு கவுன்சிலர், நாகப்பட்டினம் நகராட்சியில் ஒரு கவுன்சிலர், குடியாத்தம் நகராட்சியில் ஒரு கவுன்சிலர், குளச்சல் நகராட்சியில் ஒரு கவுன்சிலர், பேரணாம்பட் நகராட்சியில் இரண்டு கவுன்சிலர்கள் என 19 நகராட்சி கவுன்சிலர்கள், நேற்று மாலை 4 மணி நிலவரத்தின்படி வெற்றி பெற்றனர். திருநெல்வேலி மாவட்டம், வல்லம் ஊராட்சி தலைவராக திவான் ஒளி, கரூர் மாவட்டம், தேவர்மலை ஊராட்சி தலைவர் அப்துல்மஜித் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 30 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடி நகராட்சி தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., வுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளூர் கூட்டணி வைத்ததில், நகராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது. கடையநல்லூர் நகராட்சி தலைவர் தேர்தலில், தி.மு.க., வுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளூர் கூட்டணி வைத்ததில், நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் அபுபக்கர் கூறும்போது,""கடந்த 1971ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். இந்த உள்ளாட்சி தேர்தலில் சாய்வு நாற்காலி, தென்னை மரம் ஆகிய சின்னங்களில் தனித்து போட்டியிட்டதில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளோம்,'' என்றார்.
600 இடங்களில் போட்டியிட்ட ம.ம.க., 60 இடங்களில் வெற்றி
சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக 600 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட, மனித நேய மக்கள் கட்சி 60 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகள் கைப்பற்றின. உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக மனித நேய மக்கள் கட்சி 600 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது. சென்னை உட்பட 10 மாநகராட்சிகளின் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில், கோவை மாநகராட்சியில் 86வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சாதிக் அலி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். சென்னை மாநகராட்சியில் சில வார்டுகளில், தே.மு.தி..க., - பா.ம.க., ஆகிய கட்சிகளை விட, கூடுதல் ஓட்டுகளை மனித நேய மக்கள் கட்சி பெற்றுள்ளது. சில மாநகராட்சி வார்டுகளில் மூன்றாவது, நான்காவது இடத்திற்கு வந்துள்ளது. மதுரை, திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் ஒன்றை இலக்கத்தில் தோல்வியும் தழுவியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் ஜாகிர் உசேன் வெற்றி பெற்றுள்ளார். தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, தக்கலை, வந்தவாசி, வாணியம்பாடி, அரக்கோணம். திருவாரூர், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட 14 நகராட்சிகளின் வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
லால்பேட்டை, புவனகிரி, முதுகுளத்தூர், சோழபுரம், திருப்புவனம், வேளாங்கண்ணி உள்ளிட்ட 39 பேரூராட்சிகளின் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மங்களம்பேட்டை, பெருந்துறை, உடன்குடி உள்ளிட்ட எட்டு ஊராட்சி கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஐந்து நகராட்சிகளின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. இது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறும் போது, "உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடந்தது; பாராட்டுக்குரியது. மத்திய தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டின் கீழ் மாநில தேர்தல் கமிஷன் செயல்படும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போது தான், சட்டசபைத் தேர்தலில் கடைபிடிக்கும் ஒழுங்கு முறையை உள்ளாட்சித் தேர்தலிலும் செயல்படுத்த முடியும்' என்றார். 59 பதவிகளுக்கு போட்டியிட ஆள் இல்லை இந்த உள்ளாட்சித் தேர்தலில், கிராமப்புறங்களில் 55 பதவிகளுக்கும், நகர்ப்புறங்களில் நான்கு பதவிகளுக்கும், ஒருவர் கூட போட்டியிடாததால், அவை காலியாக உள்ளன. தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில், கிராமப்புறங்களில் 55 பதவிகளுக்கு ஒருவர் கூட போட்டியிடவில்லை. அதேபோல, நகர்ப்புறங்களில், கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சி, வீரபாண்டி பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம் வெங்கரை பேரூராட்சி வார்டு 8, அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சி வார்டு 4 ஆகியவற்றின் உறுப்பினர் பதவிகளுக்கு, ஒருவர் கூட போட்டியிடவில்லை. கடந்த 2006 உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடும் போது, போட்டியிடாதவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு குறைவாகவே உள்ளது.